பல தொழில் கற்றல்

பல தொழில் கற்றல்
இளம் வயதிலேயே எனக்கு பலவகையான தொழில்கள் கற்கும் வாய்ப்பு அமைந்தது. 

எனது தாய் வழித் தாத்தா அமரர் கந்தசாமி அவர்களை ஊரில் சோடாக்காரர் என்றால்தான் தெரியும்.
என்னையும் சோடாக்காரருடைய பேரனா என்றுதான் ஊரார் விசாரித்தறிவர். 

அந்த நாட்களில் குடிசைத் தொழிலாக விளங்கிய சோடா, மற்றும் குளிர்பானங்கள் தயாரித்து விற்றல், திருமணம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஒலி ஒளி அமைத்தல், பெட்ரோமாக்ஸ் லைட் வாடகை, மற்றும் மிதிவண்டிகள் வாடகைக்கு விடல், புதிய மிதிவண்டிகள் விற்பனை, பழைய மிதி வண்டிகளைப் பழுது பார்த்தல், அவ்வப்போது வரும் இரு சக்கர வாகனங்களின் பழுதுகளை நீக்குதல், மகிழுந்து மற்றும் சரக்கு வண்டிகளின் டயர் பஞ்சராவதைப் பழுது பார்த்தல் என அவரது தொழில்களின் வரிசை நீளும்.

பள்ளிக்குச் செல்லாத வயது துவங்கி பள்ளி இறுதிப் படிப்பு முடியும் வரை நான் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் அங்குதான் தவம் கிடப்பேன்.
 பள்ளிக் கல்வியோடு தொழிற்கல்வியும் எனக்கு ஏராளமாக அஙகுதான் கிட்டியது.

அது தவிர நான் மற்ற நேரங்களில் என் வயதுக்கும் மீறிய பெரியவர்களின் நட்பையும் பெற்றிருந்தேன். 

அவர்களில் மின்சார சாதனங்களைப் பழுது பார்ப்பவர், தச்சு வேலை செய்பவர், மரம் அறுப்பவர் மளிகை வணிகம் செய்பவர் எனப் பலர் அடங்குவர். 

இவர்களிடமும் நான் பல தொழில்களின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள  முடிந்தது . எங்கள்   தாத்தாவின் மறைவைத் தொடர்ந்து எனது தாய்மாமன்கள் நடத்திய மேற்கண்ட கடைக்கு வரும் இரு சக்கர வாகனங்களைக் கண்டு கண்டே என் மனம் அவைகளின் மீது நாட்டம் கொண்டதாலோ என்னவோ பிறந்த ஊரைவிட்டு புதிய ஊருக்கு வந்து கடும் சவால்கள் உடன்
இருபத்தைந்தாண்டுகள் அந்த வணிகத்திலேயே நட்டத்துடன் நிலைக்கும்படிச் செய்துவிட்டது. பஜாஜ் நிறுவன வாகனங்களின் சப் டீலர்
ஆக வாகனங்கள் விற்பனை அனுபவம், veedal ஆயில் விற்பனை, டன்லப் டயர்கள் விற்பனை போன்ற நிறுவனங்கள் கூட தம்பி மற்றும் தந்தையாரின் ஒத்துழைப்பு இல்லாமையால் விரிவுபடுத்த முடியாமல் ஒரு சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

