எங்கள் ஊர் சல்லிக்கட்டு! சல்லிக்கட்டுக்குத் தடை! உச்ச வாய்மை மன்றத் தீர்ப்பு!


சேலம் மாவட்டத்தில் சென்னை கொச்சின் பிரதான சாலையில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் எங்கள் மகுடம்சாவடி! நகர நாகரீகத்தின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழந்துவரும் ஏராளமான கிராமங்களைப் போலத் தனது தனித்துவமான சிறப்புகளைத் தனக்குக் கிடைத்த பெயரிலுள்ள மகுடத்தைச் சாவடிப்பது போல வெகுவேகமாக இழந்துவருவதில் எங்கள் கிராமமும் விதிவிலக்கல்லவே!

மேற்குறிப்பிட்டுள்ள பண்டிகை வருடம்தோறும் தவறாது எங்கள் ஊரில் நடைபெற்று வருவது வழக்கம்! ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டில் எங்கள் ஊர் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தப் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுவிட்டது!

தமிழர்களின் வாழ்க்கையில் பண்டிகை என்றாலே அதற்கொரு சரியான நோக்கமும் காரணமும் இருந்தே தீரும்! அது மட்டுமன்றி தமிழர்களைப் பிரித்தாண்டு சுய லாபம் காணும் தீய சக்திகளிடமிருந்து நல்வழிப்படுத்தி தமிழர்களிடம் நிலவும் வேற்றுமைகளைக் கலைந்து ஓற்றுமையை வளர்க்க உருவாக்கப்பட்ட இது போன்ற திருவிழாக்களின் நோக்கம் குலைந்து வருவதை எண்ணிக் கலக்கமுற்றதன் விளைவே எனது இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதின் நோக்கம்!

இதில் உள்ள அனுபவக் கருத்துகளை ஏற்று, களையிழந்து போன இது போன்ற திருவிழாக்களின் முக்கிய நிகழ்வு வரும் ஆண்டுகளிலாவது தொடர எங்கள் ஊர் இளைஞர்களிடம் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்தி ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துமென்றால் அது எனது எண்ணங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவதை விட இந்தத் திருவிழாவிற்கெனச் சங்கம் அமைத்துப் போராடும் எங்கள் ஊர் இளைஞர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நான் எடுத்துக்கொள்வேன்!

சரி எங்கள் ஊர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்விற்குள் இனி செல்வோம்!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் துவங்கும் முன் எங்கள் ஊர்ச் சிறுவர்களுக்குள் பரபரப்பு துவங்கிவிடும்! ஆம் எருதாட்டப் பண்டிகை வரப்போகிறது! நம் ஊர்க்காளைகள் ( வேறு யார் இளைஞர்கள்தான் ) எருதாட்டக் காளைகள் தேடிப் புறப்பட்டுவிட்டனரா! இது எங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் அடுத்த கேள்வி!

எங்கள் ஊர் புளிய மரங்களை எங்கள் கண்கள் தேடி ஏங்கித்தவிக்கும்! எருதாட்டக் காளைகள் கட்டும் இடங்கள் அவையல்லவா!

அதிகாலைப் பொழுது! அதோ ஆரவாரக் குரல்கள் கேட்கிறது! எங்கள் ஊர் இளைஞர்கள் இரவு பகலாகக் காடுமேடுகளில்  அலைந்து திரிந்து இருபுறமும் நீண்ட கயிறுகள் கொண்டு கட்டி அழைத்துவரும் எருதாட்டக் காளைகளின் ஆவேச அணி வரிசை! ஊர் எல்லையில் கேட்கும் இளைஞர்களின் உற்சாகக் குரல்களுக்குப் பதில் கொடுக்கும் எங்களின் உற்சாகக் குரல்கள் உறக்கம் விழித்து எழுந்த அதிகாலை உதய சூரியனையும் சுறுசுறுப்பாக்கிவிடும்!

எருதாட்டக் காளைகளை அருகில் சென்று காண எங்களுக்குள் அச்சம் கலந்த உற்சாகம்! கூடவே பயமும்! எருதாட்டக் காளைகள் முட்டிவிட்டால்? அது தவிரப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் வேறு!

