திங்கள், 24 மார்ச், 2014

வரிப்பணம்!

Leave a Comment
ஆட்டோக்காரர் செழுத்தும் வரிப்பணம்!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நமது மத்திய மாநில அரசுகள் தங்களின் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும் வரி எப்படி இந்த அரசுகளுக்குச் சென்றடைகின்றன என்ற விபரம் கூடத் தெரியாதவர்களாகவே விளங்;கி வருகிறோம்! இதனை முறையாக அறிந்து கொள்ளும் ஆற்றலுக்கு பெரிய அளவிலான கல்வி அறிவு கூட மக்களுக்கு தேவையில்லை!

இந்த அரசுகளுக்கு வரி வருவாய் எப்படி வந்தால் எங்களுக்கென்ன? அதனைத் தெரிந்து கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற பதில் நம்மிருந்து வருகின்றது என்றால் நாம் நமது தற்போதைய துயர வாழ்க்கையைக் களைவதற்கும்  நமது சந்ததியின் எதிர்காலத்தை உயர்த்துவதற்கும் முன் வராதவர் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்!

சரி அதைப் பற்றி நாங்கள் தெரிந்து கொண்டால் நமக்கு என்ன பயன் என்று நாம் கேட்க ஆரம்பித்தாலே நமக்குள் வரிப்பணம் பற்றிய விழிப்புணர்வு தோன்றி விட்டது  நமது தேர்தல் நேரத்து வாக்கு வங்கி வீணாவது தடுக்கப்படுகிறது என்றுதான் அர்த்தம்! இதன் விழைவால் ஊழல் அரசியல்வாதிகள் நம் தமிழகத்தில் உருவாவது தடுக்கப்பட்டு ஒரு ஊழலற்ற புதிய அமைப்பு உருவாவதற்கு நாம் உதவப் போகிறோம் என்பது நிச்சயம்!

தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகளுக்காக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்ய பயன்படும் ஆட்டோக்களை ஓட்டுகின்ற ஆட்டோ டிரைவர்கள் மத்திய மாநில அரசுகள் தங்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தை வீணடிப்பதை இனியாவது தடுக்க உங்களின்  சிந்தனைக்கு சில வரிகள்!

நான் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனர் நான் சராசரியாக ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோலுக்கு செலவிட்டு எனது ஆட்டோவை ஓட்டுகிறேன்! ஆட்டோ உரிமையாளருக்குச் சேர வேண்டிய தொகை போக இதில் எனக்கு சராசரியாக தினசரி நூறு ரூபாய்தான் வருமானம் வருகிறது! இதைக் கொண்டுதான் எனது வாழ்க்கை வண்டி ஓடுகிறது! நான் அரசுக்கு வரும் வரிப்பணம் பற்றித் தெரிந்து கொண்டு எனக்கு என்ன பயன்?

உங்களுக்கான பதில் இதோ!

உங்களின் தினசரி பெட்ரோல் செலவு இருநூறு ரூபாயில் மத்திய அரசு இறக்குமதி வரி உற்பத்தி வரி மற்றும் மத்திய விற்பனை வரி எனச் சுமார் அறுபது ரூபாய்களையும் தமிழக அரசு மாநில விற்பனை வரி எனச் சுமார் அறுபது ரூபாய்களையும் பெற்றுவிடுகின்றன! 

அது மட்டுமல்ல இந்த பெட்ரோலுக்குரிய மூலப்பொருள் அது உற்பத்தியாகும் வளைகுடா நாடுகளிலிருந்து கப்பல் வாயிலாக பாரதம் வந்தடைந்து எண்ணெய் நிறுவனங்களில் பின்னர் பெட்ரோலாக பிரிக்கப்பட்டு போக்குவரத்து மூலம் உங்களை வந்தடையும் பெட்ரோல் பங்க் வரையில் பல வழிகளில் இந்த அரசுகள் வரி ஆதாயம் பெறுகின்றன! இதன் மூலம் இந்த அரசுகளுக்கு நீங்கள் மறைமுகமாக செழுத்தும் வரித்தொகை ஒரு ஆண்டிற்கு சுமார் இருபதாயிரத்தைத் தொடும்!

அது மட்டுமல்ல உங்கள் உரிமையாளர் தனது ஆட்டோவைப் பராமரிக்க நீங்கள் தரும் வாடகைப் பணத்திலிருந்து ஆட்டோ உரிமக் கட்டணம் இன்சூரன்ஸ் கட்டணம் சாலை வரி ஆட்;டோவைப் பழுது பார்க்கத் தேவைப்படும் உதிரிபாகச் செலவு மற்றும் ஒர்க்சாப் செலவு எனப் பல வழிகளில் தனக்குக் கிடைத்த வருமானத்தில் செலவிடுகிறார்!

இதுவும் கூடக் கிட்டத்தட்ட பெட்ரோலுக்கு நீங்கள் செழுத்திய வரிப்பணத்திற்கு இணையாக வரும்! உதிரிபாகங்கள் வாங்கும்போது அவர் அவற்றிற்கும் வரி கட்டுகிறார்! ஒர்க்சாப் செலவுகளிலும் அவர் வரி கட்டுகிறார்! இவற்றிற்கு மிஞ்சிய தொகையில் தனக்குக் கிடைக்கும் வருமானத்திலும் அவர் உங்களைப் போலவே அரசுகள் நடக்க வரி செழுத்துகிறார்!

இப்பொழுது நீங்கள் ஆட்டோ டிரைவர் நிலையிலிருந்து சாதாரண மக்களில் ஒருவர் அல்லது உங்கள் வாகனத்தில் பயணம் செய்யும் சாதாரண நடுத்தர மக்களில் ஒருவர் என வைத்துக் கொள்ளுங்கள்!

இப்பொழுது உங்கள் மாத வருமானம் மூவாயிரம் ரூபாய்கள் என ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்! இந்த வருமானத்தை நீங்கள் சேமிக்கவே முடியாமல் அப்படியேதான் செலவிட்டு வருகிறீர்கள் என்பது நீங்கள் சொந்த வண்டி வாங்க இயலாத நிலையிலும் தற்பொழுதுகூட வங்கியிலோ அல்லது தனியார் நிதிநிறுவனத்திலோ கடன்பட்ட நிலையில் கடனாளியாகத்தான்; உள்ளீர்கள் என்பது நீங்கள் சொல்லாமலே எனக்கு விளங்கும்! 

ஆக இந்த மூவாயிரம் ரூபாய்களையும் அப்படியே நீங்கள் உங்கள் குடும்பத்திற்கென செலவிடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்! இந்த வருமானத்திலும் மத்திய மாநில அரசுகள் செயல்படச் சராசரியாக ஆண்டொன்றிற்கு சுமார் பனிரெண்டாயிரம்; ரூபாய்கள் வரியாகச் செழுத்துகிறீர்கள்! 

நீங்கள் உங்கள் தினசரி உபயோகத்திற்கெனப் பயன்படுத்தும் சோப்பு சீப்பு பவுடர் அழகு சாதனப்பொருட்கள் கொசுவிரட்டி எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் மதிப்பில் குறைந்த அளவாக வைத்துக் கொண்டால் கூடச் சுமார் நாற்பது சதவீதம் வரை இந்த அரசுகள் வரியாகப் பெற்று விடுகின்றன! அது தவிர உங்கள் குடும்பம் பேருந்தில் பயணம் செய்தாலோ ஒரு திரைப்படம் பார்த்தாலோ தொலைக் காட்சி ஒலி;பரப்பினை கேபிள் டிவி மூலம் பார்த்தாலும் கூட எங்கும் எதிலும் வரிதான்! 

உங்களின் உடையிலிருந்து உணவிலிருந்து குழந்தைகளின் படிப்பிலிருந்து மருத்துவம் வரை எந்தச் செயலை உங்களின் மாத வருமானம் மூவாயிரத்தில் செலவிட்டாலும் வரி செழுத்தாமல் அது செலவிடப்படவில்லை! இந்த வரியை மனதில் கொண்டு ஒரு தொகையைக் கடனாகத் தந்து ஒரு ஆட்டோவை வாங்குவதற்கு இந்த அரசுகள் முன்வந்திருந்தாலே நீங்கள் ஒரு சொந்த வாகனத்திற்கு உரிமையாளராக மாறி இருக்க முடியும்!

இப்பொழுது உங்கள் சட்டைக் காலரைச் சற்று உயர்த்தி விட்டுக்கொண்டு உங்களிடம் வாக்கு கேட்க வரும் அரசியல்வாதிகளை நிமிர்ந்து அழுத்தமாக கேளுங்கள்! இவ்வளவு வரி கட்டும் எங்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று! 

இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு நீங்கள் தயாராகி விட்டாலே இனி உங்கள் ஆட்டோக்கள் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கேட்டு குண்டும் குழியுமான நரகச் சாலைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு இனி எக்காலத்திலும் ஓடப் போவதில்லை என சர்வ நிச்சயமாக உறுதிபடக் கூற முடியும்!

மேலும் நீங்கள் இந்தக் கருத்தினை ஏற்றுக் கொண்டால் இதை உங்களின் பார்வையிலும் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வையிலும் படிக்கும்படி ஒட்டி வைத்து வாக்காளர் விழிப்புணர்வு பெற இனியாவது உதவுங்கள்!

Read More...

தமிழ் எதிரிகள்

Leave a Comment

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்!
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்குவோம்!

தமிழ்மொழியை ஆங்கில மொழி அழித்து வருகிறது! தமிழர்களிடையே தமிழ் மொழி ஆர்வம் குறைந்து வருகிறது என்ற கடுமையான எதிர்ப்புகள் தற்பொழுது தமிழகம் எங்கும் உலவி வருகிறது!
   
இந்த எதிர்ப்புகளுக்குத் தலைமையேற்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை இதுவரை ஆண்டு வந்துள்ளவர்கள்தாம்! இவர்கள் தவிர தங்களைத் தமிழ் மொழிக்குக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, புதிதாக ஆட்சி பீடம் ஏறத் துடிப்பவர்கள் பலரும் தற்பொழுது தமிழகத்தில் புற்றீசல் போலப் புறப்பட்டுள்ளனர்!

இவர்களின் அம்பு முனையின் இலக்கும் இலட்சியமும் தமிழக முதல்வர் பதவியினைக் குறி வைத்துத்தான்! இடையில் சிக்கிக்கொண்டு இவர்களின் அம்பு துளைத்து இரத்தம் சிந்துவது தமிழினமும் தமிழ் மொழியும்தான்!

தமிழினம் வழக்கம்போல நதி மூலம் ரிசி மூலம் பார்க்கக்கூடாது என்ற சொல் வரிகளுக்கேற்ப பழைய காவலர்களையும் ஏற்றுக் கொண்டு, புதிய காவலர்களையும் ஏற்றுக் கொண்டு, தங்களின் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில்தான் தொடர்ந்து சேர்த்து வருகின்றனர்! தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் அரசுப்பள்ளிகளில் படிப்பதால் உயர்வு பெறும் என்ற நம்பிக்கையைத் தமிழினம் முழுவதுமாக இழந்து விட்டனர்!

அதே சமயம் மக்கள் ஏனோ இன்று வரை இந்தத் தமிழ் மொழிக் காவலர்களின் தமிழ்மொழி அழிகின்றது என்ற வார்த்தை மாயங்களில் மயங்கிக் கொண்டுமிருக்கின்றனர்! தமிழ் மொழியை அழிக்க இன்னொரு மொழி தேவையில்லை! அது வடமொழியோ அல்லது ஆங்கிலமோ, எதுவாக இருந்தாலும் இங்கு அதுவல்ல பிரச்சினை! தமிழுக்கு எதிரிகள் யார் என்பதுதான் இங்கு பிரச்சினையே!

தமிழ்மொழி! தமிழ்நாடு! தமிழினம்! என்று கூப்பாடு போடுபவர்கள் தமிழ் மொழி அழிவிற்கு பிற மொழிகளின் ஆதிக்கத்தின் பங்கு என்ன என்பதற்கு காரணம் கற்பிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்! பிறகு நமது மொழி அழிவிற்குத் தங்களின் பங்கு என்ன என்பதைச் சற்று அறிவு பூர்வமாக உள்ளுணர்வுடன் சற்று தனது மனசாட்சியை இங்கு முன்னிறுத்திக் கொண்டுதான் பேசவோ எழுதவோ அல்லது மேடை போட்டுக் கூப்பாடு போடவோ செய்ய வேண்டும்!

உண்மையை எழுத வேண்டுமென்றால் தமிழினத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும், எதிரிகளே இவர்கள்தாம்! என்னைக் கேட்டால் வடமொழி ஆதிக்கமும், வடவர்களின் சாதிமத, இன, உணர்வுகளின் மேலாதிக்கமும், தமிழகத்தில் நிரந்தரமாக வேறூன்றியதற்கு இவர்கள்தான் காரணம் என்பேன்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பிறப்பெடுத்து தங்களை, தங்கள் சுயநல நோக்கங்களை, தங்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்திக் கொள்வதற்காக, எதையும் இழந்து, எதையும் அடையத் துடிக்கும் சுயநலவாதிகள்தான் இந்தத் தமிழினக் காவலர்கள்!

இன்று ஆங்கில மொழி ஆதிக்கம் பன்மடங்கு பெருகி நிற்பதற்கு தலையாய காரணமே இந்தத் தமிழ்மொழிக் காவலர்கள்தாம்! என்ன ஒரு வருத்தமென்றால் பிறர் முதுகிலுள்ள அழுக்குதான் இவர்களுக்கு தெரிகிறது! தன் முதுகிலுள்ள அழுக்கு இவர்களுக்கு தெரிவதில்லை! தெரிந்துதான் என்ன நடந்துவிடப் போகிறது? இவர்களின் அழுக்கு தொலைந்து விட்டால் தமிழ்மொழி, மீண்டும் உலகின் முதலில் தோன்றிய மொழியாக அல்லவா மாறிவிடும்! அப்படி மாறிவிட்டால் இவர்கள் எப்படி வாழ முடியும்? இவர்களின் உல்லாச வாழ்வு எப்படித் தொடர முடியும்?

தமிழர்கள் அறியாமையில் வாழ்ந்திருந்தால்தான், இது போன்ற தமிழ் மொழிக் காவலர்களின் வாழ்க்கையும் தொடர முடியும்! அதற்குத்தான் இந்த தமிழ் மொழிக் காவலர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்! அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்!

