படியரிசி கிடைக்கிற காலத்திலே நாங்க படியேறிப் பிச்சை கேட்கப் போவதில்லே!

      படியரிசி கிடைக்கிற காலத்திலே
  நாங்க படியேறிப் பிச்சை கேட்கப் போவதில்லே!

கர்ம வீரரை அரசியல் களத்தில் வீழ்த்திய இந்தப் பாடல் வரிகள் பிறந்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டன!

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதே பாடல் வரிகளை மெய்யாக்க கடந்த திமுக ஆட்சி மீண்டும் படியரிசி திட்டத்தை கொண்டு வந்து இரண்டு ரூபாய்க்கு அரிசி தந்தது! பின்னர் அதே தமிழக முதல்வர் படியரிசியை ஒரு ரூபாய்க்குத் தருவதாக அறிவித்தார்!

தமிழக மக்கள் பட்டாசு வெடித்து இதை கொண்டாடியதாக அவரது சொந்த தொலைக்காட்சி ஒளி பரப்பியது! பிச்சைக்காரர்கள் அதை கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாடியவர்கள் அவரது கட்சியினர்தான் என்பது தமிழக மக்களுக்கு விளங்காததா?

இதன் பிறகு ஆட்சிக்கு வந்த தற்போதய முதல்வர் இலவசமாகவே இருபது கிலோ அரிசியை வழங்குவேனென்று அறிவித்து ஆட்சியைப் பிடித்து அதன்படி செயல்படுத்தும் இந்த நாட்களிலும் தமிழகத்தில் ஆரோக்கியமுள்ள நபர்கள் பிச்சையெடுப்பது குறையவே இல்லை!

தினமும் குறைந்தது பத்து நபர்களாவது ஒவ்வொரு நிறுவனத்தின் வாயில்கள் ஏறிப் பிச்சை கேட்பது தினசரி நிகழ்வு!

இலவசமாக இருபது கிலோ அரிசி கிடைத்தால் ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு பசியாற முடியும்! மற்ற செலவினங்களுக்குத் தற்பொழுது கிடைக்கும் மிகக் குறைந்த அளவிலான கூலி விகிதத்தில் வேலை செய்தாலே சமாளித்துவிட முடியும்.

எனவே இருபது கிலோ அரிசி இலவசமாகக் கிடைத்தும் பிச்சை எடுத்துப் பிழைக்கும் நிலை இன்று வரை தொடர்வது ஏன் என்ற கேள்வியும் எழாமல் இருக்க முடியாது!

உழைப்பதற்கு இவர்கள் தயாரில்லையா? அல்லது இது போன்ற திட்டங்களினால் பலன் ஏதும் விழைவதில்லையா?

இந்தப் பாடலுக்கு நாற்பது ஆண்டுகள் கடந்தும் உயிர் இருக்கும் நிலையும் பிச்சை கேட்போரும் தொடரும் போது அரசியல்வாதிகளின் இதுபோன்ற  ஊதாரித்தனமான நடவடிக்கைகள் தேவையா என்ற கேள்வியும் பிறக்கிறது!

இலவசங்கள் கொடுத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக உழைப்பின்றித் தொடர்ந்து வாழ வைப்பதென இன்றைய நம் அரசியல்வாதிகள் முடிவே செய்துவிட்டனர்!

மக்கள் திலகம் கனவு கண்ட படியேறிப் பிச்சை கேட்காத மக்களும் கோவில்களில் ஆரோக்கியமான நபர்கள் உழைப்பதற்கு சோம்பி பிச்சையெடுத்து வாழுகின்ற நிலையும் இல்லாத பஞ்சாபைப் போன்ற உழைக்கும் வர்க்கம் நிறைந்த தமிழகத்தின் உன்னதமான பொற்காலம் எப்பொழுது உருவாகும்?

இந்த கேள்விக்கான பதிலை நம் தமிழக மாணவர்களிடமே விட்டு விட்டேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!