வரிப்பணம்!

ஊருக்காக வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே தாங்கள் வாழ்வதற்கு வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே!                                     

வரிப்பணம்!

இது எவ்வாறு ஒரு அரசிற்கு வந்தடைகிறது என்பது அதை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் எவ்வாறு சரியாக புரிந்து கொள்ளப்படுவதில்லையோ அதே போலவே நேரடியாகவும் மறைமுகாமாகவும் அந்தப் பணத்தை அரசிற்கு வழங்குகின்ற மக்களுக்கும் சரியான புரிந்து கொள்ளுதல் இல்லையெனவே யாம் கருதுகிறோம்!

அதனால்தான் இதனை நம் மாணவ செல்வங்களுக்காவது சற்றுப் புரிய வைப்போமே என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டதுதான் இது!

வரிப்பணம் என்பது வெகு சுலபமாக ஒரு அரசைச் சென்றடைவது இல்லை! அரசு அலுவலர்களை கேட்டால் தாங்கள்தான் வரிப்பணத்தை அரசிற்கு கொண்டு வந்து சேர்க்கிறோம் எனத் தம்பட்டம் அடிப்பார்கள்! பாவம்! அதற்குரிய கூலியாகத்தான் மக்களின் வரிப்பணத்திலிருந்து தாங்கள் பணி செய்வதற்கு உரிய ஊதியம் வழங்கப்படுகின்றதென்பதை மறந்துவிட்டு!

அரசியல்வாதிகளைக் கேட்டால் தாங்கள் கொண்டுவரும் திட்டங்களாலும் வரி வருவாயைப் பெருக்குவதற்கு வகுக்கப்படும் சட்டங்களாலும்தான் வரிப்பணம் அரசிற்கு வருகின்றதென தாண்டுவர்! இத்தகைய பதில்களை எல்லாம் கடந்து வரிப்பணம் வரும் பாதை இதுதான்!

வரிப்பணம் என்பது முழுக்க முழுக்க மக்களின் சுமத்தலினால் வருவதுதான்! ஆம் சுமத்தல் இன்றி வரிப்பணம் ஒரு அரசைச் சென்றடையவே முடியாது என்பதை யாம் ஆணித்தரமாக நிரூபிக்க முடியும்!

உதாரணத்திற்கு நம் தமிழக அரசிற்கு வரி வருவாயில் அதிக அளவு வருமானம் தரும் பெட்ரோலியப் பொருட்களை எடுத்துக்கொள்வோம்! இந்தப் பொருட்களுக்குரிய மூலப்பொருளான கச்சா எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து கப்பலில் வருகின்றது! 
அதனைக் கன்டெய்னர்களிலிருந்து தொழிலாளர்கள் துணை கொண்டு இறக்கப்படுவதிலிருந்து சுமத்தல் ஆரம்பமாகிவிடுகிறது எனலாம்!

இது சுத்திகரிக்கப்படுவதற்கெனச் சென்னை மணலி போன்ற சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சுமப்பவர்களால் இறக்கப்படுகிறது! பின்னர் தேவைப்படும் கட்டங்களில் அது பெட்ரோலாக டீசலாக மண்எண்ணெயாக சாலை போடப் பயன்படும் தாராக மேலும் பல்வேறு மூலப்பொருட்களாக பிரிந்து பல்வேறு இடங்களுக்குச் சுமப்பவர்களால் கொண்டு செல்லப்படுகிறது!

பெட்ரோல் மற்றும் டீசலுக்குச் சுமார் முப்பத்து ஐந்து சதவிகிதம் நம் தமிழக அரசிற்கு வரியாகக் கட்டி விட்டு நாம் நம் வாகனங்களில் பயன்படுத்துவதற்கும் இன்னும் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்துகிறோம்!

எந்த ஒரு பொருளும் சுமத்தல் இன்றித் தயாராவதில்லை! அதே சமயம் அந்தப்பொருள், சுமப்பவர்களின் தயவால் அரசிற்கு வரி வருவாயை பெருமளவில் ஈட்டி தருகின்றது என்பதுவே நிச்சய உண்மை!

இதோ உங்கள் கைகளில் உங்கள் பள்ளிக்குச் சுமந்து செல்லும் பொருள் எதுவாக இருந்தாலும் உற்பத்தியான இடத்திலிருந்து உங்கள் கைகளை வந்தடையும் வரை பல்வேறு மனிதர்களால் சுமக்கப்பட்டது! இதற்குரிய வரியை நீங்கள் பல்வேறு கட்டங்களில் அரசிற்குச் செலுத்தி வாங்கியுள்ளீர்கள்!