இனியாவது தமிழ் மொழிக்கு எதிரிகள் யாரென்பதை கட்சி உணர்வுகள், சாதி, மத, இன உணர்வுகளைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, தமிழக மாணவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

தமிழகம் இந்த தேசத்தின் விடுதலையைச் சந்தித்த பிறகு பல்வேறு தலைவர்களை முதல்வர்களாகக் கண்டுள்ளது!      இவர்களில் கல்விக்கென பிரதான இடம் தந்து, படிக்காத பாமரர்களையும் படிக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு, அதில் வெற்றியும் கண்டவர் படிக்காத மேதை காமராசர்! இவரது மதிய உணவுத் திட்டத்தின் விளைவாகத்தான் வசதி வாய்ப்பற்ற, ஒருவேளை உணவிற்கே வழியற்ற பல ஏழைக் குழந்தைகள் ஓரளவாவது படிப்பறிவு பெற முடிந்தது!

படிக்காத மேதையின் ஆட்சிக்காலம்தான் தமிழகத்திலுள்ள இன்றைய அரசுப் பள்ளிகளின் பொற்காலம் எனலாம்! அதுதான் வரலாற்றுச் சாதனை! அதற்குப் பின்னர் வந்தவர்களின் ஆட்சிகளில்தான் அரசுப் பள்ளிகளின் தரம் குறையத் துவங்கியுள்ளது! அரசுப்பள்ளிகளுக்கு இருண்ட காலம் தொடங்கியதுவும், தமிழ் வழிக் கல்விக்கு அழிவு காலம் தொடங்கியதுவும், இந்தக் கால கட்டத்தில்தான்!

இது நான் ஏதோ கற்பனையில் எழுதுகின்ற கதையல்ல! இந்த திராவிட ஆட்சியாளர்களின் குழப்பமான கல்விக் கொள்கைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் நான்! எனது கல்வி வாழ்க்கை அடியோடு தொலைந்த அந்தக் காலம் முதல் இன்று வரை அரசுப் பள்ளிகளின் இருண்ட காலத்தை அனுபவ ரீதியில் கண்டு வந்துள்ள வேதனையின் வெளிப்பாடுதான் இந்த குமுறலின் தாக்கம்!

தமிழ் மொழிக் காவலர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன்பு வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அதுவும் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அடையாளத்தின் மிச்சமாக, கிறித்தவர்களால் நடத்தப்பட்ட ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள்தான் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தன! ஆனால் தமிழ் மொழிக் காவலர்களின் ஆட்சிகள் குறிப்பாக திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் வேறூன்றத் துவங்கிய பின்னர்தாம்  அரசுப் பள்ளிகளின் தரம் படுவேகமாகச் சரியத் துவங்கியது!

   உண்மையிலேயே தமிழ் மொழிக் காவலர்கள் தமிழுக்கென பாடு பட்டிருந்தால் இன்றுள்ள புற்றீசல் ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் தமிழகத்தில் தலையெடுத்திருக்கவே முடியாது! ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் தலையெடுத்து அவர்களுக்கு வளமான வாழ்வு தொடர்ந்த இன்றுள்ள நிலைக்கு முழுக் காரணமே திராவிடக் கட்சிகள்தான்!

இவர்களின் ஆட்சியில்தான் ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் ஏராளம் தொடங்கி நடத்த அனுமதி தரப்பட்டு தமிழக நடுத்தர மக்களின் உழைப்பினைச் சுரண்டும் வணிக வளாகங்களாக மாற்றம் பெற்றன!

தமிழின உணர்வும் தமிழ் மொழி உணர்வும் இவர்களுக்குச் சிறிதளவேனும் இருந்திருந்தால் இவர்களின் ஆட்சிக்காலத்தில்;  புதிய ஆங்கில வழிக் கல்விக்கூடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு  இவைகளை விடச் சிறப்பான முறையில் உலகத்தரத்திற்கு அரசின் தமிழ் வழிக் கல்விக்கூடங்கள் பெருகி இருக்க வேண்டும்!

அப்படித் தமிழ்வழியில் சிறப்பான கல்விமுறை தமிழகத்தில் கிடைத்திருந்து இவர்கள் மொழியில் சொல்வதென்றால் சொரணையற்ற தமிழினம் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் சேர்த்துத் தமிழ் மொழியை மறந்து ஆங்கில மொழிக்கு அடிமையாகியிருந்தால் இன்றுள்ள தமிழ் மொழிக் காவலர்களின் புலம்பல்கள் நியாயமென்று நானும் ஒத்துக் கொள்வேன்! மேலும் வெள்ளையருக்கோ அல்லது அவர்களின் மதத்தைப் பின்பற்றுகின்ற தமிழகத்தில் பிறந்து கிறித்தவராக வாழ்கின்ற சிறுபான்மைக் கிறித்தவர்களுடைய கல்விக் கூடங்கள்தான் விச மரமாக வளர்ந்து தமிழ்ப் பயிரை மேய்ந்திருக்க வேண்டும்! அதுதான் நடந்திருக்க வேண்டியது!

ஆனால் நடந்த கதையோ வேறு! நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போன்று ஒரு வருடம் ஒரு சட்ட மன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ, வாக்கு வங்கியை வளைத்து வைத்திருக்கும் ஒரு சாதித் தலைவராகவோ, அல்லது குறைந்தது ஒரு தெருவின் மக்கள் பிரதிநிதியாக இருந்துவிட்டாலே ஒரு கல்விக் கூடம் தொடங்கி நடத்துமளவிற்கு பணம் புரட்ட முடிகின்றதென்றால் அதுதான் நமது ஊழல் திராவிடக் கட்சிகளின் சாதனை!

இவர்களைத் தூற்றியும் துதிபாடியும் தங்கள் கட்சிகளை வளர்த்துக் கொண்டவர்களும், இவர்களின் நடிப்பாற்றலைக் கற்றுக் கொண்டு வித்தை காட்டும், புதிய புதிய அரசியல்வாத மதவாத, நடிகவாதிகள் வசம்தான், இன்றுள்ள பெரும்பான்மையான ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் உள்ளன!

வெளிப்பார்வைக்கு அடித்துக் கொண்டு உள்ளுக்குள் உறவாடித் தமிழினத்தை வேரறுக்கும் இவர்களின் புலம்பல்கள் தொடர்ந்தால்தான் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கென ஒதுக்குகின்ற வரிப்பணத்தை ஏய்க்க முடியும்! அப்படிக் கிடைக்கும் ஊழல் பணத்தை தங்களின் சொந்தக் கல்விக்கூடங்களில் முதலீடு செய்து விட்டு தமிழினத்தை முன்னேற விடாமல் செய்து தங்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்!

இப்பொழுது புரிகின்றதா? நமது தமிழினக் காவலர்களின் தமிழ்மொழி ஆதரவு நடவடிக்கைகளின் பின்னணி! இவர்களின் புலம்பல் நின்று விடுகின்ற ஒரு நிலை உருவாகி விட்டதென்றால் தமிழினம் விழித்துக் கொண்டதென்ற காலம் தொடங்கி விட்டதென்று உறுதியாகக் கூற முடியும்!

அன்று தமிழகத்தில் சாதி மத பேதமற்ற உலகத்தர அரசுப் பள்ளிகள்; மட்டுமே நிலைத்திருக்கும்! நம் அரசியல்வாதிகளின் ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் ஒன்று நடத்த முடியாத நிலையில் மூடப்பட்டிருக்கும்! அல்லது அரசின் வசம் இந்தப் பினாமிக் கல்விக் கூடங்கள் ஒப்புவிக்கப்பட்டு தரமான தமிழ் வழியில் முற்றிலும் புதிய சூழ்நிலையில் எதிர்காலத் தமிழினம் உலகத்தரக் கல்வியினை நிச்சயம் பெறும் நிலை உருவாக்கப்படும்!

வானில் தவழும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடந்தால் அது முதலில் தமிழ்ப் பள்ளியாகத்தான் நிச்சயம் இருக்கும்!

ஆக
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்!
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்!

Read More...

ஆயிரம் கரங்கள் நீட்டி

Leave a Comment
புதிய சூரியனின் பார்வையிலே!
உலகம் விழித்துக்கொள்ளும் நேரமிது!
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி கர்ணன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி என்ற பாடலை இதன் இனிமை காரணமாக அடிக்கடி கேட்க விரும்பி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே அந்தப்படத்தின் ஒலி நாடா ஒன்றை வாங்கி அடிக்கடி கேட்பது எனது வழக்கம்!
இந்தப் பாடலில் இடம்பெற்ற கருத்தின் மீதோ இப்பாடலில் வரும் வரிகள் எதைப் போற்றிப் பாடப்பட்டது எனவும் கூட நான் அறிந்து கொள்ள முற்பட்டதில்லை! தற்பொழுது பிரபஞ்ச சக்திகளின் வெளிப்பாடு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் விழைவாக நான் காலை எழுந்து காலைக்கடன்கள் முடித்து குளித்தவுடன் கதிரவனை வரவேற்க வீட்டின் மாடிக்குச் சென்று விடுவது வழக்கம்!
உலக மக்கள் அனைவரும் சாதி மத பேதங்களால் பிளவுபட்டு நின்று ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ முற்படாவிட்;டாலும் தம் வாழ்நாள் முழுவதும் பிரபஞ்ச சக்திகளைச் சார்ந்தே வாழ வேண்டி வரும்!
கதிரவன் அவர்களில் பிரதானமானவன்! கதிரவனின் இயக்கம் நின்று போனால் பிரபஞ்ச வெளியிலிருந்து இந்தப் பூமிப் பந்து விலகிச் சென்று உலக மக்களே இல்லாது போகும் நிலை உருவாகும்!
எனவேதான் நான் பிரபஞ்ச சக்திகளில் பிரதானமான கதிரவனை காலைப் பொழுதில் வாழ்த்தி வரவேற்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்! மேலும் பிரபஞ்ச சக்திகளுடன் இணைந்து தமிழக மக்களின் எண்ண சக்திகளையும் ஒன்று திரட்ட எண்ணினேன்! எனவே இந்தப் பாடல் வரிகளில் சில மாற்றங்களைச் செய்து எனது எண்ணங்களை இந்தப் பிரபஞ்ச வெளியெங்கும் பரவச் செய்யத் துவங்கினேன்!
கவியரசரின் பாடலில் உள்ள போற்றதல் என்ற வார்த்தைகள்; மத உணர்வு சார்ந்தது! போற்றுதல் கூட மற்றவர்களைத் துதிப்பதுபோல அமையும்! வணங்குதலும் போற்றுதலும் தமிழர் வழக்கமில்லை என்ற உலகத்தமிழ் அறிஞர்களின் வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவன் நான்!
மாற்றம் செய்யப்பட்ட எனது வரிகள் முழுக்க முழுக்க தமிழினத்திற்கே உரிய உன்னதமான வாழ்த்துதல் எனும் பண்பு நலனுக்கு உரியது!
எனவே இப்பொழுதெல்லாம் கடமைக்காக எனக்கு வணக்கம் தெரிவிப்பவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களை வாழ்த்துவதையே எனது வழக்கமாக்கிக் கொணடுள்ளேன்!
கவியரசரின் மாற்றம் செய்யப்பட்ட இந்தப் பாடல் வரிகள் நம் பள்ளிக் குழந்தைகளின் தினசரி இயற்கை வாழ்த்துப் பாடலாகப் பாடப்பட வேண்டுமென்பதே எனது விருப்பம்!
உன்னதமான பழைய திரைப்படப் பாடல்களை புதுமை என்ற பெயரால் ஆர்ப்பாட்டமான இசையால் சிதைத்து வேதனைப்படுத்துவது போல எனது மாற்றம் இல்லை என்பதைக் கவியரசரைச் சார்ந்தவர்கள்கூடக் கட்டாயம் புரிந்து கொள்வர்!
இந்தப் பாடல் வரிகளில் எந்தச் சாதியும் இல்லை! மதங்களின் பின்னணியும் இல்லை! இந்தப் பாடல் வரிகளிலுள்ள ஆழ்ந்த அற்புத வரிகள் மழலைகளால் புரிந்து கொள்ளப்பட்டு காலைச் சந்திப்பின்;போது பாடப்பட வேண்டும்!
உலகை அச்சுறுத்தும் தீவிரவாத இருள் அகல, சாதிய மதவாத பேத இருள் அகல, மக்களின் அறியாமையை வளர்த்து வன்முறை வளர்க்கும் அரசியல்வாத இருள் அகல, துன்ப இருள் அகல, மாணவர்தம் இதயத்தில் எழும் எதிர்காலம் குறித்த அச்ச இருள் அகல, இந்தப் பாடல் வரிகளைத் தம் இதயத்தில் ஏற்றுவதால் அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்ற முடியும்!
தாய்மை, அன்பு,  கருணை,  தூய்மை,  வாய்மை,  நேர்மை,  அகிம்சை எனும் தீபங்களைத் தம் நெஞ்சினில் ஏற்றத் தயாராகும் மாணவச் செல்வங்கள் நிச்சயம் எனது கருத்தை ஏற்றுக் கொள்வர்!
சாதிமத உணர்வுகளைத் தொலைத்து விட்டு புதிய வடிவம் பெற்றுள்ள எனது தினசரி இயற்கை வழிபாட்டுப் பாடல் இனி இது மட்டும்தான்!
இந்த பாடல்வரிகளில் உள்ள உயர்ந்த எண்ணங்கள் பிரபஞ்ச வெளியெங்கும் பரவிப் பாடல் வரிகளுக்குச் சொந்தமுள்ள உயர் நெஞ்சங்கள் ஒன்று சேரும் காலம் விரைவில் உருவாகும்!

               ஆயிரம் கரங்கள் நீட்டி
               அணைக்கின்ற தாய்மை வாழ்க வருக!
               அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
               இருள் நீக்கம் தருவோர் வாழ்க வருக!
               தாயினும் பரிந்து சாலச்
               சகலரை அணைப்போர் வாழ்க வருக!
               தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
               துணைக்கரம் கொடுப்போர் வாழ்க வருக!
               தூயவர் இதயம் போலத்
               துலங்கிடும் ஒளியோர் வாழ்க வருக!  
               தூரத்தே நெருப்பை வைத்துச்
               சாரத்தைத் தருவோர் வாழ்க வருக!
               ஞாயிறே நலமே
               ஞால முழுதும் வாழ்க! வருக!
               நானிலம்; உளவோரெல்லாம்
               வாழ்கவே! வாழ்க! வருக!
         
             வாய்மையே என்றும் வெல்லும்!

Read More...

பிரபஞ்ச சக்திகள்!

Leave a Comment

                    உலகெங்குமுள்ள மக்களின் நம்பிக்கைப்படி காலம் காலமாகக் கடவுள் ஒருவர்தான் எனும் நம்பிக்கை சரியல்ல எனப் பிரபஞ்ச சக்திகள் என்னுள் ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்து விட்டன!

