திருக்குறள் பல்கலைக் கழகம்!

தமிழ்த்தாயின் சிரத்தை அலங்கரிக்கும் தகுதிக்குத் தொல்காப்பியம் துவங்கி எத்தனையோ நவஇரத்தின மகுடங்கள் இருப்பினும் தனது தனித்துவத்தால் தமிழ்த்தாயின் சிரத்தை நிரந்தரமாக அலங்கரிக்கும்  நவஇரத்தினங்களைவிட அளவிற்கு அதிகமாக இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரே உயர் சிறப்புடைய எழில்மிகு மகுடம் திருக்குறள்தாம் என்பதை அறிவிப்பதில் தமிழராய்ப் பிறந்தவரெல்லாம் பெருமைப்பட வேண்டும்.
உலகப் பொதுமறை என்றெல்லாம் நாம் நமது திருக்குறளை உயர்த்தி எழுதியும் பேசியும் வருகிறோம். ஆயின் வள்ளுவம் வகுத்த வாக்கினுக்கேற்ப நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டிருக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லையென்ற பதில்தாம் இன்றுவரை கிடைத்து வருகிறது.

திருக்குறளிலுள்ள கருத்துக்களை இந்தத் தலைப்பில் எழுதத்துவங்கும்போதே சில அதிகாரங்களிலுள்ள குறள்களின் சிறப்பைப்பற்றி படிக்க நேரிட்டபோது என்னுள் நாம் இதை எழுதுவதற்குத் தகுதியானவர்தானா என்ற கேள்வியும் எழாமலில்லை.

இதற்குக் காரணம் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் திருக்குறளை நான் முழுவதுமாகப் படிக்கவில்லை, அதன்படி நடக்கவில்லை என்ற குற்ற உணர்வுகள் என்னுள் எழுந்தமைதாம். பள்ளிக்கல்வியை  பனிரெண்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டவன் நான். அதன்பின் வணிக வாழ்க்கையில் மிகச் சிறப்புற வாழும் வகை தொலைத்தவன்.
     
   நல்ல வேளையாக, கண் கெட்டபின் பகலவன் வணக்கம் என்ற நிலைக்குச் சற்று முன்னதாகவே வாழ்க்கைச் சூறாவளியில் சிக்கித் தப்பித்தவன். 

      இப்பொழுதெல்லாம் என்னுடைய ஒரு நண்பனாக ஒரு சிறிய திருக்குறள் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொள்கிறேன். அதில் திருவள்ளுவர் வாழ்ந்துகொண்டு எனக்கு வாழும் வழியும் காட்டுகிறார்.

இத்தகு சிறப்பு வாய்ந்த நம் உலகப் பொதுமறையை உலகளவில் கொண்டு சென்றிருந்தும் நம்மளவில் இதுவரை சிறப்புச் செய்யவே இல்லையெனக் கருதுகிறேன். 

தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி நம்மை ஆண்டு வந்துள்ள தலைவர்கள் ஏராளமாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். 

அதன்படி அவர்கள் நடந்தார்களா என்ற கேள்விக்கு அரசியலில் நேர்மை காத்த எனது மானசீகத் தலைவர் பெருந்தலைவர், திரு கக்கன், திரு ஜீவானந்தம் பேரறிஞர்  அண்ணா போன்றவர்கள் தவிர மற்றவர்களிடம் அவரவர்தம் மனசாட்சியைக் கேட்டுத்தாம் பதில் பெற முடியும்.
     என்னைப் பொருத்தவரை திருக்குறளை இளம் வயதிலிருந்தே ஒருசில  குறள்களைப்பற்றியும் அதற்குரிய விளக்கக்களைப் பற்றியும் மட்டுமே மனப்பாடம் செய்து அறிந்திருந்தும் அதன்படி வாழ இயலாத வணிக வாழ்வியல் சூழலில் தள்ளப்பட்டவன். பெரும்பாலான தமிழர்களின் நிலையும் இதே கதிதாம்.

திருக்குறளை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்புகள் இல்லாது போனாலும் என்னை வழிநடத்தும் பிரபஞ்ச சக்திகள் ஓரளவிற்கு என்னுடைய வாழ்க்கை முறையைத் திருக்குறளின் நெறிக்கேற்ப வாழும்படித்தான் வழிநடத்தி வந்துள்ளமையையும் நான் உணர்ந்து தெளிந்தேன். 

