தர்மபுரி

தர்மபுரிப் பேருந்து எரிப்பு வழக்குச் சம்பவம்!

கொலைக் குற்றங்கள் பெரும்பாலும் இரு நபர்களுக்கிடையே ஏற்படும் சண்டையின்போது உணர்ச்சி வசப்படுதல் காரணமாகவே நிகழ்கின்றன! இது சம்பந்தப்பட்டவர்களைத் தூண்டிவிடும் பிரபஞ்சத்தில் நிலை கொண்டிருக்கும் தீய சக்திகளின் எண்ண அலைகள் இவர்களின் வெளி மனதை ஆக்கிரமித்தல், அல்லது இவர்களின் உறவுகள், அல்லது நட்பின் காரணமாக இருக்கலாம்!

இது போன்ற கணநேரச் சிந்தனைத் தடுமாற்றத்தில் நிகழும் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் மனம் திருந்தி வாழக்கூடியவையாக அமைய வேண்டும்!

பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கும் இக்குற்றம் ஏற்பட அமைந்த சூழல் நன்கு விளக்கப்பட்டு அவர்களும் குற்றவாளிக்கு எதிரான மனநிலையினைக் கைவிட்டு, கடுமையான தண்டனையைக் குற்றவாளிக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுமாறு செய்ய வேண்டும்!

திட்டமிட்ட கொலைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன்! இதுபோன்ற குற்றவாளிகளைத் தண்டிப்பது அவர்களின் தேகத்தை தண்டித்து அவர்களின் உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் நியாயமானதாகலாம்!

இதனால் அவர்களின் தேகத்திற்கு தண்டனை தரப்படுகிறதே தவிர அவர்களின் உயிருக்கு தண்டனை வழங்கப்படவில்லை! அவர்களின் கொலைவெறி உணர்வு தணியாமலே மரண தண்டனை வாயிலாக அவர்களின் உயிர் உடலை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்யப்படுவதால் அவர்களின் அடுத்த பிறவியும் இதே குணநலன்களுடனே அமையும்! இதனால் உலகில் தொடர்ந்து தீய உயிர்களின் ஆதிக்கமே தொடர நாம் வழி வகுப்பதாக அமைந்துவிடும்!

எனவே இத்தகைய குற்றவாளிகளை ஒரு மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் பணி செய்யுமாறு உத்தரவிட வேண்டும்! விபத்தாலோ அல்லது இவர்களைப் போன்ற சமூகக் குற்றவாளிகளின் செயல்களாலோ, கைகால்கள் இழந்து, கத்திக்குத்துப்பட்டு, வெட்டுப்பட்டு தீக்காயம்பட்டு வருகின்ற நோயாளிகள் படும் வேதனைகளைத் தினசரி அணுஅணுவாகக் கண்டு இவர்கள் மனம் கலங்கித்  துடிக்கவேண்டும்!

கல்நெஞ்சம் படைத்தவரையும் கரைய வைக்கக் கூடியதாக இத்தகு விசித்திர தண்டனையை அனுபவித்து அவர்கள் தங்கள் செயலுக்கு மனம் வருந்தி திருந்தி வாழும் நிலை உருவாவதுடன் அவர்களுக்குரிய தண்டனைக் காலம் முழுவதும் இதுபோன்ற நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து கழிக்கும்படிச் செய்வதே சிறந்த வழி முறையாகவும் அவர்கள் செய்த பாவத்திற்குப் பரிகாரமாகவும் அமையும்!

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கும் இத்தகையதுதான்! ஊழல் செய்து விட்டு அடிக்கடி ஆட்சிமாறி மாறி மாறி சிறை தண்டனை பெறும் இன்றைய அரசியல்வாதிகளால் வளர்த்து விடப்பட்ட வன்முறை குணத்திற்கு அடிமையானவர்கள்தான் தூக்குத்தண்டனை பெற்று இன்று கருணை மனுவிற்கு ஏங்கி நிற்கும் அவலத்திற்கு உட்பட்டு தங்களின் குடும்ப உறவுகளையும் தவிக்கவிட்டு நிற்கும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளனர்!

தங்கள் அரசியல் தலைவியின் கைதிற்கு தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதாக நினைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட இதுபோன்ற சாதாரணத் தொண்டர்கள் உட்பட உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் ஆழ்மன உணர்வுகளுக்கு எப்பொழுதும் ஆட்படாதவர்களாகத்தான் விளங்கி வருகின்றனர்! உலகில் அமைதியையும் சமாதானத்தையும் குலைப்பதற்காகச் செயல்பட்டுவரும் தீய பிரபஞ்ச சக்திகளின் எண்ணங்கள் உலகெங்கும் நிறைந்திருக்கின்றன!
அதே சமயம் உலகில் அமைதியையும் அகிம்சையையும் செயல்படுத்தி உலகை அமைதிப் பூங்கவாக விளங்க வைக்கத் துடிக்கும் நல்ல சக்திகளின் எண்ணங்களும் இதுபோன்றே ஏராளமாக உலகெங்கும் நிறைந்திருக்கின்றன!

