செவ்வாய், 22 ஏப்ரல், 2014

பாரம்பரிய சித்த மருத்துவம்

Leave a Comment
                    பாரம்பரிய சித்த மருத்துவம்
நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கும் ஆங்கில வழி மருத்துவத்திற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நம்முடைய போதாத காலம் ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் கால் பதித்து அவர்களுடய மருத்துவ முறைக்குள் நம்மைப் புகுத்திவிட்டனர்.

ஆங்கில வைத்தியம் அசைவ உணவு வகைகளை மனிதர்களுக்குப் பரிந்துரைக்கின்றது. மாறாக நம் சித்த வைத்திய முறையோ அசைவ உணவு வகைகள் நஞ்சுக்கு இணையானதென வலியுறுத்தி அவைகளைத் தவிர்க்;குமாறு அறிவுறுத்துகிறது.

வள்ளுவச் சித்தரும் உயிர்களைக் கொன்று தின்றல் பாவம் என்றும் பிற உயிர்களைக் கொல்லாதவர்களை அவை கைகூப்பித் தொழும் எனவும் இயம்பியுள்ளார்.

அசைவ உணவுப் பழக்கத்தில் திலைக்கும் நம் மக்கள் இந்தப் பழக்கத்தைக் தவிர்க்க இயலாத காரணத்திற்காகவே நம் சித்த மருத்துவ முறையைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர்.

மேலும் நம் பாரம்பரிய சித்த மருத்துவம் பாரம்பரியக் குடும்ப மருத்துவம் என்ற முறையில் தயாரிப்பு முறைகளை இரகசியமாக்கி சித்த மருத்துவத் துறையே வளர வாய்ப்பின்றித் தள்ளாடுகிறது.

வெள்ளையரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நம்மவரும் சித்த மருத்துவ முறையை ஆதரிக்காமல் ஊழல் செய்வதற்கெனவே ஆங்கில வழி மருத்துவமனைகளையும் மருத்துவக் கல்லூரிகளையும்தான் ஏராளமாகத் திறந்தனரே தவிர சித்த மருத்துவ மேன்மையை உலகறியச் செய்ய முன்வரவே இல்லை.

பணத்திற்காக அலையும் ஒரு சில தவறான மருத்துவப் பேர்வழிகளால் சித்த மருத்துவம் என்றாலே மக்கள் முகம் சுழிக்கும் நிலையும் இன்று உள்ளது.

ஆங்கில மருத்துவம் பக்க விளைவுகள் உடையது. நம் சித்த மருத்துவமோ எந்தவிதமான பக்க விளைவுகளும் அற்றது.

ஆங்கிலேயர் இந்த மண்ணில் கால் பதித்த சில நூற்றாண்டுகளில் நாம் கிட்டத்தட்ட ஆங்கிலேயர் பாணிக்கே மாறிவிட்டோம் என்பதில் எவருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

எனினும் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை நாம் தவிர்ப்பது மட்டுமல்ல நம் தமிழகத்தில் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கும் மூலிகை வளங்களை வீணடித்து அவைகளைப் பொருளாதார வளமாக மாற்றாமல் மூடத்தன ஆங்கில மோகத்தில் சிக்கித் தவிக்கிறோம் என்பதுதான் எம்முள் வேதனையளிக்கிறது.

தமிழகமெங்கும் பிரபலமான மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதுவும்; அதைவிட அதிகளவில் மருந்து விற்பனைக் கடைகளில் வரிசை கட்டி மருந்து வாங்கும் கூட்டங்களைப் பார்க்கும்போது எதையோ இழந்தது போன்ற வேதனை எழுகிறது.

அதைவிடக் கொடுமை மருந்து வணிகரிடம் தங்கள் நோயை விவரித்து அவர் தரும் மருந்தினை வாங்குவதும் தாங்களாகவே குறிப்பிட்ட சில மருந்துகளை நிவாரணம் தேவைப்படும்போது தங்களின் நோயைக் குணப்படுத்திக்கொள்ள தங்கள் இல்லங்களில் வாங்கி வைத்துப் பயன்படுத்துவதை நாம் சர்வ சாதாரணமாக இப்பொழுது காண முடிகிறது.

