மதில் மேல் பூனைகள்!


இந்தத் தலைப்பிற்கு உரியவர்கள் வாக்காளர்களாகிய நாம் தமிழக மக்கள்தான்! தேர்தல் காலத்தில் இவர்களது செயல்பாடுகள் மதில்மேல் பூனைகளாகவே எப்பொழுதும் அமைவதால்தான் நம் தமிழகத்தின் விரைவான வளர்ச்சியே தடைபடுகிறதெனலாம்!

நம் வாக்கு வங்கியாம் இந்த மதில்மேல் பூனை எந்தப் பக்கம் தாவுமென்பது தேர்ந்த வல்லுநர்களின் ஏராளக் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி மதிலேறி வழுக்கி விழச் செய்யும் நம் தேர்தல் வரலாறுகள் உலகறிந்தது! இதோ இன்றைய நாடாளுமன்றத் தேர்தலிலும் அது நிரூபணமாகிவிட்டது!
அந்தந்த காலகட்டத் தேர்தல் நிலவரத்திற்கேற்ப வாக்களித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளின் சுயநலப் போக்கால் தமிழினம் சீரழிந்த கதை தனியாக எழுதப்பட வேண்டும்!

இதற்கு நம்மிடம் உள்ள அகிம்சை குணம்தான் பிரதான காரணமாகும்! நம்மிடம் பின்னிப் பிணைந்துள்ள இந்த குணம் தொலைய இந்தத் தலைப்பில் எழுதினாலாவது விட்டு விட முடியுமென நம்புவோம்!

நம் தேச விடுதலையின் பிரதான ஆயுதமே அகிம்சைதான் அதுவே வேண்டாம் என்பவருக்கு பயித்தியமோ எனும் கேள்வி எழுவதும் புரிகிறது!

அகிம்சையைப் பற்றித் தெரியாமல் அதை மக்கள் எப்பொழுதும் கை கொள்ள வேண்டாம் எனக் காரணமின்றி யாம் இங்கு எழுதவில்லை! நம்மிடம் நம் தேசத்திற்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மாவின் அகிம்சை குணம் கட்டாயம் தொடரத்தான் வேண்டும்!

அகிம்சை குணத்தோடு மகாத்மா நின்று விடாது அதை ஆயதமாகக் கொண்டுதான் அவர் வெள்ளையர்களை விரட்டினார்! அதன் பிறகுதான் அவரது அகிம்சை குணம் நிறைவிற்கு வந்தது!

அவரின் அகிம்சை குணத்திற்குரிய அர்த்தத்தை நாம்தான் தவறாக எடுத்துக் கொண்டோம்! அல்லது தவறாக விளங்கிக் கொண்டோம்!

அவர் கொண்டிருந்த அகிம்சை குணம் அன்றைய வெள்ளையருக்கு எதிரானது! ஆனால் இன்று நாம் விலக்கப்பட வேண்டிய அகிம்சை குணம் நம்முடனே பிறந்து நம்மையே சுரண்டும் நம் அரசியல் கொள்ளையருக்கு எதிரானதாக விளங்க வேண்டும்!

இதற்கெனவே நம்மிடமுள்ள அகிம்சை குணத்தை அடியோடு விட்டால்தான் தமிழகம் விரைவான வளர்ச்சியையும் உலகளாவிய உன்னதத்தையும் அடைய முடியும்!

சரி எவையெல்லாம் நமக்குத் தேவையில்லாத அகிம்சை குணங்கள் என்பதைச் சற்றுப் பட்டியலிடுவோமா! பட்டியலின் முடிவில் நாம் விலக்க வேண்டியது இந்த தலைப்பா அல்லது நம்மிடமுள்ள அகிம்சை குணத்தையா என விளங்கி விடும்!

இனிய காலைப் பொழுதில் ஒரு பேருந்து நிலையத்தில் சுகமான தென்றல் காற்றை அனுபவித்தவாறு நமது பயணத்தைத் துவக்கும் பேருந்தை எதிர்பார்த்து நிற்கும் வேலையில் அதனைப் பாழாக்கும் விதத்தில் ஒரு நபர் புகை பிடிக்கத் துவங்க அவரைத் தொடர்ந்து மற்றவர்!

இந்த நச்சுப்புகை நமக்கு ஒவ்வாது இதமான தென்றல் வீசும் காலைப் பொழுதுடன் கூடிய நம் இனிய பயணம் மூச்சு முட்டித் தொலைய, அவதியுடன் மனதில் இவர்தம் செயலை எதிர்த்தவாறே பயணம் தொடங்குவது!
மிகுந்த சுத்தமும் சுகாதாரமும் வேண்டுமென நினைக்கும் நமக்கு முன்பு சாலை முழுவதும் பேருந்து நிலையங்கள் என எங்கெங்கும் ஒரே எச்சில் துப்பல்கள்! அவதியுடன் அவற்றைத் தாண்டித் தாண்டி நடந்து செல்லும் நம் நடைப் பயணம்!

