சனி, 15 ஜூலை, 2017

துறவும் நிர்வாணமும்!

Leave a Comment

புத்தர் ஆசை துறந்தார். துறவியானார். 

புத்தருக்கு ஆசையின்றிப்போனாலும் அவருக்குச் சீடர்கள் உருவாகினர். புத்தருக்குப் பின் அவர்களின் சீடர்களின் ஆசையே புத்த மதமாகி இன்று உலகெங்கும் பரவி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலச் செயல்படுகிறது. 

நிர்வாணத்தை வலியுறுத்தும் சமண மதமும் இதே நிலைதான். 
ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்றவர்களால் துவக்கப்பட்ட அமைப்புகள் துவங்கி இன்றுள்ள ஆனந்தர்கள், ஸ்ரீஸ்ரீக்கள், சத்குருக்கள், மடாதிபதிகள் என அனைவரும் 

துறவுக்குப் பின்னரே தங்களின் நிலைப்பாட்டை பொன், மண்,பொருட் சேர்க்கைகளோடு தம்மைப் பின்பற்றும் சீடர்களோடு கார்ப்பரேட் நிறுவனர்களாக உலா வருகின்றனர். 

ஒருவரின் துறவுக்குப் பின்னர் அவரால் ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் அது குறித்து சர்ச்சைகளும் எழுவதைப் படித்தும் நடைமுறையில் காண்பதாலும் 

துறவுக்கும் நிர்வாணத்திற்கும் உரிய இலக்கணத்தைப் படித்துத் தொலைத்ததாலோ என்னவோ 

நிர்வாண ஆசையைக் குளியலறையிலும், துறவு ஆசையைக் கல்லறையிலும் புதைத்து விட முடிவு செய்தோம். 

எம்முடைய துறவால் இன்னொரு கார்ப்பரேட் மதமோ, அமைப்போ இந்த பூமியில் உருவாகித் தொலைந்து அதனை எவர் நிர்வகிப்பதென்று ஒரு சாதிச் சண்டை உருவாகி விடக் கூடாதே என்ற நல்லெண்ணம்தான் இதற்கும் காரணம்.

Read More...

புதன், 10 மே, 2017

பெருமைப்படுவதா? வெட்கப்படுவதா?

Leave a Comment
தனது மகன் தேரோட்டிச் சென்றபோது அடிபட்டு இறந்த கன்றுக்காக வாய்மை கேட்ட பசுவின் கண்ணீருக்குத் தனது மகனையே தேரிலிட்டுக் கொன்று வாய்மையை நிலை நாட்டிய சோழனின் ஆட்சியின்போது

இளவரசன் மேல் பரிதாபப்பட்டு அரசனது குடும்பமோ அமைச்சர் பெருமக்களோ ஏன் நாட்டு மக்கள்கூட எவரும் அரசனிடம் பரிந்து பேசியதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை.

கண்ணகியின் வழக்கின்போது ஆராயாமல் தீர்ப்பளித்த குற்றத்திற்காகத் தன் வெண்கொற்றக்கொடி தாழ்ந்து உயிர் நீப்பதற்கு முன்பு

அரசனையே எதிர்த்துத் திமிராகப் பேசிய கண்ணகியை அரசரை அவமதித்த குற்றத்துக்காகச் சிறை தண்டனை கொடுங்கள் எனவோ

கண்ணகி தங்கள் எதிரி நாடாகிய சோழ நாட்டைச் சேர்ந்தவள் எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிடுங்கள் எனவோ,

அமைச்சர் பெருமக்கள் எவரும் மன்னருக்கு வக்காலத்து வாங்கியதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை.

அரசனுக்கும் அரச குமாரனுக்கும் என நாட்டிலுள்ள அனைவருக்கும் வாய்மை பொதுவானதுதாம் என எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது

வாய்மையை நிலை நாட்டிய ஒரு மகத்தான நாட்டில் பிறந்தோமெனப் பெருமைப்படுவதா?

பணம் இல்லாதவன் குற்றம் செய்தால் உடனடியாக விசாரித்து தண்டனை அளித்து சிறையிலிடுவதும்,

மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிட்டுக் கொழுத்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் வழக்குகள் மட்டும் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு

ஒரு கட்டத்தில் இவர்கள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்படும் ஆங்கிலேய பாணி ஓட்டைச் சட்டங்கள் நிறைந்த

இந்த நாட்டில் பிறந்ததற்காக வெட்கப்படுவதா?

Read More...

திங்கள், 3 ஏப்ரல், 2017

நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்.

Leave a Comment
2017-ஏப்ரல் 2 அன்று காலை புதிதாகத் திருமணமாகிச் சேலத்தில் வசிக்கும் எனது மகளைக் காண்பதற்காக சேலம் செல்ல முடிவு செய்திருந்தோம்.