உலகில் உயிர்கள் தோன்றிய பின்னர் படிப்படியாக மாற்றங்கள் அடைந்து மனித இனம் மற்ற உயிரினங்களை விடச் சற்று மேம்பட்டு சிந்திக்கின்ற திறனை அடைந்தன!

நாகரீகமின்றி கண் போன போக்கில் வனங்களில் கூட்டம் கூட்டமாகத் திரிந்து காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்து வந்த மனித இனம் கால வெள்ளத்தில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து, தங்களின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்திக் கொள்ளத் துவங்கியது!

எல்லையில்லாத உலகில் நாடோடிக்கூட்டமாக வாழ்ந்த மனித இனம் தனக்கென இருப்பிடம் தனக்கென வேளாண்மை செய்ய வயல்கள் என எல்லை வகுக்கத் துவங்கின!

அதுவே பின்னர் விரிவடைந்து இனம் மொழி மதம் நாடு எனப் பேதங்கள் உருவாகத் துவங்கின! பின்னர் தனது எல்லைகளை விரிவு படுத்துவதென்ற செயலில் ஈடுபடத் துவங்கி போர்களில் ஈடுபட்டு மனித இனம் தங்களுக்குள் அடித்துக் கொண்டு வாழத் துவங்கின!

ஓவ்வொரு இனமும் கடவுள் வழிபாட்டை ஏற்படுத்தத் துவங்கின!
இதன் காரணமாக மனித இனத்திற்குள் கருத்து பேதங்கள் தோன்றத் துவங்கின! இந்தக் கருத்து மோதல்கள் வலுவடைய வலுவடைய உலகில் நன்மைக்கென ஒரு சக்தியும் தீமைக்கென ஒரு சக்தியும் உருவாகின!

மனித உயிர்கள் இறப்பைச் சந்தித்தாலும் அவற்றின் இயல்புகள் அந்தந்த காலத்திற்கேற்ப மாறத் துவங்கின! இறப்பிற்குப் பின்னாலும் மனித உயிர்கள் மீண்டும் மீண்டும் மனித உடல்தாங்கி தங்களின் முற்பிறப்பின் நோக்கங்களுக்கேற்ப இந்த பூமியிலேயே தொடர்ந்து வாழத் துவங்கின!

எனினும் பெரும்பாலான உயிர்கள் பிரபஞ்ச வெளியிலேயே சஞ்சரித்துக்கொண்டு காலம் இடம் தேர்ந்தெடுத்து பூமியில் பிறப்பெடுக்கத் துவங்கின! பிரபஞ்ச வெளியில் சஞ்சரித்து வாழும் இந்த மனித உயிர்களில் தீமை செய்யும் சக்திகளும் அவற்றை எதிர்க்கின்ற நன்மை செய்யும் சக்திகளும் நிலைபெற்றன!

இவைகளின் செயல்பாடுகளை மண்ணில் வாழும் மக்களின் எண்ணங்கள்தான் இன்று வரை தீர்மானித்து வந்துள்ளன! இவற்றின் சதவீதம் நன்மைக்கு ஆதரவாக அதிகரிக்கும்போது உலகில் நன்மைகள் அதிக அளவிலும் தீமைக்கு ஆதரவாக அதிகரிக்கும்போது உலகில் தீமைகளும் விழையத் துவங்கின!

இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு காலம் காலமாக பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளதாலேயே உலகம் பல்வேறு விதமான கால கட்டங்களில் மிகப்பெரிய போர்களையும் இயற்கைப் பேரிடர்களையும் சந்தித்து வந்துள்ளது!

தமிழினத்தின் அறிவிற்கும் ஆய்விற்கும் எட்டிய வகையில் தமிழகத்தில் வள்ளுவப் பெருந்தகை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித சமுதாயத்தின் நன்மைக்கென வள்ளுவத்தைப் பாடி வைத்தார்! வடக்கில் புத்தர் தோன்றி வடவர்களிடம் தோன்றிய மூடப்பழக்க வழக்கங்களை களைய முற்பட்டார்!

இவர் போன்றே உலகில் இதே கால கட்டத்தில் தோன்றிய இயேசுவும் நபிகளும் தங்களின் கருத்துக்களைப் போதனையாகத் தங்களின் மக்களுக்கு அறிவுறுத்தினர்!

மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கித் திலைத்த பழைமைவாதிகளால் இந்த நல்லவர்கள் தாங்கள் வாழ்ந்த காலம் முதற்கொண்டு பிரபஞ்ச வெளியில் நிலை கொண்டு மறைவாக வாழும் இந்த நாள் வரை எதிர்க்கப்பட்டே வருகின்றனர்!

இதன் பின்னர் தோன்றிய பல்வேறு நல்ல சக்திகளும் மனித உயிர்களின் மேன்மைக்கென கடுமையாகப் போராடி வந்துள்ளனர்! தமிழகத்தை வழி நடத்திய மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்தில்தான் வடவர்கள் நம் தமிழகத்தில் பக்தி மார்கம் என்ற பெயரில் ஆதிக்கம் செழுத்தத் துவங்கினர்!

அவர்களை நல்வழிப்படுத்தவே தமிழகத்தில் பதினென் சித்தர்கள் தோன்றினர்! அவர்களுக்குத் தலைமை தாங்கி இன்றுவரை நம் தமிழகத்தை அமைதிப் பூங்காவாகக் காத்து வருபவர்கள் தமிழ்க் கடவுளர்களாம் முருகனும் தொல்காப்பியம் சுட்டும் மாயோன் எனப்படும் கண்ணனுமான சைவ வைணவப் பிரதான பிரபஞ்ச சக்திகளே!

இந்தச் சக்திகளின் துணையை வாய்மை உணர்வை உயிர் நோக்கமாகக் கொண்டவர்கள்தாம் அடைய முடியும்! தமிழருக்கு இந்தச்சக்திகளின் துணை ஏராளம் உண்டு!

இவர்களின் துணையுடன் தமிழகத்திலும் உலகெங்கிலும் வாழும் வாய்மை  எண்ணம் நிறைந்தோரின் உணர்வுகளை மேம்படுத்தி உலகை ஆளும் சக்தி தமிழுக்கு உண்டு!

Read More...

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

Leave a Comment

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!
    ஒருவரை மற்றவர் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற பண்புநலம் முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்! நமது சங்க கால இலக்கியங்கள் இதனை நன்கு விளக்கியுள்ளன!

வாழ்த்துவதற்கு வயது பேதம் தமிழரிடத்தில் இருந்தது கிடையாது! பெரியவர்களைச்  சிறியவர்கள் சந்திக்கும்போது பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்துவதும் பதிலுக்கு சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்துவதும் பழங்காலத் தமிழர்தம் மரபு!

மனநிறைவாகவும் உளமாறவும் வாழ்த்துதல் நிகழ்வதால் இருசாராருக்கும் அறிவியல் ரீதியான நன்மைகள் நிகழுகின்றன! இவ்வாறு வாழ்த்தும்போது சிறியோரால் வாழ்த்து பெறும் பெரியவர்களின் வயது நீடித்து வந்துள்ள விந்தையையும் பதிலுக்கு பெரியோர்தம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பெறும் சிறியோருக்கு அவர்தம் அறிவும் அன்பும் நிறைக்கப்படுவதை உலகோர் ஒப்புக்கொள்வர்.

அது மட்டுமன்றி தமிழர்கள் இயற்கையையையும் இந்த பிரபஞ்ச வெளியையும் வாழ்த்துகின்ற தன்மையை வெளிப்படுத்தி அதன் வாயிலாக இயற்கையிடமிருந்தும் இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் ஏராளமான நன்மைகளைப் பெற்று வந்துள்ளனர். இன்றுவரை தமிழகம் வந்தாரை வாழவைத்து அச்சமின்றி வாழும் சூழலுடன் (இத்தனைக்கும் தன்னுடைய வளங்கள் அனைத்தையும் மற்ற இனத்தவரிடம் இழந்துவிட்டு) வாழ வைத்திருப்பதே இதற்கு சாட்சியுமாகும்.

வாழ்த்துகின்ற எண்ணங்களுக்குள்ள மகத்தான ஆற்றல் அப்படி! வாழ்த்துதலின் சிறப்பியல்புகளைப் பற்றி நமது தமிழரிஞர்கள் எத்தனையோ முறை எடுத்துரைத்தும் வாழ்த்துதல் பற்றிய விழிப்புணர்வும் அதனை நமது வாழ்வின் ஒரு அங்கமாகப் புதுப்பித்துக் கொள்ளும் மன நிலையும் இதுவரை நமக்குள் ஏற்படவே இல்லை!

நமது வாழும் கலை அமைப்பாகிய வாழ்க வளமுடன் அமைப்பைச் சார்ந்தவர்கள் வாழ்த்தும் வழக்கத்தைக் கடைப் பிடிக்கின்றனர்! அவர்களின் இந்த வார்த்தைக் கோர்வையில் வளமுடன் என்ற வார்த்தை முடன் என்று முடிவதால் அது சிறப்பான பதமாக அமையவில்லை என்பதைத் தமிழறிஞர்கள் எவருமே மறுக்க மாட்டார்கள்!

முடன் என்றால் முடக்குதல் என்ற பொருள்படுவதாக உள்ளதெனக் கருதி எங்கள் வாழும் ஆசான் சித்த வைத்திய அறிஞர் சிவன்மலை தவசிகளார் அவர்கள் வாழ்வாங்கு வாழ்க என்ற வாழ்த்துதல் பண்பினை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தினார்! வள்ளுவத்தை வாழ்க்கை நெறியாக்கி வாழ வலியுறுத்தும் அவர் இந்த முழக்கத்தை வள்ளுவத்திலிருந்துதான் தேர்ந்தெடுத்தார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

கவனியுங்கள்! வள்ளுவம் வளமுடன் வாழ்பவன் எனப் பாடவே இல்லை. வாழ்வாங்கு வாழ்பவன் எனவே பாடியுள்ளார்.

ஆனாலும் எங்கள் ஆசானின் இந்த முழக்கம் பெரும்பாலான தமிழர்களைச் சென்றடையவில்லை! அவரது முழக்கம் மிகச் சிறப்பான, முடிவற்ற வார்த்தைகளை உடைய, இதயம் நிறைந்து வாழ்த்தும் வலிமையான எண்ணங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றது!

நமது தமிழ் மக்கள் அனைவருமே பிறரை சந்திக்கும்போது மனதார வாழ்த்துகின்ற தமிழர்தம் மரபை முற்றிலும் மறந்து விட்டு ஆங்கில மற்றும்  வடவர் மோக அடிமைகளாகவே மாறிவிட்டனர்!

உயர் அலுவலர்களைக் காணும்போது உள்ளுக்குள் வெறுப்புணர்வோடும் வெளியில் கடமைக்குச் சொல்லித் தீரவேண்டுமே என்ற நோக்கோடு காலை, மதியம், மாலை, இரவு, என நான்கு வேளைகளும்,
குட் மார்னிங் சர், குட்ஆப்டர்நூன் சர், குட் ஈவினிங் சர், குட்நைட் சர், எனத் தங்கள் ஆங்கில மோகத்தை வெளிப்படுத்தியும் அதே சமயம் அதற்கான அர்த்தம் விளங்காமலும் கூறுகின்றனர்!

சற்று நாகரீகமாகக் காட்சியளிக்கும் பெண்களைச் சந்திக்கும்போது குட்மார்னிங் மேடம் வாங்க மேடம் எப்படி இருக்கீங்க மேடம் என அழைக்கத் துவங்கியுள்ளனர்!

ஆங்கிலேயரின் இந்த வாழ்த்து முறை நமது தமிழரின் வழக்கத்திற்கோ பண்பாட்டிற்கோ சற்றும் பொருந்தாததுவும், நமது மரபிற்கு ஏற்புடையதுமல்ல!

ஆங்கிலத்தில் இவ்வாறு அழைப்பது அழகாகத்தானே இருக்கிறது எனக் கருதினாலும் நமது பண்பாட்டில் பொதிந்துள்ள நன்மைகளைத் தெளிவாக உணர்ந்தால்தான் ஆங்கில மோகம் தவறு என விளங்கிவிடும்!

ஆங்கிலத்தில் குட்மார்னிங் சர் என நாம் நமது எதிரிலுள்ளவரைப் பார்த்து மரியாதை செய்கிறோம்! இதற்கான அர்த்தம் தமிழில் நல்ல காலைப் பொழுது ஐயா என வருகிறது! இதனை நாம் அவருக்கு ஆங்கிலத்தில் தெரிவித்தாலும் தமிழில் தெரிவித்தாலும் காலைப் பொழுது நல்ல பொழுதுதான்!

இப்படி நீட்டி நெளித்துதான் நாம் மற்றவர்களை வாழ்த்த வேண்டுமா? அடுத்ததாக தற்பொழுது நடைமுறையில் உள்ள பெரும்பாலான சொல் வணக்கம் என்பது!

இந்த வணக்கம் என்ற சொல் வடவர்களால் உருவாக்கப்பட்டது! தமிழர்களின் சங்ககால வாழ்க்கை முறையில் யாரும் யாரையும் வணங்கியதற்கான செய்தியோ சான்றுகளோ கிடையாது!

வணங்குதலும் வணக்கமும் வடவர்களின் பக்திமுறை தமிழகத்தில் வேறூன்றிய பின்னர் ஏற்படுத்தப்பட்டவை! இதுவும் நமது தமிழர்களின் வழக்கத்திற்கு நேர்மாறானது!

எப்படி நாம் ஆங்கிலத்திலுள்ள வணக்க முறையினை, நமக்கு முற்றிலும் உரியதாக மாற்றிக் கொண்டோமோ, அப்படியே வடவரின் வணக்க முறையினையும் நமக்கு உரியதென காலம்காலமாக நமக்குள் உருவேற்றி வந்துள்ளோம்!

எனவே இந்த இரு முறைகளும் தமிழர்தம் பண்பாட்டிற்கும் வாழ்வியலுக்கும் சிறிதளவும் பொருத்தமற்றது! தமிழர்களின் வாழ்த்துதலில் உள்ள செய்தியும் அதில் பிறருக்கு ஏற்படுகின்ற நன்மைகளும் வார்த்தைகளால் விவரிக்க அடங்காது! அதை உணர்ந்து ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்துபவர்களுக்குத்தான் அதன் தாக்கம் எவ்வளவென்று புரிந்து கொள்ள இயலும்!

நாம் நமது அரசியல்வாதிகளை வாழ்த்துவதைத்தான் தற்பொழுது நடைமுறை வழக்கமாகக் கொண்டுள்ளோம்!