இதைவிடக் கொடுமை தமிழராகப் பிறந்து ஆங்கில வழி மருத்துவம் கற்றவர்கள் சித்த மருத்துவ மருந்துகளைத் துச்சமாக மதிப்பதும் தங்களின் பணி நேரத்தைச் சித்த மருத்துவ விற்பனைப் பிரதிநிதிகள் வீணடிப்பதை அனுமதியோம் எனச் சுவற்றில் எழுதி வைத்துத் தவிர்ப்பதையும்கூடச் சில இடங்களில் கண்டுள்ளோம்.

எங்கள் சித்த மருத்துவ ஆசான் சித்தக தவசிகளார் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் நான் கிட்டத்தட்ட ஆங்கில வழி மருத்துவத்திலிருந்து விலகிச் சித்த மருத்துவ வழிக்;கு மாறிவிட்டேன். பதினைந்து ஆண்டுகளாக என்னை வாதித்த தூசு ஒவ்வாமை மற்றும் பனி ஒவ்வாமைத் தொல்லையிலிருந்து விடுபட்டு இன்று 52 வயதாகும் நிலையிலும் நிம்மதியாக வாழ்வதற்கு நம் சித்த மருத்துவம்தான் காரணமாயிற்று என்பதை என்னால் உறுதிபட உரைக்க முடியும்.

அது மற்றுமன்றி அசைவ உணவுப் பழக்கத்தை விட்டு விலகியும் சித்த மருத்துவம் வலியுறுத்தும் சிலவகையான உணவு வகைகளைத் தவிர்த்ததும்; நம் தமிழினம் மறந்திருந்த யோகப் பயிற்சியினை அவ்வப்பொழுது மேற்கொள்வதும் உடல் ஆரோக்கியம் பெற வழி காட்டியது.

சென்ற வாரம் கூட அதிக உடல் சூடு காரணமாகவும் தொடர்ச்சியாக கணிணியில் ஆறு மணி நேரம் வேலை செய்த காரணத்தால் எனது தலையில் நீர் கோர்த்துக்கொண்டு சளி சேர்ந்து கடுமையான தலைவலி உருவானது.

இந்த வலியோடு எங்கள் ஊரில் நடைபெற இருந்த திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றேன். அங்கு சென்றவுடன் தலைவலி இன்னும் கடுமையானதுடன் வாந்தி உணர்வும் ஏற்பட்டது. எனது சகோதரியின் கணவர் ஆங்கில மருந்தினைப் பரிந்துரைக்க நானோ அவரிடம் சித்த மருத்துவ மகத்துவத்தை எடுத்துரைத்து நமது பாரம்பரிய மருந்தான கொம்பு மஞ்சளை அருகிலிருந்த கடையில் வாங்கி வரச் செய்து அதனைத் தீயில் வாட்டி அதிலிருந்து வரும் புகையினைச் சுவாசித்தேன்.

சிறிது நேரத்தில் தலையில் சேர்ந்திருந்த சளி வெளியேறத் துவங்கியது.
இலேசாகத் தலையை உயர்த்தி தலையில் சேர்ந்திருந்த சளியை மெல்ல உறிஞ்சி வெளியே துப்பத் துவங்கினேன். கால் மணி நேரத்திற்குள் எனது தலைவலி குறைந்து வாந்தி உணர்வு குறைந்தது. இரவு உணவை மட்டும் அன்று தவிர்த்து விட்டு நிம்மதியாகப் படுத்து உறங்கினேன்.

காலை எழுந்தவுடன் எவ்வித பழைய நோய் அறிகுறியுமின்றி வழக்கம் போல வேலைக்குப் புறப்பட்டு விட்டேன். இருபது வயது இளைஞர்கள் கூட இன்று சாதாரணத் தலைவலியென்றால் பணிக்குச் செல்லாமல் விடுப்பு எடுக்கும் வழக்கம் காண்கிறோம். 

இரவில் மட்டுமே வரும் கடுமையான காய்ச்சலோடு கூட நான் இந்த ஆண்டு பனிக்காலத்தில் வரும் வியாதியைச் சித்த மருத்துவத்தின் துணையோடு வென்று விடுப்பு எடுக்காமல் பணிக்குச் சென்றேன் என்பதையும் பெருமையுடன் என்னால் உலகிற்கு எழுதி விளக்க முடியும்.