அதனால்தான் மனம் தெளிவடைந்து நான் இன்னும் தவிர்க்க வேண்டிய பின்பற்ற வேண்டிய வாழ்க்கை வழி முறைகளை அப்வப்போது வள்ளுவரின் வாக்கைக்கேட்டுத் தெளிந்து அதன்படி வாழ முற்படுகிறேன்.

எனக்கு மட்டுமல்ல உலகினுக்கே பயனளிக்கும் அற்புதமான இந்த உலகப் பொதுமறையைத் தமிழராகிய நாம் நமது பாடத்திட்டத்தில் ஒரு சில அதிகாரங்களையும் அவற்றிலுள்ள ஒரு சில குறள்களையும் மட்டுமே படித்தறியுமாறு வாழ்ந்து வாழ்வு தொலைத்து வந்துள்ளோம்.

இந்த நிலையைச் சற்று மேலானதாக மாற்றியமைக்க தமிழறிஞர்கள் ஒன்றுபட்டு ஒரு மேன்மையான முடிவெடுக்க வேண்டிய தருணம் இதுவென நான் கருதுகிறேன். 

ஆம்! இதுவரை பாடத்திட்டத்தின் ஒரு சிறு பகுதியாக மட்டுமே அறியப்பட்டு வந்துள்ள நம் பொதுமறை இனிவரும் காலத்தில் பட்டயப்படிப்பாக அனைவரும் படிக்கும்படியான கல்வித் திட்டமொன்றைத் திருக்குறளுக்கெனக் கொண்டுவரவேண்டும்.

இதற்கு முதற்கண் தமிழகத்தில் திருக்குறளுக்கெனத் தனித்துவமான ஒரு பல்கலைக்கழகம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். 

அதில் தொடக்கக் கல்விமுதல் பட்டயம் வரை படிப்பதற்குரிய வசதியினை நம் தமிழகத்தின் வருங்காலச் சந்ததியினரின் குழந்தைகளும், திருக்குறளின் மேன்மையை அறிந்த உலகத்திலுள்ள பிற குழந்தைகளும் இங்கு வந்து படித்து வாழும் வகை பெறுகின்ற வழியில் புதியதொரு பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பினை உருவாக்க வேண்டும்..

ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் இதற்கெனத் தனியாகப் பல வகுப்பறைகளும், வள்ளுவத்தையே வாழ்வாகப் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர்களை அவர்கள் படிப்பறிவற்றவர்களாக இருந்தாலும் பரவாயில்லை திருக்குறளை முழுமையாக அறிந்த தகுதியுடன் இருந்தால் கூட அவர்களைத் திருக்குறள் ஆசிரியர்களாக நியமனம் செய்வித்து நம் குழந்தைகள் அதில் சேர்ந்து பயில வழி காண வேண்டும். 

இவ்வாறு திருக்குறள் பாடத்திட்டத்தில் சேர்ந்து கற்க முனையும்  குழந்தைகள் பட்டயப்படிப்பு வரை கசடறக் கற்பவை கற்றபின் ஒரு மிகச் சிறந்த மாணவர் உலகம் இன்னும் பதினைந்து ஆண்டுகளில் புதியதாக உருவாகி, வள்ளுவத்தின் வாக்கின்படி நிற்க அதற்குத் தக என நடப்பவராக முழுமை பெற்று வெளியேறினால் தமிழினத்தின் மேன்மையை அந்தத் தலைமுறையினர்தான் இனி நிர்ணயிப்பர். 

வள்ளுவத்தை உணர்ந்து படிக்க முன்வரும் இத்தகைய உன்னதமான அறிவாளிகளுக்கு உலகிலுள்ள மற்ற விஞ்ஞானக் கல்விகள் அனைத்தும் தாமாகவே வசப்படும்.

அதே போன்று தற்பொழுது பனிரெண்டாம் வகுப்பில் படித்தவர்களைத்  திருக்குறள் பட்டயப்படிப்பில் சேர்ந்து படித்துக் குறளின் நெறிக்கேற்ப வாழும் வகையில் ஒரு புதிய தலைமுறையை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்கி அதில் சிறப்பாகத் தேர்ந்து நிற்க  அதற்குத் தக  என வாழ விரும்புபவர்களையும், மேற் குறிப்பிட்டவர்களையும்தான் இனி அரசு நிர்வாகத்தில் பணியமர்த்துவது என வரையறுத்தால் (இதற்கென ஒரு சட்டமே இயற்றினாலும் தவறே இல்லை)  வாழ்வியல், துறவியல், நிர்வாக இயல் மற்றும் அரசியலில் நாம் இதுவரை இழந்து வந்துள்ள அறம் முழுவதையும் வள்ளுவம் வழியில் மீட்டெடுத்தவர்களாவோம். 