பிரம்மாண்டமான திமில் உடைய சீரான கொம்புகள் சீவி விடப்பட்டு நிற்க இரு புறமும் வடம்பிடித்து வரும் எங்கள் ஊர் இளைஞர்களை தம் கொம்புகளால் முட்டப்பார்த்தும், முரட்டுத்தனமாகக் கால்களால் உதைக்க முயன்றும் ஆவேசப் பாய்ச்சல்களோடு புளிய மரங்களுக்கு இடையில் கட்டவிடாமல் சீறிப்பாயும் முரட்டுக் காளைகள்!

அச்ச உணர்வு என்னுள் உறைந்து நிற்க ஆவலோ அருகில் சென்று பார்க்கத் தூண்டும்! இரு புளிய மரங்களும் வேறோடு சாய்ந்துவிடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு காளைகளின் ஆவேசப் பாய்ச்சல்!

இவை தவிரச் சிறுவர்களாகிய எங்களைத் தமிழ்த் திரையுலக நகைச்சுவை நடிகர்களைப் போன்றே நோஞ்சானாக குட்டையான கொம்புகள் உடைய மசக்காளைகள் என்ற பெயரில் எங்களை மகிழ்விக்கும் அன்புக்காளைகள்! ஒரு பக்கம் அச்சமென்றால் மறுபக்கம் சிரிப்பும் தேவைதானே!

ஒரு வாரம் முன்னரே வந்துவிடும் இந்த எருதாட்டக் காளைகளால் எனது படிப்பு தொலைந்து போனதென்னவோ உண்மைதான்! வேறு வழியின்றிப் பள்ளிக்குச் சென்றாலும் கவனம் முழுக்கக் காளைகளின் மீதும் வரவிருக்கும் முனியப்பன் பண்டிகையின் மீதும்தான்!

இதோ நாங்கள் எதிர்பார்த்த வெள்ளிக்கிழமை! முனியப்பன் பண்டிகையும் வந்துவிட்டதே! அன்றைய தினம் பள்ளிக்கு விடுமுறை விடாவிட்டாலும் வருடத்திற்கு ஒருமுறை அதுவும் ஒரே நாளில் முடிந்துவிடுகின்ற பண்டிகையைத் தவிர்த்துவிடமுடியுமா! அதனால் நான் அன்று பள்ளிக்கு விடுமுறை தந்துவிடுவேன்! நான் மட்டுமல்ல எங்கள் ஊர் சிறுவர்கள் எல்லோரும்தான் இதில் அடக்கம்!

விழா மாலை நான்கு மணிக்குத்தான் துவங்கும்! விழா துவங்குமிடமான எங்கள் ஊர்க் காவல் தெய்வங்கள் அய்யனார்கள் ஒரு வாரம் முன்னரே வண்ணமடிக்கப்பட்டு புது பொழிவுடன் திருவிழாவிற்கு தயாராகிவிடுவார்கள்!

காண்பதற்கே அச்சமூட்டும் பார்வை! ஆனாலும் அவர் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் சைவக் கடவுளர்களில் ஒருவர்! வெள்ளிக்கிழமையில் திருவிழா காணும் அவருக்குப் படைக்கப்படும் உணவு சைவ வெண் பொங்கல்தான்! அய்யனார் மிக நல்லவர்! சிறுவயதில் அவர்மேல் ஏறி விளையாடிய அனுபவமும் எனக்கு உண்டு!

அய்யனார் எதிரே அவரது  எருதாட்ட மைதானம்! மைதானத்தைச் சுற்றிலும் எங்கள் ஊர் மட்டுமன்றி அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் திரண்டிருக்கும் நண்பர்கள் கூட்டம்!

அய்யனாரைச் சுற்றிலும் திடீர்க்கடைகள், வண்டி வாகனங்கள் இராட்டினம் இன்னும் இன்னும் ஏராளத் தின்பண்டக் கடைகள்! உறவுகள் பாசம் காட்டி கண்டதையும் வாங்கித்தர வயிறு கொள்ளாத தின் பண்டங்களுடன் அய்யனாரின் சைவப் பொங்கலும் எனது வயிற்றில் இடம் பிடித்துவிடும்! நல்ல வேளை அன்று மட்டுமல்ல இன்றுவரை அவரால் உயிர்ப்பலி சாப்பாடு இல்லாமல் போனது!

