வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!


வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!
    ஒருவரை மற்றவர் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற பண்புநலம் முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்! நமது சங்க கால இலக்கியங்கள் இதனை நன்கு விளக்கியுள்ளன!

வாழ்த்துவதற்கு வயது பேதம் தமிழரிடத்தில் இருந்தது கிடையாது! பெரியவர்களைச்  சிறியவர்கள் சந்திக்கும்போது பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்துவதும் பதிலுக்கு சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்துவதும் பழங்காலத் தமிழர்தம் மரபு!

மனநிறைவாகவும் உளமாறவும் வாழ்த்துதல் நிகழ்வதால் இருசாராருக்கும் அறிவியல் ரீதியான நன்மைகள் நிகழுகின்றன! இவ்வாறு வாழ்த்தும்போது சிறியோரால் வாழ்த்து பெறும் பெரியவர்களின் வயது நீடித்து வந்துள்ள விந்தையையும் பதிலுக்கு பெரியோர்தம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பெறும் சிறியோருக்கு அவர்தம் அறிவும் அன்பும் நிறைக்கப்படுவதை உலகோர் ஒப்புக்கொள்வர்.

அது மட்டுமன்றி தமிழர்கள் இயற்கையையையும் இந்த பிரபஞ்ச வெளியையும் வாழ்த்துகின்ற தன்மையை வெளிப்படுத்தி அதன் வாயிலாக இயற்கையிடமிருந்தும் இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் ஏராளமான நன்மைகளைப் பெற்று வந்துள்ளனர். இன்றுவரை தமிழகம் வந்தாரை வாழவைத்து அச்சமின்றி வாழும் சூழலுடன் (இத்தனைக்கும் தன்னுடைய வளங்கள் அனைத்தையும் மற்ற இனத்தவரிடம் இழந்துவிட்டு) வாழ வைத்திருப்பதே இதற்கு சாட்சியுமாகும்.

வாழ்த்துகின்ற எண்ணங்களுக்குள்ள மகத்தான ஆற்றல் அப்படி! வாழ்த்துதலின் சிறப்பியல்புகளைப் பற்றி நமது தமிழரிஞர்கள் எத்தனையோ முறை எடுத்துரைத்தும் வாழ்த்துதல் பற்றிய விழிப்புணர்வும் அதனை நமது வாழ்வின் ஒரு அங்கமாகப் புதுப்பித்துக் கொள்ளும் மன நிலையும் இதுவரை நமக்குள் ஏற்படவே இல்லை!

நமது வாழும் கலை அமைப்பாகிய வாழ்க வளமுடன் அமைப்பைச் சார்ந்தவர்கள் வாழ்த்தும் வழக்கத்தைக் கடைப் பிடிக்கின்றனர்! அவர்களின் இந்த வார்த்தைக் கோர்வையில் வளமுடன் என்ற வார்த்தை முடன் என்று முடிவதால் அது சிறப்பான பதமாக அமையவில்லை என்பதைத் தமிழறிஞர்கள் எவருமே மறுக்க மாட்டார்கள்!

முடன் என்றால் முடக்குதல் என்ற பொருள்படுவதாக உள்ளதெனக் கருதி எங்கள் வாழும் ஆசான் சித்த வைத்திய அறிஞர் சிவன்மலை தவசிகளார் அவர்கள் வாழ்வாங்கு வாழ்க என்ற வாழ்த்துதல் பண்பினை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தினார்! வள்ளுவத்தை வாழ்க்கை நெறியாக்கி வாழ வலியுறுத்தும் அவர் இந்த முழக்கத்தை வள்ளுவத்திலிருந்துதான் தேர்ந்தெடுத்தார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

கவனியுங்கள்! வள்ளுவம் வளமுடன் வாழ்பவன் எனப் பாடவே இல்லை. வாழ்வாங்கு வாழ்பவன் எனவே பாடியுள்ளார்.

ஆனாலும் எங்கள் ஆசானின் இந்த முழக்கம் பெரும்பாலான தமிழர்களைச் சென்றடையவில்லை! அவரது முழக்கம் மிகச் சிறப்பான, முடிவற்ற வார்த்தைகளை உடைய, இதயம் நிறைந்து வாழ்த்தும் வலிமையான எண்ணங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றது!