அன்று காலை 10.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்படும்போது எனது மனைவி ஒரு பொருளை எடுப்பதற்காக வீட்டின் அறைச்சுவற்றில் இருந்த கப்போர்டின் கண்ணாடியைத் தள்ள முற்பட அது திடீரென உடைந்து இரு துண்டாகி எனது மனைவியின் தலையில் மோத அதில் ஒரு கண்ணாடி அருகிலிருந்த படுக்கையில் விழ மற்றொன்றை எனது துணைவியார் பிடிக்க முயற்சித்த நிலையில் கை விரலைச் சற்றுக் காயப்படுத்திற்று.

ஊருக்குப் புறப்படும் நேரத்தில் அபசகுனமாக எனது மனைவிக்கு அது பட்டாலும் பெரிய அளவில் எதுவும் நிகழாமல் சிறிய அளவில் நேர்ந்ததே நடப்பது நல்லதெற்கெனச் சமாதானப்படுத்தி சேலம் புறப்பட்டோம்.

பேருந்தில் ஏறி அமர்ந்தபின்பு ஓட்டுநருக்கு எதிரே இருந்த கண்ணாடியைக் காண்பித்து இது போன்ற கண்ணாடிகளை வீட்டு அலங்கார அலமாரிகளில் பயன்படுத்தினால் அவை உடையும்போதுகூட துண்டு துண்டாக உடையுமே தவிர ஆபத்து இராதென விளக்கியவாறு பயணித்தேன்.

சேலம் சென்று எனது மகளைச் சந்தித்த பின் புறப்பட்டபோது எனது சம்பந்திகள் எனது மகளையும் எங்களுடன் ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டவே நாங்கள் மூவரும் அவர்களுடன் சேலம் பேருந்து நிலையம் சென்றடைந்து எனது மருமகன் எங்களை பத்திரமாக ஒரு தனியார் பேருந்தில் இடம் பிடித்து அமர்த்திவிட்டு இல்லம் திரும்பினார்.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அந்தத் தனியார் பேருந்து வெளியேறி பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரெனப் பேருந்தின் முன் கண்ணாடி உடைந்த சப்தம் கேட்ட நிலையில் அதன் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதைக் கண்டோம். 

ஓட்டுநர் அருகில் சென்று காரணம் வினவினால்
எதிரே வந்த ஒரு ஆட்டோவில் இருந்து ஒரு பீர் பாட்டில் எவரோ ஒரு குடிமகன் இந்தப் பேருந்தில் அதை வீசி அடிக்க அது பட்ட வேகத்தில் கண்ணாடியும் அந்த பாட்டிலும் உடைந்து சிதறியவாறு பேருந்தில் முன்புறம் அமர்ந்திருந்த ஒரு இளம்பெண்ணின் நெற்றியில் இரத்த காயமேற்படுத்தியும், பேருந்து ஓட்டுநர் உட்பட அருகில் அமர்ந்திருந்த பல பெண்களின் மீது கண்ணாடித் துண்டுகள் தெறித்ததால் சிறு சிறு காயங்களை ஏற்படுத்தி இருந்ததையும் கண்டோம்.

தனியார் பேருந்துகளின் வசூல் நோக்கம் காரணமாக அவை பல இடங்களில் நின்று செல்வதற்காக அதி வேகமாகச் செல்வதும், அதில் புளிமூட்டைப் பயணமாக ஏராளமானவர்கள் அடைபட்டுச் செல்வதும் நாம் அறிந்ததே.

இந்தப் பேருந்து அந்த இடத்தில் 100 கிமீக்கு அதிகமான வேகத்தில் ஒரு வேளை பயணித்திருந்தால் இந்த விபத்தில் ஓட்டுநர் நிலை தடுமாறி பேருந்தின் இயக்கம் தாறுமாறாகி அன்றைய தினம் ஏராளமானவர்கள் காயமடையவும் ஒரு சிலர் உயிரிழக்கும் நிலை கூட ஏற்பட்டிருக்கக்கூடும்.

நல்லவேளையாக 40 கிலோமீட்டர் வேகத்தில் அந்தப் பேருந்து சென்ற நிலையில் இந்தத் தாக்குதல் நடந்ததால் ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை நிறுத்த முடிந்து எங்களின் உயிரையும் காக்க முடிந்தது.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றியதால் சரக்கு வாங்க அலையும் நிலை ஏற்பட்ட கோபத்தில் ஒரு குடிமகன் ஏற்படுத்திய ஆபத்தான விபத்து இது.