தர்மபுரிப் பேருந்து எரிப்பு சம்பவம் இது போன்ற தீய சக்திகளின் தூண்டல்கள் காரணமாக நிகழ்ந்தவைதாம். குற்றவாளிகள் ஒரு நிமிடம் தங்களின் செயல் நியாயமானதுதானா. இதன் பின் விளைவுகள் எத்தகையதாக இருக்கும், பேருந்தில் அகப்பட்டுத் தவிக்கும் மாணவியரில் தங்கள் உறவு எவரேனும் இருக்க நேரிட்டால் அவர்களைக் கொன்ற பாவமும் பழியும் தங்களைத்தானே வந்தடையும்

தாம் குற்றவாளிகள் என உலகோர் அறிய நேரிட்டு, தாம் கைது செய்யப்பட்டால் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நிலை கேள்விக்குறியாகிவிடுமே, கொலைகாரக் குடும்பம் என்ற அவப்பெயர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டு அவர்கள் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க இயலாத நிலை ஏற்படுமே என்பன போன்ற சிந்தனைகளைத் தம்முள் ஓட அனுமதித்திருந்தால் நிச்சயம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இன்று கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு நிராகரிப்பட்டு உச்ச வாய்மை மன்றத்தில் தங்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என கெஞ்சிக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.

எவர்களுக்காக இவர்கள் உணர்ச்சிவயப்பட்டு இந்த படுபாதகச்செயல்களில் ஈடுபட்டார்களோ அவர்கள் தங்களின் அரசியல் வாழ்க்கையை வெகு உல்லாசமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களோ கடும் சிறைவாசத்தில் தங்களின் இளமையினைத் தொலைத்துவிட்டு, வளர்ந்து நிற்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகளுடன் தங்களின் இறுதி நாளை எண்ணி எண்ணி மனம் கலங்கித் தவிக்கின்றனர்.

பேருந்து எரிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்களின் வெறுப்பு மன நிலையினை இந்த வழக்கிற்கு எடுத்துக்கொண்ட நீண்ட வருடங்கள் ஓரளவு குறைத்திருக்க வாய்ப்பிருக்கலாம். எனினும் அவர்களும் மனிதர்கள்தானே! தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிச் சராசரி மனிதர்கள் போலத்தானே ஆத்திரம் கொண்டிருப்பர்.

எனினும் அவர்களுக்குள்ளும் தாய்மை உணர்வு இன்னும் தொலையாதிருக்கும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்!

இது வள்ளுவம் வாக்கு! பேருந்து எரிப்பில் உயிரிழந்த மாணவியரின் ஊழ்வினைதாம் எத்தனையோ வாகனங்கள் அங்கு சென்றிருக்க இவர்களின் வாகனம் மட்டும் தீயிடப்படக் காரணமாயிற்றோ என்ற அச்சமும் வள்ளுவம் சுட்டும் ஊழ்வினையின்படி எழுகிறது.

மாணவியரின் பெற்றோர் மனது வைத்து குற்றவாளிகளின் பிள்ளைகளாவது தங்களின் மன்னிப்பு குணத்தால் மறுவாழ்வு பெறட்டும் என விட்டுக்கொடுத்து அவர்களின் வாழ்வு தொடர வழி காணச் செய்யலாம்.

வாய்மை மன்ற வளாகத்தில் குற்றவாளிகளின் பிள்ளைகள் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்களைச் சந்தித்து தங்களின் தந்தையர்களின் செயலை மன்னித்து தங்களின் வாழ்வு தொடர உதவுங்கள் எனக் கண்ணீர்விட்டு மன்றாடினால் ஒரு வேளை மாணவியரின் பெற்றோர்கள் தங்களின் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடும்.

நம் தமிழருக்குள்ள தலை சிறந்த குணங்களில் தலையாயது இரக்கமும் மன்னிக்கும் குணமும்தாம். மாணவியரின் பெற்றோர்களுக்குள் உள்ள தாய்மை உணர்வு ஒருவேளை இவர்களின் செயலை மன்னித்து இவர்களின் மரண தண்டனையைக் குறைத்து மாற்று தண்டனை கொடுக்க வாய்மை மன்றத்தில் ஒப்புதல் தரலாம்.

அப்படி நிகழ்ந்தால்

“தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுன்டு!

அமிழ்தம் அவர்தம் மொழியாகும்
அன்பே அவர்தம் வழியாகும்”

என்ற கவியின் வாக்கு இந்தப்புவி உள்ளவரை பிரபஞ்சமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்குமென்பதில்  எமக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!