இன்னார் வாழ்க என்று ஒரு தமிழர் தனக்குப் பிடித்த அரசியல் தலைவரை வாழ்த்தும்போதே மறவாமல் இன்னார் ஒழிக என்று தனக்குப் பிடிக்காத அரசியல் தலைவரைத் தூற்றுவதுமான தமிழின நாகரீகத்திற்கு விரோதமான செயலும் தற்பொழுது வெகு வேகமாகப் பரவி வருகிறது!

வாழ்த்துவது மட்டுமே எவ்வாறு தமிழினத்திற்கு முற்றிலும் உரியதான குணமோ அது போலவே மற்றவரைத் தூற்றுவதும் தமிழின நாகரீகத்திற்கு நேர் விரோதமான செயல் என்பதை உணர்ந்து பிறரைத் தூற்றுவது போன்ற நாகரீகத்திற்கு விரோதமான செயலை இனியாவது நாம் கைவிட வேண்டும்!

எது எப்படியோ நமது வாழ்த்துதலுக்கு உரிய சிறப்புகளை அறிந்தோ அறியாமலோ நமக்குப் பிடித்த அரசியல் தலைவர்களை வாழ்த்தி வருகின்றோம்! இவர்களில் பெரும்பாலானவர்கள் சுயநலவாதிகளாக மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து உல்லாச வாழ்க்கை வாழ்பவர்களாகத்தான் உள்ளனர்!

எனினும் அவர்களிடத்திலுள்ள ஏதோ ஒருவகை ஈர்ப்பு காரணமாக  அவர்கள் செய்யும் தவறுகள் நமக்கு புரிந்தும் அவர்களிடமுள்ள இந்த குறைகளை நாம் பொருட்படுத்துவதில்லை! இதற்கு வலுவான பிண்ணனியாக சாதிப் பற்று அல்லது அவர்களிடத்திலுள்ள பேச்சாற்றல் அல்லது இலக்கியம், மொழி ஆளுமை, அல்லது ஆளுமைப் பண்பு என ஏதேனுமொன்றிற்காக அவர்களை நம் தலைவர்களாக ஏற்று வாழ்த்துகிறோம்!

இவ்வாறு அவர்களை நமது தலைவர்களாக நினைந்து நம்முடைய இதயத்தில் நிறைத்து நம் தமிழர்களுக்கே உரித்தான பண்பு நலனுடன் அவர்களை வாழ்த்துகின்ற நிகழ்வை நாம் இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளும்போதுதான் ஒரு உண்மை இங்கு நமக்குத் தெளிவாக விளங்குகிறது!

பாமரரோ படித்தவரோ எவராக இருந்தாலும் தங்களுக்குப் பிடித்த தலைவர்களை வாழ்த்துகின்ற நமது உயரிய குணம்தான் இந்தத் தலைவர்கள் மக்களுக்கு எத்தனை துரோகங்கள் செய்து சுயநலமாக வாழ்ந்தாலும் நீண்ட நெடிய ஆயுளுடன் வாழச் செய்கிறது! இந்த வாழ்த்து சதவீதம் தலைவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப சில சமயங்களில் கூடுவது அவர்கள் செய்யும் சில நன்மைகளால்தான்! குறைவது அவர்கள் செய்யும் தீமைகளால்தான்!

இதன் எதிரொலியை நாம் தேர்தல் காலத்திலும் கண்டு வந்துள்ளோம்! குறிப்பிட்ட தலைவர்களுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரிப்பது மக்களிடம் அவர்கள் செய்துள்ள நன்மைகள் காரணமாக என்பதை விட மக்களிடமுள்ள வாழ்த்து சதவிகிதத்தின் அளவினாலும்தான்!

எனவே நம் மக்களின் இந்த வாழ்த்தும் பண்பு நலத்தையும், அதனால்தான் தங்களின் வாழ்நாள் நீடிக்கின்றது என்ற உண்மையையும் நமது தலைவர்கள் புரிந்துகொண்டு இனியாவது சுயநல வாழ்க்கை முறையிலிருந்து விலகி சுயநலமற்ற தூய பொதுநலவாதியாக மாறவேண்டும்!

இதைத் தவிர வாழ்த்துதலின் நன்மைகளை எனது சொந்த அனுபவத்திலிருந்தும் இன்னும் சிறப்பாக விளக்க முடியும்!

நானும் எனது மகளும் ஒரு ரோஜாச்செடியினை எங்கள் வீட்டு மாடியில் வளர்ப்பதென முடிவு செய்து வாங்கி வந்தோம்! அதனை வாங்கும் போது அதில் பூத்திருந்த ரோஜாவின் அழகுதான் எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது!

ஆனால் நாங்கள் இல்லம் திரும்பிய பின்னர்தான் அதில் உள்ள இலைகள் பூச்சி அரித்தும் செடி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதுவும் தெரிய வந்தது! இதைக் கண்ணுற்ற எனது மனைவியிடம் சரியான செடியினைப் பார்த்து வாங்கக்கூட உங்களுக்குத் தெரியவில்லை என்ற பூசனையால் எங்கள் நிலை செடியைவிடப் பரிதாபமானது!

எனினும் வேறு வழியின்றி அந்தச் செடியினை நாங்கள் தொட்டியில் வைத்து நன்கு பராமரிக்கத் துவங்கினோம்! நான் இந்தச் செடியினை நட்ட நாளிலிருந்து அதனை வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்!
என்னிடமிருந்து வாழ்த்தும் பண்பினைக் கற்றுக் கொண்ட எனது மைத்துனரின் இரண்டு வயது மகனும் அந்தச் செடியைப் பார்த்து நான் சொல்லித் தந்தபடி செடி வாழ்க என மழலையில் வாழ்த்துவான்!

எங்களின் வாழ்த்துக்களின் தாக்கத்தால் அந்தச் செடி நன்றாக வளரத் துவங்கி அதிக அளவிலான ரோஜாக்களை எங்களுக்கு வழங்கத் துவங்கியது! இதே போன்று எனது மைத்துனரின் மகள் தனக்குப் பிடித்தவாறு வாங்கி வந்த மற்றுமொரு பலவீனமான ரோஜாச் செடியும் எங்களின் வாழ்த்துதலால் கொத்துக் கொத்தாக ரோஜா மலர்களை எங்களுக்கு வழங்கியது!

வயதானவனாகிய எனது வாழ்த்துதலில் கூட நம் இன்றைய வாழ்வியல் சூழலின் வேண்டாத குணங்கள் சிறிதளவேனும் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடும்! ஆனால் கள்ளங்கபடமற்ற மழலையின் வாழ்த்துதலில் உள்ள சிறப்பே இந்த இரண்டு செடிகளையும் வளரச் செய்து மணம் பரப்ப வைத்தது என்பதே எனது அனுபவ உண்மையாகும்!

இதே இரண்டு வயதுடைய எனது மைத்துனரின் மகனுக்கு நான் அவனைக் காலை வேளையில் முதன்முறையாகப் பார்க்கும்போது வாழ்த்துச் சொல்லும் வழக்கத்தினையும் ஏற்படுத்தினேன்! அவனும் தன் அன்னை சொல்லித் தந்தபடி என்னை பதிலுக்கு வாழ்த்துவான்! தினமும் நான் அவனைப் பார்த்து அவன் பெயரைச் சொல்லி வாழ்க என்று வாழ்த்தியவுடன் அவனும் பதிலுக்கு மாமா வாழ்க என்று என்னை வாழ்த்துவான்!

நாளாக ஆக அவனை நான் காலையில் முதல்முறையாகப் பார்த்து அவனது பெயரைச் சொல்லி அழைத்தாலே அவன் முகம் கொள்ளாச் சிரிப்புடன் என்னைப் பார்த்து மாமா வாழ்க என்று வாழ்த்துவான்! எனது அனைத்துத் துன்பங்களும் அந்த நிமிடம் முதல் தொலைந்தது போன்ற உணர்வுடன் நானும் பதிலுக்கு அவனை மனதார வாழ்த்துவேன்! அவனது வாழ்த்துதல் இதோ இந்த நிமிடம் வரை என்னிடமிருந்து விடைபெறும்போது தொடர்கிறது.

வாழ்த்துதலின் சிறப்பினை பன்மடங்கு உணர்ந்ததாலேயே நமது திருமண அமைப்பில் மணமக்களை வாழ்த்துவதை இன்றுவரை நாம் கடைப்பிடித்து வருகிறோம்! நமது திருமணங்களின் போது உறவும் நட்புமெனப் பலர் கூடி, தங்களின் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, மங்கள வாத்தியம் உரக்க ஒலிக்க மண நேரத்தின்போது, அனைவரது எண்ணங்களும் ஒருமுகமாகி, மனதார உளமாற மணமக்களை வாழ்த்துவதால், உண்மையிலேயே மணமக்கள் நமது வாழ்த்துதலின்படி, பதினாறு பேறுகளும் பெற்று, பல்லாண்டு வாழ்பவர்களாக மாறுகின்றனர்!

ஆனாலும் இன்றைய நமது வாழ்வியல் சூழலில் அது மனப்பூர்வமானதாக உள்ளதாக எனக்குத் தெரியவில்லை! மணமக்களை அவர்களின் நண்பர்கள் கேலி செய்வதும் எப்போது மணப்பெண்ணை அடிமையாக்கி தாலி கட்டுவார்கள் சாப்பிட்டுவிட்டு அவரவர் வேலைகளைப் பார்க்கக் கிளம்புவோம் என்று தவிப்பதும், திருமணச் சடங்குகளின்போது வழவழ எனப் பேசிக் கொண்டிருப்பதும், திருமண உறவுகள் தங்களின் தகுதிக்கு ஏற்ப சற்று சுவையின்றியோ அல்லது எளிமையாகவோ வழங்கும் உணவின் தரத்தைப்பற்றி வெளிக்காட்டி தங்களின் வெறுப்பு மனநிலையினை வெளிப்படுத்துவதும் போன்ற விரும்பத்தகாத செயல்கள் அவ்விடத்தில் நிகழ்வதால் வாழ்த்துவது மனப்பூர்வமானதாக அன்றிச் சடங்காகத்தான் உள்ளது! அதையும் தாண்டிய ஒரு சிலரது இதயம் நிறைந்த வாழ்த்துக்களால்தாம் இன்றுவரை நமது நாகரீகம் கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது!

என்னைப் பொருத்தவரை எனக்கு அறிமுகமில்லாத திருமணங்களில் கலந்து கொள்ளும்போது மணமக்களை அவர்களின் திருமண பந்த நிமிடத்தின் போது மனதார வாழ்த்துவேன்! தெரிந்தவர் எவரேனும் அழைத்தால் மட்டுமே உணவருந்தச் செல்வேன்! மணவீட்டில் பரிமாறும் இனிப்பின் சுவை போல மணமக்களின் வாழ்க்கை அமைய வேண்டுமென மனதிற்குள் வாழ்த்துவேன்! உணவருந்த வாய்ப்பில்லையெனில் வந்த கடமை முடிந்ததென மனதார மணமக்களை வாழ்த்திவிட்டு வீட்டிற்கு வந்தோ அல்லது வெளியூரென்றால் உணவகத்திலோ சாப்பிட்டு விடுவேன்!

பதினாறு பேறுகளும் பெற்று மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் நமது வாழ்த்துதலின் பெருமையினை இனியாவது உணர்ந்து இளைஞர்கள் திருமண விழாக்களை அர்த்தமுள்ளதாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்!

மேலும் நான் தினசரி எனது இயற்கை வழிபாட்டில் கவியரசர் கண்ணதாசனின் ஆயிரம்  கரங்கள் நீட்டி எனத்துவங்கும் உன்னதமான பாடலை மாற்றியமைத்து இந்த பிரபஞ்சம் முழுவதையும் வாழ்த்துவதை வழக்கமாக்கியுள்ளேன்!

எனவே இதைப்படிக்க நேரும் நல் உள்ளங்கள் இனி உங்களின் மழலைக்கும் வாழ்த்துகின்ற நற்பண்பைக் கற்று கொடுங்கள்! தமிழகம் முழவதும் இனி நாள் முழுக்க வாழ்த்துகின்ற பண்புநலம் ஓங்கி ஒலித்து நம் பிரபஞ்ச வெளியெங்கும் பரவட்டும்! உலகு தழைக்கட்டும்!

இந்த நிமிடம் முதல் மற்றவர்களைச் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற நமது பண்பாட்டைப் புதுப்பித்து வாழ்த்துவோம்! வளம் பெறுவோம்! வாழ்வாங்கு வாழ்வோம்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்ற தடுமாற்றங்களும் இனி எவருக்கும் வேண்டியதில்லை! தங்கு தடையின்றி யார் யாரை வேண்டுமானாலும் மனதார வாழ்த்துங்கள்! வாழ்வாங்கு வாழுங்கள்!


உலகோர் வாழ்வாங்கு வாழ்க!
தமிழினம் வாழ்வாங்கு வாழ்க!
பிரபஞ்சம்  வாழ்வாங்கு வாழ்க!

Read More...

தமிழக வாக்காளர்களே விழித்திடுங்கள்!

Leave a Comment

                   இதோ 2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள ஏராளமான அரசியல் இயக்கங்கள் தங்களுக்கு இத்தனை தொகுதியாவது கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால் கிட்டத்தட்ட ஏழு முனைப்போட்டிதான்  தமிழகத்தில் நடைபெறுமென்பது முடிவாகிவிட்டது. கடைசி நேரத்தில் எந்த இயக்கம் எங்கிருந்து எங்கு தன் பச்சோந்தி குணம் காட்டி நிறம் மாறி அணி மாறும் என்பதுவும் மதில்மேல் பூனை நிலையாகிவிட்டது.

இன்றைய தமிழக ஆளும் இயக்கம் தங்களுக்குள்ள குறிப்பிட்ட சதவீத மக்களின் ஆதரவுடன் நாற்பது தொகுதிகளிலும் வென்று மத்தியில் பிரதமர் பதவியும் தம்முடையதாகும் என்ற கனவுடன் ஏராளமான பொருட்செலவுடன் பிரம்மாண்ட மேடைகள் அமைத்து பரப்புரை செய்து வருகிறது.

மதவாத இயக்கமெனக் கருதப்படும் வட நாட்டு இயக்கமும் முரண்பாடான கூட்டணியைத் தமிழகத்தில் அமைத்துக்கொண்டு எப்படியாவது தமிழகத்தில் தனக்கென இதுவரை இல்லாத வாக்கு சதவீதத்தை முரண்பாடான இயக்கங்களின் தயவில் பெற்றுத் தமிழகத்தில் தன்னுடைய வரவைப் பதிவு செய்யத் துடிக்கிறது.

