நாகரீகம் என்பது எல்லாம் போதையான பாதையிலல்ல!

தமிழகத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை கவருவதற்காக ஆடம்பரமான விடுதிகளில் கூட்டங்களை நடத்தி அதில் கலந்து கொள்பவர்களுக்கு விருந்தளித்தும் பரிசளித்தும் கௌரவிக்கின்றன!

வணிக வாழ்வி;ல் பல ஆண்டுகளைச் செலவிட்டதால் இது போன்ற கூட்டங்களுக்கு நானும் அடிக்கடி சென்று கலந்து கொள்வதுண்டு!
அது அவர்கள் வழங்கும் பரிசுகளுக்காகவோ விருந்துகளுக்காகவோ அல்ல! மேலும் அங்கு கிடைக்கும் பரிசுகளை நான் மற்றவர்களுக்குதான் இதுவரை வழங்கி வந்துள்ளேன்!

எனினும் இது போன்ற கூட்டங்களில் நான் கலந்து கொண்டதன் நோக்கமே அங்கு கிடைக்கின்ற ஏராளமான கருத்துகளுடன் உற்பத்தி விநியோகம் என பல்வேறு நிலைகளில் கிடைக்கக்கூடிய வணிக அனுபவங்களைப் பெற வேண்டுமென்ற ஆவலில்தான்!

பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் நடத்துகின்ற இது போன்ற கூட்டங்களி;ல் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நிறுவனங்கள் மது வகைகளைப் பரிமாறி மகிழ்விப்பதென்பது இப்பொழுது ஒரு வணிக உத்தியாகவே மாறி விட்டது!

இது போன்ற கூட்டங்கள் பெரிய நகரங்களில் இரவு நேரங்களில்தான் அதிகம் நடத்தப்படுகின்றன! அல்லது பகலில் துவங்கி இரவு நேரத்தில் முடிவடைகின்றன! வௌ;வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்ளப் பெரும்பாலும் சொந்த வாகனங்களிலும், என் போலப் பேருந்துகளிலும் வருவதுண்டு!

இது போன்ற கூட்டங்களை நடத்தும் பெரிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதாக நினைத்துக் கொண்டு நன்மைக்குப் பதிலாகத் தங்களின் இத்தகு செயலால் தீமைகளை மட்டுமே உருவாக்குகின்றன!

ஆம்! இது போன்ற கேளிக்கைகளில் கலந்து கொண்டு மது அருந்திய நிலையில் வீடு திரும்புபவர்கள்; சொந்த வாகனத்தில் திரும்ப நேரிடும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது! பேருந்துப் பயணமென்றால் சக பயணிகளின் வெறுப்பை அவர்கள் பெறும் வாய்ப்பு உருவாகிறது! மேலும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களின் வெறுப்பிற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆளாக நேரிடுகிறது!

இனியாவது இது போன்ற பண்பாட்டுச் சீரழிவு நிகழ்வுகளுக்குப் பெரிய நிறுவனங்கள் துணை போகக் கூடாது என்பதே எமது பணிவான வேண்டுதல்கள்!

வணிக நிறுவனங்களின் இத்தகைய கலந்துரையாடல் நிகழ்ச்சிகளால் அவர்தம் வணிகம் வேண்டுமானால் ஆரோக்கியம் பெறலாம்! ஆனால் தங்கள் வணிக நண்பரின் ஆரோக்கியம் கெடவே முழுக்க முழுக்க இந்த நிகழ்ச்சிகள் காரணமாகின்றன! இவை உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் உறவு கொண்டீர்களே என்ற மக்கள் திலகத்தின் பாடல் வரிகளை மெய்பிப்பதாகத்தான் அமையும்!

மேலும் வணிகத்திற்கென வாடிக்கையாளர்களை அழைத்து வரவேற்பின்போது அவர்களை வாழ்த்துவதற்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய்விடும்! விருந்தில் சில நூறு ரூபாய்கள் செலவில் மது வழங்கி அவர்தம் உடல் நலனை வீணாக்குவதற்கு பதில், அதே விலையில் உயர்ந்த இரக பழ இரசப் பாட்டில் ஒன்றை அவர்களுக்கு வழங்கினால், அது பத்திரமாக அவர்கள் வீடு சென்றடைந்து, மொத்த குடும்ப உறுப்பி;னர்களையும் மகிழ்வடைய செய்யும்!

பெரிய நிறுவனங்கள் இது போன்ற மாற்று சிந்தனைகளை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டால்தான் வணிகமும் சிறந்து வணிகம் சார்ந்த மக்களின் வாழ்க்கை தரமும் ஆரோக்கியமாக விளங்கும் காலம் உருவாகும்!

குறிப்பு!

வணிகத்திற்கென நான் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கு நடைபெற்ற இடம் குளிர் பதன அரங்கமென்பதால் ஒவ்வாமை ஏற்பட்டு வலிப்பு நோய் உள்ள தொழிலாள நண்பர் ஒருவர் அந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளானார்! உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று குணப்படுத்தி மீண்டும் அரங்கிற்கு அவரை அழைத்து வந்து சால்வை அணிவித்து மகிழ்வித்துப் பின்னர் விருந்தளித்து அனுப்பி வைத்தனர்!

பகலில் அந்த நிறுவனம் நடந்து கொண்ட மனிதாபிமானத்திற்கு நான் செழுத்தும் நன்றிக் காணிக்கை இந்தக் கட்டுரை இரவில் வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு அவர்கள் நடத்திய மது விருந்திற்கும் பொருந்துமென்பதால் வணிக நிறுவனங்கள் எனது கருத்தை இதே மனிதாபிமான நோக்குடன் நிச்சயம் ஏற்றுக்கொண்டு தங்களின் அடுத்த கலந்தாய்வுக் கூட்டங்களில் மாற்றங்களுடன் இதைச் செயல்படுத்துவார்கள் என நம்புகிறேன்!

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சி காலத்தில் மதுவிற்பனை அடியோடு தமிழகத்தில் துரத்தியடிக்கப்பட்டு பெண்கள் நிம்மதியாக வாழும் வாழ்க்கை முறை அமைய இருப்பதால் வணிக நிறுவனங்களின் கலந்தாய்வுக் கூட்டங்களில் இனி இது போன்ற பண்பாட்டு விரோதச் செயல்கள் நிகழாது என்பது சர்வ நிச்சயம்.

நாகரீகம் என்பது எல்லாம் போதையான பாதையிலல்ல!
அன்பிற்கு நாம் அடிமை! தமிழ்ப் பண்பிற்கு நாம் அடிமை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!