வியாழன், 8 மே, 2014

வழிபாடுகள் சரியா? எண்ணங்களின் வலிமை

Leave a Comment

எண்ணங்களின் வலிமையால் பிரபஞ்ச சக்திகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்பதை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர்!

அதனால்தான் தங்களின் எண்ண ஆற்றலை ஒருமுகப்படுத்துகின்ற இடமாகவும் கோயில்களை அமைத்துக்கொண்டனர்! இன்றுள்ள மிகப்பிரம்மாண்டமான சிவத்தலங்கள் முன்னர் நமது தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் அரண்மனைகளாக விளங்கியிருக்க வேண்டுமென நான் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன்!

இந்த அரண்மனைகள் அந்தக்காலத்திலேயே மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டதற்கு காரணம் இதுதான்! அதிகளவில் மக்கள் திரண்டு தங்களின் எண்ண ஆற்றலை ஒருமுகப்படுத்துவதற்கு வசதியாக இருக்கவே இவ்வாறு பிரம்மாண்டமாக இவை கட்டப்பட்டன!

வடவர்களின் ஆதிக்கத்தில் இவை வீழ்ந்த பின்னர் மக்களும் இவர்கள்தம் வழிபாட்டு முறைக்கு மாறத்துவங்கினர்! பின்னர் பதினென் சித்தர்கள் முருகனின் தலைலையில் மூடத்தனமான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி நின்ற தமிழக மக்களை நல்வழிப்படுத்த முயன்றனர்!

அவர்களால் எழுப்பப்பட்ட ஆலயங்களும் பின்னாளில் வடவர்களின் ஆதிக்கத்தில் வீழ்ந்தன! இதனைத் தொடர்ந்து சோழர்களின் ஆட்சிகள் சற்று வலிமை குன்றிய காலகட்டத்தில் கூடத் தொடர்ந்து மக்களை நல்வழிப்படுத்துவதற்கெனவும் எண்ணங்களை பிரபஞ்ச சக்திகளின் மேல் செழுத்தி மழை வளம் பெறவே மாரியம்மன் திருக்கோயில்கள் கட்டப்பட்டன!

இந்தக்கோவில்களிலும் பின்னாளில் கட்டுக்கதைகளும், மூடத்தனமான பழக்கவழக்கங்களும் வடவர்களின் தூண்டுதலால் புகுத்தப்பட்டுவிட்டன!

இன்றுள்ள திருக்கோயில் வழிபாடுகள் முற்றிலும் அங்கு ஆதிக்கம் செழுத்தும் மதவாத சக்திகளின் சுயநல நோக்கத்திற்காக நிகழ்த்தப்படுகின்றன! இங்கு செல்லும் நம் தமிழ் மக்களின் எண்ணங்களும் சுயநல நோக்கங்களாக மாறிவிட்டன!

இந்த நிலையிலுள்ள நம் கோயில்களை நாம் முற்றிலும் மாற்றியமைத்து மீண்டும் பழைய அரண்மனைகளின் நிலைக்கு கொண்டுவரவேண்டும்! அந்த நிலை உருவாகினால்தான் தமிழினம் உலகையும் பிரபஞ்ச சக்திகளையும் மீண்டும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்!

நம் தமிழக இளைஞர்கள் மனது வைத்தால் இதனை கட்டாயம் நிறைவேற்ற முடியும்! இத்தகு காலம் வந்துவிட்டாலே போல கலிகாலம் முடிவுக்கு வந்து அன்பும் அகிம்சையும் வாய்மையும் கருணையும் பொங்கி வழியும் மேலுலக வாழ்க்கை முறையை இந்த மண்ணிலேயே நாம் வாழ முடியும்!

நான் கோயில்களுக்கு செல்வதை கிட்டத்தட்ட நிறுத்தியே விட்டேன்! அதற்கு காரணம் இதுதான்! இன்று கோயில்களுக்கு வருவோரில் எண்பது சதவீதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு பொன் வேண்டும் பொருள் வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என வருபவர்களாகத்தான் இருக்கின்றனர்!

