முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள உச்ச வாய்மை மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
இதன் காரணமாக கேரளத்தில் கடையடைப்பு போராட்டங்கள் நடந்துள்ளன.
கேரள முன்னாள் முதல்வர் திரு அச்சுதானந்தன் தமிழகத்திற்குத் தண்ணீர் கேரளத்திற்கு பாதுகாப்பு இவைதான் எங்களின் விருப்பம் எனக்கூறியுள்ளார்.
ஆறுகளின் குறுக்கே அணைகள் தேவையில்லை என நான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
அணையின் பாதுகாப்பினை வல்லுனர் குழு உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அணையில் உச்ச வாய்மை மன்றம் அனுமதித்துள்ள அளவிற்கு இனித் தண்ணீர் தேக்கலாம்.
அனுமதி பெற்ற உயரத்திற்கு தேக்கப்படும் தண்ணீரால் தமிழகத்தில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை ஏற்படும் என்பது கண்கூடு. ஏனெனில் இந்த உயரத்திற்குத் தேக்கப்பட்ட நீரால் இதுவரை பாசனம் பெற்று வந்த நிலங்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்த உரிமையை இழந்து வந்துள்ளன.
இதை எதிர்த்து கேரள அரசு இனி அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடரக்கூடும்.
அதே சமயம் கேரளத்தின் நிலையையும் நாம் இங்கு கவனத்தில் கொண்டால்தான் அவர்கள் தரப்பு நியாயமும் சரியெனப்படும். மொழியால் பிரிந்தாலும் அவர்களும் தமிழினத்தின் ஒரு பிரிவுதான்.
எனினும் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமாக இரு தரப்பினரும் சமாதானம் அடையும் வகையில் தீர்வும் உள்ளது.
தனியொரு மனிதராகப் போராடி, பவானி ஆற்றிலிருந்து ஒரு தடுப்பணையை ஏற்படுத்தி காவிரிக்கு இணையாக ஒரு நீண்ட கால்வாயை உருவாக்கிய காலிங்கராயர் அவர்கள் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார். இந்த கால்வாயை அவர் அமைத்ததால் இன்று பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
இந்தக் கால்வாயால் ஏற்படும் பலன்களை ஏராளம் எழுதலாம். அதில் முதன்மையானது புதிதாக உருவாக்கப்பட்ட இந்தக் கால்வாய் ஒரு ஆற்றிற்கு நிகராகத் தன் கடமையைச் செய்வதால் இது வெப்பச் சலனத்திற்குப் பெரும் பங்காற்றுகிறது. இதன் காரணமாகத் தமிழகம் கூடுதலாக மழை வளம் பெறுவது சாத்தியமாகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் தற்போது உயர்த்தும் நீர் மட்டத்திற்கேற்ப அணையிலிருந்து நீர் வெளியேறும் வழித்தடத்தில் பல்வேறு தகுதியான இடங்களில் புதிதாகத் தடுப்பணைகள்  கட்டி இந்த நீரைத் தேக்கிக் காலிங்கராயன் கால்வாய் போன்று புதியதாக ஒரு கால்வாயினை வெட்டி உருவாக்கி அதனைப் பாசன வசதி தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். 
மேலும் கடலில் கலந்து வீணாகும் உபரி நீரைக் கணக்கிட்டு அவற்றையும் இந்தக் கால்வாய் செல்லும் இடங்களில் ஏராளமான புதிய ஏரிகள் வெட்டிச் சேகரித்து தமிழகத்தில் ஏராளமான நிலங்களுக்கு தண்ணீர் பெறலாம்.
இதனால் அணையின் உயரம் கேரள அரசு விரும்புகின்ற அதே மட்டத்தில் தொடரும் வாய்ப்பு உருவாகும். அணையின் உயரத்தை அதிகரிப்பதால் குறையும் வனப்பரப்பும் தமிழக கேரளப் பகுதிகளுக்குள் விரிவடையும்.
இதுவே இரு தரப்பாரும் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்ளாமல் சமாதானமாகப் போவதற்கு நிரந்தரத் தீர்வு. 
அது மட்டுமன்றி தமிழக அரசு கேரள அரசுடன் மோதல் போக்கினை உருவாக்கிக்கொள்ளாமல் நட்புறவு கொண்டாடி தமிழகத்தில் உருவாகி கேரளம் வழியாகப் பாய்ந்தோடி அரபிக்கடலில் வீணாகும் ஏராளமான நீர் வளத்தைத் தமிழகம் நோக்கித் திருப்புகின்ற வழியையும் கேரள மக்கள் மின்சாரம் போன்ற வசதிகளை இதற்கு பிரதிபலனாகப் பெறுமாறு உயரிய நோக்கத்துடன் செயல்படுத்தினால் தமிழகமும் செழிப்படையும். கேரளமும் தமிழகத்துடன் நட்புறவுடன் நடந்து கொள்ளும்.
மொழியால் பிரிந்த இரு இனங்களும் மீண்டும் ஒன்றுபடும் காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வாழ்விடம் தேடி வருபவர்களும், தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி வாழ்விடம் தேடிச் செல்பவர்களும் இப்பொழுது பரவலாக அதிகரித்து வருகிறது.
இது காலத்தின் கட்டாயம். இன்றுள்ள அரசுகள் இது போன்ற வழிகளைக் கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்துமா என்பது கேள்விக் குறிதான்.
எனினும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சி காலத்தில் ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் மட்டுமின்றி மக்கள் சக்தி, மாணவ சக்திகளின் துணையுடன் இது போன்ற சிறந்த திட்டங்கள் நிறைவேறப் போவது உறுதி. இதனை நிறைவேற்ற ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தில் இணைந்து பாடுபடப்போகும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!