நமது தமிழ் மக்கள் அனைவருமே பிறரை சந்திக்கும்போது மனதார வாழ்த்துகின்ற தமிழர்தம் மரபை முற்றிலும் மறந்து விட்டு ஆங்கில மற்றும்  வடவர் மோக அடிமைகளாகவே மாறிவிட்டனர்!

உயர் அலுவலர்களைக் காணும்போது உள்ளுக்குள் வெறுப்புணர்வோடும் வெளியில் கடமைக்குச் சொல்லித் தீரவேண்டுமே என்ற நோக்கோடு காலை, மதியம், மாலை, இரவு, என நான்கு வேளைகளும்,
குட் மார்னிங் சர், குட்ஆப்டர்நூன் சர், குட் ஈவினிங் சர், குட்நைட் சர், எனத் தங்கள் ஆங்கில மோகத்தை வெளிப்படுத்தியும் அதே சமயம் அதற்கான அர்த்தம் விளங்காமலும் கூறுகின்றனர்!

சற்று நாகரீகமாகக் காட்சியளிக்கும் பெண்களைச் சந்திக்கும்போது குட்மார்னிங் மேடம் வாங்க மேடம் எப்படி இருக்கீங்க மேடம் என அழைக்கத் துவங்கியுள்ளனர்!

ஆங்கிலேயரின் இந்த வாழ்த்து முறை நமது தமிழரின் வழக்கத்திற்கோ பண்பாட்டிற்கோ சற்றும் பொருந்தாததுவும், நமது மரபிற்கு ஏற்புடையதுமல்ல!

ஆங்கிலத்தில் இவ்வாறு அழைப்பது அழகாகத்தானே இருக்கிறது எனக் கருதினாலும் நமது பண்பாட்டில் பொதிந்துள்ள நன்மைகளைத் தெளிவாக உணர்ந்தால்தான் ஆங்கில மோகம் தவறு என விளங்கிவிடும்!

ஆங்கிலத்தில் குட்மார்னிங் சர் என நாம் நமது எதிரிலுள்ளவரைப் பார்த்து மரியாதை செய்கிறோம்! இதற்கான அர்த்தம் தமிழில் நல்ல காலைப் பொழுது ஐயா என வருகிறது! இதனை நாம் அவருக்கு ஆங்கிலத்தில் தெரிவித்தாலும் தமிழில் தெரிவித்தாலும் காலைப் பொழுது நல்ல பொழுதுதான்!

இப்படி நீட்டி நெளித்துதான் நாம் மற்றவர்களை வாழ்த்த வேண்டுமா? அடுத்ததாக தற்பொழுது நடைமுறையில் உள்ள பெரும்பாலான சொல் வணக்கம் என்பது!

இந்த வணக்கம் என்ற சொல் வடவர்களால் உருவாக்கப்பட்டது! தமிழர்களின் சங்ககால வாழ்க்கை முறையில் யாரும் யாரையும் வணங்கியதற்கான செய்தியோ சான்றுகளோ கிடையாது!

வணங்குதலும் வணக்கமும் வடவர்களின் பக்திமுறை தமிழகத்தில் வேறூன்றிய பின்னர் ஏற்படுத்தப்பட்டவை! இதுவும் நமது தமிழர்களின் வழக்கத்திற்கு நேர்மாறானது!

எப்படி நாம் ஆங்கிலத்திலுள்ள வணக்க முறையினை, நமக்கு முற்றிலும் உரியதாக மாற்றிக் கொண்டோமோ, அப்படியே வடவரின் வணக்க முறையினையும் நமக்கு உரியதென காலம்காலமாக நமக்குள் உருவேற்றி வந்துள்ளோம்!

எனவே இந்த இரு முறைகளும் தமிழர்தம் பண்பாட்டிற்கும் வாழ்வியலுக்கும் சிறிதளவும் பொருத்தமற்றது! தமிழர்களின் வாழ்த்துதலில் உள்ள செய்தியும் அதில் பிறருக்கு ஏற்படுகின்ற நன்மைகளும் வார்த்தைகளால் விவரிக்க அடங்காது! அதை உணர்ந்து ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்துபவர்களுக்குத்தான் அதன் தாக்கம் எவ்வளவென்று புரிந்து கொள்ள இயலும்!

நாம் நமது அரசியல்வாதிகளை வாழ்த்துவதைத்தான் தற்பொழுது நடைமுறை வழக்கமாகக் கொண்டுள்ளோம்!

