புத்தர் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?

புத்தர் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?

இந்த நாட்டை அன்னிய ஆதிக்கத்திலிருந்து தம்மிடமிருந்த எளிய ஆயுதமான அகிம்சையை பயன்படுத்தி சுதந்திரம் பெற்று தந்தவர் காந்தியடிகளாவார்!

அவருள் அகிம்சை எனும் ஆயுதம் ஏந்துவதென்ற எண்ணம் ஏற்பட்டதற்கு முழு முதற்காரணமே தமிழினம்தான்! 

நிறவெறித் தென்னாப்பிரிக்காவில் அவருக்குக் கிடைத்தது உயர் நாகரீகத் தமிழர்களின் நட்பு! 

மேலும் இலண்டன் மாநகரில் வழக்கறிஞர் படிப்பு பயின்று ஆங்கிலேயரைப் போல உடையணிந்த அடிகள் தம்முடைய ஆடம்பர ஆடைகளைத் துறந்து அன்றைய ஆங்கிலப் பிரதமர் சர்ச்சிலின் வாசகப்படி அரை நிர்வாணப் பக்கிரியாக மாற்றம் பெற்ற நிகழ்வு நடந்த இடம் நம் தமிழ் மண்ணில்தான்!

தனது தமிழகப் பயணத்தின்போது மதுரையின் வயல்வெளிகளில் கோவணத்துடன் காட்சியளித்த தமிழக மக்களின் நிலையைக் கண்ட அண்ணல் தனது மக்கள் நல்ல ஆடையின்றி இருக்கும்போது எனக்கு எதற்கு ஆடம்பர உடையென எண்ணியே அரை ஆடை உடுத்த முடிவெடுத்ததாக தமது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்!

எனினும் அவரின் ஆடை துறப்பு நிகழ்விற்கு நம் மக்களின் உடை மட்டுமே காரணமல்ல! நமது மண்ணுமே காரணமுமாகும்! காலம் காலமாக வடவர்களின் மத ஆதிக்கத்தில் வீழ்ந்தபோதும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் வீழ்ந்தபோதும் தமிழினம் தன்னுடைய சுயத்தன்மையை இழக்காததற்குக் காரணமே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர் நாகரீகத்துடன் கூடிய வந்தாரை வாழவைக்கும் குணம்தான்!

காந்தியவர்கள் ஆடை துறக்கக் காரணமான அன்றைய நம் தமிழக மக்கள் சோற்றுக்கு வக்கற்ற பரதேசிகள் அல்லர்! தங்களின் உழைப்பின்போது உடை தமது வேலைக்கு இடைய+றாக இருக்கக் கூடாதென்பதற்காகக் கோவணம் மட்டுமே அணிந்து கடுமையாக உழைக்கும் வர்க்கம் நிறைந்தது அன்றைய தம் தமிழ் மண்! 

அது மட்டுமன்றி நம் மண், வடவர்களின் மதவாத இனவாத சாதியவாதத்தில் வீழ்ந்துபட்டபோதும் நம் மக்களின் எண்ணங்களைப் பக்குவப்படுத்தி இன்றுவரை வழி நடத்தும் எண்ணங்களுக்குச் சொந்தங்களான சித்தர்கள் நிறைந்த மண்ணாகும்! எனவே அண்ணலுக்கு ஆடை துறக்க வேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கிய மண் தமிழ் மண்!

அண்ணலை விடுதலை வேட்கையில் உயரவைக்க நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் போன்ற உயர் எண்ணத் தமிழர்கள் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற வீறு கொண்ட பாடல் வரிகளைத் தந்த பின்னரே வெகு வேகமாகப் பரவியது விடுதலை என்னும் வேட்கை இந்த தேசத்தில்! 

விடுதலைக்கு முன்னரே மெய்ஞான ஆற்றல் பெற்று இந்த நாடு விடுதலை பெற்று விட்டதாக விடுதலை விடுதலை விடுதலை என்று விடுதலையை உணர்ந்து பாடிய பாரதியைப் பெற்றெடுத்ததும் இந்தத் தமிழ் மண்தான்!

மேலும் பழைமை மதவாதிகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் இழிவான இதிகாசங்களையும் சாடித் தம் கால கட்;டத்தில் வாழ்ந்து தம்மால் வளர்ந்த அரசியல்வாதிகள் வருங்காலத்தில் எத்தகைய சுயநலவாதிகளாகச் சாதி ஆதரவாளர்களாக விளங்கி இந்தத் தமிழகத்தைச் சீரழிப்பர் என்பதைத் தீர்க்கமாக எழுதியும் பேசியும் தம் சுயம் அறியாமல் வாழ்ந்து மறைந்து, இன்றும் தம் எண்ணங்களால் தமிழ் மக்களை வாழ வைக்கப்போராடும் தந்தை பெரியார் எனும் சித்தர் பிறந்ததுவும் இந்த மண்ணில்தான்!

பழைமையைச் சாடி மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்த வீரத்துறவி நரேந்திரனை அடிக்கடித் தம் மண்ணிற்கு வரவழைத்து “விவேகானந்தராக” மாற்றம் பெறவைத்து தனது செலவில் அமெரிக்க மண்ணிற்கு அனுப்பி உலகப் புகழ் பெற வைத்த மண் நம் தமிழக மண்!

காந்தியை மறந்த நம் அரசியல்வாதிகளைத் தவிர்த்து, இந்த தேசத்தில் இன்றும் அவரை மறவாதிருக்கவும் சென்ற நூற்றாண்டுச் சித்தர் விவேகானந்தரை இன்றும் உலக மக்கள் தங்கள் எண்ணங்களால் தொடர்பு கொள்ளவும் இந்த நாட்டின் தென்கோடியாம் தமிழகத்தின் குமரி முனையில் தமிழினம் ஏற்படுத்தி தந்த இடங்களில்தான் நாட்டு மக்கள் அலைகடலெனப் படையெடுத்து ஏற்றம் பெற முயல்கின்றனர்!

இது போன்ற அற்புதச் சித்தர்களின் உயர்ந்த எண்ணங்கள் தாங்கிய ஐந்தாம் தமிழ்ச்சங்கம்தான் தொடர்ந்து தமிழகத்தை அகிம்சை குணத்துடன் இனி வழி நடத்த வேண்டும்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!