குடிப்பவர்களைக் கண்டாலே வாந்தியேற்படும் மன நிலையிலுள்ள நம் அருகில் குடித்துவிட்டு வந்து ஒருவர் அமர்ந்து வரும்போது மூக்கைப்பிடித்துக் கொண்டு தொடரும் பேருந்துப் பயணம்!

வாக்களித்த நம்மிடம் கைகட்டி அடங்கி நடக்க வேண்டிய அரசியல்வாதிகள் நம் மீது அடக்குமுறை செய்வதைச் சகித்துக்கொண்டு அவர்கள் நம் எதிரில் வந்தாலே நாம் கைகட்டி மெய்பொத்தி நடக்கும் அவல நடை!

வன்முறை அரசியல்வாதிகளாலும் வன்முறைத் திரைப்படங்களாலும் வளர்த்து வீணாக்கப்பட்ட இளைய சமுதாயத் தாதாக்களுக்குப் பயந்து அவர்தம் செயல்களை அகிம்சையுடன் சகித்துக்கொள்ளும் குணம்!

ஆபாசத் திரைப்படங்கள் கற்றுத்தந்த தவறான பாதையால் அருவருக்கும் ஆபாச உடையணிந்து எதிரில் வரும் நாகரீக நங்கையர் தம் செயலால் தம்மைக் காண நேரிடும் இளைய சமுதாயத்தைத் தவறான பாதைக்குத் திசை திருப்புகின்ற செயலைத் தடுக்க இயலாத அகிம்சை குணம்!

நம் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் நம்மை அடிமையாக்கி இலஞ்சத்திலும் ஊழலிலும் திளைப்பதை அமைதியுடன் ஏற்றுக் கொள்ளும் உயர் அகிம்சை குணம்!

குண்டும் குழியுமான பாதையில் நம் சைக்கிள் பயணத்தில் குளிரூட்டப்பட்ட சொகுசு வாகனத்தில் வரும் அரசியல்வாதி நம் மீது மோதிவிட்டு பதிலுக்கு நம்மையே குறுக்கே வந்ததாக அடிக்கும்போது அளவிற்கதிகமாகக் காட்டும் அகிம்சை குணம்!

ஏழை ஏரிக்கரையில் குடிசை போட்டால் இடித்துத் தள்ளும் அரசியல்வாதிகள்! அதே அரசியல்வாதி ஏரியே இல்லாமல் செய்து பிளாட் போட்டால் ஏன் எனக் கேட்காமல் நமக்கெதற்கு வம்பென ஒதுங்குகின்ற அகிம்சை குணம்!

பட்டியல் இட்டால் நீண்டு கொண்டு அது நிலவைத் தாண்டியும் தொடரும்! அவ்வளவு அகிம்சை குணங்களுடன் நமது இன்றைய வாழ்க்கை!

இப்பொழுது சொல்லுங்கள்! நமது இந்த அகிம்சை குணம் தொடரத்தான் வேண்டுமா? நாம்; குற்றத்திற்குரியவர்களைத் தண்டிக்க மட்டும் நம்மிடமுள்ள அகிம்சை குணத்தை விட வேண்டியதில்லை! அது நமது நோக்கமுமல்ல!

தவறு செய்யும் இவர்கள் நம்மால் வளர்ந்தவர்கள்! நாம்தான் நம்மால் வளர்ந்துவிட்ட தவறுகளைக் களைய வேண்டும்! எனவே நம் தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள அவர்களிடமுள்ள சகிக்க முடியாத குணங்களை இந்தத் தமிழ் நாட்டை விட்டே விரட்டத்தான் நம்மிடமுள்ள அகிம்சை குணத்தைக் கைவிட வேண்டும்!

இதுவரை இரண்டு இயக்கங்களைக் கண் மூடித்தனமாக ஆதரித்து வந்துள்ள நமக்கு இன்றோ ஏராள இயக்கங்கள் மட்டுமன்றி ஏராளமான நடிப்புலக இயக்க மதில்களும் கூட! இந்த மதில்களைத் தாண்டித் தாண்டி விளையாடுகின்ற நம் மக்களின் மனமெனும் மதில் மேல் பூனையின் கழுத்திலுள்ள அகிம்சை மணியை அவிழ்த்து விட்டு நம்முடைய புதிய அகிம்சை குணம் தொலையச் செய்யும் மணியைக் கட்டுவதே இனி நமது வேலை!

அப்படி மதில் மேலேறி நாம் மணி கட்ட முயலும்போது மதில்கள் ஏற்படுத்தும் சிராய்ப்புகளையும் நமது அகிம்சை குணம் தொலைத்துத்தான் அனுபவிக்க வேண்டும்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!