தவறான வணிகக் கல்வி முறை இனியும் தொடர வேண்டுமா?

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்தில் ஆங்காங்கே மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வருவது வேதனையளிப்பதாக உள்ளது.

இது போன்ற துயர முடிவுகளை மாணவ சமுதாயம் எடுப்பதற்கு முதற்காரணமே அவர்தம் பெற்றோர்தாம். தங்களின் குழந்தைகளின் திறமை எவ்வளவு என்பதை அறியாமல் அவர்களை நன்கு படிக்கும் மற்ற மாணவ மாணவியருடன் ஒப்பிட்டு அவர்களை மனதளவில் காயப்படுத்துகின்றனர்.
இதுவே இது போன்ற தவறான முடிவுகளுக்கு முதன்மையான காரணமாகிவிடுகிறது.

இரண்டாவது ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் நன்கு படிப்பவர்களைப் பாராட்டுவதும், படிக்க இயலாதவர்களை நீங்களெல்லாம் மாடு மேய்க்கத்தான் இலாயக்கு எனத் திட்டுவதும் இன்று வரை தொடரும் நிகழ்வுகள்தாம்.
நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோது ஒரு விசித்திரமான நிகழ்வுகள் எங்கள் பள்ளியில் நடைபெற்றது.

அதாவது ஆறாம் வகுப்பில் படித்து தேர்ச்சியடையும் மாணவ மாணவியரின் மதிப்பெண் தர வரிசைக்கேற்ப ஏழாம் வகுப்பில் சேர்த்துவிடுவர். உதாரணத்திற்கு முதல் மதிப்பெண் பெறுபவர் அ வகுப்பிலும், இரண்டாம் மதிப்பெண் பெறுபவர் ஆ வகுப்பிலும் மூன்றாம் மதிப்பெண் பெறுபவர் இ வகுப்பிலும் என இது போல எவ்வளவு வகுப்புகள் உள்ளதோ அந்த அளவிற்கு இதே வரிசையில் பிரித்து அந்தந்த வகுப்பில் சேர்ப்பர்.

ஏழாம் வகுப்பு ஆ பிரிவில் அப்பொழுது ஆசிரியராக இருந்தவர் கடுமையாக அடிப்பவர் என அப்பொழுது மாணவர்களிடம் ஒரு பயம் நிலவியது. எனவே நான் எனது ஆறாம் வகுப்பு தேர்வு முடிவினைப் பயந்தவாறே எதிர்பார்த்தேன்.

ஆறாம் வகுப்பில் நான் மாதாந்திரத் தேர்வுகளில் முதலிடமும் இரண்டாமிடமும் சில நேரங்களில் மூன்றாமிடமும் பெற்று வந்திருந்தேன்.
எனவே நான் எனது மதிப்பெண் இரண்டாமிடத்திற்கு வந்துவிடக்கூடாது என மனதுக்குள் வேண்டிக்கொள்வேன். என்னுடைய போதாத காலம் நான் இரண்டாமிடம் பெற்றுவிட என்னை ஏழாம் வகுப்பு ஆ பிரிவில் சேர்த்துவிட்டனர்.

ஆசிரியர் கடுமையானவர் என்பதை விட அவரிடமிருந்த பயமே என்னைச் சரியாகப் படிக்க இயலாமல் செய்ய ஏழாம் வகுப்பின் மாதாந்திரத் தேர்வுகளில் எனது மதிப்பெண் சிகப்புக் கோடிட்டவாறு அமைந்தது. எப்படியோ அந்த வருடத் தேர்வில் நான் தேர்வாகுமாறு படித்து தப்பித்துக்கொண்டேன்.

அதன் பிறகு பள்ளி இறுதிப்படிப்பை முடிக்கும்வரை மற்ற சிறந்த ஆசிரியர்கள் துணையுடன் எனது மதிப்பெண்கள் சராசரியாக 70 விழுக்காட்டில் இருந்தது. இத்தனைக்கும் நான் இன்றிருப்பது போல சிறப்பு வகுப்புகளுக்கோ அல்லது வீட்டிலோ விழுந்து விழுந்து படித்ததில்லை. பள்ளியில் கற்பதோடு சரி. என்னுடைய குடும்பம் அன்றிருந்த வறுமையான சூழலும் எனது படிப்பு சிறப்பாக அமையாததற்கு காரணமாகிற்று.