இந்த வரிப்பணம் மக்களின் வியர்வை சிந்துதலாலும் சுமத்தலாலும் அரசு நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது! அதனை முறையாகக் கையாள்வதற்காகத்தான் அலுவலர்களை நியமித்து அதற்குரிய ஊதியத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகிறீர்கள்! அதை அனுபவிக்கச் சுமந்து வரி தந்த மக்களைத் தவிர வேறு எவருக்கும் தகுதியில்லை! 

ஒரு சகோதரியிடம் நான் இதைப் பற்றிப் பேசும்போது ஒரு குறிப்பிட்ட தலைவர் நம் தமிழ்நாட்டிற்கு நிறைய நண்மைகள் செய்திருப்பதாக வாதாடினார்!
நான் அவரிடம் நான் தலைவர் என்றால் அது கர்மவீரர் காமராசரை விடத் தகுதியானவர்கள் யாருமில்லை! தம் சட்டை பையில் இருநூற்று அம்பது ரூபாய்கள் வைத்துவிட்டு மறைந்தவர் அவர்! நீ குறிப்பிடும் தலைவர் அப்படிப்பட்டவரல்ல என்றேன்!

அவர் மேலும் அந்தத் தலைவரை உயர்த்தி வாதாடினார்! நான் அவரிடம் கடைசியாக இந்தக் கேள்வியைத்தான் கேட்டேன்! 

நீ என்னிடம் பத்து ரூபாயைத் தருகிறாய் என வைத்துக்கொள்வோம்! அதை நான் உனக்குத் திருப்பி தரும்போது எப்படித் தர வேண்டும் எனக் கேட்டேன்! பத்து ரூபாயாகத் தர வேண்டுமென பதில் வந்தது! 

அதற்கு நான் இவ்வாறு பதிலலித்தேன்! நீ உயர்த்திப் பேசும் தலைவர் அந்தப் பத்து ரூபாயில் பாதியை எடுத்துக்கொண்டு மீதியை தன் உழைப்பிலிருந்து வழங்குவது போல உனக்கு இலவசத் திட்டம் என்ற பெயரில் திருப்பித் தருபவர்! 

கர்மவீரரோ உனது பத்து ரூபாயைப் பனிரெண்டு ரூபாயாக உயர்த்தி உனக்குத் திருப்பி தந்தவர்! இது போன்ற தலைவர்கள்தான் இனி நாட்டிற்குத் தேவை! அதை விடுத்து பாவம் செய்துவிட்டு அதற்குப் பரிகாரம் செய்து தம் தவறை மறைக்க முயலும் பரிகாரத்தலைவர்களை தலைவர்களாகவே இனி மனதிலும் நினையாதே என்றேன்! 

சகோதரி தனது தவறை ஒப்புக்கொண்டார்! இளைய சமுதாயம் கண்டிப்பாக எனது கருத்தை ஏற்றுக்கொள்ளும்!

எனவே இனியாவது மக்கள் தாங்கள் சுமந்து தந்த வரிப்பணத்தை நிர்வகிப்பவர்கள் ஏய்ப்பு செய்யாமல் முறையான திட்டங்களுக்கு செலவிட வேண்டுமென்பதை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்க வேண்டியதும் அவர்கள் கடமைதான்! 

அது மட்டுமல்ல இன்று மக்களின் வரிப்பணத்தில் சேவகம் செய்ய அமர்த்தப்பட்ட பெரும்பாலான அரசு அலுவலர்கள் தங்களின் வேலை நேரத்தை முழுமையாகத் தம் பணிக்கு அர்ப்பணிப்பதில்லை. பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த வேலைகளை அல்லது நிறுவனங்களைக் கவனித்துக் கொண்டு பகுதி நேரம்தான் வேலைக்கு வருகின்றனர்.

காலை ஆறு மணிக்குத் தம் கடையைத் திறந்து இரவு பதினொரு மணி வரை கடுமையாக உழைக்கும் வணிகர்களும், அவர்கள் வரி வசூலித்துத் தரக் காரணமான பல்வேறு தரப்பட்ட வரிக்குட்படுத்தப்படும் பொருட்களும் ஏராளமான தொழிலாளர்களின் சுமத்தலினால்தான் அரசுக்கு வரியாகச் சென்று பின்னர் அரசு அலுவலர்களுக்குச் சம்பளமாக, போனசாக, ஓய்வூதியமாக இன்ன பிற சலுகைகளாக வழங்கப்படுகிறது.

தங்களின் சம்பளம் பல்வேறு தரப்பட்ட மக்களின் வியர்வையில் வருவதென இனியாவது உணர்ந்து அரசு அலுவலர்கள் தங்களின் வேலை நேரத்தை முழுமையாக மக்கள் சேவைக்கு வழங்க முன்வர வேண்டும்.

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் இந்த மாற்றங்களை வெகு விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தும்.

இதைப் புரிந்து கொண்டு இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை ஆதரிக்க விரும்பும் தமிழக மாணவச் செல்வங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!