சாதியவாத மதவாதத்திற்கு எதிராகத் திரண்ட தமிழக மக்கள் சக்தி!


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. இந்தத் தேர்தலில் ஆளும் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாகக் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 

ஆளும் இயக்கத்தின் வெற்றி பண பலத்தால் தீர்மானிக்கப்பட்டது என்பதை அவர்கள் இயக்கத்தினர் உட்பட தமிழகத்திலுள்ள எவராலும் மறுக்க இயலாது. ஆளும் இயக்கம் இதனை மறுத்தால் அவர்களின் மனசாட்சியே அவர்களது செய்கை தவறானதென உறுத்துவது உறுதி. ஏராளமான மக்களின் வாக்கு வங்கி பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படடு பணபலத்தால் கிடைத்த வெற்றியை ஒரு வெற்றியாகவே கருதக்கூடாது.

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி இந்தத் தேர்தலில் படு தோல்வியடைந்ததற்குக் காரணம் அவர்களின் உலகறிந்த ஊழலும் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்த வாரிசுகளின் அடிதடியும்தான் அதி முக்கிய காரணமென்பது உள்ளங்கை நெல்லிக்கனி! 

நாடாளுமன்றத்திற்கு ஒரு தீர்ப்பு சட்டமன்றத் தேர்தலுக்கென ஒரு தீர்ப்பென இதுவரை வழங்கி வந்துள்ள தமிழக மக்கள் இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் திரு மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் பக்கம் பக்கமாக விவரித்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை நாங்கள் ஊழல் திராவிட இயக்கங்களை ஆதரித்தாலும் ஆதரிப்போமே தவிர நாட்டு மக்களைப் பிளவுடுத்தும் சாதியவாதத்தையும் மதவாதத்தையும் அறவே ஆதரிக்க மாட்டோம் என ஆணித்தரமாக உறுதியான தெளிவான முடிவினை உரத்த குரலில உலகிற்கு அறிவித்துள்ளனர்.

சாதிக்கட்சிகளின் தயவில் தமிழகத்தில் வாக்கு வங்கியை வளைக்க நினைத்த பாஜாகவின் முயற்சியும் முறியடிக்கப்பட்டு, மோடிக்கு நாடு முழுக்க இருந்த அலை தமிழகத்திலும் பிரதிபலிக்கும் எனக் கணக்கிட்டு இந்தக் கூட்டணியில் இணைந்த பெரும்பாலான சாதித் தலைவர்களும் இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் தாண்டி சாதியவாத மதவாத இயக்கங்களின் கூட்டணிக்குத் தமிழகத்தில் வாக்களித்துள்ள மக்கள்கூட ஆளும், ஆண்ட இயக்கங்களின் மீதுள்ள வெறுப்புணர்வுடனும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் கடுமையான வரிகளின் காரணமாக ஏற்பட்ட உச்சகட்ட விலைவாசி உயர்வின் பாதிப்பினை மனதில் கொண்டும்தான் தங்களின் எதிரப்புணர்வினைப் பதிவு செய்துள்ளனர்.

எந்த இயக்கங்களும் தங்களுக்கு உடன்பாடில்லை என வாக்களித்த மக்களையும் இங்கு நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். தமிழகத்தில்  பதினெட்டு சதவீத மக்கள் இன்றுள்ள இயக்கங்களின் மேல் கொண்டுள்ள வெறுப்புணர்வை வெளிப்படுத்தவே வாக்களிக்காது தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

ஆளும் இயக்கம் தனது வெற்றி மகத்தான வரலாற்றுச் சாதனை வெற்றி எனப் பறை சாற்றிக் கொண்டாலும் மொத்தமுள்ள வாக்காளர்களில் அதிக சதம் மக்கள் தங்களுக்கு எதிரான மன நிலையுடன் உள்ளதால் தாங்கள் பெற்ற வெற்றி பெரும்பான்மையானதல்ல என உணர்ந்து இனியாவது மொத்தமுள்ள மக்களின் மன நிலை அறிந்து தங்களின் அதிகார மமதையைக் குறைத்துக்கொண்டு மக்கள் தொண்டாற்ற வழி காண வேண்டும்.

