தமிழ் ஈழம்

தமிழ் ஈழம்
2014 நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படையத் துவங்கிவிட்டது. தமிழகத்தில் சுயேச்சைகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஏழு முனைப்போட்டி துவங்கிவிட்டதெனலாம்.

தேர்தல் களத்தில் உள்ள அத்துணை இயக்கங்களும் தாங்கள் வெற்றி பெற்றால் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவோம் என முழங்கி வருகின்றனர்.

தங்களை இலங்கை மக்களின் ஆதரவாளர்கள் எனப் போட்டி போட்டுக்கொண்டு முழங்கிவரும் இந்த இயக்கங்களின் ஒரு செயலை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் எனக் கருதுகிறோம்.

முள்ளி வாய்க்கால் படுகொலைகள் உள்ளிட்ட ஏராளமான போர்க் குற்றங்கள் நிறைந்த இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான கடுமையான இறுதிக்கட்டப் போர் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருந்தபோது தமிழகத்தில் அப்போது சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
போர் நிகழ்வுகள் உலகிற்கு வெளிவரத் துவங்கியவுடன் இந்த இயக்கங்கள் முதலைக்கண்ணீர் வடிக்கத்துவங்கி அதைத் தங்களின் பரப்புரைகளில் வெளிப்படுத்தின.

சில இயக்கங்கள் மத்திய அரசை எதிர்த்து பரப்புரை செய்தன. சில இயக்கங்கள் மவுனம் காத்தன. எனினும் தங்களைத் தமிழீழ ஆதவாளர்களாகக் காட்டிக்கொள்வதில் எந்த அணியும், இயக்கங்களும் பின்வாங்கவே இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் நடக்கவே இல்லை. 

எந்த இயக்கமும் இலங்கைப் படுகொலைகளைக் கண்டித்து தாங்கள் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டோம், ஈழத்தமிழர்களின் படுகொலைகளை விட இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை எனத் துணிந்தும் ஈழ மக்களின் வேதனையில் பங்கெடுத்து அப்போதய தேர்தலைப் புறக்கணிக்கவோ தங்களின் வேட்பாளர்களை திரும்பப் பெறவோ முன்வரவே இல்லை.

ஒரு பக்கம் முதலைக்கண்ணீர் வடித்தவண்ணம் மறுபக்கம் ஓட்டுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த இந்த அரசியல் இயக்கங்களின் நிலையை நம் உண்மையான தமிழின உணர்வாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்.

இந்த தேர்தலிலும் இவர்களின் பரப்புரைகள் தொடர்கிறது. இவர்களின் முதலைக்கண்ணீர் தமிழக மக்களின் வாக்கு வங்கியை வளைக்குமா அல்லது மக்கள் இவர்களின் சுயநலத்தை உணர்ந்து இவர்களைப் புறக்கணிப்பார்களா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரிய வரும்!

இவர்களைப் போல இலங்கையின் ஆட்சியாளர்களை திட்டித் தீர்த்து பலனேதும் வரப் போவதில்லை. போர்க்குற்றம் செய்தவர்களைப் பெரும்பான்மைச் சிங்களரிடம் எடுத்துச் சென்று நியாயம் கேட்போம்.

இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மக்கள் பின்பற்றும் புத்தர் காட்டிய அன்பு வழியில் தமிழர்கள் மீதும் அம் மக்கள் அன்பு செழுத்தும் வழிகள் காண்போம்.

இரு இனங்களும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு பாரதத்திலுள்ளது போன்று இரு மாநிலங்களாக தனித்தனி எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழவும், இந்த மாநிலத்திலுள்ளவர்கள் அஙகும் அஙகுள்ளவர்கள் இங்கும் சுதந்திரமாகப் பயணித்தும், விருப்பமுள்ளவர்கள் எங்கு வேண்டுமானாலும் குடித்தனம் அமைத்துக்கொண்டு வாழவும், வழி காண்போம்.

இரு இனங்களுமே இனி சேர்ந்து வாழவே வழியில்லை என்ற நிலை வருமானால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் வந்து குவியும் ஏராளமான வேற்று மொழி இனத்தாருக்கு இடமிருக்கும்போது இவர்களுக்குமா இடமின்றிப்போகும்?

தமிழர்களின் இன உணர்வினைப் புரிந்துகொள்ளும் பக்குவம் படைத்த மைய அரசின் துணை கொண்டு தமிழகத்தில் ஈழ மக்களுக்கென வாழிடங்கள் அமைத்துக் கொடுத்து அவர்கள் இலங்கையில் செய்து வந்த தொழில்களையே இங்கும் தொடரவும், மாற்றுத் தொழில்கள் ஏற்படுத்தித்தரவும் வழி காணப்பட வேண்டும்.

தமிழக மக்கள் இவர்களை அகதிகள் என அழைக்காமல் இவர்களும் நம் இனம்தான் நம் இரத்தம்தான் என்ற உணர்வுடன் அரவணைத்து அவர்களின் வாழ்வு நிம்மதியாகத் தமிழகத்தில் தொடர வழி காணவேண்டும்.

இன உணர்வாளர்கள் எனத் தங்களைப் பறை சாற்றிக்கொண்டு கூச்சல் இடும் வாக்கு வங்கி அரசியல்வாதிகள் எங்கே தங்களின் வாக்கு வங்கிக்கு பங்கம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் இன்றுள்ள நிலையிலிருந்து நாளை மாறிக்கூட இந்தக் கருத்தை எதிர்க்க முற்படலாம்.

வரலாறு துவங்கிய காலம் முதல் இலங்கையில் வாழும் தமிழினம் அங்கு நித்த நித்தம் செத்து வாழும் நிலை ஒரு முடிவிற்கு வர இதைத்தவிர வேறு வழி எமக்குத் தோன்றவில்லை.

வாக்கு வங்கிக்கொனவே இலங்கைப்பிரச்சினையை ஊதி ஊதிப் பெரிதாக்கும் தமிழக இயக்கங்கள் மனம் மாற வேண்டும். ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழத் தமிழக மக்களும் அவர்களை வரவேற்று வாழ வைக்க முன்வர வேண்டும் என்பதே இனி தமிழீழச் சிக்கல்களுக்கு ஒரே நிரந்தரத் தீர்வு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!