சம்சாரம் அது மின்சாரம்!

சம்சாரம் அது மின்சாரம்!

தமிழகத்தில் அதிகரித்துவரும் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளால் தற்பொழுது கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது!

எம்மைக் கேட்டால் இதற்கு ஆட்சியாளர்களிடமும் மக்களிடமும் உள்ள அலட்சியமான போக்குதான் அதி முக்கிய காரணம் என்போம்!

நம் அரசு அலுவலகங்களில் மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்துவது கிடையாது! அளவிற்கு அதிகமாக மின்சார செலவினை அவர்களின் மக்களுக்கு அவ்வளவாக உதவாத நலத் திட்டங்களுக்கு செயல்படுத்துவதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு செலவிடுகின்றனர்!

இதை மறுப்பவர்கள் உடனடியாக தமிழகம் முழுவதும் நாள்தோறும் திருவிழா என ஆடம்பர மேடைகள் அமைத்து ஏராள நல திட்டங்களை துவக்குவதாக அறிவிப்பதற்கு செலவிடும் மின்சாரம் அவர்களுக்கு எப்படி வந்தது என்பதை தெளிவாக்க வேண்டும்!

அது போலவேதான் நம் மக்களும் தங்களின் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த முன்வருவதில்லை! உண்மையிலேயே அரசிற்கு மின் பகிர்மானத்தில் பற்றாக்குறை இருந்தால் அதை உணர்ந்து மக்களாகிய தங்களின் பங்களிப்பை நிறைவேற்றுவதற்கு மறுத்துவிட்டு அரசின் மீது குறை சொல்வதையே வழக்கமாக்கி கொண்டுள்ளனர்!

நம் தமிழக மகளிர் மனது வைத்தால் அவர்களின் இல்லத்தில் மின்பற்றாக்குறையை அடியோடு போக்கிவிட முடியும்! நம் இல்லங்களில், இரவு ஆறு மணிக்குத் தொடங்கி பத்து மணிவரை, தொலைக்காட்சி பெட்டிகள் முன் அமர்ந்து பார்க்கும் முழு அளவிலான மின் பயன்பாடு உள்ள நேரத்தில் பெரும்பாலான இல்லங்களில் தேவைக்கு அதிகமான மின் விளக்குகள் எரிந்துகொண்டு மின்சாரம் வீணாகின்றது என்பதை எவராலும் மறுக்க இயலாது! அத்தகு நேரங்களில் தேவையற்ற மின் விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்த்தால் மின்சாரம் சிக்கனப்படும்!

மேலும் இரண்டு மணி நேரம் மட்டும் தொலைக்காட்சி தொடர்களை காண்பதை புறக்கணித்து அந்த நேரத்தை மின்சார சிக்கனத்திற்கென அவர்கள் தொலைக்காட்சியை நிறுத்தி வைக்க முன்வந்தால் தட்டுப்பாட்டால் தடுமாறுகின்ற தமிழக மின்வாரிய சிரமங்களுக்கும் பெண்களை அடிமைப்படுத்தும் தொலைக்காட்சி தொடர்களுக்கும் அடியோடு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்!

மின் சிக்கனத்தை ஒரு புரட்சிகரமான திட்டமாக நிறைவேற்ற இனி இரவு ஆறு மணிக்கு மேல் தொலைக்காட்சி அலை வரிசைகளில் செய்திகள் தவிர்த்து தொடர்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்ப கூடாது என ஒரு கடுமையான சட்டமே கொண்டு வரலாம்! வாரத்தில் சனி ஞாயிறு தவிர்த்து இதைக் கட்டாயமாக்க வேண்டும்!

மின்சாரத்தை சிக்கனமாக வணிக நிறுவனங்களில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை எமது அனுபவத்தின் வாயிலாகவே மக்களுக்கு எடுத்து இயம்ப இயலும்!

முன்பு நான் பணி புரிந்த நிறுவனம் எங்கள் மேற்பார்வையில் வந்தபோது அந்த நிறுவனத்தின் முந்தைய நிர்வாகிகளின் நிர்வாத்தில் மாதாந்திர மின் கட்டணம் மூன்று ஆயிரங்களுக்கு மேல் இருந்தது!

இதை கவனத்தில் கொண்ட நிறுவன உரிமையாளர் அவர்கள் இரவு ஒன்பது மணியானவுடன் நிறுவனத்தில் தேவையின்றி அதிகப்படியாக எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளை நிறுத்த தொடங்கினார்!

