பேரணிகள்!

பேரணிகள்!
ஐந்தாம் தமிழ்சங்க வாய்மையே வெல்லும் இயக்க ஆட்சி காலத்தில் நடைபெறப்போகும் பேரணிகள் இனி இப்படித்தான் இருக்கும்!

நம் மக்களிடம் நிலவும் தவறான பழக்க வழக்கங்களை களைவதற்கு ஆட்சியாளர்கள் மாணவ சமுதாயத்தை பயன்படுத்திக் கொள்வதை நாம் பல முறை காண்பதுண்டு!

வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களை விழிப்புணர்வுப் பேரணி என்ற பெயரில் நீண்ட தொலைவு கடும் வெயிலில் பதாகைகள் ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் செல்ல வைத்து வதைப்பதை ஏற்புடையதாக அறிவுடையோர் கருதக்கூடாது!

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் என முழக்கமிடும் இதே அரசுகள், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குடிபோதை, சுற்றுச்சூழல் மாசுபடுதல், முறை தவறிய வாழ்க்கை முறையால் வாங்கும் எயிட்சு வியாதிகள், போக்குவரத்து விழிப்புணர்வு போன்ற பேரணிகளை முற்றிலும் பள்ளிக் குழந்தைகளை பயன்படுத்தி இனி வரும் காலங்களில் நடத்தக்கூடாதென உச்ச வாய்மை மன்றத்தால் தடை ஆணை ஒன்று நிரந்தரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்!

இது போன்ற பேரணிகளால் சமுதாயத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது அறிவிற்கு எட்டியவரை தெரியவில்லை! பேரணிகளில் கலந்து கொண்டு வாடி வதங்கிச் செல்லும் மாணவ மணிகளைப் பார்க்கும்போது எம்முள் வேதனை உணர்வுகள் ஊற்றெடுக்கும்!

அதே சமயம் சமுதாயத்தில் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படுத்த மாணவ சமுதாயம் பங்கேற்காத முற்றிலும் மாறுபட்ட விழிப்புணர்வுப் பேரணிகள் கட்டாயம் நடைபெறத்தான் வேண்டும்!

இதற்கு முதற்கண் இது போன்ற பேரணிகளைப் பொதுமக்களுக்கு தொல்லைகள் அற்ற நாளான ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்து நடத்தலாம்! உலகமெங்கும் சில குறிப்பிட்ட தினங்களை இதற்கெனப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தாலும் நாம் நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சி நிலையை கவனத்தில் கொண்டு நம்முடைய வசதிக்கேற்ப விடுமுறை நாளில் நடைமுறைப்படுத்துவதால் தவறேதுமில்லை!

பரபரப்பான வேலை நாட்களில் இது போன்ற பேரணிகளைச் சந்தித்து போக்குவரத்து அல்லல்களில் சிக்கி அவலப்பட நேரிடும் மக்களின் எரிச்சல் நிலை இதனால் முற்றிலும் மாற்றியமைக்கப்படும்! அது மட்டுமன்றி விடுமுறை நாட்களில் அமைதியான சூழலில் நல்ல மன நிலையுடன் இருக்கும் மக்களிடம்தான் விழிப்புணர்வுப் பேரணிகள் தரும் நல்ல செய்திகள் சென்றடையும்!

எனவே இனி வரும் பேரணிகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும்!

முதலாவதாக குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும், அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் தொழிற்கூட உரிமையாளர்களையும் (அவர்கள் எப்படிப்பட்ட செல்வந்தராக இருந்தாலும்) ஊர்தோறும், மாவட்டம்தோறும் தேடிப்பிடித்து இனி குழந்தைத் தொழிலாளர் முறையை உருவாக்க மாட்டோம் எனப் பேரணியாக நடத்தி முழக்கமிட்டு செல்ல வைக்க வேண்டும்!

இரண்டாவதாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைப் பிடித்துவந்து, அவர்களை  அடிக்கடி இது போன்று பேரணியில் கலந்து கொள்ளச்  செய்து இனி போக்குவரத்து விதிகளை மீறமாட்டேன் என முழக்கமிட வைக்கவேண்டும்! அது மட்டுமன்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வேலையிலும் இவர்களைச் சில நாட்கள் கட்டாயம் பணியாற்றச் செய்ய வேண்டும்!

அடுத்ததாகக் கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்பி தூய்மையாக இருக்காதவர்கள், சாக்கடைகளில் குப்பைகள் போடுபவர்களைப் பேரணியில் நடக்க வைத்து இனி இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடமாட்டோம் என முழக்கமிடச் செய்ய வைப்பதோடு மட்டுமன்றி இதுபோன்றவர்களைப் பேருந்து நிலைய அவலங்களையும் அவர்கள் தூய்மைக் கேடு செய்த இடங்களைத் தூய்மை  செய்யும் பணியைச் செய்ய வேண்டுமென்பது கூடுதலான தண்டனையாக்க வேண்டும்!

மேலும் குடி மற்றும் புகையால் தம் வாழ்வு மட்டுமன்றி தம்மைச் சார்ந்தவர்களையும் வதைக்கும் குற்றவாளிகளை இது போன்ற தவறுகளில் இனி ஈடுபட மாட்டோம் எனச் சற்று அதிகப்படியான தொலைவிற்கு பேரணியில் நடக்கவைக்க வேண்டும்! தம்முடைய போதைப் பழக்கத் தவறுகளால் பலவீனமாகிய உடல் வேதனையுடன் மூச்சு வாங்க நடந்து களைக்கும் இவர்களை, பேரணியின் முடிவில் ஒரு திடலில் அல்லது மண்டபத்தில் கூடவைத்து இது போன்ற தீமைகளால் விளையும் கேடுகளை விரிவாகக் காட்டும் திரைப்படங்களின் வாயிலாக திருத்த வேண்டும்!

வெகு வேகமாக பரவி வரும் எயிட்சு போன்ற வியாதிகளைப் பரப்பும் சமுதாய குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களையும் பேரணியாக சென்று களைத்தபின் எயிட்சு நோய்க்கு ஆளானவர்களின் கதியை நேரில் கண்டு மனம் திருந்துமாறு செய்ய வழி காட்ட வேண்டும்!

ஆக சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற முறைகேடுகள் சார்ந்த செயல்களை உண்மையான விழிப்புணர்வு தருகின்ற எனது கருத்தில் உருவாகும் இது போன்ற பேரணிகளால் மட்டுமே சீர்திருத்த முடியும்!

இறுதியாக மக்களை தவறாக வழி நடத்தும் அரசியல்வாதிகளை இது போன்ற செய்கைகளில் இனி ஒருக்காலும் ஈடுபடமாட்டோம் என பேரணியாக முழங்கி செல்ல வைத்தால் அது மாணவ சக்திகளை தவறாக வழி நடத்தும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு சரியான பாடமாக இருக்கும் என்பதே எமது நனவாகப்போகும் கனவு!

மனித சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் குற்றங்களையும் தீமைகளையும் களைய இது போன்ற முற்போக்கான சிந்தனைகளை செயல்படுத்தும் இயக்கமாக ஐந்தாம் தமிழ்ச்சங்கம் விளங்க வேண்டும்!


ஆகவே இதை படிக்கும் மாணவ மணிகள் இனி வரும் காலத்தில் தம்மை இதுபோன்று வாட்டி வதைக்கும் பேரணிகளில் கலந்து கொண்டு தம்முடைய பொன்னான படிக்கும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என நிச்சயம் நாம் நம்புவோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!