இன்னார் வாழ்க என்று ஒரு தமிழர் தனக்குப் பிடித்த அரசியல் தலைவரை வாழ்த்தும்போதே மறவாமல் இன்னார் ஒழிக என்று தனக்குப் பிடிக்காத அரசியல் தலைவரைத் தூற்றுவதுமான தமிழின நாகரீகத்திற்கு விரோதமான செயலும் தற்பொழுது வெகு வேகமாகப் பரவி வருகிறது!

வாழ்த்துவது மட்டுமே எவ்வாறு தமிழினத்திற்கு முற்றிலும் உரியதான குணமோ அது போலவே மற்றவரைத் தூற்றுவதும் தமிழின நாகரீகத்திற்கு நேர் விரோதமான செயல் என்பதை உணர்ந்து பிறரைத் தூற்றுவது போன்ற நாகரீகத்திற்கு விரோதமான செயலை இனியாவது நாம் கைவிட வேண்டும்!

எது எப்படியோ நமது வாழ்த்துதலுக்கு உரிய சிறப்புகளை அறிந்தோ அறியாமலோ நமக்குப் பிடித்த அரசியல் தலைவர்களை வாழ்த்தி வருகின்றோம்! இவர்களில் பெரும்பாலானவர்கள் சுயநலவாதிகளாக மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து உல்லாச வாழ்க்கை வாழ்பவர்களாகத்தான் உள்ளனர்!

எனினும் அவர்களிடத்திலுள்ள ஏதோ ஒருவகை ஈர்ப்பு காரணமாக  அவர்கள் செய்யும் தவறுகள் நமக்கு புரிந்தும் அவர்களிடமுள்ள இந்த குறைகளை நாம் பொருட்படுத்துவதில்லை! இதற்கு வலுவான பிண்ணனியாக சாதிப் பற்று அல்லது அவர்களிடத்திலுள்ள பேச்சாற்றல் அல்லது இலக்கியம், மொழி ஆளுமை, அல்லது ஆளுமைப் பண்பு என ஏதேனுமொன்றிற்காக அவர்களை நம் தலைவர்களாக ஏற்று வாழ்த்துகிறோம்!

இவ்வாறு அவர்களை நமது தலைவர்களாக நினைந்து நம்முடைய இதயத்தில் நிறைத்து நம் தமிழர்களுக்கே உரித்தான பண்பு நலனுடன் அவர்களை வாழ்த்துகின்ற நிகழ்வை நாம் இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளும்போதுதான் ஒரு உண்மை இங்கு நமக்குத் தெளிவாக விளங்குகிறது!

பாமரரோ படித்தவரோ எவராக இருந்தாலும் தங்களுக்குப் பிடித்த தலைவர்களை வாழ்த்துகின்ற நமது உயரிய குணம்தான் இந்தத் தலைவர்கள் மக்களுக்கு எத்தனை துரோகங்கள் செய்து சுயநலமாக வாழ்ந்தாலும் நீண்ட நெடிய ஆயுளுடன் வாழச் செய்கிறது! இந்த வாழ்த்து சதவீதம் தலைவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப சில சமயங்களில் கூடுவது அவர்கள் செய்யும் சில நன்மைகளால்தான்! குறைவது அவர்கள் செய்யும் தீமைகளால்தான்!

இதன் எதிரொலியை நாம் தேர்தல் காலத்திலும் கண்டு வந்துள்ளோம்! குறிப்பிட்ட தலைவர்களுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரிப்பது மக்களிடம் அவர்கள் செய்துள்ள நன்மைகள் காரணமாக என்பதை விட மக்களிடமுள்ள வாழ்த்து சதவிகிதத்தின் அளவினாலும்தான்!

எனவே நம் மக்களின் இந்த வாழ்த்தும் பண்பு நலத்தையும், அதனால்தான் தங்களின் வாழ்நாள் நீடிக்கின்றது என்ற உண்மையையும் நமது தலைவர்கள் புரிந்துகொண்டு இனியாவது சுயநல வாழ்க்கை முறையிலிருந்து விலகி சுயநலமற்ற தூய பொதுநலவாதியாக மாறவேண்டும்!

இதைத் தவிர வாழ்த்துதலின் நன்மைகளை எனது சொந்த அனுபவத்திலிருந்தும் இன்னும் சிறப்பாக விளக்க முடியும்!

நானும் எனது மகளும் ஒரு ரோஜாச்செடியினை எங்கள் வீட்டு மாடியில் வளர்ப்பதென முடிவு செய்து வாங்கி வந்தோம்! அதனை வாங்கும் போது அதில் பூத்திருந்த ரோஜாவின் அழகுதான் எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது!