மீதமுள்ள இருபது சதவீதத்தினர் தங்களின் துன்பங்களை நீக்கு என வேண்டுவதற்கு வருபவர்களாக உள்ளனர்! எனவே கோயில் வாசலில் உழைப்பதற்குச் சோம்பிப் பிறரிடம் கையேந்தும் பிச்சைக்காரர்களும் கோயில் உள்ளே எனக்கு அதைத்தா இதைத்தா என வேண்டி நிற்கும் மனதளவிலான ஏழைகளும்தான் நிறைந்துள்ளனர்!

அதுமட்டுமன்றி கடவுள் சந்நிதானத்தில் பணம் படைத்தவர்களுக்கு ஒரு வழி ஏழைகளுக்கு ஒரு வழி! கோயில்களில் தொங்கும் மணிமுதல் மண்வரை இன்னாரது உபயம் இதுவென விளம்பரம் வேறு! இதைத்தான் அந்த ஆண்டவனும் விரும்புகிறாரா!

இத்தகு நிலைதான்  வழிபாடுகளில் சற்று மாற்றங்கள் இருந்தாலும் இன்றுள்ள அனைத்து மத அமைப்புகளின் திருத்தலங்களிலும் உள்ளது! இத்தகு சூழல் நிலவும் கோயிலுக்கு நான் சென்றால் எனது உயர்ந்த எண்ணங்கள் சுயநல நோக்கர்களின் எண்ணங்களில் அமிழ்ந்து வலுவற்றதாகி விடுகிறது!

இதனால் எனக்கும்கூட சிறிதளவு சுயநல நோக்கம் உருவாகி என்னை மறந்து என் துன்பங்கள் நீக்கி; நிம்மதி தாருங்கள் என இயற்கை சக்திகளிடம் வேண்டிவிடுகிறேன்!

அந்தக்கணமே நானும் இந்த பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் சேர்ந்து ஏழையாகி விடுவதாக உணர்கிறேன்! மேலும் கோயில்களில் நிலவும் மூடத்தனமான பழக்க வழக்கங்களும் என் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை! இதனாலும் நான் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டேன்!

ஆனாலும் எனக்கு அவ்வப்போது ஏதேனுமொரு கோயிலிலிருந்து அழைப்பு வரும்! அது என்னை வழி நடத்தும் எனது முருகனாக அல்லது என்னை நல்வழிப்படுத்தும் என் கண்ணனாக இருப்பர்! அவர்கள் அழைப்பு வந்த அடுத்த சில மணித்துளிகளில் நான் அங்கு இருப்பேன்!

நான் நமது மாணவச்செல்வங்களை இதனால் கோயிலுக்கு செல்லாதீர்கள் எனச் செல்ல வரவில்லை! எனக்கு அந்த தகுதியும் இல்லை! நான் என்ன ஞானியா? உங்களைப் போன்ற  சாதாரண மனிதன்! எனினும் எனது மனதிற்கு பட்டதைச் சொல்வதில் தவறில்லை எனவே நினைக்கிறேன்!

வாய்மை இதயம் படைத்த நம் தமிழக மாணவர்கள் அதிக அளவில் திரளாக இனிக் கோயிலுக்கு சென்று தங்களின் எண்ணங்களை இயற்கை சக்திகளை நோக்கி இப்படி வெளிப்படுத்த வேண்டும்!

இயற்கை சக்திகளே உங்களில் நல்ல சக்திகளின் ஆதிக்கமே இனி உலகெங்கும் நிறையவேண்டும்! அதற்குத் துணை செய்ய நானும் உங்களுடன் இணைந்து எனது பங்கிற்கு என்னாலான உதவிகளை உலக மக்களின் நன்மைக்கெனச் செய்வேன்!