நாங்களும் அதை ஏற்று கொண்டு தொடர்ந்து செயல்படுத்த துவங்கினோம்! அது போன்றே பகல் நேரங்களிலும் தேவைப்படும் இடங்களில் மட்டும் விளக்குகளையும் மின் விசிறிகளையும் பயன்படுத்த தொடங்கினோம்;! எங்களுக்கு நிறுவனத்திலுள்ள கணினிக்குதான் அதிகளவு மின்சாரம் தேவைப்படும்! அது கூட அவ்வப்பொழுது தேவைக்கேற்பதான் பயன்படுத்தப்படும்!

இப்பொழுதோ அதற்கு ஓய்வின்றி பெரும்பாலான நேரங்கள் பயன்படுத்த வேண்டிய தேவை! எனினும் நாங்கள் தினசரி இரவு ஒருமணி நேரமும் பகலில் கவனமாகவும் எங்களுக்கு தேவையற்ற மின்சாரத்திற்காக செயல்படுத்திய சிக்கன நடவடிக்கை காரணமாக எங்களின் மாதாந்திர மின் பயன்பாடு தொடர்ந்து மாதத்திற்கு ஆயிரம் ரூபாய்களை மிச்சம் செய்து கொடுத்தது!

இதை யாம் கற்பனையாக எழுதுவதாக எவரும் கருதிவிட வேண்டாம்! அதற்கான ஆதார மின் கட்டண நகலையும் நாங்கள் மக்கள் பார்வைக்கு வைக்க முடியும். இந்த அனுபத்தை நான் பணியாற்ற வாய்ப்பளித்த சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான  ஒரு துணிக்கடை நிறுவனத்தினரிடம் கடிதம் வாயிலாக வெளிப்படுத்த அவர்களும் இதனை அலட்சியப்படுத்தாமல் இரவு 9 மணிக்குப்பின்னர் தங்களின் அலுவலக அனைத்து பகுதிகளிலும் அதிகப்படியாக எரியும் விளக்குகளை அணைத்து மின்சிக்கனத்தைக் கடைப்பிடித்தனர்.

ஒரு தமிழகம் அமைச்சர் நம் தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேறவில்லை என்பதை மறுக்க நகைக்கடைகளிலும் உணவகங்களிலும் அலைமோதும் காட்சியை காணுங்கள் தமிழ்நாடு முன்னேறியுள்ளது தெரியும் என ஒரு முறை சவால் விட்டார். பாவம் அவருக்கு இவைகள் மட்டும்தான் தெரிகிறது!

ரேசன் கடைகளில், பேருந்து நிலையங்களில், மதுக்கடைகளில், மருந்துக்கடைகளில் அலைமோதும் பரிதாப நிலையிலுள்ள ஏழை மக்களின் காட்சியை, அங்கெல்லாம் சென்று பார்த்தால்தானே அவருக்கு, தமிழ்நாடு பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருக்கின்ற காட்சி விளங்கும்!

பாவம் அங்கெல்லாம் சென்று பார்க்க அவருக்கு எங்கே நேரம் இருக்கிறது! அப்படியே அங்கு எப்போதாவது அவர் செல்வதற்கு முயன்றிருந்தாலும் அவரைச் சுற்றியுள்ள காக்கைகளின் கூட்ட நெரிசலில் பரிதாபமான நிலையில் உள்ள நம் மக்கள் எங்கே காட்சி தரப் போகின்றனர்?

இவர் போன்றே நம் மின்துறை அமைச்சருக்கு நகைக் கடைகளில் அளவிற்கு அதிகமாக வெளிச்சமிடும் மின்சார பல்புகளின் மின் பயன்பாடு ஏனோ கண்ணுக்கு புலப்படவில்லை! எம்மைக் கேட்டால் அளவிற்கு அதிகமாக மின் பயன்பாடுகளை உடைய நிறுவனங்கள் மற்றும் இல்லங்கள் மீது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்த கூடாது என வரையறை செய்யலாம்! அதற்கு ரேசன் முறை கூட கொண்டு வரலாம்!

மீறிப் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் என வசூலிக்க ஏற்பாடு செய்யலாம்! இதன் எதிரொலியாக இவர்கள் தங்களின் பயன்பாட்டினை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முயல்வர்!