ஆட்டோவை ஓட்டிவந்த ஓட்டுநரும் இதற்கு உடந்தை என்பதால் வேறு ஆட்டோ பிடித்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் திரும்பி அமர்ந்து வர விருப்பமின்றி அந்த வழியாக வந்த அரசுப்பேருந்தில் ஏறி நின்றவாறே ஈரோடுவரை பயணிக்க வேண்டியதாயிற்று.

பெரும்பாலும் படித்தவர்களும் இன்று குடிக்கு அடிமைகள். இந்த விபத்து ஏற்படுத்த உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநரும் படித்திருக்க வேண்டும்.
எனக்குள் அப்போது இந்தப் பாடல் வரிகள்தாம் ஓடியது.


நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம். 
மனமும் நல்ல குணமும் 
நேர்வழியை விட்டு விலகும். 
நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்.


ஒரு கற்பனைக்காக ஒரு பெரிய சாராய ஆலை அதிபர் குடும்பம் சென்ற அதிவேக செகுசுக்காரின் மீது இதே போன்ற ஒரு தாக்குதல் நடைபெற்று விபத்து ஏற்பட்டு அந்தக் குடும்பமே பலியானது என்று ஒரு செய்தி அறிந்தால்கூட எம் போன்று ஒரு நல்ல சமுதாயம் அமைய வேண்டும் என விரும்பும் நெஞ்சங்கள் அவர்களுக்காகப் பரிதாபப்படுவோமே தவிர மகிழ்ச்சியடைய மாட்டோம்.

ஆனால் மேற்கண்ட பாடல்கள் போன்று ஏராளம் பாடி அன்றைய இளைய சமுதாயத்தை தம் வசப்படுத்தி ஆட்சிப் பொறுப்பேற்ற எம்ஜியார் முதற்கொண்டு அவரால் வளர்ந்த ஊழல் திராவிட இயக்க சாராய சாம்ராஜ்யவாதிகள் அப்படி ஒரு விபத்து தங்கள் குடும்பத்தில் நேரிட்டால்கூட அதை உடனே மறந்து விட்டு மேலும் மேலும் சாராய விற்பனையில் மூழ்கி சொத்துகள் குவிக்கத்தான் முயல்வார்கள் என்று எணணும்போது அவர்களும்


ஒரு மிருகம் இந்த மதுவை விற்கும்போது 
மனமும் நல்ல குணமும் 
நேர்வழியை விட்டு விலகும். 
நீதான் ஒரு மிருகம் இந்த மதுவை விற்கும்போது


என்றுதான் பாடத் தோன்றுகிறது.
Read More...

சனி, 25 மார்ச், 2017

எது சிறந்த நிர்வாகம்?

Leave a Comment
பொதுவாக புதிதாக ஒரு இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றால் அவர்கள் பொறுப்பேற்கும் முன்னரே பழைய ஆட்சியாளர்களை மறந்துவிட்டு இவர்களை வரவேற்க மலர்க்கொத்துக்களுடன் உயர் அரசு அலுவலர்கள் படையெடுக்கத் துவங்கிவிடுவர்.

இந்தப் படையெடுப்புகள் அநேகமாக தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தவும் தங்களின் தவறுகளை புதியவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத்தான்.

இதில் பழைய ஆட்சியாளர்களின்; விசுவாசிகள்தான் எங்கே தங்களை இடமாற்றம் செய்து அலைக்கழிப்பார்களோ என்ற பயத்தில் அதிகப்படியான பணிவை புதியவர்களிடம் காட்டுவர். 

புதிய ஆட்சியாளர்களின் விசுவாசிகள் காட்டும் பணிவோ பழைய நிர்வாகத்தினரால் தங்களுக்குப் புறக்கணிக்கப்பட்ட சலுகைகள் இட மாற்றங்கள் பதவி உயர்வுகள் போன்றவற்றை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமேதாம்.

இலஞ்சம் பெறாது நெஞ்சம் நிமிர்ந்தவர்கள் மட்டுமே இங்கு விதிவிலக்கானவர்கள்.

இவையெல்லாம் உயர் அலுவலர்களுக்கு மட்டும்தாம் பொருந்தும். சாதாரண அரசுப்பணியாளர்கள் ஆட்சியாளர்களை எங்கே இன்றுள்ள சூழலில் அருகே சென்று சந்திக்க இயலும்?

எனினும் மக்கள் எதிர்பார்க்கும் ஒரு புதிய நிர்வாகம் இனி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் அவை இனி இவ்வாறு நடந்து கொண்டால்தான் இலஞ்சத்தையும், ஊழலையும், கொள்ளைகளையும்; ஆட்சிஅ ராஜகங்களையும் நாட்டில் முற்றிலும் ஒழிக்க முடியும்.

பொதுவாக, புதிதாகப் பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் உயர் அலுவலர்களுடன்தான் அவர்கள் துறை சார்ந்த விவாதங்களை நடத்துவர். அவர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு அதன்படிதான் அவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி நிர்வாகத்தைத் தொடருவர். இதுதாம் காலம் காலமாக தற்பொழுது நடைமுறையில் உள்ள நிலை.