நம்முடைய சமையல் அறையிலேயே இருக்கும் எத்தனையோ மூலிகை மருத்துவப் பொருட்களை அவற்றின் மருத்துவ குணம் அறிந்திருந்தும் நாம் பயன் படுத்தத் தவறிவிட்டோம் என்பதுவும் ஒரு வேதனையான செய்திதான்.

வேனிற் காலத்தில் எழும் கட்டிகளை அவை எழும்பும் நிலையிலேயே ஒரு பூண்டின் பகுதி எடுத்து அதை நசுக்கி அதிலிருந்து வரும் சாற்றை கட்டியின் மேல் தடவினால் அடுத்த நாள் அது ஆரம்ப நிலையில் இருந்தால் அப்படியே அமிழ்ந்து விடும். முற்றிய நிலையிலிருந்தால் பழுத்து உடைந்துவிடும்.

இதே போன்று இஞ்சிச்சாற்றினைத் தேனுடன் கலந்து காலையில் சாப்பிட்டால் கடுமையான நெஞ்சுச்சளி விலகிவிடும். வெறும் வயிற்றில் இஞ்சிச்சாற்றினை அப்படியேயும் குடிக்கலாம்.

இரவில் கடுமையான இருமல் ஏற்பட்டு உறங்க இயலாமல் தவித்தால் இரண்டு மிளகினை எடுத்து பல்லில் கடித்து அந்தச் சாற்றினை உட்கொண்டால் சிறிது நேரத்தில் இருமல் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக உறங்கலாம். இந்த சிறிய வைத்தியத்தை நானே சில சமயங்களில் சமையலறைக்கு எழுந்து சென்று பயன்படுத்த சோம்பல்பட்டு சில மணி நேரங்கள் உறக்கமின்றித் தவித்திருக்கிறேன்.

வேனிற்கால உடல் சூட்டினைத் தவிர்க்க சிறிது சீரகத்தை நம்முடைய தண்ணீர் பாட்டிலில் போட்டு குடித்தால் உடல் சூடு குறையும்.

நம் வீட்டிலேயே மருந்தகம் வைத்துக்கொண்டு ஆங்கில வைத்தியத்திற்குச் செலவழிப்பதும்; பக்க விளைவுகள் உள்ளதென அறிந்திருந்தும் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்துவதும் தமிழராகப் பிறந்த நாமே நம்முடைய மருத்துவ முறையைத் தவிர்ப்பதும் ஏற்புடையதல்ல.

அற்புதமான சித்தவைத்திய முறை தமிழகமெங்கும் பரவ வேண்டும். மருத்துவராவேன் எனக்கூறும் இளம் சிறார்கள்கூட நான் ஒரு மிகச்சிறந்த சித்த மருத்துவராவேன் எனக் கூறும் காலம் வரவேண்டும். 

தமிழகமெங்கும் சித்த மருத்துவத் தயாரிப்பு விற்பனை மருந்தகங்கள் பெருக வேண்டும்.

தமிழகத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் மூலிகை வளங்கள் இந்த பாரத தேசம் முழுவதும் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள மக்கள் தேடி வந்து பயன்படுத்தும் விதமாக அபரிமிதமான சித்த மருத்துவ உற்பத்தி மையங்கள் தமிழகத்தில் ஏராளமாக உருவாக வேண்டும்.

இது என்னுடைய முதன்மையான தமிழ்க்கனவு. இந்த கனவு நனவாகத் தமிழகத்தி;ல் சித்தர்களின் தலைவனாம் முருகனின் வழிகாட்டுதலோடு கூடிய ஐந்தாம் தமிழ்ச்சங்கம் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். 

ஏராளமான தமிழக இளைஞர்கள் இந்தச் சங்கத்தில் இணைய வேண்டும். இணையத்தில் சாதாரணமாகத் துவங்கப்பட்ட இந்த ஐந்தாம் தமிழ்ச்சங்கம் உலகலாவிய அளவில் புகழ்பெற வேண்டும்.

இதுதான் பிறந்த இந்தத் தமிழ் மண்ணுக்கு நான் ஆற்றவேண்டிய முதற்கடமை.