சமீபத்தில்கூட எனது நண்பர் நடத்தும் ஆங்கில வழிக்கல்விக்கூடத்தின் தலைமை ஆசிரியராக இருந்தவர் எனது நண்பரைச் சந்திக்க வரும்போது என்னிடம் உரையாடும்போது   தான் கடுமையாக அடித்துதான் மாணவர்களை நல்வழிப்படுத்துவேன் என வாதாடினார். நான் அவரது செயல் தவறானதென விளக்கியும் அவர் அதனை ஏற்காமல் தான் செய்வதுதான் நியாயமென்றார். இத்தகு மனநிலையில் உள்ளவர் அந்தப் பள்ளியில் சில மாதங்களே நீடித்து வேறு ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தவுடன் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தியை நான் கேட்க நேர்ந்தது.

எனவே ஆசிரியர்களின் இது போன்ற செயல்களே மாணவச் செல்வங்கள் தவறான முடிவுக்கும் காரணமாகிறது. நான் ஒட்டு மொத்த ஆசிரிய சமுதாயத்தையும் குறை சொல்ல வரவில்லை. ஒரு சில களைகளைத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

இது மட்டும் மாணவர்களின் இது போன்ற துயரங்களுக்குக் காரணமல்ல. பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக வேலைக்கே வருவதில்லை. அதோடு மட்டுமன்றி அவர்கள் சொந்தமாக வேறு தொழிலிலும் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் பாடம் நடத்தும் நேரத்தில்கூட தான் விட்டுவிட்டு வந்த தன் வணிகம் எப்படி நடக்குமோ என்ற மனநிலையில்தான் ஏனோதானோவென இருப்பார். இந்த மனநிலையில் இவரால் எப்படி வேலை செய்ய இயலும்?

ஆசிரியப்பணி என்பது எவ்வளவு புனிதமான பணி என்ற பொறுப்புணர்வு இன்றுள்ள நம் ஆசிரியப் பெருமக்களுக்குச் சரியாக விளங்கவில்லை எனத்தான் கருத வேண்டியுள்ளது.

ஏன் நான் இவ்வாறு எழுதுகிறேன் என்றால் எனது மகள் கூட இது போன்ற கவனக்குறைவாகத் தேர்வுத்தாளை திருத்திய ஒரு கல்லூரி ஆசிரியரால் பாதிக்கப்பட்டாள்.

எனது மகளின் சராசரி மதிப்பெண்கள் பள்ளியிலும் சரி பொறியியல் கல்லூரியிலும் சரி எண்பத்தைந்து சதவிகிதத்தில்தான் இருக்கும். நானும் இந்த சதவீதத்தைத் தக்கவைத்தால் போதும் இதற்காக விழுந்து விழுந்து படித்து உன் உடலையும் மன நிலையையும் கெடுத்துக்கொள்ளாதே என்ற அறிவுரையைத்தான் வழங்குவேனே தவிர என் மகளை விட அதிக மதிப்பெண் பெறுபவர்களை ஒப்பிட்டுக் குறை சொல்ல மாட்டேன்.

இந்த நிலையில் எனது மகளின் கல்லூரி இறுதி செமஸ்டருக்கு முந்தய செமஸ்டரில் ஒரு தேர்வில் அவள் நாற்பது சதத்திற்கும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தோல்வியடைய வைக்கப்பட்டாள். இதனால் ஏற்பட்ட மன உலைச்சலில் எனது மகள் தவித்த தவிப்பினை எழுத்தில் வடிக்க இயலாது. எனினும் நாங்கள் அவளை மனம் தேற்றி மதிப்பெண் மறு கூட்டலுக்கு அதற்குரிய கட்டணத்தைச் செழுத்தி விண்ணப்பிக்கச் சொன்னோம்.

மதிப்பெண் மறுகூட்டல் அறிவிப்பு வரும் நாள் வரை என் மகளின் வழக்கமான துள்ளலும் துடிப்புமின்றி ஏனோதானோவெனத்தான் அவளது கல்லூரிப் பயணம் தொடர்ந்தது. மறு கூட்டலில் அவளுக்கு 65 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் கிடைத்து தேர்வானதாகச் சான்றிதழ் கிடைத்தது. எனினும் முதலில் திருத்தியவர் தனது கவனத்தைச் சரியாக வைத்திருந்து திருத்தியிருந்தால் இதை விட அதிக மதிப்பெண்களை அவள் பெற்றிருக்க முடியும். கிடைத்த மதிப்பெண்கள் தனது சராசரி அளவினை மிகவும் பாதித்ததாக இன்னமும் அவளுக்குள் ஒரு வருத்தம் உண்டு.