இனி வரும் காலமோ இளைய சமுதாயத்தின் கரங்களில். 

அவர்கள் ஒருவேளை ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் சூழல் உருவானால் முதற்கண் யாரும் எங்களை வரவேற்க தங்களின் பணிகளை விட்டுவிட்டு வரவேண்டாம் என ஒரு அறிவிப்பு செய்து தங்களை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்கப் படையெடுக்கும் உயர் அரசு அலுவலர்களின் வருகையைத் தடை செய்ய வேண்டும். இதனால் அன்றைய தின எரிபொருள் செலவு அரசுக்கு ஏராளம் மீதமாகும்.

அதற்குப் பதிலாக துறை வாரியாக உள்ள கடை நிலை ஊழியர்களை அந்தந்த துறை சார்ந்த இடத்திற்கே புதிதாகப் பொறுப்பேற்கும் இளைய சமுதாயப் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று துறை சார்ந்த விவாதங்களை நடத்தத் துவங்க வேண்டும். 

அப்பொழுதுதான் அவர்களின் உயர் அலுவலர்கள் இதுவரை செய்து வந்துள்ள தவறுகள் தெரிய வரும். அடிமட்ட ஊழியர்கள் விரும்பும் துறை வாரியான மாற்றங்கள் என்னென்ன என்ற விபரங்கள் வெளிப்படும். அந்த துறை சார்ந்த நிர்வாகம் ஊழலின்றிச் செயல்பட உடனடியாகச் செய்ய வேண்டிய அதிரடியான மாற்றங்கள் எவையெவை என்பதும் முழுமையாக அறிந்து கொண்டு ஆட்சி நிர்வாகம் செம்மையாகச் செயல்படத் தேவையான நடவடிக்கைகளைத் துவங்க முடியும்.

அது மட்டுமன்றி இதைவிட முக்கியமாக அந்தந்த துறை சார்ந்த சேவைகளைப் பெரும் பொது மக்களிடமிருந்து கேட்கப்படும் கருத்துகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்தும் பின்னரே அடி மட்ட ஊழியர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து செயல்பட்டு ஒவ்வொரு துறையையும் மேம்படுத்தத் துவங்க வேண்டும்.

இத்தகைய ஒரு புதிய நடைமுறை உடனடியாகத் துவங்கினால் தமிழகம் உலக அளவில் மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாகத் திகழும்.

இளைய சமுதாயம் எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

Read More...

புதன், 22 மார்ச், 2017

பதவிக்கு எது அழகு?

Leave a Comment
நேரு மறைந்தவுடன் நாடு ஒரு நெருக்கடியான நிலையைச் சந்தித்த நேரம். அடுத்த பிரதமர் யார் எனும் கேள்வி எழுந்தபோது அதற்குச் சரியான தீர்வான பிரதமரைத் தேர்ந்தெடுத்தார் ஒருவர்.

அவரது மறைவிற்குப் பின்னரும் இதே நிலை. நாடே இவர்தாம் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கருதிய நேரத்தில் தனக்கு வந்த வாய்ப்பினை நிராகரித்து இந்திரா அம்மையாரைத் தேர்ந்தெடுத்தவரும் அவரே.

அவர்தான் ஒப்பற்ற தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்கள்.

பிரதமராகும் தகுதியையும் மறுத்தும், தான் முதல்வராக வகித்த பதவியையே வேண்டாமென மறுத்து  அதற்கும் வேறு தகுதியான ஒருவரை பரிந்துரை செய்தவர் உலகிலேயே இவர் ஒருவராகத்தான் இருப்பார்.

பதவி ஒருவரைத் தேடி வர வேண்டும். அதனைத் தேடி அலைபவர்கள் சுயநலவாதிகள்.

தன்னைத் தேடி வந்த பதவியை மறுத்து தன்னைவிட மேலானவர் இவர் என மற்றவரை தேர்வு செய்பவர்கள்தாம் சுயநலமற்ற அப்பழுக்கற்ற பொதுநலவாதிகள்.

இவர்களைப் போன்றவர்களால்தான் பதவிகள் அழகு பெறுகின்றன.

பதவிகள் ஆடம்பரமானவை! அழகானவை! மேன்மையானவை!

ஆனால் அவை அசிங்கப்படுவதும் அழகாக்கப்படுவதும் அதை வகிப்பவர்களின் தராதரத்தைப் பொருத்தது.

இனியாவது பதவிக்கு அலைபவர்கள் வெட்கப்பட வேண்டும். திருந்த வேண்டும்.

தகுதியுள்ள மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்.

Read More...