எது சனநாயக இயக்கம்?

தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் இயக்கங்களுமே தங்களின் இயக்கங்கள் சனநாயக அடிப்படையில் இயங்குவதாகவும்,. 

தலைவர்கள் துவங்கி சாதாரணக் கிளைச் செயலர் வரை தங்களின் இயக்கங்களில் தேர்தல் வாயிலாகவே இயக்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன.

ஆனால் உண்மை நிலை இதற்கு மாறாகத்தான் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென மக்களுக்கு விளங்காமலில்லை.

பெரிய இயங்கம் துவங்கி மிகச் சிறிய இயக்கம் வரை தலைவர் முதலாக அதி முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்கள் 

அந்தந்த இயக்கம் துவங்கிய காலம் தொடங்கி இன்றுவரை தத்தம் பதவியில் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுதான் தொடர்கின்றனர்.

தமிழகத்தின் போதாத குறைக்கு இவர்களின் வாரிசுகளும் படிப்படியாக இந்த இயக்கங்களில் மெல்ல மெல்ல நுழைக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சியும் அசுரத்தனமாக வளர்ந்து 

தங்களின் பெற்றோர் வகித்த பதவிகளைத் தம் வயப்படுத்தி இயக்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் துடிக்கின்றனர்

இவர்களின் பதவிச்சண்டைகளால் தமிழகம் படும் பாடு உலகிற்கே தெரியும்.

ஆக எந்த இயக்கமும் தங்கள் இயக்கம் சனநாயக இயக்கம்தான் என மார் தட்டிச் சொல்ல முயற்சித்தாலும் உண்மை நிலை அதுவல்ல.

இங்கு நடப்பது கிட்டத்தட்ட அரசர் ஆட்சி முறைதாம். ஓவ்வொரு இயக்கத்திலும் மன்னர்களாக, இளவரசர்களாக, தளபதிகளாக, வலம் வராதவர்களைக் காண்பது அரிதினும் அரிது.

பணபலமும், அதிகார பலமும் கோலோச்சும் இவர்களைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கி வாழும் முறைதாம் இன்றும் உள்ளது.

அரசியலில் உள்ள இவர்களும் தங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள்தாம். 

பொது வாழ்க்கைக்கு வந்துள்ள இவர்கள் மக்களின் நலனுக்காகத்தான் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு மக்களுக்குப் பணிந்து நடந்து சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையும் 

நாம் மக்களாட்சித் தத்துவ உலகில் வாழ்கிறோம் என்பதுவும் கூட மக்களுக்கு ஏனோ விளங்கவில்லை.

இன்றுள்ள பெரும்பாலான அரசியல் இயக்கங்களில் தனிநபர் செல்வாக்கும், குடும்பச் செல்வாக்கும், பணபலச் செல்வாக்கும்தாம் ஆதிக்கம் செழுத்துகின்றன. 

ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கத்தைக் கடுமையாக விமரிசித்து வெறுப்பினைச் சம்பாதித்தவர்கள்கூட தங்களது இயக்கத்தில் கருத்து மாறுபடுதல், அல்லது தேர்தல் நேரங்களில் தமக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுதல் 

போன்றவற்றிற்காக இன்னொரு இயக்கத்திற்கு சர்வசாதாரணமாக வெட்கமின்றி மாறுவதும், மாற்று இயக்கத்தவரும் இவர் தங்களைக் கடுமையாக விமரிசித்தவர்தானே எனப் புறக்கணிக்காமல் 

இவரது செல்வாக்கையும் பணபலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு பதவி கொடுத்து கவுரவிப்பது போன்ற முரண்பாடான செயல்கள் இந்த நாட்டில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

உண்மையான சனநாயக அமைப்பில் சாதாரணமான, எளிமையான, வசதி வாய்ப்பற்ற, அதே சமயம் ஒழுக்கமும் நேர்மையும் மிக்க ஒரு சாதாரணத் தொண்டர் கூடத் 

தலைவர் பதவிக்கோ அல்லது வேறு ஏதேனுமொரு முக்கியமான பதவிக்கோ போட்டியிடவும், அப்படிப் போட்டியிட்டு வெற்றியும் பெற முடியுமென்றால் 

அதுதான் உண்மையான சனநாயக அமைப்பினைச் செயல்படுத்தும் இயக்கமாகத் திகழ முடியும்.

இது போன்ற அசாதாரணமான அமைப்புகள் தமிழகமெங்கும் உருவானால்தான் அரசியலில் ஆரோக்கியமும், நேர்மையும், வாய்மையும் உருவாக்க முடியும். 

ஐந்தாம் தமிழ்ச்சங்கம்தான் இனி உண்மையான சனநாயக இயக்கமாக இனி வரும்காலத்தில் தமிழகத்தில் தன்னிகரற்று விளங்கும்.

ஏனென்றால் இது தலைவர்கள் அற்ற பணபலமற்ற, பதவி ஆசையற்ற எளிமையான மக்கள் தொண்டர்கள் மட்டுமே குழுவாக இணைந்து செயல்படப்போகும் ஒரு

 புதுமையான தலைவர்கள் அற்ற தொண்டர்கள் மட்டுமே நிறைந்த முன் மாதிரி மக்கள் இயக்கம்.

நாங்கள் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட மாட்டோம்! இதுவே ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தில் இணைபவர்களின் ஒரே தாரக மந்திரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!