குடும்பப் பதவிச்சண்டை காரணமாகத் தள்ளாடித் தவிக்கும் இயக்கமும் எப்படியாவது தன்னுடைய செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்வதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்து வருகிறது.

பரிதாபததிற்குரிய வகையில் பொதுவுடைமை இயக்கங்களும் பழம்பெரும் தேசிய இயக்கமும் கூட்டணிக்கு வழியின்றிப் போனதால் தங்களுக்குள்ள சொற்ப வாக்கு வங்கியை மட்டும் நம்பித் தனித்து களம் இறங்கியுள்ளன.

இந்த நிலையில தமிழகம் புதுவை உட்பட நாற்பது தொகுதிகளையும் எந்த அணி வென்று தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்த முயன்றாலும் அது தமிழக மக்களின் 35 சதவீத மக்களின் ஆதரவுடன்தான் வெல்லமுடியும்.

ஆளும் இயக்கம் இதே சதவீத வாக்குகளுடன் வென்றாலும் அறுபத்து ஐந்து சதவீத தமிழக மக்களின் எதிர்ப்புணர்வுடன்தான் வென்றதாக அர்த்தம். அது மட்டுமன்றி இவர்கள் நாற்பது தொகுதிகள் வென்றாலும் அது பாரத அளவில் எட்டு சத அளவில்தான் உள்ளது. இந்த நிலையில் மைனாரிட்டி இயக்கமாகத்தான் பிரதமர் பதவிக்கு இந்த இயக்கம் முயற்சி செய்ய வேண்டும்.
ஆக எந்த அணி வென்றாலும் அந்த அணிக்கு எதிராக வெறுப்புணர்வுடன் 65 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர் என்ற உண்மையை எவரும் மறுக்க இயலாது.
பாரத அளவில் எந்த இயக்கம் மக்களின் முழு ஆதரவு பெறுமென்பது மக்களின் இன்றைய மன நிலையைப் பொருத்துதான் அமையப்போகிறது.

அநேகமாக வரும் பாராளுமன்றத்தேர்தலில் எந்த இயக்கமும் முழு ஆதரவு பெற்று தனித்து ஆட்சியமைக்க இயலாத நிலையில் தொங்கு பாராளுமன்ற நிலைகூட உருவாகலாம்.

அதே சமயம் தேர்தலுக்குப் பின்னர் எந்த இயக்கம் எந்த அணியுடன் அமைச்சர் பதவிக்கெனத் தனது பச்சோந்தி குண நிறம் காட்டி அணி மாறும் என்பதும் அந்த சமயத்தில்தான் தெரியவரும்.

எனவே தமிழக வாக்காளர்கள் தாங்கள் சார்ந்த இயக்கங்களின் மீது கடுமையான பாசம் வைத்து வாக்களிக்காமல் தமிழகத்தில் தற்பொழுது நிலவும் மின்வெட்டு, விலைவாசி ஏற்றம், வறட்சி, பொருளாதார வீழ்ச்சி, சாதியம், மதவாதம், தீவிரவாதம், அரசியல் எதேச்சாதிகாரம், இலஞ்சம், ஊழல் எனப் பல்வேறு சவால்களை மனதில்கொண்டு வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தலைப் பொருத்தவரை பணபலம் மிக்கவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முன் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே எளிமையானவர்கள் பொதுத் தொண்டுக்கு வர மக்கள் இவர்களின் வாழ்க்கை வசதிகளைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தலிலும் பணபலம் வென்றால் மக்கள் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம். வாக்களித்துவிட்டு ஐந்தாண்டுகளுக்குப் புலம்பித் தவிக்காமல் வாக்களிக்கும்போதே சிந்தித்து வாக்களித்தால் மக்கள் சக்தி வென்றதாக அர்த்தம்.

ஒரு தேர்தலிலாவது பணபலம் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இன்றைய அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை அவர்கள் புரிந்து தங்களைத் திருத்திக்கொள்ள முன்வருவர். அல்லது மக்களின் வெறுப்புணர்வு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அடையாளமின்றிப் போவர்.

எது நடந்தாலும் அது மக்களின் நன்மைக்காகத்தான் நடக்க வேண்டுமென்பதே எமது ஆவல்!

Read More...

கட்அவுட் கலாச்சாரம்

Leave a Comment

தமிழகத்தில் கட்அவுட் கலாச்சாரத்தை வேரறுப்போம்!
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் கமிசன் எடுத்த அதிரடியான நடவடிக்கையில் முதன்மையானது தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பல்வேறு இயக்கங்களின் பிரம்மாண்டமான கட்அவுட்டுகளை அப்புறப்படுத்தியதுதாம்.

தமிழகத்தில் இதுபோன்ற கட்அவுட்கள் தங்களின் தலைவர்களின் பிறந்தநாள்தான் (பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை எல்லோருக்கும் வருவது போன்றதுதான் எனினும்) உலகத்திலேயே புதிய அதிசயமான நாள் என்பதுபோல ஏராளமான அடைமொழிகளுடன் தங்கள் தலைவரை வாழ்த்தும் கட்அவுட்கள்,

மேலும் இயக்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த தலைமைக்கு நன்றிகூறும் விதமாக வைக்கப்படும் கட்அவுட்டுகள்,

ஆளும் எதிர்கட்சியினரின் சுய தம்பட்ட ஜால்ரா ரக கட்அவுட்டுகள், தலைவர்கள் தங்கள் பகுதிக்கு வரும்போது அவர்களைக் கவர்வதற்காகவும், தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் வைக்கப்படும் ஜால்ரா ரக கட்அவுட்டுகள்,

(சில தலைவர்கள் தாங்கள் இருப்பதை காட்டிக்கொள்ள தங்களின் சொந்த ஊருக்கு சொந்த வேலையாக வர நேர்ந்தாலும் தங்களுக்கென ஒரு ஜால்ரா கும்பலை வைத்துக்கொண்டு தங்களின் வருகையை கட்அவுட்கள் வைத்து வெளிப்படுத்தும் அவலங்களும் இங்கு அரங்கேறுகின்றன)

எங்கோ நடக்கும் மாநாடு, பேரணி, இயக்கப் பொதுக்கூட்டங்களுக்கு தங்களின் ஆதவாளர்களை அழைக்கும் கட்அவுட்கள், சுவர் விளம்பரங்கள் என எங்கு நோக்கினும் அதி பிரம்மாண்டமான கட்அவுட்கள் மற்றும் சுவர் விளம்பரங்களின் கலாச்சாரம் கோலோச்சுகிறது.

எந்த ஊரின் பேருந்து நிறுத்தத்தில் நாம் இறங்கினாலும் ஏராளமான கட்சி நிர்வாகிகளின் படங்கள் அடங்கிய (காவல் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் காணப்படுவது போல) அரசியல்வாதிகள் கவனம் என வரவேற்பது போன்ற கட்அவுட்களை இன்று சர்வ சாதாரணமாகக் காணலாம்.

கட்சி நிர்வாகிகள் குடும்பங்களில் நிகழும் கல்யாணம், காதுகுத்து, பூப்புநன்னீராட்டு விழாக்களில் கலந்து கொள்ள வரும் தங்களின் தலைவரை விதவிதமாக வர்ணித்து வரவேற்கவென எதெற்கெடுத்தாலும் கட்அவுட் வைக்கும் நம் தமிழின இயக்கங்களின் இந்த கலாச்சாரம் இன்னும் ஒரு நிகழ்வுக்கு மட்டும் வைக்கவில்லையென்பதுதாம் சற்று ஆறுதல் அளிக்கும் செயல்.

( அதுதாங்க! “எங்கள் பகுதிச் செயலாளரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வரும் எங்கள் ஆருயிர்த்தலைவர் அவர்களை வருக வருக அவர்தம் பொற்பாதம் தொட்டு வரவேற்கிறோம்” என்பதாக)

வேதனையான கற்பனைதான் என்றாலும் இந்தவகைக் கட்அவுட்களும் இனிவரும் காலங்களில் தமிழகத்தில் இடம்பெறுமோ என்ற அச்சமும் எம்முள் எழுகிறது.

தங்களின் வணிக நிறுவனங்கள் முன்பு இடையூறாக எந்த இயக்கம் கட்அவுட் வைத்தாலும் அவர் ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு வகை பயமும், எதிர்க்கட்சியாக இருந்தால் எங்கே இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் பழிவாங்கப்பட நேரிடுமோ என்ற அச்சத்தில் எவருமே இவர்களின் தகாத செயலை இதுவரை தட்டிக்கேட்க முன்வருவதே இல்லை!

தேர்தல் கமிசன் நடவடிக்கைக்கு பயந்து  அரசியல் இயக்கங்கள் தேர்தல் நடைபெறும் இந்த நாட்களில் கட்அவுட்கள் வைக்க இயலாததால் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தெருக்கள் விசாலமாகவும் பரந்துபட்டும் தெரிகின்றன.

இதே நிலை தமிழகத்தில் தொடர ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வந்தால் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காவது தமிழகம் இதுபோன்ற கட்அவுட்களின் தொல்லைகளிடமிருந்து விடுபடுமே என்ற ஏக்கமும் எம்முள் எழுகிறது.

தேர்தல் கமிசன் போன்றே இதுபோன்ற கட்அவுட் கலாச்சாரத்தை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அடியோடு தமிழகத்தில் களையும் என்பது எம்முள் நனவாகும் கனவாக விரிகிறது!

Read More...

வியாழன், 20 மார்ச், 2014

அங்குசம்!

Leave a Comment
அங்குசம்!

இந்தத் தலைப்பிற்கு முக்கிய காரணமே நமது இன்றைய வாக்கு வங்கியின் பரிதாப நிலையினை மனதில் கொண்டுதான்! தமிழக மக்கள் தங்களின் தற்போதைய மன நிலையிலிருந்து திருந்தி, மகத்தான மாற்றங்கள் பெற்று உயர் வாழ்வு பெற வேண்டுமென்ற நோக்கில்தான்!

தங்களது வியர்வை சிந்தி உழைத்த உழைப்பில் தாம் அளிக்கும் ஏராள வரிப்பணத்தை முறையாகச் செலவிட்டு, தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கில்தான், தமிழகத்தில் சங்க காலம் தொடங்கி இன்றுள்ளது போன்ற தேர்தல் முறை ஏற்படுத்தப்பட்டது!

மக்களுக்குத் தொண்டாற்றத் தகுதிமிக்க நபர்களைத் தேர்வு செய்யவே குடவோலை முறையில் வாக்களிக்க வைத்து, மக்கள் பிரதிநிதித்துவத் தத்துவத்தை உலகிற்குத் தந்தனர்  சோழர்கள்! மக்களாட்சித் தத்துவம் இந்த முறையில்தான் தழைத்தோங்க வழி காணப்பட்டது நம் தமிழகத்தில்!

இன்றுள்ள மக்களாட்சித் தத்துவம் கேலிக்கூத்தானது என்பதை எவரும் மறுக்க இயலாது! யானை கட்டிப் போரடித்த பெருமைக்குரிய தமிழினம் என்பதுவும், குடவோலை முறையில் நேர்மையுடன் ஆண்ட முன்னோடித் தமிழினம் நாம் என்பது, நமது இன்றைய தலைமுறைக்கு சரியாகச் சென்றடையவில்லை என்றே நான் கருதுகிறேன்!
   
தலைப்பிற்குரிய பொருள் என்னவென்று தமிழ் மக்களுக்கு விளங்காததல்ல! பத்து டன்னுக்கு மேல் எடையுள்ள ஒரு யானையை அடக்கி, அரைக் கிலோ எடையுள்ள ஒரு கருவியை வைத்துக் கொண்டு, ஒரு யானைப் பாகன் காட்டுகின்ற வித்தைக்கு பெருமை சேர்க்கின்ற பெயர் இது!

பாகனின் கையிலுள்ள இந்த மிகச் சிறிய அற்ப கருவியின் முன்பு அத்தனை பலமுள்ள யானை பலவீனமாகி அடங்கி விடுகின்றதென்றால் இந்தக் கருவி அவ்வளவு ஆற்றல் மிக்கதா? எனும் கேள்வியும் இங்கு எழத்தான் செய்கிறது! அங்குசத்திற்குரிய பலமல்ல இது! பாவம்! யானைக்கு உரிய பலவீனம் அது!

யானை சிறு களிராக இருக்கும்போதே அதனைப் பழக்கப்படுத்தி, தமக்கு கட்டுப்பட வைத்து, தன்னால் செய்ய இயலாத ஆற்றல் மிகுந்த செயல்களை செய்வதற்கு, மனித இனம் உருவாக்கிய சிறு ஆயுதம் அங்குசம்!

இக்கருவி கொண்டு இளம் வயதில் அக் களிறின் காதில் குத்தும்போது அதற்கு உண்மையிலேயே வலிக்கும்! இந்த வலியினை தனது வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டு, இந்தக் கருவியைக் கண்டு பயந்தே, அது பாகனின் எல்லா கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கத் துவங்கிவிடும்!
   
இதே போன்று சிறு வயதில் யானையை ஒரு இரும்புச் சங்கிலியால் பிணைத்து வைப்பர்! அப்போது தப்புவதற்கு முயற்சித்து யானை தோற்றுவிடும்! வளர்ந்து பல ஆண்டுகளான பின்னரும் தனது சிறு வயது தோல்வியையே மனதில் வைத்திருக்கும்! இப்பொழுது ஒரு சிறு கயிறு கொண்டு தன் கால்கள் பிணைக்கப்பட்டிருந்தாலும், தப்பிக்க முயற்சிக்காது விதியேயென தனது பலத்தை மறந்து பலவீன நிலைக்கு ஆட்பட்டுவிடும்!

நம் அரசியல்வாதிகளின் கையிலுள்ள அங்குசமும் இது போன்ற சங்கிலித்தன ஏமாற்று கயிறும்தான் இன்று மக்களுக்கு வாரி வழங்குவதாக விளம்பரப்படுத்திக்கொண்டு அதிலும் ஊழல் செய்து சுகம் காணும் இலவச திட்டங்கள்!  
   
வாக்காளப் பெருங்குடி மக்களே!
தமிழக வாக்காளர்களையும், நம் அரசியல்வாதிகளையும் இதோ இந்த முறையில் வகைப்படுத்தலாம்.      

 தெருவில் பிச்சையெடுக்கும் தெய்வீக யானை!

தனது முழு ஆற்றலும் அறியாத இந்த யானை, ஒரு சிறு அங்குசத்திற்குப் பயந்து கொண்டு, தனது வாழ்நாள் முழுவதும் பாகனுக்கு அடிமையாகிப் பிச்சையெடுத்து வாழ்கிறது! 