அல்லது இது போன்ற அதிக நுகர்வு உள்ளவர்களின் வீடுகளின் மீதும் அலுவலகங்களின் மீதும் கட்டாயம் சூரிய ஒளி மின்சாரப் பலகைகள் அமைத்து தங்களின் தேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ள வேண்டும் என சட்டம் செய்யலாம்! வசதி படைத்தவர்களுக்கு இது சாத்தியமான திட்டம்தான்!இதனால் மிச்சப்படும் மின்சாரத்தை தங்கு தடையின்றி எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு சென்று பயனடையுமாறு செய்யலாம்!

புவி வெப்பமடைவதற்கு இரவில் எரியும் அளவிற்கதிகமான ஒளி விளக்குகளும் ஒரு காரணமென்பதை அறிந்துள்ள மக்கள் தங்களின் இல்லங்களில் குறைந்த மின் பயன்பாட்டில் வெளிச்சம் தரும் சிக்கனமான மின்சார சாதனங்களைப் பயன்படுத்தி தங்களின் மின்கட்டண செலவையும் மிச்சப்படுத்தி புவி வெப்பமடைவதைத் தவிர்ப்பதில் தங்களின் பங்களிப்பையும் வழங்க முன்வரலாம்.

மேலும் அளவிற்கு அதிகமாகப் பகலிலும் மின் விளக்குகள் பயன்படுத்தும் நிறுவனங்களில் அதிகளவிலான சோதனைகள் செய்து அவர்களின் தேவையற்ற பயன்பாட்டு முறைகளை மாற்றி அமைக்கும்படி அறிவுறுத்த வேண்டும்! தேவைப்படும் கட்;டிடங்களில் வெளிச்ச வசதி கிடைக்குமாறு அதிக அளவிலான சன்னல்கள் அமைக்கும்படி செய்ய வேண்டும்!

தொடரும் மின் வெட்டைக் கண்டித்து அறிக்கை விடும் எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லத்து மின்சாரக் கட்டணத் தொகையை அவர்கள் முதலில் மக்களுக்கு தெரிவித்துவிட்டு தாராளமாக வெளியிடலாம்! தன் முதுகிலுள்ள அழுக்கு பாவம் இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?

எனவே மாற்றம் என்பது ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு வாழ்வதில் மட்டுமே நிகழ்ந்து விடாது! பிரச்சினைகளை புரிந்து கொண்டு எவர் எந்த நேரத்தில் விட்டு கொடுக்க வேண்டுமோ அந்த நேரத்தில் விட்டு கொடுக்க வேண்டும்! எந்த நேரத்தில் எவருக்காக தியாகம் செய்ய வேண்டுமோ அதை தயங்காது செயல்படுத்த முன்வர வேண்டும்!

இப்பொழுது தேர்தல் நேரம் என்பதால் மின்வெட்டுப் பிரச்சினையின்றி தமிழக அரசை நிர்வகிக்கும் இயக்கம் கவனமாக உள்ளது. இன்றுள்ள அரசியல் இயக்கங்கள் தேர்தல் கூட்டங்களுக்கென ஆடம்பர மேடைகள், வண்ண வண்ண மின் அலங்காரத் தோரணங்கள், வழியெங்கும் மின்விளக்கு வரிசைகள் என மின்சாரத்தை ஏராளம் பயன்படுத்துகின்றன. இதற்கெல்லாம் இந்த கோடையிலும் எங்கிருந்து மின்சாரம் வருகின்றதென மக்கள் கேள்வி கேட்பதில்லை. தேர்தல் முடிந்து தமிழினம் மீண்டும் இருளில் தள்ளப்படும் நிலை ஏற்பட்டால் மக்களின் எழுச்சியையும் அதை எதிர்கொள்ளும் சக்தியையும் எந்த அரசியல் இயக்கமும் இனி தாங்க இயலாது.

இந்த உண்மையை பொதுமக்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர்கள் உணர்ந்து கொண்டால்தான் அது மின்சாரத்திலும் சம்சாரத்திலும் பொது வாழ்விலும் மகத்தான மாற்றங்கள் நிகழ்த்த முடியும்! இன்றுள்ள அரசியல் அமைப்புகளால் இயலாத இத்தகு மாற்றங்களை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் நிச்சயம் என்றேனும் நிறைவேற்றும் நாள் வரத்தான் போகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!