மக்களிடமுள்ள அறியாமை இருள் நீங்கவேண்டும்! மூடத்தனப் பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும்! அன்பும் கருணையும் அகிம்சையும் உலகெங்கும் பரவ வேண்டும்! உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற நிலை உருவாக வேண்டும்!

இது போன்ற உயர்ந்த எண்ணங்களை அந்தக் கோயில் முழுவதும் வெளிப்படுத்துங்கள்! உங்களின் எண்ணிக்கை பலமடங்காக அங்கு வலுப்பெற்று இருந்தால்தான் உங்களின் உயர்ந்த எண்ணங்கள் வலுப்படும்!

அங்கு எதற்கெடுத்தாலும் பிரபஞ்ச சக்திகளிடம் உழைக்காமல் தனது மனநிலையை செம்மையாக வைத்துக்கொள்ளாமல் பிச்சை குணமுள்ள பலவீனமான மனதளவிலான ஏழைகளின் எண்ணங்கள் வலுவான உங்களின் எண்ணங்களால் வலுவிழந்து அவை நாளடைவில் உங்களின் உயரிய எண்ணங்களில் அமிழ்ந்துவிடும்!

இதன் எதிரொலியாக அவர்களின் சுயநல நோக்க எண்ணங்கள் தொலைந்து உங்களின் உயர்வான எண்ணங்களின் தாக்கத்தில் செம்மை பெற்று நாளடைவில் அவர்களின் எண்ணங்களும் உயர்வானதாக மாறத்துவங்கும்!

அதுமட்டுமின்றி இளைஞர்களாகிய உங்களின் உயர்வான எண்ணங்கள் அங்கு மனதளவிலும் உடலளவிலும் நலிந்து நிற்கும் மக்களின் எண்ணங்களை இளமையாக்கும்!

அவர்களும் உங்களைப் போலத்தானே இளமையில் உயர்வான எண்ணங்களைச் சுமந்து பின்னர் வாழ்வியல் சூழலில் அவற்றைத் தொலைத்துவிட்டுக் கோயிலுக்கு வந்து தேடிக்கொண்டிருக்கின்றனர்!

அதனை அவர்களிடம் கொடுக்க வேண்டிய கடமை இளைய சமுதாயத்திற்கு உரியது! எனவே என் இளைய சமுதாயமே அதிகளவில் கோயில்களுக்குச் செல்லுங்கள்! உங்களின் உயர்வான எண்ணங்களை இந்த இயற்கை வெளியெங்கும் பரவவிடுங்கள்!

அப்பொழுதுதான் இந்த உலகில் வாய்மை வெல்லும் நிலை உருவாகும்! உயர்வான எண்ணங்களால் இயற்கைச் சக்திகளைத் தம்வயப்படுத்தி ஆட்கொண்டது தமிழினம்! இந்நிலை வடவர்களின் பக்தி முறையால் தொலைந்து விட்டது!

அவர்களின் தற்போதய வழிபாட்டு முறைகளால் வன்முறைதான் வளரும்! சுயநலம்தான் பெருகும்! ஏற்றத்தாழ்வுகள் தொடரும்!

சாதிக்கொரு கோயிலெனும் இடங்கள் சாதிக்குமிடமா? தமிழினத்தை பாதிக்குமிடமா?

பணம் படைத்தவர்களுக்கு முதலிடம் ஏழைகளுக்கு கடைசி இடம் எனும் கயமை மிக்க இடத்தில் கடவுளுக்கு வேலையில்லை!

தமிழரின் விஞ்ஞான அறிவின் அடையாளமாக விளங்கும் பண்பாட்டுத்தலங்கள் இன்று பாழடைந்து மட்டுமல்ல பகுத்தறிவு தொலைந்தும் வீழ்ச்சியுற்றுள்ளது!

இதை மாற்றியமைக்கும் சக்தி தமிழக மாணவரிடத்தில் உண்டு! மீண்டும் எண்ணங்களால் உலகை ஆளும் தகுதி தமிழுக்கு உண்டு!