வரிகள்! வரி ஏய்ப்பு! வரிச் சீர் திருத்தம்!


வரிவிதிப்பு முறை இனக்குழு முறை தோன்றி அவைகள் அரசுகளாக மாற்றம் பெற்ற காலம் முதல் செயல்பட்டு வருகிறது.

வரி விதிப்பு பொதுவாக மென்மையான வழி முறை, வன்மையான வழி முறை என இரு வகைப்படும்!

மென்மையான வரி விதிப்பு முறையைப் பின்பற்றியவர்களின் செயல் வரலாற்றில் எத்தகைய இடம் பிடித்ததோ நாம் அறியோம்! 

ஆனால் வன்மையான வரி விதிப்பு முறையைப் பின்பற்றியவர்களை வரலாறு இதுவரை கொடுங்கோலர்களாகத்தான் சித்தரித்து வந்துள்ளது!

பொதுவாக வரிவிதிப்பிற்கு உட்பட இன்றுள்ள பெரும்பாலானவர்கள் உடன்பட மறுக்கின்றனர். 

இதற்கு முதன்மையான காரணம் வருமான வரி! இரண்டாவது காரணம் வரிகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள்! 

பொருளாதார மேம்பாடு என்ற காரணத்தைக் காட்டி பல்வேறு வகைகளில் வரிகளைத் திணித்த காரணத்தால்தான் காங்கிரஸ் அரசு மக்களால் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. 

செட்டிநாட்டுச் சீமான்! கோமான்! எனப் புகழப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் நிதியமைச்சருக்குச் சாமானியர்களைவிட நடுத்தர மக்கள் எந்த அளவிற்கு தாம் விதித்த குறிப்பாகச் சேவை வரிகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என எண்ணியிருக்கவே மாட்டார்! 

அந்நாளைய அமைச்சர்கள் தொகுதிக்கு வந்தால் அவர்களை அந்தத் தொகுதியிலுள்ள பயணியர் மாளிகையில் சாதாரண மக்கள்கூடச் சந்தித்து தங்களின் குறைகளைத் தெரிவித்து, அது தொடர்பான மனுக்களைத் கொடுக்க இயலும்!

ஆனால் இன்றைய அமைச்சர்கள் தொகுதிக்கு வந்தால் அவர்கள் தங்குமிடமே பெருமபாலும் ஐந்து நட்சத்திர விடுதிகள் அல்லது தொகுதியில் வசதி படைத்த இயக்கத்தினரின் தங்குமிடங்கள், அல்லது அவர்களின் இல்லங்களில்தாம்! இது போன்ற இடங்களில் செல்வாக்குமிக்க வசதி படைத்தவர்கள் மட்டுமே அமைச்சர்களைச் சந்திக்க முடிகிறது! 

வசதியற்ற குறிப்பாக ஏழ்மையான அவர்கள் இயக்கம் சார்ந்தவர்களே அமைச்சரைச் சந்திக்க வாயிலில் வெகுநேரமாகப் பரிதாபமான நிலையில் காத்திருக்க அவர்கள் அங்கு  இருப்பதையே சட்டை செய்யாமல் அமைச்சரின் கார் வெளியேறுவதையும் அவர்கள் பரிதாபமாக அந்தக் காரின் பின்னால் மனுக்களுடன் ஓடுவதையும் நானே ஒருமுறை நேரில் கண்டு அதிர்ந்துள்ளேன்!

சாதாரண மக்களின் தொடர்பில் இல்லாத இது போன்ற அமைச்சர்கள் சேவை வரி என்ற பெயரில் சரக்குப் போக்குவரத்தில் துவங்கி உணவகம் வரை விதித்த வரிகளின் காரணமாகப் பல மடங்கு உயர்ந்த விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் செல்லும் உணவு விடுதிகளில் இருபத்தைந்து ரூபாய்க்கு விற்கப்படும் தயிர்சாதம் நடுத்தர மக்கள் செல்லும் உணவகங்களில் சேவை வரிக்கு உட்படுத்தி ஐம்பது ரூபாய் கொடுத்து உண்ண வேண்டியுள்ளது.

நான்கு பேர்கள் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க மக்கள் சாதாரண தயிர்சாதத்திற்கே இருநூறு ரூபாய்கள் செலவிடவேண்டுமென்றால் இன்றைய மக்களின் வாங்கும் சக்திக்கு நடுத்தர உணவக வகைகள் கூட எட்டாக்கனிதாம்!

மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டதை அறியாமல் நம் தமிழக அரசோ அம்மா உணவகம் என்ற பெயரில் இதே நடுத்தர மக்களிடம் வசூலிக்கும் வரியைச் செலவிட்டு ஐந்து ரூபாய்க்கு விற்று நல்ல பெயர் எடுக்கப் பார்க்கிறது.

ஐந்து ரூபாய் கொடுத்து அந்தத் தயிர் சாதத்தை வாங்குவதற்கு ரேசன் கடைகளில் மண்எண்ணை வாங்குவதற்கு அதிகாலை நான்கு மணிக்கே தவமிருந்து காத்திருக்கும் ஏழைகளைப் போலத் தாங்களும் கால் கடுக்க வரிசையில் நின்று காத்திருக்க விரும்பாமல் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் இது போன்ற உணவகங்களைத் தவிர்ப்பது ஓட்டு வங்கியைக் குறி வைத்து ஆட்சி நடத்தும் பரிதாபம் மிக்க நம் ஆட்சியாளர்களுக்கு எங்கே விளங்கப்போகிறது?

சேவை வரி இன்று நடுத்தர மக்கள் பயன்படுத்தும் கைபேசி துவங்கிப் பல்வேறு இடங்களில் கால் பதித்து விட்டது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் செல்லும் இடமெல்லாம் வரிச்சுமை!

வரி விகிதக் குறைபாடுகள்தாம் பெரும்பாலும் வரிக்கு உட்படுத்தப்படாமல் பொருட்களை விற்கும் நிர்பந்தத்தை உருவாக்குகின்றது!

மேலும் அப்படியே வரிக்கு உட்படுத்தி விற்றால் உண்மையான விற்று முதல் தெரிந்து விடும். மேலும் அதற்கேற்ப வருமான வரி கட்ட நேரிடும் என்ற அச்சத்திலும் பெரும்பாலும் கணக்கிற்கு உட்படாத வணிகம்தான் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

மாநில அரசின் விற்பனை வரி, மத்திய அரசின் மாநிலங்களுக்கிடையில் வரி, உற்பத்தி வரி, ஆயததீர்வு வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, சேவை வரி, போக்குவரத்து வரி, வீட்டு வரி, எனப் பல்வேறு இனங்களில் வரி விதித்துவிட்டு இறுதியாக வருமானத்தில் முப்பது சதவிகிதத்தையும் வரியாகக் கேட்டால் எவர்தாம் காந்தியாக மாறி வரி கட்ட முன் வருவார்?

திரை நட்சத்திரங்கள் துவங்கி ஆடம்பர உணவகங்கள், மாபெரும் வர்த்தக நிறுவனங்கள் உட்பட ஏதேனும் ஒரு வகையில் தங்களின் வருமானத்தை மறைக்கத்தான் பார்க்கின்றனரே தவிர யாரும் மனமுவந்து வருமான வரியினை முழுமையாகச் செழுத்தித் தங்களின் நேர்மையை இந்த நாட்டிற்குத் தெரிவிப்பதில்லை!

இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது! வருகின்ற வருமானத்தையெல்லாம் வரிக்கே கட்டிவிட்டால் வருங்காலத்தில் நிகழும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஈடு கொடுக்க இயலாதென்பதால் முடிந்தவரை தங்களின் வருமானத்தை ஏதேனும் ஒரு வழியில் சேமிப்பாக மாற்றவே பெரும்பாலான மக்கள் முயல்கின்றனர்.

முறையாக வரி செழுத்தும் ஒரு நேர்மைமிகு வணிகர் ஏதேனும் ஒரு காரணத்தால் நட்டப்பட நேர்ந்து வணிகம் நலிவடைந்த நிலையில் தன்னுடைய வருமானத்தை அப்போதய நிலைக்கேற்பக் குறைத்துக் காட்டினார் என்றால் உண்மை நிலையை அறியாமல் நம் அரசு அலுவலர்கள் அவர்களிடம் நடந்து கொள்ளும் முறையையும் நாடு நன்கறியும்.

இது போன்ற பல்வேறு காரணங்களால்தான் இந்த நாட்டில் வரி ஏய்ப்பு எனச் சொல்வதை விட வரிக்கு உட்படுத்தப்படாமல் நடைபெறும் வணிக முறைதான் பரவலாக உள்ளது. 

இதற்கெல்லாம் ஒரே தீர்வு வரிகளை எளிமைப்படுத்துவது மட்டும்தான்! இந்தத் தீர்வுதான் ஏற்றத் தாழ்வற்ற விலைவாசிக்கும், நேர்மையான வர்த்தகங்களுக்கும் வழி வகுக்கும்!