அடுத்து தனியார் பள்ளிகள். தமிழத்தில் புற்றீசல் போலப் புறப்பட்டுள்ள இந்தப்பள்ளிகள் தங்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக்காட்டி ஏராளமானவர்களைத் தங்கள் பள்ளிகளுக்கு இழுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் செயல்படுகின்றனர்.

தாங்கள் தயாரிக்கும் மாணவர்களை அவர்கள் ஏற்றுமதிப் பொருளாகத்தான் பார்க்கிறார்களே தவிர அவர்களின் மன நிலையைக் குடும்பச் சூழலை அறிந்தவராக இருப்பதில்லை.

மயில் தோகையாயினும் ஒரு அளவிற்கு அதிகமாக ஏற்றப்படும்போது ஒரு உறுதியான வண்டியாயினும் அதன் அச்சு முறிந்து போகும் என வள்ளுவம் எச்சரிப்பது படித்த இவர்களுக்கு ஏன் விளங்குவதில்லை?

ஒரு லிட்டர் கொள்ளலவு கொண்ட பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரை அடைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் அந்தத் தண்ணீரைச் சுண்டக்காய்ச்சி பாதியாக்கி அடைப்பது போலத்தான் மாணவர்களை இவர்கள் தயாரிக்கும் முறை இன்றுள்ளது.

அதைவிடக் கொடுமை இவர்களின் பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆசியர்களுக்கு விடுமுறையே கிடையாதாம். இதனைப் பகிரங்கமாகவே ஒரு பள்ளியின் நிர்வாகி ஒரு தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவிக்கிறார். தொழிலாளர் நலச்சட்டங்கள் இங்கெல்லாம் செயல்படுத்தப்படுவதே கிடையாது போலிருக்கிறது. குறைவான சம்பளத்தில் கிட்டத்தட்டக் கொத்தடிமைகள் போல நடத்தப்படும் இந்த ஆசிரியர்கள் தங்கள் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள இயந்திரமாகத்தான் செயல்பட்டு நம் மாணவர்களை ஏற்றுமதிக்குத் தயாரிக்கின்றனர்.

அடுத்து அரசுகள். அரசுகளின் கல்விக்கொள்கை இன்றுவரை குழப்பமான கொள்கைகளை உடையதாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டுகளில்கூட அரசுகளின் தவறான அனுகுமுறையால் வாய்மைமன்றம் வரை வழக்கு நடைபெற்றது உலகறிந்தது.

நான்கூட அரசின் தவறான ஒரு முடிவால் பாதிக்கப்பட்டவன்தான். நான் பதினொன்றாம் வகுப்பு படித்தபோது, என்னுடன் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் எங்களின் பாடத்தையே கொடுத்து அவர்களையும் எங்களையும் சரிசமமாக எஸ்எஸ்எல்சி என அறிவிக்க, அன்றிருந்த குறைவான டிப்ளமோ கல்விக்கூடங்களில் நாங்கள் இருவருமே சரிசமமாக விண்ணப்பிக்க முதலில் தேர்வெழுதிய எங்களில் எழுபது மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களைத் தேர்வு செய்த பொறியியல் கல்லூரிகள் அதற்கு கீழ் உள்ள என் போன்றவர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டனர்.

ஒரு மாதம் கழித்து தேர்வு முடிவுகள் கிடைத்து வந்த பத்தாம் வகுப்பு மாணவர்களிலும் எழுபது மதிப்பெண்களுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு கல்லூரிகள் முழுமையாக நிரப்பப்பட என் போன்ற 68 சத மதிப்பெண் பெற்றவர்களின் பொறியியல் படிப்பு கனவு கனவாகவே போயிற்று.

அதாவது பரவாயில்லை எங்களை இப்பொழுது இருப்பது போன்று பிளஸ்1 என எங்கள் பள்ளியிலேயே படிப்பைத் தொடர அனுமதித்திருந்தால் என்னுடைய வாழ்க்கை முறையே முற்றிலும் மாறியிருக்கக்கூடும்.

