உலகத்தரக் கிராமச் சாலைகள் நமக்கு நாமே திட்டத்தில்!

உலகத்தரக் கிராமச் சாலைகள் நமக்கு நாமே திட்டத்தில்!

இன்றுள்ள சாலைகளைப் பற்றி நான் எழுதி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை! அவற்றின் தரத்திற்கு நான் உத்தரவாதம் தர முடியாது!

ஆனால் நாம் உருவாக்க நினைக்கும் சாலைகளுக்கு உலகத்தரச் சான்றிதழ் கிடைக்காவிட்டாலும் நம் தமிழக மக்கள் கட்டாயம் சான்று கொடுப்பர்!

தமிழக மக்கள் கட்டை வண்டிப் பயணம் திரும்ப வந்தால் எந்தளவிற்கு சுகப்படுவார்கள் என்பதை நான் நன்கறிவேன்! அதிலுள்ள சுகமும் அனுபவமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது! அனுபவித்தால்தான் உணர முடியும்!

மாறிவிட்ட இன்றைய வாழ்வியலில் நான் நமது மக்களை திரும்ப அந்த சூழலுக்கு மாற்றவும் முடியாது! ஆனாலும் நான் அவர்களின் இன்றைய இயந்திர வாகனப் பயணத்தை முற்றிலும் சுகமாக்க முடியுமென உறுதியாக நம்புகிறேன்!

இன்று புதிதாக உருவாகி வரும் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் நெருக்கமான உயர்ந்து வளர்ந்த அசோக மரங்கள்! சாலையின் நடுவிலும் உயர்ந்து வளர்ந்த நிலையில் அசோக மரங்கள்! செல்லும் வழியெங்கும் கண்ணுக்குப் பசுமையாக இதே காட்சிகள்! காலையிலும் மாலையிலும் இம்மரங்களில் அமர்ந்து இனிமையாகச் சப்தமிடும் பறவைகள்!

அத்துடன் பயணக் களைப்பே தெரியாத உலகத்தரச் சாலைகள்! கற்பனையே வெகு சுகமானதென்றால் நனவு எவ்வளவு சுகமானதாக இருக்கும்!

சேலம் மாவட்டம் சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு வரை நான் வெள்ளையர்கள் போட்ட சாலையில் ஒரு காலத்தில் பயணித்திருக்கிறேன்! முழுக்க முழுக்க கான்கிரீட் தளத்தினால் ஆன சாலை அது! இருநூறு ஆண்டுகள் நம் தேசத்தை ஆண்ட வெள்ளையர்களால்  போடப்பட்டிருந்த அந்தச் சாலையின் தரத்தினையும் அதில் அலுங்காமல்; குலுங்காமல் சில ஆண்டுகள் இருசக்கர வாகனத்தில் பயணித்ததையும் இன்று வரை என்னால் மறக்க இயலாது!

அதே தரத்திற்குச் சற்றும் குறையாத சாலைகளை நாம் உருவாக்க முடியும்! இந்தச் சாலைகளை இன்றுள்ளது போல ஆண்டிற்குப் பல முறை பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை!
சாலை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்! நாம் அன்றாடச் செய்தித்தாள்களில் இந்தச் செய்திகளை அடிக்கடி படிப்பதுண்டு!

குண்டும் குழியுமான சாலைகளில் நாற்று நற்று ஏர் கொண்டு உழுது மக்கள் வினோத போராட்டம்! சாலைகளின் இலட்சணத்தை ஆட்சியாளர்களுக்கு இடித்துரைக்க இப்படியெல்லாம் போராடும் மக்கள்! இது போன்ற கிராம மக்களின் சாலைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நான் ஒரு எளிய வழி கூற முடியும்!

முடியாதென்பவர்களுக்கு இது முடியாததுதான்! சற்று முயன்றுதான் பார்ப்போமே என்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமானதாக முடியும்!