வரிகளை எளிமைப்படுத்தினால் இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் இந்த நாட்டில் வேலையே இருக்காது! அரசியல்வாதிகளும் அரசு அலுவல்களும் இந்த நிலையை உருவாக்க எப்பொழுதுமே தயாராக மாட்டார்கள் என்பதுதான் பொதுவான மக்களின் இன்றைய கருத்து!

என்னைப் பொருத்தவரை வரிகளை எளிமைப்படுத்துவதே பொருளாதார வளம் மேம்படுவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும் என்பேன். வரிகள் எளிமைப்படுத்தப்பட்டால்தான் மக்களின் வாங்கும் சக்தி தாமாக உயரத் துவங்கும்! 

மக்களின் வாங்கும் சக்தி உயரும்போது தரமான பொருட்களின் உற்பத்தி பெருகி அதன் விற்பனையும் அதிகரிக்கும்! இதுவும் நம் சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கு ஒரு வகையில் மறைமுகமாக உதவும்.

ஒரு நபரின் மாத வருமானம் இரண்டு இலட்ச ருபாய்கள் என வைத்துக் கொள்வோம்! அந்த நபரின் வருட வருமானத்தில் ஒரு சதவிகிதத்தை மட்டும் வருமான வரியாகச் செழுத்து என நிர்ணயித்தால் இரண்டாயிரம் ருபாய்தானே என மனமுவந்து அவர் வருமான வரியினைத் தாமாகவே முன்வந்து கட்ட வருவார்!

அவரிடம் மீதமுள்ள ஒரு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் ரூபாயில் ஒரு இரு சக்கர வாகனம், ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, ஒரு கணிணி என ஒரு இலட்சத்திற்கு வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த ஒரு இலட்சம் மதிப்புள்ள பொருளுக்கு விற்பனைத் தொகையில் ஒரு சதவிகிதத்தை வருமான வரியாகக் கட்டு என்றால்கூட ஆயிரம் ரூபாய்தானே என வரியைச் செழுத்துவார்!

அவர் ஓட்டும் வாகனத்திற்கு ஓட்டுநர் உரிமம் எடுக்க வருடத்திற்கு நூறு ரூபாயினை எளிமையாகச் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சோதனைச் சாவடியில் எந்தவித இலஞ்ச பேரமும் இன்றி கட்ட முடிந்தால் மனமுவந்து ஆண்டுக்கு ஒரு முறை தம் ஓட்டுனர் உரிமத்தைப் புதுப்பிப்பார். (தற்போது ஒரு ஓட்டுநர் உரிமம் பெற ஆயிரம் செலவாகிறது!  பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும்! ஆனால் அரசிற்கு கிடைப்பதோ சில நூறுகள்தாம்! மீதி இலஞ்சத்திற்கும் இடைத்தரகர்களுக்கும் செல்கிறது. மேற்கண்ட வழியில் இதே பதினைந்து ஆண்டுகளில் அரசுக்கு அவர் ஆயிரத்து ஐநூறு ரூபாய்களை செழுத்துவார்)

ஒரு நோயாளிக்கு மருத்துவர் அவரின் நோய் நீங்க ஊசி போடுகிறார்! நோயாளி எப்படிப்பட்ட திடசாலியாக இருந்தாலும் ஒரு நிமிடம் அந்த வலியை எண்ணிக் கலங்கத்தான் செய்வார். இந்த நிலையில் மருத்துவர் அவரிடம் மென்மையாகப் பேசியவாறு வலியே தெரியாமல் அவருடைய உடம்பில் ஊசியைச் செழுத்தி மருந்தினை உட்செழுத்துவார்.

இப்படிப்பட்ட வலி தெரியாத மென்மையான வரி முறைதான் ஒரு நாட்டின் பொருளாதார வளம் ஆட்டம் காணாமலும், நம்முடைய செல்வ வளம் கருப்புப் பணம் என்ற பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு நம் மக்கள் எவருக்கும் பயனின்றி வெளிநாடுகள் வளம் பெறும் நிலையையும் தவிர்க்க இயலும்!

ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்;சி காலத்தில் இத்தகைய மென்மையான வரிவிகிதங்கள்தாம் மக்களிடம் நடைமுறைப்படுத்தப்படும்! மென்மையான நடைமுறைகளால்தான் இனி வன்மையான இன்றைய நிலையை முற்றிலும் மாற்றியமைக்க முடியும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!