ஆனால் நாங்கள் இல்லம் திரும்பிய பின்னர்தான் அதில் உள்ள இலைகள் பூச்சி அரித்தும் செடி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதுவும் தெரிய வந்தது! இதைக் கண்ணுற்ற எனது மனைவியிடம் சரியான செடியினைப் பார்த்து வாங்கக்கூட உங்களுக்குத் தெரியவில்லை என்ற பூசனையால் எங்கள் நிலை செடியைவிடப் பரிதாபமானது!

எனினும் வேறு வழியின்றி அந்தச் செடியினை நாங்கள் தொட்டியில் வைத்து நன்கு பராமரிக்கத் துவங்கினோம்! நான் இந்தச் செடியினை நட்ட நாளிலிருந்து அதனை வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்!
என்னிடமிருந்து வாழ்த்தும் பண்பினைக் கற்றுக் கொண்ட எனது மைத்துனரின் இரண்டு வயது மகனும் அந்தச் செடியைப் பார்த்து நான் சொல்லித் தந்தபடி செடி வாழ்க என மழலையில் வாழ்த்துவான்!

எங்களின் வாழ்த்துக்களின் தாக்கத்தால் அந்தச் செடி நன்றாக வளரத் துவங்கி அதிக அளவிலான ரோஜாக்களை எங்களுக்கு வழங்கத் துவங்கியது! இதே போன்று எனது மைத்துனரின் மகள் தனக்குப் பிடித்தவாறு வாங்கி வந்த மற்றுமொரு பலவீனமான ரோஜாச் செடியும் எங்களின் வாழ்த்துதலால் கொத்துக் கொத்தாக ரோஜா மலர்களை எங்களுக்கு வழங்கியது!

வயதானவனாகிய எனது வாழ்த்துதலில் கூட நம் இன்றைய வாழ்வியல் சூழலின் வேண்டாத குணங்கள் சிறிதளவேனும் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடும்! ஆனால் கள்ளங்கபடமற்ற மழலையின் வாழ்த்துதலில் உள்ள சிறப்பே இந்த இரண்டு செடிகளையும் வளரச் செய்து மணம் பரப்ப வைத்தது என்பதே எனது அனுபவ உண்மையாகும்!

இதே இரண்டு வயதுடைய எனது மைத்துனரின் மகனுக்கு நான் அவனைக் காலை வேளையில் முதன்முறையாகப் பார்க்கும்போது வாழ்த்துச் சொல்லும் வழக்கத்தினையும் ஏற்படுத்தினேன்! அவனும் தன் அன்னை சொல்லித் தந்தபடி என்னை பதிலுக்கு வாழ்த்துவான்! தினமும் நான் அவனைப் பார்த்து அவன் பெயரைச் சொல்லி வாழ்க என்று வாழ்த்தியவுடன் அவனும் பதிலுக்கு மாமா வாழ்க என்று என்னை வாழ்த்துவான்!

நாளாக ஆக அவனை நான் காலையில் முதல்முறையாகப் பார்த்து அவனது பெயரைச் சொல்லி அழைத்தாலே அவன் முகம் கொள்ளாச் சிரிப்புடன் என்னைப் பார்த்து மாமா வாழ்க என்று வாழ்த்துவான்! எனது அனைத்துத் துன்பங்களும் அந்த நிமிடம் முதல் தொலைந்தது போன்ற உணர்வுடன் நானும் பதிலுக்கு அவனை மனதார வாழ்த்துவேன்! அவனது வாழ்த்துதல் இதோ இந்த நிமிடம் வரை என்னிடமிருந்து விடைபெறும்போது தொடர்கிறது.

வாழ்த்துதலின் சிறப்பினை பன்மடங்கு உணர்ந்ததாலேயே நமது திருமண அமைப்பில் மணமக்களை வாழ்த்துவதை இன்றுவரை நாம் கடைப்பிடித்து வருகிறோம்! நமது திருமணங்களின் போது உறவும் நட்புமெனப் பலர் கூடி, தங்களின் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, மங்கள வாத்தியம் உரக்க ஒலிக்க மண நேரத்தின்போது, அனைவரது எண்ணங்களும் ஒருமுகமாகி, மனதார உளமாற மணமக்களை வாழ்த்துவதால், உண்மையிலேயே மணமக்கள் நமது வாழ்த்துதலின்படி, பதினாறு பேறுகளும் பெற்று, பல்லாண்டு வாழ்பவர்களாக மாறுகின்றனர்!