தான் சம்பாதிக்கும் ஏராள வருமானத்தில் பாகன் அளிக்கும் குறைவான உணவினை உண்டு காலம் கழிக்கிறது! வறுமையினாலும், நடந்து நடந்து பிச்சையெடுக்க நேரிடும் உடல் வேதனையாலும், நலிவுற்ற நிலையில் சில சமயங்களில் இதற்கு மதம் பிடிக்கவும் செய்கிறது! அப்பொழுது தனக்கு உணவளிக்காத பாகனைத் துவம்சம் செய்துவிட்டு, மீண்டும் வேறொரு பாகனுக்கு அடிமையாகித் தன் வாழ்க்கையைத் தொடர்கிறது!

இந்த வகை யானையைத் தம் வயிற்றுப் பிழைப்பிற்காகப் பிச்சையெடுக்க வைக்கும் பாகன்கள் தங்களின் சுய லாபத்திற்காகவே இவற்றைத் தெய்வப் பிறவிகளாக்கி விட்டனர் என நாம் கருதலாம்;!

மக்கள் யானையைத் தம் எதிரே கண்டாலே பயபக்தியுடன் தம்மிடமுள்ள நாணயத்தை,  அதன் கையில் கொடுத்து வணங்குவர்! அதைப் பெற்றுக்கொண்டு; தும்பிக்கையை உயர்த்தி, நம் தலை மீது வைத்து வாழ்த்தும்! சற்று பகுத்தறிவுடன் உற்று நோக்கினால்தான் யானையின் இந்தச் செயலுக்குரிய காரணம் விளங்கும்! 

யானை மீது அமர்ந்திருக்கும் பாகன் அப்போது தனது தேவைக்கேற்ற பணம் வந்துவிட்டதா எனக் கவனிப்பார்! பணம் திருப்தியானதென்றால் தனது கட்டளையை யானையின் காதில் இலேசாக மிதித்து பணத்தைப் பெற்றுக் கொள்ள உத்தரவிடுவார்! அதுவே அவர் கீழிருந்தால் கட்டளை அங்குசம் வாயிலாக அதன் காதில் குத்தி கட்;டளை பிறக்கும்!

இது ஒரு பயிற்சி! யானையை சிறு வயது முதல் இவ்வாறே காசு பெறப் பயிற்சியளிப்பர்! அதன்படி யானை நம்மை வாழ்த்தும்! யானையின் வாழ்த்துதலுக்குப் பின் உள்ள வேதனையும், வலியும், வாழ்த்துப் பெற்று மகிழும் மக்களுக்கு இனியாவது விளங்க வேண்டும்!

பழனியில் எனக்கு ஒரு அனுபவம் கிடைத்தது! எனது மனைவியின் பிரார்த்தனையை நிறைவேற்ற இருவரும் எனது இரண்டு வயது மகளுடன் சென்றிருந்தோம்! வழக்கம் போல கோவில் யானையைப் பார்த்தவுடன் என் மனைவி எனது மகள் கையில் இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து வாழ்த்துப் பெற முயன்றார்! யானை வாங்க மறுத்தது!

மேலிருந்த பாகனும், கீழிருந்த பாகனும் ஐந்து ரூபாய் தந்தால்தான் பணம் வாங்குமென்றனர்! யானையின் இந்தச் செயலுக்கு காரணம் அறிந்துள்ள நான் இது எங்களின் விருப்பத்தில் தருவது அதற்கு மேல் தர முடியாதென்றேன்! 

அவ்வளவுதான்! உடனே அந்த யானையை எங்கள் மீது பாய்வது போன்று  ஏவி விட்டனர்! எனக்குக் கடும் கோபமேற்பட்டது! உடன் எனது மனைவியை அழைத்துக் கொண்டு காசு போட மறுத்து திரும்பி விட்டேன்! தமிழக கோயில்களில் இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் ஏற்படுவதுண்டு!

இந்த வகை யானையின் நிலையில்தான் நம் தமிழக மக்களின் வாக்கு வங்கி உள்ளது! பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனது பலம் அறிந்தும், தமிழினம் தமக்குரிய வாக்கு வங்கியின் பலம் என்னவென்று அறியாது பலவீனமாகிப் போனதற்கு, ஒருவேளை நம் மக்களின் பக்தி முறைதான் பிரதான காரணமோ என்னவோ? 

தமிழினம் தம் உழைப்பில் பெருகும் வரிப்பணத்தைப் பிச்சையென நினைத்து, அதில் கிடைக்கும் வருமானத்தை ஏய்த்து, ஊழல் அரசியல்வாதிகள் தரும் இலவசத் திட்டங்கள் எனும் அற்பமான உணவுடன் திருப்தி கொண்டு, தனது வாழ்நாளைக் கழிக்கின்றது!

வறுமை நிலையுற்ற நமது தமிழினத்திற்கும் தேர்தலுக்குத் தேர்தலாவது சற்று மதம் பிடித்து விடும்! அந்த நேரத்தில் தன்னைச் சரியாக நடத்தாத பாகனைத் தூக்கி எறிந்து விடும்! புதிய பாகனைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு வழக்கம்போல உழைத்து வரிப்பணத்தைச் சேர்க்கும்!
  
சில நேரங்களில் புதிய பாகனின் செயல்களும் அவரது  நடவடிக்கைளும் எல்லை மீறிப் போனால், தனது பழைய பகை மறந்து, பழைய பாகனையேகூட மீண்டும் தனது நடத்துனராக மாற்றிக் கொள்கிறது! 

இப்பொழுதோ இந்த யானையின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய ஏராள நடிப்புலகப் பாகன்கள்! ஒருவேளை தமிழினம் இவர்களுக்கும் தனது முதுகில் ஏறிச் சவாரி செய்யும் பாகன்களாக இருக்கும் வாய்ப்பை வழங்கக்கூடும்!
  

காட்டு யானைகள்!

காட்டு யானைகளைப் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் நாம் படித்துத் தெரிந்து வருகிறோம்! தங்களுக்குள் ஒற்றுமை குலையாது வாழும் இவை, தங்களின் உணவு தேடும் முயற்சிக்கு எதிராக செயல்படும் மனிதர்க்கு சற்றும் ஈவு இரக்கம் காட்டுவதில்லை! 

வனம் சார்ந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், மனித இனம் இன்றுள்ள பரிதாப நிலையில் கடன்பட்டு பயிரிடப்பட்டவை என்ற விபரமெல்லாம் இவற்றிற்கு தேவையில்லாத ஒன்று! 

தங்களின் உணவுத் தேடலுக்கு மனித இனம் குறுக்கே வந்தால் துவம்சம் செய்யக்கூடத் தயங்காதவை! கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழும் இவற்றிற்குள்ள தாய்ப்பாச உணர்வு, வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்பதை நாம் சமீபத்திய சில சம்பவங்களில் நன்கு அறிவோம்! 

தனது குட்டி கிணற்றில் விழுந்து விட்டதை மீட்கத் தாய் யானை இரண்டு நாட்கள் போராடியதும், காப்பாற்றத் திரண்ட மக்களின் உதவி குணம் அறியாமல், அதில் ஒருவரை மிதித்துக் கொன்ற காட்சியும் தொலைக்காட்சியில் கண்டது, இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறதே! 

இந்த நிலையிலுள்ளவர்கள்தான் இன்றைய வன்முறை குண அரசியல்வாதிகள்! மக்கள் நலன் பற்றிச் சிறிதளவேனும் கவலையற்றவர்கள்! தங்களின் பிள்ளைகள் தனது பதவி தங்கள் குடும்பம் என்று வரும்போது, தனக்கு எதிராக எவர் வந்தாலும் நாசம் செய்யத் தயங்காதவர்கள்! தங்கள் குடும்பப் பாசத்திற்காக குடும்ப வளத்திற்காக கொலையும் செய்ய தயங்காதவர்கள்! 

வன்முறை அரசியல்வாதிகளை அடக்கி ஆளவே நம்மிடமுள்ளது அங்குசமென்னும் ஓட்டுக் கருவி! இந்த எளிய கருவியின் துணை கொண்டு, நமக்கு ஏவல் செய்யக்கூடிய அடிமைகளாக இவர்களை நடத்தத் தெரியாமல், அவர்களை பலம் பொருந்திய காட்டு யானைகளாக வளர்த்துவிட்டு, அவர்கள் செய்யும் நாசங்களைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் கோழைகளாக நாம் வாழ்ந்து வருகிறோம்!
                  கும்கி யானைகள்!

மாடு கட்டி போரடித்தால் மாளாத செந்நெல்லென்று யானை கட்டிப் போரடித்து வளமுற்ற தமிழகம்!

சங்க காலத்தில் யானைகளின் பயன்பாடு நமது வேளாண் தேவைகளுக்கும் பயன்பட்டிருந்தன என்பதை இந்த பெருமைமிகு சொல் ஒன்றே பறை சாற்றும்! உழைப்பின் மேன்மையை உலகிற்கு உரைத்த,  உழைப்பாளிகள் நிறைந்த பொற்காலம் அது! 
     
அக்காலங்களில் வனங்களிலுள்ள பெரிய பெரிய மரங்களைச் சுமந்து வருவதற்கும், தஞ்சை பெரிய கோயில் கோபுரத்திலுள்ள மிகப் பெரிய விமானத்தை நிறுவுதல் போன்ற வியக்க வைக்கும் ஆற்றலுக்கும் யானைகளைப் பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்!
  
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன், அன்போடு பழகி வசப்படுத்தி ஆற்றல் மிக்க செயல்களுக்கு யானைகளைப் பயன்படுத்தி, அவற்றின் உழைப்பால் மனிதகுல மேன்மைக்கு வழி கண்டது இத்தகு உன்னத வழி!

இன்று காடுகளில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பயிற்சி பெற்ற யானைகளைத்தான் தலைப்பில் கண்டவாறு கும்கி யானைகள் என அழைப்பர்! அடர்ந்த காடுகளில் வனத்துறையால் வெட்டப்படும் மரங்களைச் சுமந்து வர இவை இன்று பயன்படுத்தப்படுகின்றன!

அது மட்டுமன்றி காடுகளில் கட்டுப்பாடின்றித் திரிந்து, வனப்பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதி வாழ் மக்களின் பயிர்களை நாசம் செய்கின்ற காட்டு யானைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றை வனப்பகுதிக்குள் திருப்பி விடுகின்ற காவல் பணியையும், இந்த வகை யானைகள் பிரதானமாகச் செய்கின்றன!

யானை கட்டிப் போரடித்து வளமுற்ற உன்னத நிலை தமிழகத்தில் மீண்டும் வர வேண்டும்! சங்ககாலச் சோழர்களின் முன்னோடித் தேர்தல் முறையான குடவோலைத் தேர்வு எனும் நேர்மையான  வாக்கு வங்கி முறைக்குத் தமிழினம் மாற வேண்டும்! தமிழினம் பிச்சைக்கார யானையா! அல்லது இன்றைய படுநாச அரசியல்வாத யானைகளை அடக்கியாளும் கும்கி யானையா? அல்லது அங்குசமா? முடிவு இன்றைய விழிப்புணர்வு மிக்க தமிழினத்திடம்!

இதோ நாடாளுமன்றத்தேர்தல் வந்துவிட்டது. வழக்கம் போல அரசியல் பச்சோந்திகள் என்ன நிறம் மாறுவதென முடிவெடுக்க இயலாது திணறுகின்றனர். மதவாத இயக்கங்கள் சாதியவாத இயக்கங்களுடன் கைகோர்த்து நிற்கின்றன. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான ஊழல் இயக்கங்கள் தங்களிடம் குவிந்து கிடக்கும் ஏராளமான செல்வ வளத்தை வாரி இறைத்து வாக்கு வங்கியை வளைக்கத் துவங்கிவிட்டன. 

மக்களின் மன நிலை என்ன என்பதை காசு கொடுத்துக் கருத்துக்கணிப்பாக்கி தங்களுக்குத்தான் ஆதரவு என ஊடகங்கள் வாயிலாக மக்களை குழப்பும் வேலைகளை எல்லா அரசியல் இயக்கங்களும் துவங்கிவிட்டன. இனி மக்கள்தான் சிந்திக்க வேண்டும்!

உங்கள் கையிலுள்ள வாக்குச்சீட்டுதான் மதயானைகளாகத் திரியும் இன்றைய அரசியல்வாதிகளை அடக்குகின்ற அங்குசம். இந்த அங்குசத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதுதான் இன்றைய கேள்வியே! 
நீங்கள் எந்த வகை வாக்காளர் என்பதை முடிவெடுக்கும் உரிமையையும் உங்களின் மன நிலைக்கே விட்டுவிட்டோம். 

இங்கு அங்குசம் என்பதும், பலவீன யானையும், கும்கி யானையும், மதயானையும், யானைப்பாகனும் நாம்தான்! அபார  பலம் பொருந்திய யானை பலவீனப்பட்டு, பலம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற எளிய அங்குசம்தான், இங்கு பலம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது! இனியாவது தமிழினத்தின் பிச்சையெடுக்கும் நிலை மாறி, இலவசத் திட்டங்களுக்கு மயங்கி, பலம் வாய்ந்த வாக்கு வங்கி வீணாகும் பலவீன நிலை ஒழிய வேண்டும்! யானை அங்குசமாவதும், அங்குசம் யானையாவதும், தமிழகத்தின் வருங்காலம் குறித்த விழிப்புணர்வு தேடும் தமிழினத்தின் மன நிலையில்தான் உள்ளது!

எனவே வாக்காளப் பெருங்குடி மக்களே! உங்களுக்குப் பணியாற்ற, வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் கும்கி யானையான எனக்கு, அங்குசம் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு, உங்கள் பொற்பாதம் தொட்டு, வேண்டி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்! நான் உங்கள் வீட்டுப் பிள்ளை! என்னை உங்கள் தொகுதியின் பிரதிநிதியாக்கினால்.....................................................!

ஆகட்டுண்டா தம்பி ராஜா! நடராஜா! மெதுவா தள்ளடா! பதமா செல்லடா!


Read More...

பகுத்தறிவும் நானும்!

Leave a Comment
பகுத்தறிவும் நானும்!

பொருள் தேவை ஆனால் பொருளேதான் எல்லாமா? எத்தனை மக்கள் பொருள் பொருள் என்று அலைகிறார்கள்! தேட வேண்டியது பொருள் ஒன்றே என்று ஏமாறுவோர் எண்ணிக்கை ஏராளம்!

முயற்சி முழுவதையும் பொருள் ஈட்டலிலேயே செலவிட்டுவிட்டு தவிப்பதா மனிதப் பிறவியின் நோக்கம்? புகழ் அறத்தின், ஒழுக்கத்தின், நீதியின், ஆணிவேர்களிலிருந்து வளர வேண்டும்!