அதன் பின்னர் அமைகின்ற அரசு அமைப்புகள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது வள்ளுவம் அரசியலுக்கென வகுத்த இருபத்தாறு குறள் நெறிப்படித்தான் தமிழகத்தை ஆளத் துவங்கும். 

தமிழக மக்களும் வள்ளுவம் வகுத்த நூற்று முப்பத்து மூன்று அதிகாரத்தில் அமைந்த ஆயிரத்து நூற்று முப்பது குறள்களின் வழிநடந்து தம் புவி வாழ்க்கையைப் பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து இன்பமுடன் வாழ்ந்து இந்தப் பிரபஞ்ச வெளி முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவர்.
    வள்ளுவம் வாழ்ந்த காலத்திலேயே அவர் குறள்களில் நிலவும் சமூக ஒழுக்கக் குறைபாடுகள் இருந்திருக்கக்கூடுமெனவே நாம் இதுவரை தவறாகப் புரிந்து கொண்டு வாழ்ந்து வந்துவிட்டோம். ஆயின் அது உண்மையன்று. 

என் உள்ளுணர்வு உணர்த்துவது என்னவெனில் வள்ளுவர் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிச் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற ஒரு மாபெரும் சித்தராவார். 

      இரண்டாயிரம் வருடங்கள் கடந்த நிலையில் வாழும் தமிழினம் எவ்வாறு தம்முடைய காலத்தில் வாழ்ந்த தமிழினத்தை விடத் தாழ்வுற்று, தன்னை அடிமைப்படுத்திய பல்வேறு மொழி சார்ந்த நாகரீகங்களின் தாக்கத்தால் வாழ்வு தொலைந்திருப்பர் எனச் சிந்தித்திருப்பார்.

அத்தகு தாழ்வுற்ற நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் முறை பிறழ்ந்திருக்கும் எனச் சிந்தித்து  அத்தகைய நிலையிலுள்ள மக்கள் மக்கள் மனம் திருந்தி உயர்ந்து வாழும் வாழ்க்கை முறைகளை இப்போதே வகுத்திடுவோம் எனக் கருதியே குறள்களைப் படைத்திருப்பார். 

தமிழினம் படிப்படியாகப் பல்வேறு இனத்தவரின் படையெடுப்புகளால் தனது தனித்துவமான தன்மைகளை இழக்கத் துவங்கிய நாள் துவங்கி இதோ இன்று வரை அவர்தம் குறள் நெறிகள் எக்காலத்துக்கும் தேவைப்படுமாறு சிறப்பதிலிருந்தே இவ்வுண்மையினை நாம் அறியலாம்.

இத்தகு அற்புதச் சித்தரின் வழியில் தமிழினம் முழுவதுமாக நடக்கும் நிலை துவங்க, எனது இந்த நியாயமான கோரிக்கை நிறைவேறும் நாள் உருவானால், அன்றுதான் உண்மையிலேயே நம் உலகப் பொதுமறைக்குத் தமிழ் மக்கள் தாமாக முன்வந்து, ஆயிரத்து நூற்று முப்பது குறள்களைப் போன்று ஏராளமான வைர வைடூரிய இரத்தினங்கள் பதிந்த மகுடம் சூட்டிய திருநாளாகும்.

இந்தத் திருநாள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை! 

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் தமிழகத்தில் ஆட்சியமைக்கும்போது நிச்சயம் திருக்குறளுக்கென ஒரு உலகத்தரப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் உருவாக்கப்படும் என்பதில் எமக்குள் அணுவளவும் சந்தேகம் ஏதுமில்லை! 

அது மட்டுமல்ல ஐந்தாம் தமிழ்ச்சங்கம் வள்ளுவம் காட்டும் அறநெறியில்தாம் இனித் தமிழகத்தில் ஆட்சி நிர்வாகத்தினையும் மேற்கொள்ளும் என்பதிலும் எமக்குள் மாற்றுக் கருத்து ஏதுமில்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!