நிறைந்த வயிறு ஒரு அவதி! அன்றணிந்த புதுத்துணி வேறு இன்னொரு அவதி! இந்தத் துன்பங்களுடன் எருதாட்டக் காளைகளைப் பற்றிய அச்ச உணர்வும் சூழ்ந்து கொள்ள கூட்டத்தில் மிதிபட்டு, கசங்கி, பாய்ந்து வரும் முரட்டுக் காளைகள் மற்றும் எங்களைச் சிரிக்க வைக்கும் மசக்காளைகளின் வரவு கண்டு என் கண்கள் வழி மேல் விழி பதிக்கும்!

முனியப்பனைச் சுற்றியவாறு ஒவ்வொரு காளையாக மைதானத்திற்குள் வரத்துவங்கும்! முரட்டுக்காளைகள் எங்கள் ஊர் இளைஞர்களைத் தரதரவென இழுத்தவாறு விரைந்தோடி வர, மசக்காளைகள் பாவம் அவர்களால் இழுபட்டவாறு மந்தமாக மைதானத்தை வந்தடையும்!

முரட்டுக்காளைகளின் பாய்ச்சல்கள் கண்டு அச்சமுடன் எழும் எங்கள் குரல்கள் மந்த காளைகள் கண்டு உற்சாகக் கூக்குரலிடும்! சரி மைதானம் உள்ளே தயார் நிலையில் காளைகள்! இவைகளுடன் மோதப்போகும் கதாநாயகர்கள் யார்? இங்குதான் உங்கள் ஆர்வத்திற்குப் புதிர் வைத்துச் சற்று சிறிய இடைவேளை!

இடைவேளை முடிந்து அனைவரும் வந்து அமர்ந்தாயிற்றா?

காட்சி சற்றுப் பின்னோக்கிச் செல்கிறது!

ஒரு வாரம் முன்பே நான் எங்கள் ஊர் இளைய, மற்றும் முதிய தச்சுத் தொழிலாள நண்பர்களின் தொழிற்சாலைகளில் தவமிருப்பேன்! ஆம்! அங்குதானே எருதாட்டக் காளைகளுடன் மோதப்போகும் கதாநாயகர்கள் தயாராகிறார்கள்!

என்னடா இது தச்சுத்தொழிளாளர்கள் காளைகளுடன் மோதப்போகும் கதாநாயர்களைத் தயாரிக்கின்றார்களா என்ற உங்களின் வியப்பான கேள்வி எனக்கும் புரிகிறதுதான்!

ஆம் எருதாட்டக் காளைகளுடன் மோதப்போகும் கதாநாயகர்கள் அங்குதான் இன்றுவரை உருவாகி வருகின்றனர்! சரி புதிர் போட்டது இத்துடன் போதும்! பண்டிகைக்கு வேறு நேரமாகிக்கொண்டிருக்கிறது அல்லவா!

கிராமச் சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்தும் இருபுறமும் பனை நுங்கு உருளைகள் பொருத்திய வண்டியைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா! அது போன்று நீண்ட கழியின் ஒரு முனையில் ஒரு மரச்சட்டம்! அதன் இரு பக்கங்களிலும் மரத்தால் செய்யப்பட்ட உருளைகள்! உருளும் சக்கரங்களை இணைத்துள்ள சட்டத்தின் நடுவே ஒரு சோளக்காட்டு பொம்மை உருவம்!

இவைகள்தான் எருதாட்டக் காளைகளுடன் மோதப்போகும் கதாநாயகர்கள்!

என்னடா இது இவன் குறிப்பிடும் எருதாட்டப் பண்டிகை மாடுபிடிக்கும் சல்லிக்கட்டாக இருக்கும் என்று நாம் நினைத்திருந்தோம், ஆனால் இவன் வேறு கதை விடுகிறானே என்ற உங்களின் ஆதங்கம் எனக்கும் புரிகிறதுதான்!

ஆம்! காளைகளுடன் மோதப்போகும் கதாநாகர்கள் எங்கள் கிராமத்து இளைஞர்கள் அல்லர்! நீண்ட கம்பின் முடிவில் சக்கர உருளைகள் பொருத்தப்பட்ட இந்தச் சோளக்காட்டுப் பொம்மை உருவங்கள்தான் எருதுகளுடன் மோதப்போகும் கதாநாயகர்கள்!