உண்மை வெளிப்பட நெடுங்காலம் பிடிக்கலாம். அது மிகத் தொலைவில் இருக்கலாம். எனினும் மக்களின் அறியாமை உதிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆதாரமற்ற பக்தியறிவுக் கருத்துகள் சருகுகளாக வீழ வேண்டும். அதுவரை பகுத்தறிவைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். இது தொல்லையைத் தேடிக்கொள்ளும் போக்குதான். இருந்தாலும் பகுத்தறிவைப் பயன்படுத்துவோரால்தான் இவ்வுலகம் இன்றைய நிலைக்கு வளர்ந்துள்ளது. இனியும் வளரும்.

காலம் காலமாக குறுக்குக் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக்கொண்ட மூட நம்பிக்கைகள், பக்தி நடைமுறைகள், பழைமைக் கோட்பாடுகள், பொய்யான கருத்துக்கள் கேள்விக்குறியாகும் நிலை பகலவன் வெளிச்சம் பரவும்போது இருளானது வெளியேறுவது போன்று, மக்களிடம் பகுத்தறிவு எனும் அசுர வளர்ச்சியால் வெளியேற்றப்பட வேண்டும்!

கடினமான எஃகையும் தூளாக்கக்கூடிய அரத்தைப் போன்று கூரிய மதி பெற்றவர்களாகத் திகழ்ந்தாலும் மத நம்பிக்கையை உடையவர்கள் வெறும் மரத்திற்கு ஒப்பானவர்கள்தாம். ஏனென்றால் அவர்கள் மதத்தில் திலைப்பவர்கள். மனித அறிவைப் பெற்றிருந்தாலும் மனிதப் பண்பைப் பெறாதவர்கள்.

பழைமைப் பிடியிலிருந்து மக்கள் இனத்தை விடுவித்து பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஞானிகள் பட்டபாட்டினை அறிந்த நானும் அதே வழியில் நடக்க முயல்கிறேன். அது என் இயற்கை!

பகுத்தறிவைத் தனியுடைமையாகக் கொண்ட மக்கள் இனம் அதை வளர்ப்பதற்கே அதிக நாட்டம் செழுத்த வேண்டும். பகுத்தறிவை இழக்காது இருப்பது, அதிலேயே நிலைத்து நிற்பது இவையே வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையாகும்.

இதைத்தான் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் சாக்ரடீசுப் பெரியார் வலியுறுத்தினார். இருபதாம் நூற்றாண்டில் ஈரோட்டுப் பெரியார் முன் மொழிந்தார். இருபத்தோராம் நூற்றாண்டில் நானும் சித்தர்கள் காட்டும் வழியில் மக்கள் பகுத்தறிவு பெற்றுத் திகழ வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதுவே தமிழுக்கு நான் செய்யும் கைமாறு. தமிழ் மண்ணில் மதவெறிப் பக்தியறிவு பரப்பி வன்முறையில் ஆழ்த்தும் பக்திமுறையெனும் வடவர்களின் இரத்தச் சகதியிலிருந்து பாமர மற்றும் படித்த தமிழ் மக்கள் மீள வேண்டுமென்பதே அவர்தம் பாதம் பணிந்த எனது வேண்டுகோள்.

Read More...

சம்சாரம் அது மின்சாரம்!

Leave a Comment
சம்சாரம் அது மின்சாரம்!

தமிழகத்தில் அதிகரித்துவரும் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளால் தற்பொழுது கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது!

எம்மைக் கேட்டால் இதற்கு ஆட்சியாளர்களிடமும் மக்களிடமும் உள்ள அலட்சியமான போக்குதான் அதி முக்கிய காரணம் என்போம்!

நம் அரசு அலுவலகங்களில் மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்துவது கிடையாது! அளவிற்கு அதிகமாக மின்சார செலவினை அவர்களின் மக்களுக்கு அவ்வளவாக உதவாத நலத் திட்டங்களுக்கு செயல்படுத்துவதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு செலவிடுகின்றனர்!

இதை மறுப்பவர்கள் உடனடியாக தமிழகம் முழுவதும் நாள்தோறும் திருவிழா என ஆடம்பர மேடைகள் அமைத்து ஏராள நல திட்டங்களை துவக்குவதாக அறிவிப்பதற்கு செலவிடும் மின்சாரம் அவர்களுக்கு எப்படி வந்தது என்பதை தெளிவாக்க வேண்டும்!

அது போலவேதான் நம் மக்களும் தங்களின் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த முன்வருவதில்லை! உண்மையிலேயே அரசிற்கு மின் பகிர்மானத்தில் பற்றாக்குறை இருந்தால் அதை உணர்ந்து மக்களாகிய தங்களின் பங்களிப்பை நிறைவேற்றுவதற்கு மறுத்துவிட்டு அரசின் மீது குறை சொல்வதையே வழக்கமாக்கி கொண்டுள்ளனர்!

நம் தமிழக மகளிர் மனது வைத்தால் அவர்களின் இல்லத்தில் மின்பற்றாக்குறையை அடியோடு போக்கிவிட முடியும்! நம் இல்லங்களில், இரவு ஆறு மணிக்குத் தொடங்கி பத்து மணிவரை, தொலைக்காட்சி பெட்டிகள் முன் அமர்ந்து பார்க்கும் முழு அளவிலான மின் பயன்பாடு உள்ள நேரத்தில் பெரும்பாலான இல்லங்களில் தேவைக்கு அதிகமான மின் விளக்குகள் எரிந்துகொண்டு மின்சாரம் வீணாகின்றது என்பதை எவராலும் மறுக்க இயலாது! அத்தகு நேரங்களில் தேவையற்ற மின் விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்த்தால் மின்சாரம் சிக்கனப்படும்!

மேலும் இரண்டு மணி நேரம் மட்டும் தொலைக்காட்சி தொடர்களை காண்பதை புறக்கணித்து அந்த நேரத்தை மின்சார சிக்கனத்திற்கென அவர்கள் தொலைக்காட்சியை நிறுத்தி வைக்க முன்வந்தால் தட்டுப்பாட்டால் தடுமாறுகின்ற தமிழக மின்வாரிய சிரமங்களுக்கும் பெண்களை அடிமைப்படுத்தும் தொலைக்காட்சி தொடர்களுக்கும் அடியோடு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்!

மின் சிக்கனத்தை ஒரு புரட்சிகரமான திட்டமாக நிறைவேற்ற இனி இரவு ஆறு மணிக்கு மேல் தொலைக்காட்சி அலை வரிசைகளில் செய்திகள் தவிர்த்து தொடர்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்ப கூடாது என ஒரு கடுமையான சட்டமே கொண்டு வரலாம்! வாரத்தில் சனி ஞாயிறு தவிர்த்து இதைக் கட்டாயமாக்க வேண்டும்!

மின்சாரத்தை சிக்கனமாக வணிக நிறுவனங்களில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை எமது அனுபவத்தின் வாயிலாகவே மக்களுக்கு எடுத்து இயம்ப இயலும்!

முன்பு நான் பணி புரிந்த நிறுவனம் எங்கள் மேற்பார்வையில் வந்தபோது அந்த நிறுவனத்தின் முந்தைய நிர்வாகிகளின் நிர்வாத்தில் மாதாந்திர மின் கட்டணம் மூன்று ஆயிரங்களுக்கு மேல் இருந்தது!

இதை கவனத்தில் கொண்ட நிறுவன உரிமையாளர் அவர்கள் இரவு ஒன்பது மணியானவுடன் நிறுவனத்தில் தேவையின்றி அதிகப்படியாக எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளை நிறுத்த தொடங்கினார்!

நாங்களும் அதை ஏற்று கொண்டு தொடர்ந்து செயல்படுத்த துவங்கினோம்! அது போன்றே பகல் நேரங்களிலும் தேவைப்படும் இடங்களில் மட்டும் விளக்குகளையும் மின் விசிறிகளையும் பயன்படுத்த தொடங்கினோம்;! எங்களுக்கு நிறுவனத்திலுள்ள கணினிக்குதான் அதிகளவு மின்சாரம் தேவைப்படும்! அது கூட அவ்வப்பொழுது தேவைக்கேற்பதான் பயன்படுத்தப்படும்!

இப்பொழுதோ அதற்கு ஓய்வின்றி பெரும்பாலான நேரங்கள் பயன்படுத்த வேண்டிய தேவை! எனினும் நாங்கள் தினசரி இரவு ஒருமணி நேரமும் பகலில் கவனமாகவும் எங்களுக்கு தேவையற்ற மின்சாரத்திற்காக செயல்படுத்திய சிக்கன நடவடிக்கை காரணமாக எங்களின் மாதாந்திர மின் பயன்பாடு தொடர்ந்து மாதத்திற்கு ஆயிரம் ரூபாய்களை மிச்சம் செய்து கொடுத்தது!

இதை யாம் கற்பனையாக எழுதுவதாக எவரும் கருதிவிட வேண்டாம்! அதற்கான ஆதார மின் கட்டண நகலையும் நாங்கள் மக்கள் பார்வைக்கு வைக்க முடியும். இந்த அனுபத்தை நான் பணியாற்ற வாய்ப்பளித்த சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான  ஒரு துணிக்கடை நிறுவனத்தினரிடம் கடிதம் வாயிலாக வெளிப்படுத்த அவர்களும் இதனை அலட்சியப்படுத்தாமல் இரவு 9 மணிக்குப்பின்னர் தங்களின் அலுவலக அனைத்து பகுதிகளிலும் அதிகப்படியாக எரியும் விளக்குகளை அணைத்து மின்சிக்கனத்தைக் கடைப்பிடித்தனர்.

ஒரு தமிழகம் அமைச்சர் நம் தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேறவில்லை என்பதை மறுக்க நகைக்கடைகளிலும் உணவகங்களிலும் அலைமோதும் காட்சியை காணுங்கள் தமிழ்நாடு முன்னேறியுள்ளது தெரியும் என ஒரு முறை சவால் விட்டார். பாவம் அவருக்கு இவைகள் மட்டும்தான் தெரிகிறது!

ரேசன் கடைகளில், பேருந்து நிலையங்களில், மதுக்கடைகளில், மருந்துக்கடைகளில் அலைமோதும் பரிதாப நிலையிலுள்ள ஏழை மக்களின் காட்சியை, அங்கெல்லாம் சென்று பார்த்தால்தானே அவருக்கு, தமிழ்நாடு பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருக்கின்ற காட்சி விளங்கும்!

பாவம் அங்கெல்லாம் சென்று பார்க்க அவருக்கு எங்கே நேரம் இருக்கிறது! அப்படியே அங்கு எப்போதாவது அவர் செல்வதற்கு முயன்றிருந்தாலும் அவரைச் சுற்றியுள்ள காக்கைகளின் கூட்ட நெரிசலில் பரிதாபமான நிலையில் உள்ள நம் மக்கள் எங்கே காட்சி தரப் போகின்றனர்?

இவர் போன்றே நம் மின்துறை அமைச்சருக்கு நகைக் கடைகளில் அளவிற்கு அதிகமாக வெளிச்சமிடும் மின்சார பல்புகளின் மின் பயன்பாடு ஏனோ கண்ணுக்கு புலப்படவில்லை! எம்மைக் கேட்டால் அளவிற்கு அதிகமாக மின் பயன்பாடுகளை உடைய நிறுவனங்கள் மற்றும் இல்லங்கள் மீது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்த கூடாது என வரையறை செய்யலாம்! அதற்கு ரேசன் முறை கூட கொண்டு வரலாம்!

மீறிப் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் என வசூலிக்க ஏற்பாடு செய்யலாம்! இதன் எதிரொலியாக இவர்கள் தங்களின் பயன்பாட்டினை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முயல்வர்!

அல்லது இது போன்ற அதிக நுகர்வு உள்ளவர்களின் வீடுகளின் மீதும் அலுவலகங்களின் மீதும் கட்டாயம் சூரிய ஒளி மின்சாரப் பலகைகள் அமைத்து தங்களின் தேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ள வேண்டும் என சட்டம் செய்யலாம்! வசதி படைத்தவர்களுக்கு இது சாத்தியமான திட்டம்தான்!இதனால் மிச்சப்படும் மின்சாரத்தை தங்கு தடையின்றி எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு சென்று பயனடையுமாறு செய்யலாம்!

புவி வெப்பமடைவதற்கு இரவில் எரியும் அளவிற்கதிகமான ஒளி விளக்குகளும் ஒரு காரணமென்பதை அறிந்துள்ள மக்கள் தங்களின் இல்லங்களில் குறைந்த மின் பயன்பாட்டில் வெளிச்சம் தரும் சிக்கனமான மின்சார சாதனங்களைப் பயன்படுத்தி தங்களின் மின்கட்டண செலவையும் மிச்சப்படுத்தி புவி வெப்பமடைவதைத் தவிர்ப்பதில் தங்களின் பங்களிப்பையும் வழங்க முன்வரலாம்.

மேலும் அளவிற்கு அதிகமாகப் பகலிலும் மின் விளக்குகள் பயன்படுத்தும் நிறுவனங்களில் அதிகளவிலான சோதனைகள் செய்து அவர்களின் தேவையற்ற பயன்பாட்டு முறைகளை மாற்றி அமைக்கும்படி அறிவுறுத்த வேண்டும்! தேவைப்படும் கட்;டிடங்களில் வெளிச்ச வசதி கிடைக்குமாறு அதிக அளவிலான சன்னல்கள் அமைக்கும்படி செய்ய வேண்டும்!

தொடரும் மின் வெட்டைக் கண்டித்து அறிக்கை விடும் எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லத்து மின்சாரக் கட்டணத் தொகையை அவர்கள் முதலில் மக்களுக்கு தெரிவித்துவிட்டு தாராளமாக வெளியிடலாம்! தன் முதுகிலுள்ள அழுக்கு பாவம் இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?

எனவே மாற்றம் என்பது ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு வாழ்வதில் மட்டுமே நிகழ்ந்து விடாது! பிரச்சினைகளை புரிந்து கொண்டு எவர் எந்த நேரத்தில் விட்டு கொடுக்க வேண்டுமோ அந்த நேரத்தில் விட்டு கொடுக்க வேண்டும்! எந்த நேரத்தில் எவருக்காக தியாகம் செய்ய வேண்டுமோ அதை தயங்காது செயல்படுத்த முன்வர வேண்டும்!