ஆனாலும் இன்றைய நமது வாழ்வியல் சூழலில் அது மனப்பூர்வமானதாக உள்ளதாக எனக்குத் தெரியவில்லை! மணமக்களை அவர்களின் நண்பர்கள் கேலி செய்வதும் எப்போது மணப்பெண்ணை அடிமையாக்கி தாலி கட்டுவார்கள் சாப்பிட்டுவிட்டு அவரவர் வேலைகளைப் பார்க்கக் கிளம்புவோம் என்று தவிப்பதும், திருமணச் சடங்குகளின்போது வழவழ எனப் பேசிக் கொண்டிருப்பதும், திருமண உறவுகள் தங்களின் தகுதிக்கு ஏற்ப சற்று சுவையின்றியோ அல்லது எளிமையாகவோ வழங்கும் உணவின் தரத்தைப்பற்றி வெளிக்காட்டி தங்களின் வெறுப்பு மனநிலையினை வெளிப்படுத்துவதும் போன்ற விரும்பத்தகாத செயல்கள் அவ்விடத்தில் நிகழ்வதால் வாழ்த்துவது மனப்பூர்வமானதாக அன்றிச் சடங்காகத்தான் உள்ளது! அதையும் தாண்டிய ஒரு சிலரது இதயம் நிறைந்த வாழ்த்துக்களால்தாம் இன்றுவரை நமது நாகரீகம் கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது!

என்னைப் பொருத்தவரை எனக்கு அறிமுகமில்லாத திருமணங்களில் கலந்து கொள்ளும்போது மணமக்களை அவர்களின் திருமண பந்த நிமிடத்தின் போது மனதார வாழ்த்துவேன்! தெரிந்தவர் எவரேனும் அழைத்தால் மட்டுமே உணவருந்தச் செல்வேன்! மணவீட்டில் பரிமாறும் இனிப்பின் சுவை போல மணமக்களின் வாழ்க்கை அமைய வேண்டுமென மனதிற்குள் வாழ்த்துவேன்! உணவருந்த வாய்ப்பில்லையெனில் வந்த கடமை முடிந்ததென மனதார மணமக்களை வாழ்த்திவிட்டு வீட்டிற்கு வந்தோ அல்லது வெளியூரென்றால் உணவகத்திலோ சாப்பிட்டு விடுவேன்!

பதினாறு பேறுகளும் பெற்று மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் நமது வாழ்த்துதலின் பெருமையினை இனியாவது உணர்ந்து இளைஞர்கள் திருமண விழாக்களை அர்த்தமுள்ளதாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்!

மேலும் நான் தினசரி எனது இயற்கை வழிபாட்டில் கவியரசர் கண்ணதாசனின் ஆயிரம்  கரங்கள் நீட்டி எனத்துவங்கும் உன்னதமான பாடலை மாற்றியமைத்து இந்த பிரபஞ்சம் முழுவதையும் வாழ்த்துவதை வழக்கமாக்கியுள்ளேன்!

எனவே இதைப்படிக்க நேரும் நல் உள்ளங்கள் இனி உங்களின் மழலைக்கும் வாழ்த்துகின்ற நற்பண்பைக் கற்று கொடுங்கள்! தமிழகம் முழவதும் இனி நாள் முழுக்க வாழ்த்துகின்ற பண்புநலம் ஓங்கி ஒலித்து நம் பிரபஞ்ச வெளியெங்கும் பரவட்டும்! உலகு தழைக்கட்டும்!

இந்த நிமிடம் முதல் மற்றவர்களைச் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற நமது பண்பாட்டைப் புதுப்பித்து வாழ்த்துவோம்! வளம் பெறுவோம்! வாழ்வாங்கு வாழ்வோம்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்ற தடுமாற்றங்களும் இனி எவருக்கும் வேண்டியதில்லை! தங்கு தடையின்றி யார் யாரை வேண்டுமானாலும் மனதார வாழ்த்துங்கள்! வாழ்வாங்கு வாழுங்கள்!


உலகோர் வாழ்வாங்கு வாழ்க!
தமிழினம் வாழ்வாங்கு வாழ்க!
பிரபஞ்சம்  வாழ்வாங்கு வாழ்க!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!