தமிழக வாக்காளர்களே விழித்திடுங்கள்!


                   இதோ 2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள ஏராளமான அரசியல் இயக்கங்கள் தங்களுக்கு இத்தனை தொகுதியாவது கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால் கிட்டத்தட்ட ஏழு முனைப்போட்டிதான்  தமிழகத்தில் நடைபெறுமென்பது முடிவாகிவிட்டது. கடைசி நேரத்தில் எந்த இயக்கம் எங்கிருந்து எங்கு தன் பச்சோந்தி குணம் காட்டி நிறம் மாறி அணி மாறும் என்பதுவும் மதில்மேல் பூனை நிலையாகிவிட்டது.

இன்றைய தமிழக ஆளும் இயக்கம் தங்களுக்குள்ள குறிப்பிட்ட சதவீத மக்களின் ஆதரவுடன் நாற்பது தொகுதிகளிலும் வென்று மத்தியில் பிரதமர் பதவியும் தம்முடையதாகும் என்ற கனவுடன் ஏராளமான பொருட்செலவுடன் பிரம்மாண்ட மேடைகள் அமைத்து பரப்புரை செய்து வருகிறது.

மதவாத இயக்கமெனக் கருதப்படும் வட நாட்டு இயக்கமும் முரண்பாடான கூட்டணியைத் தமிழகத்தில் அமைத்துக்கொண்டு எப்படியாவது தமிழகத்தில் தனக்கென இதுவரை இல்லாத வாக்கு சதவீதத்தை முரண்பாடான இயக்கங்களின் தயவில் பெற்றுத் தமிழகத்தில் தன்னுடைய வரவைப் பதிவு செய்யத் துடிக்கிறது.

குடும்பப் பதவிச்சண்டை காரணமாகத் தள்ளாடித் தவிக்கும் இயக்கமும் எப்படியாவது தன்னுடைய செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்வதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்து வருகிறது.

பரிதாபததிற்குரிய வகையில் பொதுவுடைமை இயக்கங்களும் பழம்பெரும் தேசிய இயக்கமும் கூட்டணிக்கு வழியின்றிப் போனதால் தங்களுக்குள்ள சொற்ப வாக்கு வங்கியை மட்டும் நம்பித் தனித்து களம் இறங்கியுள்ளன.

இந்த நிலையில தமிழகம் புதுவை உட்பட நாற்பது தொகுதிகளையும் எந்த அணி வென்று தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்த முயன்றாலும் அது தமிழக மக்களின் 35 சதவீத மக்களின் ஆதரவுடன்தான் வெல்லமுடியும்.

ஆளும் இயக்கம் இதே சதவீத வாக்குகளுடன் வென்றாலும் அறுபத்து ஐந்து சதவீத தமிழக மக்களின் எதிர்ப்புணர்வுடன்தான் வென்றதாக அர்த்தம். அது மட்டுமன்றி இவர்கள் நாற்பது தொகுதிகள் வென்றாலும் அது பாரத அளவில் எட்டு சத அளவில்தான் உள்ளது. இந்த நிலையில் மைனாரிட்டி இயக்கமாகத்தான் பிரதமர் பதவிக்கு இந்த இயக்கம் முயற்சி செய்ய வேண்டும்.
ஆக எந்த அணி வென்றாலும் அந்த அணிக்கு எதிராக வெறுப்புணர்வுடன் 65 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர் என்ற உண்மையை எவரும் மறுக்க இயலாது.
பாரத அளவில் எந்த இயக்கம் மக்களின் முழு ஆதரவு பெறுமென்பது மக்களின் இன்றைய மன நிலையைப் பொருத்துதான் அமையப்போகிறது.

அநேகமாக வரும் பாராளுமன்றத்தேர்தலில் எந்த இயக்கமும் முழு ஆதரவு பெற்று தனித்து ஆட்சியமைக்க இயலாத நிலையில் தொங்கு பாராளுமன்ற நிலைகூட உருவாகலாம்.

அதே சமயம் தேர்தலுக்குப் பின்னர் எந்த இயக்கம் எந்த அணியுடன் அமைச்சர் பதவிக்கெனத் தனது பச்சோந்தி குண நிறம் காட்டி அணி மாறும் என்பதும் அந்த சமயத்தில்தான் தெரியவரும்.

எனவே தமிழக வாக்காளர்கள் தாங்கள் சார்ந்த இயக்கங்களின் மீது கடுமையான பாசம் வைத்து வாக்களிக்காமல் தமிழகத்தில் தற்பொழுது நிலவும் மின்வெட்டு, விலைவாசி ஏற்றம், வறட்சி, பொருளாதார வீழ்ச்சி, சாதியம், மதவாதம், தீவிரவாதம், அரசியல் எதேச்சாதிகாரம், இலஞ்சம், ஊழல் எனப் பல்வேறு சவால்களை மனதில்கொண்டு வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தலைப் பொருத்தவரை பணபலம் மிக்கவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முன் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே எளிமையானவர்கள் பொதுத் தொண்டுக்கு வர மக்கள் இவர்களின் வாழ்க்கை வசதிகளைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தலிலும் பணபலம் வென்றால் மக்கள் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம். வாக்களித்துவிட்டு ஐந்தாண்டுகளுக்குப் புலம்பித் தவிக்காமல் வாக்களிக்கும்போதே சிந்தித்து வாக்களித்தால் மக்கள் சக்தி வென்றதாக அர்த்தம்.

ஒரு தேர்தலிலாவது பணபலம் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இன்றைய அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை அவர்கள் புரிந்து தங்களைத் திருத்திக்கொள்ள முன்வருவர். அல்லது மக்களின் வெறுப்புணர்வு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அடையாளமின்றிப் போவர்.

எது நடந்தாலும் அது மக்களின் நன்மைக்காகத்தான் நடக்க வேண்டுமென்பதே எமது ஆவல்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!