இவை தவிர எனது தகப்பனாரும் எனது பெரிய தகப்பனாரும் நடத்திய உணவக வணிகம், எனது தந்தையாரும் எனது தமக்கையின் கணவர் நடத்திய மளிகை வணிகம், தந்தை நடத்திய ஜவ்வரிசி தொழில் பருத்தி வணிகம், கடலை வணிகம் எனப் பல்வேறு வணிக முறைகள் எனக்கு அறிமுகமாயின.
பட்டுக்கோட்டையார் எழுதிய வீட்டுக்குள்ளே விழுந்து கிடந்து வெம்பிவிடாதே என்ற பாடல் வரிகளை இளம் வயதிலேயே அடிக்கடி கேட்க நேர்ந்ததாலோ என்னவோ நான் எனது பள்ளிப்படிப்பு முடிக்கும்வரை மேற்கண்ட இடங்களில்தான் எனது பொழுதைக் கழித்தேன். 
பள்ளியில் படிப்பதோடு சரி. வீட்டில் அமர்ந்து நான் படித்த நாட்கள் வெகு அபூர்வம்தான். வீட்டில் நிலவிய கடுமையான வறுமைச்சூழல் காரணமாகப் படிப்பில் நாட்டமின்றிப் போனாலும் என்னுடைய சராசரிப் பள்ளி மதிப்பெண் 70 விழுக்காடாகும்.
இந்த அனுபவம்தான் வீட்டில் பழுதாகும் மின்விசிறிகளைக் கழற்றி மாட்டுதல், மின் சாதனப் பழுதுகளைச் சரி செய்தல், அயர்ன் பாக்ஸ் போன்றவற்றில் ஏற்படும் சிறிய குறைகளைச் சரி செய்தல் 
இருபத்தைந்தாண்டு கால இரு சக்கர வாகன வணிகத்தில் கற்றுக் கொண்ட அனுபவத்தால் அவற்றில் ஏற்படும் சிறு சிறு குறைகளைச் சரி செய்து கொள்ளல் போன்றவை என்னால் சாத்தியமாயிற்று.

வணிக வாழ்வில் நட்டமேற்பட்டு நான் வேலைக்குச் செல்லும் நிலை உருவானபோது நான் வணிகம் செய்தபோது கற்றுக்கொண்ட கணக்கியல் துறை கை கொடுத்தது. பின்னர் நாற்பத்து இரண்டு வயதில் கணிணி சுயமாகவே என்னைவிட இளையவர்களிடம் கேட்டறிந்து கற்றேன். டேலி எனும் கணிணிக் கணக்கைக் கையாளக் கற்றேன். தமிழ் ஆங்கில தட்டச்சு மற்றும் ஃபோட்டோ ஷாப் ஓன்று மட்டும் கணினியில் ஷார்ட்கட் தெரியாமல் கணினி மையம் சென்று பணம் கட்டி அரைகுறையாக கற்றது. பின்னர் ஷார்ட் கட் முறைகளை அவ்வப்போது இளைய சமுதாயம் துணையுடன் மேம்படுத்தி வருகிறேன்.

இரண்டு நபர்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் இருவருக்கும் மாதம் இரண்டாயிரத்து ஐநூறு சம்பளம் கொடுத்த எனக்கு 45 வயது எனக் காரணம் காட்டி கிடைத்த சம்பளத் தொகை இரண்டாயிரத்து ஐநூறுதான்.