சாலை வசதி கோரிப் போராடித் தோற்ற கிராமப்புற இளைஞர்களே! நீங்கள் உங்கள் கிராமத்தை இன்று முதல் சற்று உன்னிப்பாகக் கவனிக்கத் துவங்குங்கள்! அப்பொழுதுதான் நான் கூறுகின்ற இந்த எளிய வழியை நீங்களே ஒத்துக் கொண்டு எனது இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தத் துவங்கி அதில் வெற்றியும் காண்பீர்கள்!

உங்களின் பிரதான சாலையிலிருந்து உங்கள் கிராமம் வரை ஏன் உங்கள் வீட்டைச் சுற்றியும்கூட பல வடிவங்களில் பயன்பாடின்றிக் கிடக்கும் ஏராளமான கற்களைக் காண முடியும்! அவற்றில் பல உங்களின் பாட்டனார் காலத்திலிருந்து கூடப் பயனின்றி இருந்து வந்திருக்கலாம்!

பயனற்ற அந்தக் கற்களை இப்பொழுது முதல் நீங்கள் அவற்றை உங்களின் விடுமுறை நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து உங்களுக்குச் சாலை வசதி தேவைப்படும் இடத்திலிருந்து உங்கள் கிராமம் வரை சாலை ஓரங்களில் சேமித்து வரத் துவங்குங்கள்! சில நாட்கள் சென்ற பின் நீங்களே வியக்கும் வண்ணம் அந்தக் கற்களைக் கொண்டே ஒரு சாலை போடுமளவிற்கு பயன்பாடுடைய ஏராளமான கற்கள் குவிந்து விடும்!

வருடாவருடம் உங்களின் கிராமத்தில் நடக்கும்; திருவிழாவிற்குச் செலவிடும் தொகையை இந்த  வருடம் மட்டும் சற்று எளிமையாகக் கொண்டாடுவதென முடிவு செய்து சிக்கனப்படுத்திச் சேமித்து அந்தத் தொகையை உங்களின் கிராமச் சாலையின் நிரந்தரத் தீர்வுக்கென ஒதுக்குங்கள்!

உங்களின் கிராமத்தில் பிறந்து எத்தனையோ பேர்கள் வெளியிடங்களுக்குச் சென்று நல்ல வாழ்க்கையில் இருப்பர்! எனினும் தாம் பிறந்த இந்த மண்ணை மறவாத அவர்கள் கட்டாயம் தங்கள் கிராமத்திற்கு ஆண்டிற்கொரு முறை இந்தத் திருவிழாவிற்கெனவே வருவர்! அவர்களிடம் நீங்கள் சேகரித்து வைத்துள்ள கற்களைக் காட்டி உங்கள் கிராமத்திற்கு நிரந்தரச் சாலை ஏற்படுத்த நீங்கள் காட்டுகின்ற ஆர்வத்தை வெளிப்படுத்தி தங்களால் முடிந்த பண உதவியைக் கேளுங்கள்!

எத்தனை சிரமத்திலிருந்தாலும் அவர்கள் நிச்சயம் உங்களுக்காக இல்லாவிட்டாலும் தங்களின் பிறந்த மண்ணுக்காகவேனும் உதவுவார்கள்! நீங்களும் உங்கள் பங்குக்கு உங்களால் முடிந்த தொகையினை உங்களின் கிராமத்திற்காக இல்லையில்லை உங்களின் அன்றாடத் துயரத்திற்கு நிரந்தரத் தீர்வாக நினைத்து ஒதுக்குங்கள்!

மேலும் உங்கள் ஊருக்கு தினசரி தவறாமல் வரும் வணிக ரீதியான வாகன உரிமையாளர்களிடம் உங்களின் சிரமத்தையும், அவர்களின் வாகனத்திற்கு உள்ள சிரமத்தையும் எடுத்துரைத்து ஒரு சிறு தொகையை சாலை வரியாகக் கேட்டுப் பெறுங்கள்! இப்பொழுது நீங்களே நினைத்துப் பார்க்காத தொகை உங்களிடம் சேர்ந்திருக்கும்!