இப்பொழுது தேர்தல் நேரம் என்பதால் மின்வெட்டுப் பிரச்சினையின்றி தமிழக அரசை நிர்வகிக்கும் இயக்கம் கவனமாக உள்ளது. இன்றுள்ள அரசியல் இயக்கங்கள் தேர்தல் கூட்டங்களுக்கென ஆடம்பர மேடைகள், வண்ண வண்ண மின் அலங்காரத் தோரணங்கள், வழியெங்கும் மின்விளக்கு வரிசைகள் என மின்சாரத்தை ஏராளம் பயன்படுத்துகின்றன. இதற்கெல்லாம் இந்த கோடையிலும் எங்கிருந்து மின்சாரம் வருகின்றதென மக்கள் கேள்வி கேட்பதில்லை. தேர்தல் முடிந்து தமிழினம் மீண்டும் இருளில் தள்ளப்படும் நிலை ஏற்பட்டால் மக்களின் எழுச்சியையும் அதை எதிர்கொள்ளும் சக்தியையும் எந்த அரசியல் இயக்கமும் இனி தாங்க இயலாது.

இந்த உண்மையை பொதுமக்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர்கள் உணர்ந்து கொண்டால்தான் அது மின்சாரத்திலும் சம்சாரத்திலும் பொது வாழ்விலும் மகத்தான மாற்றங்கள் நிகழ்த்த முடியும்! இன்றுள்ள அரசியல் அமைப்புகளால் இயலாத இத்தகு மாற்றங்களை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் நிச்சயம் என்றேனும் நிறைவேற்றும் நாள் வரத்தான் போகிறது!

Read More...

கோயில் போல நிமிர்ந்த நெஞ்சம் இருந்திட வேண்டும்!

Leave a Comment


கோவிலா! கோயிலா! அரண்மனைகளா?

தலைப்பிற்குரிய இடங்கள் அதற்குரிய தகுதியுடன் விளங்குகிறதா என்பதை நம் தமிழக மக்கள்  உணர வேண்டும்!

நம் பக்தி மார்க்கம் குழப்பம் நிறைந்தது என்பதற்கு இருவேறு கருத்துகளுடன் நிலவும் இந்தச் சொல் ஒன்றே போதும்! 

நம் மக்கள் ஆண்டவன் உறைவதாக கருதப்படும் இடங்களை இந்த தலைப்பிலுள்ளவாறு இருவேறு விதங்களில் அழைக்கின்றனர்!

தமிழ் மொழியின் சிறப்பே ஒரு வார்த்தையின் உச்சரிப்பிற்கேற்ப அதற்குரிய  பொருள் விளங்குமாறு அமைக்கப்படுவதுதான்!

இவ்வகையில் நோக்கினால் கோவில் என அழைப்பது தவறானதாகும்! கோயில் என அழைப்பதுதான் சரியான தமிழ் வார்த்தை!

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கும்படி செய்து உலகமே இன்றுவரை அதை கண்டுகளித்து வியப்புடன் பார்க்கும்படி கட்டிடக்கலையின் நுணுக்கத்தை உலகிற்கு தந்தவர் இராச இராச சோழர்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைபெற முடிந்த ஒரு கோயிலை கட்டியவர் தனது அரண்மனையை அதைவிட மிகச்சிறப்பாக அமைத்திருக்கவேண்டும்! அரசியல் நிகழ்வுகளால் இவை போன்ற அரண்மனைகள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் நோக்கு எனில் இவ்வாறு பலநூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்தக்கருத்து அடியோடு தகர்க்கப்பட வேண்டும்!

ஏனெனில் தமிழக கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக காலத்தால் அழியாத கருவூலமாக திகழும் தஞ்சை பெரிய கோயில் இன்றுள்ளது போல பக்தி மார்க்கத்திற்காக கட்டப்பட்டதல்ல! 

இயல் இசை நாடகம் சிற்பம் சிலம்பம் பரதம் ஆசனம் கல்வி என பலதரப்பட்ட கலைகளை கற்றுத்தரும் கல்வித்தலமாகவும் நீதித்தலமாகவும் விளங்கியது அது!

வடவர்களின் ஆதிக்கத்தில் தமிழகம் அகப்பட்ட ஒரு இருண்ட காலத்தில்தான் இதுவும் இதுபோன்ற ஏராளமான தமிழக அரண்மனைகள் கோயில்களாக இன்றுள்ள நிலைக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும்!

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு மக்கள் தற்பொழுது கொண்டுள்ள அர்த்தம் தவறானது. கோ என்று பொருள் தரும் அரசரின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு வசதிகள் அதிகமிருக்கும். எனவே வழிப்பறி நடைபெற வாய்ப்புள்ள பிற இடங்களை விட அரசரின் இல்லம் அல்லது அரண்மனை உள்ள பகுதியில் வாழ்வதுதான் பாதுகாப்பானது என்பதுதாம் இந்த பழமொழிக்கு உண்மையான விளக்கமாகும். 

மேலும் கோயில் என்ற சொல் கோ இல் என பிரித்தறியுமாறு தமிழில் அமைகிறது! கோ என்றால் அரசர் என்ற பொருள்படும்! இல் என்பதற்கு இல்லை என்று பொருள்!

எனவே இந்த வார்த்தையை சரியாக நாம் பிரித்தறியும்போது கோ இல்லாத இடம் அதாவது அரசர் என்ற எண்ணம் இல்லாத இடம் என்றாகிறது! 

அன்று நம்மை ஆண்ட மன்னர்கள் தாங்கள் அரண்மனைகளில் வசித்தாலும் தாங்கள் அரசர்கள் அல்ல என்ற உயரிய நோக்குடன் வாழ்ந்திருக்க வேண்டும்! அந்நாட்களில் அரண்மனைகளில்தான் வாய்மை மன்றங்கள் செயல்பட்டன என்பதை வரலாறு ஒப்புக்கொள்கிறது!

வாய்மை வழங்கும் சபையில்  அமர்ந்துள்ள நான் அவ்விடத்தில் அரசனல்ல என்ற பொருள்படுமாறு கோயில் என தங்களின் வாய்மைத்தலங்களை அழைத்துள்ளனர்!

இந்த வாய்மைத்தலங்களில் வாய்மையரசராகத் தாங்கள் அமர்ந்து வாய்மை  வழங்குமிடம் தூய்மையான உணர்வுகளுக்கு இடமாக வேண்டுமென்பதால்தான் அந்த இடத்தை உலகிலேயே களங்கமற்ற எண்ணங்களுடன் உயிர் உருவாகும் இடமான தாயின் கருவறையின் பெயரால் அழைத்தனர்!

இந்த கோணத்தில் நாம் பார்க்கும்போது நம் தமிழகத்தை சீரும் சிறப்புமாக ஆண்ட இராச இராச சோழர் போன்றவர்களின் அரண்மனைகளாகத்தான் தஞ்சை பெரிய கோயில் போன்று இன்றுள்ள கோயில்கள் விளங்கியிருக்க வேண்டும்!

அன்றைய அரசர்களின் வீதி உலாக்களே இன்று உற்சவ ஊர்வலங்களாக மாற்றம் பெற்றுள்ளன! அரசர்களின் தேர் பவனியே இன்று தேரோட்ட விழாக்களாக மாற்றம் பெற்றுள்ளன! 

தங்களை சீரும் சிறப்புமாக ஆண்டுவரும் அரசர்களுக்கு தங்களின் விளை நிலங்களிலிருந்து கிடைத்த தானியங்கள் காய்கனிகளை அவர்களின் முக்கிய பிறந்தநாள் பிற நாட்டவரை வெற்றி கொண்ட திருநாள் போன்றவற்றை கொண்டாடும்போது காணச் சென்று மனமுவந்து அளித்தவைதான் இன்றைய கடவுளர்க்கெனும் காணிக்கைப் பொருட்களாக மாற்றம் பெற்று விட்டன!

அறிவியல் நோக்கிலும் அந்தந்த கால கட்டங்களில் நிகழத்தப்பட்ட அறிவியல் காரண திருவிழா வழக்கங்களே பின்னாலில் பக்திமுறைக்கு உட்பட்டதாக திரித்து மாற்றம் பெறச் செய்யப்பட்டுவிட்டன!

எனவே கோயில் என்பதுதான் சரியான வார்த்தை! இந்த இடங்களை மீண்டும் வாய்மைத்தலங்களாக நம்மால் மாற்ற முடியாவிட்டாலும் அறிவுத் தலங்களாகவாவது மாற்றியமைக்க வேண்டும்!

வாய்மையின் பிறப்பிடம் நம் தமிழகம்! அது அந்தக்காலம்! 

திருமணச் சடங்குகளுக்கும் மூடத்தனம் பரப்பும் தவறான வழிபாடுகளுக்கும் சுய நல வேண்டுதல்களுக்கும் இந்த இடங்கள் இனியும் பயன்படுவதை தமிழராக பிறந்த எவரும் எக்காலத்திலும் அனுமதிக்கக்கூடாது!

எண்ணங்களின் வலிமையால் உலகை ஆண்டு இயற்கை சக்திகளை தனது கட்டுக்குள் வைத்திருந்த தமிழினம் ஒற்றுமை குணத்தால்தான் அதை சாதித்திருந்தது!

அந்த ஒற்றுமை குணத்தை வடக்கு சாதியாலும் மதத்தாலும் சீர் குலைத்தது! பின்னர் வந்த வெள்ளையரும் நம்மை இதே ரீதியில் வடவர்களை பயன்படுத்தியே பிரித்தாண்டனர்!

மெய்ஞான தமிழினம் மீண்டெழ வேண்டும்! தாம் விஞ்ஞான தமிழினம் என உணர வேண்டும்!

உலகிலேயே மிக பெரிய கப்பல் படை வைத்திருந்தது சோழ ஆட்சியில்! அதே சோழ மரபுதான் பின்னர் வெள்ளையருக்கு எதிராக கப்பல் செழுத்தி வெற்றி கண்டது!

இந்த எழுச்சி மீண்டும் தேவை! அது எண்ணங்களால் உலகை ஆளப்  புறப்படும் தமிழக மாணவ சக்திகளாளும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தாலும் நிச்சயம் உருவாகும்!

Read More...

கட்சி நிதி!

Leave a Comment

ஊருக்காக வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே!
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்திருப்பர் கட்சி நிதியிலே!

கட்சி நிதி! இந்த நிதி எப்படி வந்தது? யாரிடம் பெறப்பட்டது என்பது இன்றைய கட்சிகளைப் பொருத்தவரை ஒரு சிதம்பர இரகசியம் எனலாம்! கட்சி நிதியைப் பொருத்தவரை இந்த நிதி இரு வழிகளில் வருகின்றது!

ஒன்று தனது காரியத்தை முடித்துக் கொள்ள உதவுமென்ற நோக்கில் பயனாளி தானாக முன்வந்து தருவது! இதுவும் நம் தேசத்தின் அதிவேக வளர்ச்சியினை முடக்கும் இலஞ்சமும் ஒன்றுதான்!

இரண்டாவது வகை வற்புறுத்தலின் வாயிலாகவும் மிரட்டுதலின் வாயிலாகவும் பெறப்படுவது! முதலாவதை விட இந்த வழிதான் மிகவும் கேவலமான வழியாகும்! இது மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்காது வழிப்பறி செய்கின்ற தாதாக்களின் செயலென்றுதான் கூற முடியும்!

1..05.08 மே தினத்தன்று செய்தித்தாளினைப் படிக்க நேர்ந்தபோது கட்சிகளின் நிதி பற்றி மக்கள் கணக்கு கேட்கலாம் என்ற செய்தியினைப் படிக்க நேர்ந்தது! மக்களது எண்ணங்கள் வலுப்பட ஆரம்பித்து விட்டதின் தொடக்கம் இதுவெனவே நாம் கருதவேண்டும்!

இன்றுள்ள அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்தால் மக்கள் வரிப்பணத்தில் தங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்! அதிகாரத்தை விட்டு மக்களால் தூக்கி எறியப்பட்டால் இருக்கவே இருக்கிறது கட்சி நிதியும் அதனால் கட்டப்பட்ட ஆடம்பர மாளிகைகளும்!

அதில் அமர்ந்து கொண்டு ஆளும் கட்சியினரின் ஊழல் திட்டங்களை எதிர்ப்பதாக மக்களிடம் நாடகமாடி அறிக்கைகள் விட்டுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை அதிகம் எதிர்க்காமலிருக்க ஆளும் கட்சியினர் திருப்பிவிடும் உள் வரவுகளைப் பெற்றுக்கொண்டு தங்கள் எதிர்க்கட்சி வாழ்க்கையை சுகமாக்கிக் கொள்கின்றனர்!


எனவே இது போன்ற போலியான அரசியல் இயக்கங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள நிதி சேர்ப்பதையும் அவற்றைச் சொத்துக்களாக மாற்றி ஒரு சில சுயநலக் கும்பல்கள் அனுபவிப்பதையும் முற்றிலுமாகத் தடை செய்யும் காலம் வரவேண்டும்!

அப்பொழுதுதான் தேர்தலுக்கென்று தங்களின் அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஏராள நிதி சேர்த்துக் கொண்டு வலுத்தவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெரும் நிலை முற்றிலும் ஒழிக்கப்படும் காலம் வரும்! மக்கள் பிரதிநிதித்துவம் என்பது பணபலத்தில் நிர்ணயிக்கப்படுவது என்ற நிலை வெகு விரைவில் அகற்றப்பட வேண்டும்;!

ஆம்! கட்சி நிதியை பயன்படுத்தி பணபலத்தால் வென்றவர்கள் முதல் போடாமலே பெற்ற வெற்றிக்குப் பின்னரும் மக்களின் வரிப்பணத்தை அறுவடை செய்கின்றனர்!

எனவே இப்படி கட்சி நிதி வசூலித்து வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பவர்களின் காலம் முடிந்து விட்டாலே சாதாரண வசதி வாய்ப்பற்ற நல்லவர்கள் மக்கள் துணையுடன் தேர்தலில் போட்டியிட முடிகின்ற அசாதாரண நிலை இந்த தேசத்தில் உருவாகும்!

அப்பொழுதுதான் அரசியல் என்பது வணிகமல்ல, அது மக்களுக்குத் தொண்டு செய்கின்ற ஒரு தூய்மையான சேவை என்பதைப் பாமர மக்களும் உணருகின்ற நிலை உருவாகும்!

அத்தகு காலம் தொடங்கி விட்டாலே இப்பொழுதுள்ள அரசியல் இயக்கங்களும் அரசியல்வாதிகளும் காணாமல் போகக் கூடிய நிலையும் உருவாகுமென்பதில் சந்தேகம் ஏதுமில்லை!

ஐந்தாம் தமிழ்ச்சங்கம்தான் இந்த நிலையை உருவாக்கும் என்பதில் எம்முள் சந்தேகம் ஏதுமில்லை!

Read More...