ஆனால் எங்களைப் பழைய முறைப்படி பியுசி படியுங்கள் என கல்லூரியில் சேரச் சொல்லிவிட நான் படிக்கச் சென்ற நாமக்கல் அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரியில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் என் தந்தை எவ்வளவோ வருந்தி மேற்படிப்பு படிக்க வற்புறுத்தியும் கல்லூரி என்றாலே படு மோசம்தான் என என்னுள் மேற்படிப்பு தொடரும் ஆசையே தொலைந்துவிட்டது.

இதுதான் இன்றைய கல்விக்கூடங்களின் பரிதாப நிலை. அரசுப் பள்ளிகளில் சுமார் மூன்றரை இலட்சம் பேரும், தனியார் பள்ளிகளில் சுமார் இரண்டரை இலட்சம் பேரும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுதியுள்ளனர்.
இவர்களில் தேர்வானவர்கள் இனி பண மூட்டைகளைச் சுமந்து கொண்டுதான் தங்களின் கல்லூரிக் கனவுகளைத் தொடர முடியும்.

பணமில்லாதவர்கள் வேலை வாய்ப்புக்கு இலாயக்கற்ற அரசு நடத்தும் கலைக் கல்லூரிகளில்தான் நுழைய முடியும். இதற்கும் வாய்ப்பற்றவர்கள் தங்களின் தாய் தந்தையர்கள் செய்யும் ஏதேனும் வேலையில் திணிக்கப்பட்டு தங்களின் மேற்படிப்புக் கனவைத் தொலைத்து விடுவர்.

இந்த நிலை இனியும் தொடர வேண்டுமா?

மாணவர்களை ஏற்றுமதிப் பொருளாக்கும் வணிகக் கல்வி முறை தொலைய வேண்டாமா?

ஓவ்வொரு மாணவருக்குமெனத் தனி விருப்பங்கள் இருக்கும். அது படிப்பாக இருக்கலாம். விளையாட்டுத் துறையாக இருக்கலாம். கலைத் துறையாக இருக்கலாம். இவ்வாறு தனித்தனியான  விருப்பங்கள் அவர்களுக்குள் ததும்பி நிற்கும்.

ஆனால் பெற்றவர்களோ தங்களின் விருப்பத்தைப் பிள்ளைகளின் மேல் திணிக்கின்றனர். படிப்பு வராதவனைப் படி படி என நச்சரித்தால் அவன் என்ன செய்ய முடியும். படிக்காத மேதை காமராசர் இந்த நாட்டுக்கே முதல்வராகவில்லையா?

படிக்காத மேதை சிவாஜி கணேசன் தன் திறமையால் உலகப் புகழ் பெற்ற நடிகராகவில்லையா?

படிக்காத ஏழை மக்கள் திலகம் இந்த நாட்டின் முதல்வராகவில்லையா?

படிப்புதான் ஒருவனை அறிவாளியாக்கி மனிதனாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எத்தனையோ அறிவாளிகள் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதை நாம் கண்கூடாக இன்று காண்கிறோம்.

ஆக கல்வி வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதை விடுத்து இது போன்று வாழ வேண்டிய வயதில் இளம் தளிர்கள் மடிவதற்கு இன்றைய சமூகமும் கல்வி அமைப்பும் விளங்குவது வெட்கக்கேடானது.

மாணவர்களின் தனித் திறமைகளை மட்டுமே கண்டறிந்து அதில் மட்டுமே அவர்கள் கவனம் செழுத்தி தங்களின் வாழ்க்கை முறையை செம்மைப்படுத்திக்கொள்ளுமாறு ஏற்படுத்தப்படும் கல்வி முறையே இன்றைய அவசியத் தேவை.

அது காலத்தின் கட்டாயம். ஐந்தாம் தமிழ்ச்சங்கம் இத்தகைய கல்வி முறையைத்தான் தமிழகத்தில் இனி கட்டாயம் நிறைவேற்றும். அதுவும் இன்றுள்ள மக்களின் சுமையைக் கருத்தில் கொண்டு முற்றிலும் அரசே எவ்விதக் கட்டணமுமின்றி தன்னுடைய நியாயமான வரி வருவாயில் வழங்குமாறு திகழும்.

இந்த நிலை வரும்போது தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் ஒன்று அரசு வசமாகிப்போகும். அல்லது அவை ஏதேனும் தொழிற்கூடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும்.

வாழ வேண்டிய வயதில் தங்களின் இளந்தளிர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எமது ஆழ்ந்த வருத்தங்கள். இனியும் தங்களின் தளிர்களைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் திருந்தி வாழ எமது அன்பு வேண்டுகோள்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!