இந்தத் தொகையில் கல் உடைக்கும் தொழிலாளர்களைக் கொண்டு இந்தக் கற்களை சாலையில் பாவுமளவிற்கு பட்டையாக, சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ உடைத்து தளம் போடுவது போன்று சிறந்த பொறியாளர்களைக் கொண்டு சாலையைச் சமன் செய்து பரவி சிமெண்ட் கொண்டு; பூசி விடுங்கள்! இப்பொழுது நூறாண்டுகள் உத்தரவாதம் தர முடிகின்ற உலகத்தரச் சாலைகள் உங்கள் கிராமத்தில் தயார்!

சாலைகளின் இருபக்கங்களிலும் உயர்ந்து வளரும் வேப்ப மரங்களை வளர்க்கத் துவங்குங்கள்! அவை வளர்ந்து உயர்ந்தோங்கி அந்தச் சாலையில் பயணித்துக் கிடைக்கின்ற சுகமான உங்களின் குளிர்ந்த அனுபவத்தைக் கட்டாயம் எனக்கு எழுதுங்கள்!

தேசிய நெடுஞ்சாலை துவங்கி கிராமச் சாலைகள் வரை இதுவரை கற்களை உடைத்துச் சிறு சல்லிகளாக்கி பின்னர் அவற்றுடன் தார் கலந்துதான் போடப்பட்டு வருகின்றன!

இத்தகு சாலைகள் நீண்ட நாட்களுக்கு உழைக்காதென்பது நமது ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும்! மழை காலங்களில் இவற்றின் இறுக்கம் தளர்ந்து பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிடும்! வெயில் காலத்திலோ அதிகச் சூடு காரணமாக தார் இளகி வாகனங்கள் அதிகமாக பிரேக் செய்ய நேரிடும் இடங்களில் தார் விலகி மேடும் பள்ளமுமாக மாறிவிடும்!

சில இடங்களில் பழைய சாலைகளின் மேலேயே புதிய சாலைகளைப் போடுவர்! அது போன்ற இடங்களிலும் வாகனங்கள் பிரேக் போடும்போது புதிய சாலைகள் இடம் பெயர்ந்து சாலையில் குழிகள் ஏற்படும்!

இப்படி இருந்தால்தான் இன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் வண்டியே ஓட முடியுமாம்! எனது நண்பர் வேதனையுடன் சொன்ன வார்த்தைகள்!

இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு கற்களை உடைத்து சல்லிகளாக்கி தார் கலந்து சாலை அமைப்பதை விடுத்து பயனற்று கிடந்து கிடைத்த கற்களை சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ உருவகப்படுத்தி அவற்றை சமன் செய்யப்பட்ட சாலைகளில் மேற்கண்டவாறு பரவி சிமெண்ட் கொண்டு பூசி விட்டால் சாலைகள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் நிலை உருவாகும்!

மாதத்திற்கு ஒரு முறை சாலைகள் போடுவதற்கும் பழுது பார்ப்பதற்குமான செலவினங்கள் குறையும்! குறிப்பாக அடிக்கடி சாலை போடுவதற்கென வெகு வேகமாகக் குறைந்து வரும் நம் தேசத்தின் மலைசார்ந்த கனிமமான கற்பாறைகள் சூறையாடப்படுவது தடுக்கப்படுவதுடன், குண்டும் குழியுமான சாலைகளில் பயணித்த மக்களின் துயரப் பயணமும் ஒரு முடிவிற்கு வரும்!

சரியான திட்டமிடல் இருந்து விட்டால் சற்று அதிகச் செலவு பிடித்தாலும் இது சாத்தியமே! இன்றைய ஆட்சியாளர்கள் என்றைக்கும் முயற்சி செய்யாததை எமது ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தில் இணையும் இளைஞர்கள் என்றாவது சாதித்துக் காட்டுவது சர்வ நிச்சயம்! சாதிக்கத் தயாராகும் இளைஞர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!