நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?


தமிழகத்தில் ஆளும் இயக்கமும் எதிரணி இயக்கங்களும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை தினசரி ஊடகங்களின் வாயிலாகக் கொடுத்து வருகின்றனர். 

குற்றம் சாட்டப்படுபவர்களின் ஊழல் மதிப்பு இப்பொழுதெல்லாம் சில கோடிகளில் இருப்பதில்லை. நூறு கோடிகளிலும் இல்லை. 

சர்வ சாதாரணமாக ஆயிரம் கோடிகளைத் தாண்டித்தான் குற்றச்சாட்டுக்கு ஆளாபவர்களின் சொத்து மதிப்பு வாசிக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் குற்றம் சாட்டுபவர் பரம ஏழையாகவோ அல்லது சொத்து எதுவும் இல்லாத தலைவராகவோ இருப்பதில்லை என்பதுதாம். தன் முதுகிலுள்ள அழுக்கு தெரியாத இவர்கள் அடுத்தவர் முதுகிலுள்ள அழுக்கைப் பற்றிக் கவலைப்படுகின்றனர்.

வருமான வரித்துறையின் ஆண்டு முடிவு விளம்பரங்கள் இலட்சங்களில் முதலீடு செய்பவர்கள் இனி தப்பவே முடியாது. நாங்கள் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம் என்பதாக ஊடகங்களில் வெளியாவதைக் காணும்போது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. 
வருமான வரித்துறையின் கண்காணிப்பு வலையத்தில ஆயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துள்ளவர்கள் வருவதில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

பொது வாழ்க்கைக்கு வந்து சில ஆண்டுகளிலேயே ஏராளமான சொத்துகள் சேர்த்து கோடிகளுக்குச் சொந்தக்காரர்களாபவர்கள் பாவம் ஒன்றை மட்டும் மறந்து விடுகின்றனர்.

அது ஒரு கவிஞர் பாடியது போல ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! இந்த வரிகள் கூட ஒருவரைச் சுட்டுச் சாம்பலாக்கி மண்ணில் தூவி விட்டால் ஆறடி நிலம் கூட அவருக்குச் சொந்தமாவதில்லை எனும்போது அவரின் மரணத்திற்குப் பிறகு எதுவுமே அவருடன் செல்வதில்லை எனற நிலையாமைத் தத்துவத்தை உணர்த்துகிறது.

என் அனுபவத்திலேயே உழைத்துச் சேர்க்காமல் எவரையோ ஏய்த்துக் கிடைத்த சொத்துக்களை உழைக்காமல் அனுபவித்து அழிப்பதற்கென்றே சில வாரிசுகள் பிறந்து தொலைத்து அவற்றைச் சுத்தமாக வழித்து அழிப்பதைக் கண்டுள்ளேன்.

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தால் பிறந்த வீட்டுக் கோடி புகுந்த வீட்டுக் கோடி என  இரண்டு கோடிகளை அவரது உடலின் மேல் போர்த்துவர். தமிழகத்தில் தொன்று தொட்டு நிலவும் வழக்கம் இது.

ஆழ்ந்து யோசித்தால் தமிழரின் மரணம் குறித்த விழிப்புணர்வுச் செய்தி இதில் நன்கு புலப்படுகிறது. எவ்வளவுதான் ஒருவர் கோடி கோடியாகக் குவித்தாலும் அவரின் மரணத்திற்குப் பிறகு அவரது உடல் மீது போர்த்தப்படுவது இந்த இரண்டு கோடிகளைத்தான். இவையும் புதைக்கப்படும்போது மண்ணோடு மண்ணாகி மக்கிவிடும். அல்லது எரிக்கப்படும்போது உடலோடு சேர்ந்து எரிந்துவிடும்.

எனவே கோடி கோடியாகக் செல்வத்தை நீ குவித்தாலும் உனக்கு மிஞ்சப்போவது இரண்டு கோடிகள் எனும் ஆடைதான் என உபதேசிக்கவே செல்வம் நிலையானதல்ல என்பதை உணர்த்த மரணத்திற்குப் பிறகு மனித உடலில் போர்த்தப்படும் இறுதி ஆடையினையும் தமிழர்கள் கோடி என அழைத்தனர்.

பொது வாழ்க்கைக்கு வந்துள்ள நம் தமிழகத் தலைவர்களுக்கு இந்தத் தத்துவம் விளங்காததல்ல. எனினும் ஏன் இவர்கள் தங்களின் உழைப்பில் உருவாகாத மக்களின் நலத்திட்டத்திற்கான செல்வத்தைத் தமதாக்கிக்கொண்டு வெட்கமின்றிச் சிறைவாசமும் அனுபவிக்கின்றனர் என்பதுதான் இங்கு புரியாத புதிர். 

சாமானியன் திருடினாலோ, இலஞ்சம் வாங்கினாலோ, ஊழல் செய்து மாட்டிக்கொண்டால் உடனடியாக தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் தலைவர்கள் இதே தவறைச் செய்தால் அவர்களின் வழக்கு பல ஆண்டுகள் நீடிக்கப்படுவதும், நீண்ட வருடங்களுக்குப்பிறகு பெரும்பாலான தலைவர்கள் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுவிக்கப்படுவதும்தான் இந்த நாட்டில் நடைபெறும் சாதாரண நிகழ்வுகள். 

இவர்கள் வாய்மை மன்றத் தண்டனையிலிருந்து வேண்டுமானால் தப்பிவிடலாம். ஆனால் சித்தர்கள் எச்சரிக்கும் பிரபஞ்ச விதியிலிருந்து எவரும் தப்பவே இயலாது. இந்தப் பிறவியில் இல்லாவிட்டாலும் அடுத்த பிறவியில் இவர்கள் பஞ்சப் பரதேசிகளாகப் பிறவி எடுக்கப் போவது சர்வ நிச்சயம். 

ஆனால் அப்பொழுதுகூட இவர்கள் உழைக்காமல் சோம்பி அடுத்தவர் தயவில் வாழ முயல்வர். அவர்களுக்கு இரக்கம் காட்டி தானம் செய்பவர்கள் புண்ணியம் பெறப் போவதில்லை. இவர்கள் செய்த பாவததின் பங்கைத்தான் அவர்களும் அனுபவிப்பர்.     

இலஞ்சம் ஊழல் என்ற சொற்கள் தமிழின் அதிகாரத்திலேயே இல்லை என்ற நிலை நிச்சயம் ஒரு காலம் உருவாகும். இதை உறுதியாக நிறைவேற்றுவது ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் தலையாய கடமையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!