இதோ பண்டிகை துவங்கப்போகிறது! முன்னதாக எங்கள் ஊர் இயற்கை அமைப்புப்படி கஞ்சமலையிலிருந்து ஓடிவரும் பொன்னி நதியால் நான்கு பகுதிகளாகப் பிரிந்து இவை முறையே நான்கு ஊர்களாக உள்ளன! அதுமட்டுமன்றி எங்கள் ஊரின் அருகிலுள்ள சில கிராம மக்களும் இந்தப் பண்டிகையில் கலந்து கொள்வர்!

அவர்கள் கொண்டு வரும் காளைகளும் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதால் அந்தந்த ஊர் முக்கியப் பிரமுகர்களுக்கும் அந்த ஊரின் சிறந்த காளைக்கும் மாலை அணிவித்து சந்தனம் பூசி மரியாதை செய்வது எங்கள் ஊர் வழக்கம்!

இது போன்ற பண்டிகைகளில் சாதியால் பிரிந்த தமிழினம் வேற்றுமை பாராட்டாமல் ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொள்வதை எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவிலும் கண்டு நான் மகிழ்வதுண்டு! தொன்று தொட்டு வரும் இந்த வழக்கம் முடிவடைந்தவுடன் திருவிழா துவங்கிவிடும்!

மைதானத்தில் ஆங்காங்கே இரு புறமும் கயிறுகள் கட்டப்பட்டு அவற்றை பிடித்தவாறு எங்கள் ஊர் இளைஞர்கள் காளைகளை உசுப்பேற்ற அதன் எதிரில் இந்தப் பொம்மைக் கதாநாயகர்களை ஒருவர் உருட்டிக் கொண்டு முன்னே செல்வார்!

இதைக் கண்டு ஆவேசமுற்ற காளைகள் வேகமாக முன்னேறி அந்த பொம்மைகளைத் தன் கொம்புகளால் முட்டித் தூக்கி வானில் எறியும்!
தந்திரமாகத் தனது பின்பக்கமாக உருட்டப்பட்டு வரும் பிற பொம்மைகளைத் தலை சாய்த்தவாறு கண்டு தனது பின்னங்கால்களால் உதைத்து துவம்சம் செய்யும்! காளைகளின் இந்த ஆவேசப் பாய்ச்சல் சில சமயங்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் மீதும் வெளிப்படும்!

அவிழ்த்து விடப்பட்ட நெல்லி;க்காய் மூட்டை போல நாங்கள் சிதறிச்சிதறி ஓடிப் பின்னர் ஒன்று கூடிக் காளைகளின் முரட்டுத்தனத்தை அச்சம் கலந்த பார்வையுடன் இரசிப்போம்!

இதற்கு நேர் மாறாக மசக்காளைகள் இந்தப் பொம்மைகளை கண்டுக் பயந்து ஓட எங்கள் ஊர்ச் சிறுவர்கள் கவுண்டமணி செந்தில் நகைச்சுவைக் காட்சியைக் காண்பது போன்று கை கொட்டிச் சிரிப்பார்கள்! சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்துவிடும் இந்த அதி சிறப்பான பண்டிகை!

இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதின் நோக்கம் இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை! ஆனால் சித்தர்கள் இதைத் தௌளத்தெளிவாக எனக்குப் புரிய வைத்து விட்டனர்!

இந்தப் பண்டிகைக்கென அழைத்து வரப்படும் காளைகளின் வளர்ப்புப் பின்னணி பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம்!

பொதுவாக எங்கள் சேலம் மாவட்டப் பகுதிகளில் வளர்க்கப்படும் பசு மாடுகள் அவை முதலாவதாக ஈனும் கன்று காளையாக இருந்தால் அதைக் கடவுளுக்கென நேர்ந்து அதைச் சுதந்திரமாக விட்டுவிடுவர்!

வயல்வெளிகள் காடு மேடென இக்காளைகள் சுற்றி மேய்ந்து தாமாக வளரத்துவங்கும்! இவை பொதுவாகத் சுதந்திரமாக திரிவதால் சாதுவாகக் காணப்படும்! எவரையும் முட்டாது!