நான் ஈரோடு சுமங்கலி ஸ்டோர்ஸில் ஸ்டேஷ்னரி விற்பனை வேலையில் காட்டிய திறமைகள் படிப்படியாக உயர்ந்து என்னை விட அதிக சம்பளம் வாங்கிய இளைய சமுதாயத்தினரை விட அதிக சம்பளம் பெறும் நிலையினை நான் உருவாக்கிக்கொள்ள மேற்கண்ட பயிற்சிகள்தான் அதிகளவில் உதவின.
நுகர் பொருள் வணிக மொத்த விற்பனை நிர்வாகம் எழுது பொருள்கள் விற்பனை
டிராக்டர் விற்பனை நிலைய அனுபவம் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு அனுபவம் ஈரோடு கனி மார்கெட்டில் ஜவுளி விற்பனை அனுபவம் ஆடிட்டர் அலுவலகத்தில்
Pan card எடுத்தல் GST வலைதளம் பதிவு ரெஜிஸ்டர் அலுவலர் சங்கங்கள் மற்றும் கூட்டு நிறுவனப் பதிவு சங்கங்கள் பதிவு வரவு செலவு கணக்கு பதிதல் கார் கம்பெனிகளில் இன்சூரன்ஸ் காசோலைகளை சேகரித்து வங்கியில் அவற்றை டெபாசிட் செய்து விட்டு உரிய நிறுவனத்திடம் தினசரி அறிக்கை தாக்கல் ஈரோட்டில் முதல் முதலாகப் பால் பண்ணையில் வேலைக்கு சேர்ந்து ஐஸ் கட்டி தயாரிப்பு பன்னீர் தயாரிப்பு  என என்னுடைய வேலைப்பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது என்னடா இவன் ஒரு இடத்தில் கூட நிலைத்து நிற்க மாட்டானா என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். 
வேலை செய்யும் நிறுவனங்களில் என்னுடைய உழைப்பையும் நேர்மையையும் புரிந்து கொள்ளாமல் கருத்து வேறுபாடு கொள்ளும் சக வேலை இளைய சமுதாயத்தின் வெறுப்பு அலைகள் காரணமாக அவ்வப்போது வேலையை விட்டு விலகி பேசாமல் தொழில் செய்து பிழைத்து விடலாம் என்று குறைந்த முதலீட்டில் தொழில் துவக்கி கரும்புவிற்பனை ஊறுகாய் தயாரிப்பு இனிப்பு தயாரித்தல், பூண்டு விற்பனை தேங்காய் விற்பனை கொப்பரை தேங்காய் தயாரிப்பு என என்னுடைய குறுகியகால தொழில்களின் பட்டியல் நீளும்

இப்போது மர வேலைப்பாடு கை வினைப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் துவக்கி கடுமையான சவால்களுக்கு இடையில் இந்த தொழிலை மேம்படுத்த முயற்சி செய்து  வங்கி கடன் மறுக்கப்படுகிறது வயதை காரணம் காட்டி. குறைந்த முதலீடு துவக்கிய வணிகம் மெல்ல வளரும்  முன்பே வேலையை விட்டு நின்ற கடுப்பில் வருமானம் போனது என்று குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பு மற்றும் முதலீட்டு பணம் வாடகை வீட்டுச் செலவுக்கு கரைந்து விடுவதால் தொழிலை மேம்படுத்த முடியாமல் போனது. இப்பொழுதும் இந்த தொழில் உலகை நாசப்படுத்தும் சுற்றுச்சூழல் கேடு குறைப்பதற்காக மக்களை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட போலியான கொரோனா பயம் ஒட்டுமொத்த நாட்டையும் முடக்கியதோடு மட்டுமன்றி என்னுடைய தொழிலையும் முடக்கிப் போட்டு கையிருப்பு முற்றிலும் கரைந்து போய் வீட்டு வாடகை கூட ஆறு மாதங்கள் தர முடியாமல் போனது வேறுவழியின்றி வேலை தேடத் துவங்கினேன் திண்டல் அருகே ஒரு புதிய நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பையும் ஈரோட்டில் மிகப்பிரபலமான ஜவுளி விற்பனை நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் செய்தித்தாளில் அறிந்து முதலில் திண்டல் சென்றேன். முருகன் என்னை உதயம் பார்க்க கிழக்கு நோக்கி திருப்பி அனுப்பினான். இங்கேயும் பல சவால்கள்

வெல்லப் பிறந்தவனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்

இன்று நம் தமிழ்க்குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே பொத்திப்பொத்தி வளர்க்கப்படுகின்றனர். படிப்பு முடிந்து வெளியுலகம் வந்தால் அவர்கள் சந்திக்க வேண்டிய இன்னல்கள் ஏராளம் ஏராளம்.
.
முடிந்தவரை நம் குழந்தைகளை வெளி அனுபவத்துடன் வளர்த்தால் எதிர்காலத்தில் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எவ்வித இடர்ப்பாடுகளையும் எக்காலத்திலும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பது எனது வாழ்க்கை அனுபவம் சொல்லிக்கொடுத்த பாடம் இது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!