பகுத்தறிவும் நானும்!

பகுத்தறிவும் நானும்!

பொருள் தேவை ஆனால் பொருளேதான் எல்லாமா? எத்தனை மக்கள் பொருள் பொருள் என்று அலைகிறார்கள்! தேட வேண்டியது பொருள் ஒன்றே என்று ஏமாறுவோர் எண்ணிக்கை ஏராளம்!

முயற்சி முழுவதையும் பொருள் ஈட்டலிலேயே செலவிட்டுவிட்டு தவிப்பதா மனிதப் பிறவியின் நோக்கம்? புகழ் அறத்தின், ஒழுக்கத்தின், நீதியின், ஆணிவேர்களிலிருந்து வளர வேண்டும்!

உண்மை வெளிப்பட நெடுங்காலம் பிடிக்கலாம். அது மிகத் தொலைவில் இருக்கலாம். எனினும் மக்களின் அறியாமை உதிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆதாரமற்ற பக்தியறிவுக் கருத்துகள் சருகுகளாக வீழ வேண்டும். அதுவரை பகுத்தறிவைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். இது தொல்லையைத் தேடிக்கொள்ளும் போக்குதான். இருந்தாலும் பகுத்தறிவைப் பயன்படுத்துவோரால்தான் இவ்வுலகம் இன்றைய நிலைக்கு வளர்ந்துள்ளது. இனியும் வளரும்.

காலம் காலமாக குறுக்குக் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக்கொண்ட மூட நம்பிக்கைகள், பக்தி நடைமுறைகள், பழைமைக் கோட்பாடுகள், பொய்யான கருத்துக்கள் கேள்விக்குறியாகும் நிலை பகலவன் வெளிச்சம் பரவும்போது இருளானது வெளியேறுவது போன்று, மக்களிடம் பகுத்தறிவு எனும் அசுர வளர்ச்சியால் வெளியேற்றப்பட வேண்டும்!

கடினமான எஃகையும் தூளாக்கக்கூடிய அரத்தைப் போன்று கூரிய மதி பெற்றவர்களாகத் திகழ்ந்தாலும் மத நம்பிக்கையை உடையவர்கள் வெறும் மரத்திற்கு ஒப்பானவர்கள்தாம். ஏனென்றால் அவர்கள் மதத்தில் திலைப்பவர்கள். மனித அறிவைப் பெற்றிருந்தாலும் மனிதப் பண்பைப் பெறாதவர்கள்.

பழைமைப் பிடியிலிருந்து மக்கள் இனத்தை விடுவித்து பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஞானிகள் பட்டபாட்டினை அறிந்த நானும் அதே வழியில் நடக்க முயல்கிறேன். அது என் இயற்கை!

பகுத்தறிவைத் தனியுடைமையாகக் கொண்ட மக்கள் இனம் அதை வளர்ப்பதற்கே அதிக நாட்டம் செழுத்த வேண்டும். பகுத்தறிவை இழக்காது இருப்பது, அதிலேயே நிலைத்து நிற்பது இவையே வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையாகும்.

இதைத்தான் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் சாக்ரடீசுப் பெரியார் வலியுறுத்தினார். இருபதாம் நூற்றாண்டில் ஈரோட்டுப் பெரியார் முன் மொழிந்தார். இருபத்தோராம் நூற்றாண்டில் நானும் சித்தர்கள் காட்டும் வழியில் மக்கள் பகுத்தறிவு பெற்றுத் திகழ வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதுவே தமிழுக்கு நான் செய்யும் கைமாறு. தமிழ் மண்ணில் மதவெறிப் பக்தியறிவு பரப்பி வன்முறையில் ஆழ்த்தும் பக்திமுறையெனும் வடவர்களின் இரத்தச் சகதியிலிருந்து பாமர மற்றும் படித்த தமிழ் மக்கள் மீள வேண்டுமென்பதே அவர்தம் பாதம் பணிந்த எனது வேண்டுகோள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!