திங்கள், 24 மார்ச், 2014

ஆயிரம் கரங்கள் நீட்டி

Leave a Comment
புதிய சூரியனின் பார்வையிலே!
உலகம் விழித்துக்கொள்ளும் நேரமிது!
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி கர்ணன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி என்ற பாடலை இதன் இனிமை காரணமாக அடிக்கடி கேட்க விரும்பி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே அந்தப்படத்தின் ஒலி நாடா ஒன்றை வாங்கி அடிக்கடி கேட்பது எனது வழக்கம்!
இந்தப் பாடலில் இடம்பெற்ற கருத்தின் மீதோ இப்பாடலில் வரும் வரிகள் எதைப் போற்றிப் பாடப்பட்டது எனவும் கூட நான் அறிந்து கொள்ள முற்பட்டதில்லை! தற்பொழுது பிரபஞ்ச சக்திகளின் வெளிப்பாடு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் விழைவாக நான் காலை எழுந்து காலைக்கடன்கள் முடித்து குளித்தவுடன் கதிரவனை வரவேற்க வீட்டின் மாடிக்குச் சென்று விடுவது வழக்கம்!
உலக மக்கள் அனைவரும் சாதி மத பேதங்களால் பிளவுபட்டு நின்று ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ முற்படாவிட்;டாலும் தம் வாழ்நாள் முழுவதும் பிரபஞ்ச சக்திகளைச் சார்ந்தே வாழ வேண்டி வரும்!
கதிரவன் அவர்களில் பிரதானமானவன்! கதிரவனின் இயக்கம் நின்று போனால் பிரபஞ்ச வெளியிலிருந்து இந்தப் பூமிப் பந்து விலகிச் சென்று உலக மக்களே இல்லாது போகும் நிலை உருவாகும்!
எனவேதான் நான் பிரபஞ்ச சக்திகளில் பிரதானமான கதிரவனை காலைப் பொழுதில் வாழ்த்தி வரவேற்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்! மேலும் பிரபஞ்ச சக்திகளுடன் இணைந்து தமிழக மக்களின் எண்ண சக்திகளையும் ஒன்று திரட்ட எண்ணினேன்! எனவே இந்தப் பாடல் வரிகளில் சில மாற்றங்களைச் செய்து எனது எண்ணங்களை இந்தப் பிரபஞ்ச வெளியெங்கும் பரவச் செய்யத் துவங்கினேன்!
கவியரசரின் பாடலில் உள்ள போற்றதல் என்ற வார்த்தைகள்; மத உணர்வு சார்ந்தது! போற்றுதல் கூட மற்றவர்களைத் துதிப்பதுபோல அமையும்! வணங்குதலும் போற்றுதலும் தமிழர் வழக்கமில்லை என்ற உலகத்தமிழ் அறிஞர்களின் வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவன் நான்!
மாற்றம் செய்யப்பட்ட எனது வரிகள் முழுக்க முழுக்க தமிழினத்திற்கே உரிய உன்னதமான வாழ்த்துதல் எனும் பண்பு நலனுக்கு உரியது!
எனவே இப்பொழுதெல்லாம் கடமைக்காக எனக்கு வணக்கம் தெரிவிப்பவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களை வாழ்த்துவதையே எனது வழக்கமாக்கிக் கொணடுள்ளேன்!
கவியரசரின் மாற்றம் செய்யப்பட்ட இந்தப் பாடல் வரிகள் நம் பள்ளிக் குழந்தைகளின் தினசரி இயற்கை வாழ்த்துப் பாடலாகப் பாடப்பட வேண்டுமென்பதே எனது விருப்பம்!
உன்னதமான பழைய திரைப்படப் பாடல்களை புதுமை என்ற பெயரால் ஆர்ப்பாட்டமான இசையால் சிதைத்து வேதனைப்படுத்துவது போல எனது மாற்றம் இல்லை என்பதைக் கவியரசரைச் சார்ந்தவர்கள்கூடக் கட்டாயம் புரிந்து கொள்வர்!
இந்தப் பாடல் வரிகளில் எந்தச் சாதியும் இல்லை! மதங்களின் பின்னணியும் இல்லை! இந்தப் பாடல் வரிகளிலுள்ள ஆழ்ந்த அற்புத வரிகள் மழலைகளால் புரிந்து கொள்ளப்பட்டு காலைச் சந்திப்பின்;போது பாடப்பட வேண்டும்!
உலகை அச்சுறுத்தும் தீவிரவாத இருள் அகல, சாதிய மதவாத பேத இருள் அகல, மக்களின் அறியாமையை வளர்த்து வன்முறை வளர்க்கும் அரசியல்வாத இருள் அகல, துன்ப இருள் அகல, மாணவர்தம் இதயத்தில் எழும் எதிர்காலம் குறித்த அச்ச இருள் அகல, இந்தப் பாடல் வரிகளைத் தம் இதயத்தில் ஏற்றுவதால் அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்ற முடியும்!
தாய்மை, அன்பு,  கருணை,  தூய்மை,  வாய்மை,  நேர்மை,  அகிம்சை எனும் தீபங்களைத் தம் நெஞ்சினில் ஏற்றத் தயாராகும் மாணவச் செல்வங்கள் நிச்சயம் எனது கருத்தை ஏற்றுக் கொள்வர்!
சாதிமத உணர்வுகளைத் தொலைத்து விட்டு புதிய வடிவம் பெற்றுள்ள எனது தினசரி இயற்கை வழிபாட்டுப் பாடல் இனி இது மட்டும்தான்!
இந்த பாடல்வரிகளில் உள்ள உயர்ந்த எண்ணங்கள் பிரபஞ்ச வெளியெங்கும் பரவிப் பாடல் வரிகளுக்குச் சொந்தமுள்ள உயர் நெஞ்சங்கள் ஒன்று சேரும் காலம் விரைவில் உருவாகும்!

               ஆயிரம் கரங்கள் நீட்டி
               அணைக்கின்ற தாய்மை வாழ்க வருக!
               அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
               இருள் நீக்கம் தருவோர் வாழ்க வருக!
               தாயினும் பரிந்து சாலச்
               சகலரை அணைப்போர் வாழ்க வருக!
               தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
               துணைக்கரம் கொடுப்போர் வாழ்க வருக!
               தூயவர் இதயம் போலத்
               துலங்கிடும் ஒளியோர் வாழ்க வருக!  
               தூரத்தே நெருப்பை வைத்துச்
               சாரத்தைத் தருவோர் வாழ்க வருக!
               ஞாயிறே நலமே
               ஞால முழுதும் வாழ்க! வருக!
               நானிலம்; உளவோரெல்லாம்
               வாழ்கவே! வாழ்க! வருக!
         
             வாய்மையே என்றும் வெல்லும்!