சாமி மாடு என்பதால் இந்த மாடுகள் தங்களின் வயல்வெளிகளில் உள்ள பயிர்களை மேய்ந்தாலும் கிராம மக்கள் அவற்றை விரட்ட மாட்டார்கள்! மேலும் இந்தக் காளைகளை அடிப்பது தெய்வக் குற்றமெனவும் பயப்படுவர்!

எனவே திருவிழாவிற்கு அழைத்து வரும் இந்தக் காளைகளை எங்கள் ஊர் இளைஞர்களும் அடிப்பது வாலை முறுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடவே மாட்டார்கள்!

எனினும் இந்த காளைகளைக் கொண்டு திருவிழா நடத்துவதன் உண்மையான பின்னணி இப்பொழுதுதான் எனக்கும் விளங்கியுள்ளது!

தமிழன் காரணமின்றி எந்த ஒரு திருவிழாவையும் நடத்துவது கிடையாது! தமிழனின் திருவிழா ஒன்று அறிவியல் காரணமாக இருக்கும்! அல்லது ஏதேனுமொரு சரியான காரணத்தை முன்னிட்டுதான் இருக்கும்!

எனவே எங்கள் ஊர் நடைபெறும் இந்தத் திருவிழாவின் நோக்கமும் இதுதான் என்பதை எனது உள்ளுணர்வு தீர்க்கமாகவே உணர்ந்துள்ளது!

தமிழரின் பிரதான உணவாக ஒரு காலத்தில் அறுசுவை உணவெனச் சைவ உணவு வகைகளே இருந்திருந்தது!

அந்த நாட்களில் சாதுவான இந்த காளை மாடுகளை இரகசியமாக அடித்து உண்ணும் கயவர்கள் கூட்டமும் இருந்திருக்க வேண்டும்! இது போன்ற கயவர்களிடமிருந்து சாதுவான இந்தக் காளைகள் தப்பித்துக்கொள்ள அவற்றிற்கு வீரம் ஏற்படுத்தி தரச் செய்யப்படும் பயிற்சிதான் எங்கள் ஊர் திருவிழாவின் சிறப்பிற்கு காரணம்!

சாதுவான இந்த காளைகள் வருடத்திற்கு ஒரு முறை இது போன்று கொண்டு வரப்பட்டு நல்ல உணவிடப்பட்டு பின்னர் திருவிழா நாள் வரை பொம்மைகளை கொண்டு மிரளச்செய்து பயிற்சியளித்து முரட்டுக்காளைகளாக மாற்றம் பெற்ற பின்னர் மீண்டும் பத்திரமாக அவை பிடித்து வரப்பட்ட இடங்களுக்கே கொண்டு சென்று விட்டுவிட்டு வருவதுதான் தமிழனின் விசாலமான பார்வைக்கும் பண்டிகைக்கும் அடையாளம்!

இந்தப் பண்டிகையைப் பக்தி என்ற முறையில் ஆய்ந்தால் மேற்கண்ட முடிவிற்கு வரலாம். ஆயினும் இன்னொரு கோணத்திலும் நாம் இந்தப் பண்டிகையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
தமிழில் ராசா வீட்டுக் கன்றுக்குட்டி என்ற பழமொழி ஒன்றுண்டு.
இதற்கு அர்த்தம் மேற்குறிப்பிட்ட கடவுளுக்கென நேர்ந்து விடப்பட்ட காளைகளுக்கும் பொருந்தும். இந்த பழமொழிப்படி அன்றைய நாட்களில் தங்கள் வீட்டுப் பசு ஈனும் முதல் ஆண் கன்றை அரசர்க்கு பரிசாக அளிப்பது மக்களின் வழக்கமாக இருந்திருக்க வேண்டும்.

அரசருக்கு உரிமையானவை இவை என்பதால் இவற்றைத் துன்புறுத்தினால் அரசரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் எவரும் இதைத் துன்புறுத்தவோ அடிக்கவோ துணிந்திருக்க மாட்டார்கள். எனவே இவை பெயருக்கேற்ப இராசா வீட்டு கன்றுக்குட்டிகளாகச் சுதந்திரமாக மக்களின் வயல்வெளிகளில் தங்கு தடையின்றி உணவு தேடிச் செல்லமாக வாழ்ந்திருக்க வேண்டும்.

