அயோத்திப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!

அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில்தான் மத்தியில் தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது திரு மோடி அரசு! 

அயோத்தியில் மீண்டும் பாபர் மசூதியும், புதிதாக இராமர் கோவிலும் அருகருகே கட்டப்படும் சுமுகமான நிலை உருவாகிறது என வைத்துக்கொள்வோம்!

இந்துக்களுக்கு ஆண்டு முழுவதும் ஏதேனுமொரு காரணத்திற்காகத் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்!

இசுலாமிர்களுக்கும் இந்த அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்கு வழிபாடுகள் மாதந்தோறும் நடைபெறும். அது மட்டுமன்றி அவர்களின் தினசரி வழிபாட்டு வழக்கமாக ஐந்து வேளைகள் தொழுவதற்காக பாபர் மசூதிக்கு வருவர்!

இப்வாறான நிலையில் இரு வழிபாட்டுத் தலங்களும் அருகருகே அமைக்கப்பட்டால் இரு தரப்பாரில் தீவிர மதப் பற்றுள்ள எவரேனும் ஏதேனுமொரு அற்ப காரணத்திற்காகக் கலகத்தை ஏற்படுத்த முயலுவார்! 

இது பெரிய அளவில் பரவி நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவாவதுடன், வருடம் முழுக்க அயோத்தி மீண்டும் மீண்டும் கலவர பூமியாகத்தான் மதவாத சக்திகள் உள்ளவரை இரத்தச் சகதியில் குளித்து நிலைத்திருக்கும். 

இதனால் முழுமையாகப் பாதிக்கப்படப்போகும் பரிதாபத்திற்குரியவர்கள் அயோத்தி மக்கள்தான்!

ஆனால் அதே சமயம் பிரச்சினைக்குரிய பகுதி முழுவதும் உச்ச வாய்மை மன்றத்தின் வசமாக்கப்பட்டு, அங்கு முதலாவதாக உலகத்தரம் வாய்ந்த அதி நவீன வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையைக் கட்டலாம்! 

அடுத்து இரண்டாவதாக உலகத்தரம் வாய்ந்த ஆரம்பக் கல்வி தொடங்கிப் பட்டயக் கல்வி வரை பயிற்றுவிக்கக்கூடிய ஒரு பல்கலைக் கழகம் உருவாக்கலாம்! 

மூன்றாவதாக அயோத்தி மக்கள் அனைவருக்கும் திட்டமிட்ட கட்டமைப்புடன் ஊழலற்று நூறாண்டுகள் வாழத் தகுதியுள்ள நகரியமான ஒரு வீட்டுவசதி அமைப்பைக்  கட்டித் தரலாம்! 

இவ்வாறு செய்துவிட்டால் ஒரு சில ஆண்டுகளில் அயோத்தி மக்களிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேச மக்களிடமும் தொன்று தொட்டுத் தொடரும் கசப்பான மத வேறுபாடுகள் அடியோடு தொலைந்துவிடும்.

அயோத்தி மக்கள் நிம்மதியான சூழலில் நோயற்ற உடல்நலனை உயர் கல்வியோடு தங்களின் சொந்தக் குடியிருப்புகளில் அனுபவித்தவாறு வாழ்வு தொடர்வர்!. 

இந்த தேசத்திற்குத் தலைவலியாக ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடரப்போகும் ஒரு நிரந்தரப் பகையுணர்வுப் பிரச்சினை அடியோடு தொலைந்துவிடும். இதுவே ஐந்தாம் தமிழ்ச்சங்கம் தற்போதைய மத்திய அரசிற்கு வைக்கும் தாழ்மையான கோரிக்கை!

பாபராக இருந்தாலும் இராமராக இருந்தாலும்  அவர்கள் உண்மையிலேயே தத்தம் மதம் சார்ந்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென விரும்பினால்தான் அவர்கள் உண்மையில் பிரபஞ்சத்தைக் காக்கும் நல்ல சக்திகள்! 

மாறாக தங்களுக்கெனத் தனித்தனியே வழிபாட்டுத் தலங்கள் அமைத்து ஏற்படும் வன்முறைகளால் தங்கள் மக்கள் தொடர்ந்து இரத்தச் சகதியில் குளித்திருக்க விரும்பினால் அவர்கள் எத்தகைய சக்திகள் என்பதை அமைதியையும் சமாதானத்தையும் மட்டுமே விரும்பும் பெரும்பாலான மக்களின் முடிவிற்கே விட்டுவிடலாம்!

நாட்டு நலனில் அக்கறையுள்ள எந்த ஒரு உள்ளமாக இருப்பினும் நிச்சயம் இந்த நியாயமான கோரிக்கையை நிராகரிக்க மாட்டார்கள் என ஐந்தாம் தமிழ்ச்சங்கம் உறுதியாக நம்புகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!