ஊழலுக்கும் மதவாத சாதியவாதத்திற்கும் எதிராக் மக்கள் ஆணித்தரமாகத் தங்களின் வாக்கு வங்கியைப் பயன்படுத்தப்போகும் காலம் நிச்சயம் உருவாகும் என்பதற்கான எச்சரிக்கை மணிதான் இந்தத் தேர்தல் தெரிவிக்கும் செய்தி

கர்நாடகத்தில் பாஜக ஆண்டபோதே கை விரிக்கப்பட்ட காவிரியே வறண்டு போன நிலையில் எந்த வளமுமற்ற தமிழகத்தில் ஏராளமான வட இந்தியர்கள் தமிழகம் சித்தர்கள் வழி நடக்கும் அமைதிப் பூங்கா என நினைத்து இங்கு வாழ்ந்தால்தான் தங்களுக்கு நிம்மதி என நாடி வருகின்றனர்.

அது போன்றே நித்தம் நித்தம் செத்து வாழும் வட மாநிலக் கலவர பூமியில் வாழ்க்கைத் தரம் உயரவே வழியற்றுப்போன மாநில மக்கள்தாம் குஜராத்தைப்போலத் தங்கள் மாநிலத்தையும் திரு மோடி மாற்றுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளனர் என்பதை உணர்ந்து அந்த மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் மதவாதத்திற்கும் சாதியவாதத்திற்கும் அடி பணியாமல் இப்பொழுதுள்ள அதே துணிச்சலுடன் திரு மோடி அவர்கள் முன்னாளைய பிரதமர் திருமிகு வாஜ்பாய் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நடுநிலைத் தன்மையுடன் இந்த தேசத்தை வழி நடத்த முயல வேண்டுமென்பதே நல்ல சக்திகளின் விருப்பம்.

தமிழகத்தின் ஆளும இயக்கத்தின் பிரதமர் கனவைக் கனவாகவே ஆக்கிவிட்டு பாரதத்தின் பிரதமராக அமரப்போகும் திரு மோடி அவர்களை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் வாழ்த்துவதுடன், தமிழக மக்களின் மதச்சார்பின்மை அறிவிப்பைப் புறக்கணிக்காமல் இந்த நாட்டிலுள்ள அனைத்து மத இன மக்களையும் ஒரே விதமாகப் பாவித்து தமிழகத்தின் புறக்கணிப்பை மதவாதத் தீவிரவாதத்திற்கான எச்சரிக்கையாக வள்ளுவம் சுட்டும் வகையில் இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் என்ற குறள் நெறிக்கேற்ப வள்ளுவமே திரு மோடி அவர்களை தமிழக மக்கள் வடிவில் இடித்துரைப்பதாகக் கருதி மதவாதம் தவிர்த்து இராமாயண காவியம் உண்மையாக இருந்து இராமர் அவதாரக் கடவுளாகவே இருந்து கங்கைக் கரையில் படகோட்டிய குகனொடு ஐவராகவும், தமிழின குரங்கு வடிவ அனுமன் அறுவராகவும், இடிக்கப்பட்ட பாபரை எழுவராகவும் கருதிக் கொண்டதாக நினைந்து வாழ் நாளெல்லாம் கலவர பூமியாக மாறும் அபாயம் உள்ள அயோத்தியில் இராமருக்குக் கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு கடவுள் கல்லுக்குள்ளும் கோயிலுக்குள்ளும் இல்லை இந்தப் பிரபஞ்சப் பெருவெளி எங்கும் நிறைந்துள்ளதாக எச்சரிக்கும்  சித்தர்கள் வழியில் இந்த மண்ணை அமைதிப் பாதையில் நடத்தி உலக அரங்கில் பெருமை கொள்ளச் செய்யுமாறு அவரைச் சித்தர்கள் வாக்கில் வாழ்த்தி வேண்டுகிறோம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!