செல்லமாக வளர்ந்து கொழுத்துத் திரியும் இந்தக் காளைகளைப் பின்னர் அசைவ உணவு முறைக்கு மாறியவர்கள் இரகசியமாக அடித்து உண்ணும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவே அவைகளுக்கு இது போன்ற பண்டிகைகள் வாயிலாக அரசர்கள் முன்னிலையில் திருவிழாக்களாக நடத்தியிருக்க வேண்டும்.

சல்லிக்கட்டு என்ற பெயரில் தென் மாவட்டங்களில் நடைபெறும் ஏறுதழுவுதல் என்ற வழக்கமும் இதே போன்ற நோக்கத்திற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்! அங்கு இன்று வரை வழக்கத்திலுள்ள முதல் மூன்று காளைகள் சாமிக்கு உரியதென வீரர்கள் எவரும் தொடாமல் விட்டுவிடுவதே இதற்குச் சான்று!

அதை தொடர்ந்து வரும் வளர்ப்புக் காளைகளைத்தான் எருது பிடிக்கும் நம் தமிழக இளைஞர்கள் அடக்கத் தயாராகின்றனர்!
காளைகளுக்கு வீரம் ஏற்படுத்தத் துவக்கப்பட்ட பண்டிகை பின்னாலில் இளைஞர்களுக்கு வீரம் என்ற பெயரில் இன்றுள்ள முறைக்கு படிப்படியாக மாற்றம் பெறப்பட்டிருக்க வேண்டுமென்பதே உண்மை நிகழ்வு!


அய்யனார் என்பவர் ஊரின் காவல் தெய்வம்! அவர் ஊரின் பிரதானமாக இருந்து நம்மைக் காக்கிறார் என்ற வலுவான எண்ணம்தான், இந்த நம்பிக்கைதான் மக்களைக் காக்கிறது! 

தவறான தகவல்கள் தந்தவர்களின் வாதத்தை ஏற்று நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு பிராணிகள் வதைச் சட்டத்தின் கீழ் இந்தப் பாரம்பரிய பண்டிகையை வாய்மை மன்றங்கள் தடை செய்கின்றதே என்ற எங்கள் கிராம மக்களின் வேதனைகள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைய வேண்டுமென்பதே எனது ஆதங்கமும்!

பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி 6.5.14 அன்று உச்ச வாய்மை மன்றம் தமிழகத்தில் சல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை விதித்துள்ளது. இது தமிழக மக்களைப் பொருத்தவரை அவர்களின் பாரம்பரியத்தை நிரந்தரமாக முடக்குவதாகத்தான் கருத வேண்டும்.

இந்த தேசத்தில் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு நிரந்தரத் தடை செய்ய வேண்டியவைகளாக ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளாக்களில் வதந்தி காரணமாக ஏற்பட்ட அசம்பாவிதங்களில் கடுமையான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதே, பதினான்கு ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் கும்பகோணம் மகாமகத்தில் ஏராளமான உயிர்கள் பலியானதே, எனவே இது போன்ற பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கும் பக்தி மார்க்கத் திருவிழாக்களையும் தடை செய்கிறோம் என உச்ச வாய்மை மன்றம் தீர்ப்பு வழங்கினால் வட மாநிலங்களில் எந்த அளவிற்கு கொந்தளிப்பு ஏற்படுமோ என்பது எமக்குத் தெரியாது.

தமிழர்கள் சகிப்புத் தன்மைக்குப் பெயர் பெற்றவர்கள் என்பது உலகறிந்த உண்மை. அந்த சகிப்புத் தன்மையை நிரந்தரமாகத் தங்களுக்குள் தக்க வைத்துக்கொண்டாலும் சல்லிக்கட்டிற்கு நிரந்தத் தடை விதித்திருப்பது எம்முள் தீராத ஆதங்கமே.

இந்த ஆதங்கம் தொலையுமா? சித்தர்களின் வழிகாட்டுதலில் நான் இன்று பகுத்தறிவுக்கு மாறி நின்றாலும் இழந்துவிட்ட எங்கள் கிராமங்களின் திருவிழாக்களின் முக்கிய நிகழ்வு தடைபட்டுப் போனதில் நம் தமிழக கிராம மக்களைப் போலவே சாமானியமான எனக்குள்ளும் ஏராளமான வேதனைகள் உண்டு!

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்!
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்!
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்!
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்!

கவியரசரின் இந்த ஆதங்க வரிகள் உலகோரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!