வானில் தவழும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும்! காற்றில் ஏறிப் பயணம் செய்யப் பாதை அங்கே இருக்கும்! எங்கும் வாழும் மழலைச் செல்வம் ஒன்றாய்க் கூடிப் படிக்கும்! இல்லை சாதி மதமும் இல்லை என்றே பாடிச் சிரிக்கும்!

மதம் என்ற சொல் தமிழுக்கு உரியதல்ல! வடவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட தமிழகத்தில் அவர்தம் மதமென்னும் வழிபாட்டு முறை தவறானதென்பதை உணர்த்த இந்தச் சொல்லை நம் முன்னோர்கள் இதற்கு வெறி என்ற பொருள்படுவதாகத்தான் பின்னர் ஏற்று பயன்படுத்தி வந்துள்ளனர்!

தமிழுக்கு அழகு செய்ய வந்த இசுலாம் கூட மதம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் சற்று கவனமாக மார்க்கம் என்றுதான் தெரிவிக்கின்றது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்!

யானைக்கு மதம் பிடித்தால் என்ன நேரும் என விளக்கத் தேவையில்லை! மதம் கொண்ட யானையால் விளைவது சர்வ நாசம்தான்!

குறிப்பாக இந்தச் சொல்லை அந்நாளைய தமிழறிஞர்கள் யானையை பீடிக்கும் நோய் என்ற பதத்தில் தேர்ந்தெடுத்த காரணமே வடவர்களின் கற்பனை தெய்வமான பிள்ளையாரை மனதில் வைத்துத்தான்! ஏனெனில் பிள்ளையாரை தெய்வமாக ஏற்கவே இல்லை நம் முன்னோர்கள்! 

யானை கட்டிப் போரடித்து வளமுற்ற தமிழ்நாடு என்ற பழமொழி வெறும் வார்த்தைக்காக உருவானதல்ல. 

காட்டு யானைகளைப் பழக்கப்படுத்தி இன்று மாடுகளைக் கொண்டு விளை நெல்லைப் போரடிப்பது போல அன்றைய தமிழகத்தில் ஏராளமான யானைகளைக் கொண்டு நெற் களஞ்சியங்களில் போரடித்துள்ளனர்.

வீட்டு விலங்குகள் போல வாழ்ந்த இந்த யானைகளை இன்று பொங்கல் பண்டிகையில் சிறப்பிப்பது போல அன்னாளில் தங்களின் வேளாண் தொழிலுக்கு உற்ற துணையான யானைகளைபோற்றி மதித்து வந்துள்ளனர் நம் தமிழர்கள். மேலும் ஏராளமான யானைகள் போர் புரிவதற்கும் சங்க காலங்களில் பயன்பட்டதால் தமிழகத்தில் யானைகள் கால்நடைகளின் எண்ணிக்கைக்குச் சமமாக அன்றைய தமிழகத்தில் வலம் வந்தன. 

இதனைச் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்ட வடவர்கள் பிள்ளையார் கதைகளைப் பரப்பி யானைகளைத் தெய்வப் பிறவிகளாக்கிவிட்டனர். எனினும் பிள்ளையார் என்பதைத் தமிழில் பிரித்தறிந்தால் பிள்ளை யார்? எனும் கேள்வி எழுகிறது. இதிலிருந்தே சிவனுக்கு மூத்த பிள்ளை என்ற வடவர்களின் கட்டுக்கதைகளை ஏற்காமல் யார் இந்தப் பிள்ளை என்று கேள்வி எழுப்பியுள்ளனர் அன்னாளையத் தமிழர்கள். அதுவே பிள்ளையார் என வழக்குச் சொல்லாகிவிட்டது. 

இன்றுள்ளது போலவே பக்தி மார்க்க காலத்தில் பிள்ளையார் சிலைகளைத் தமிழகக் கோவில்களில் புகுத்துவதற்காக ஏராளமான மதக் கலவரங்கள்  உருவாகியிருக்க வேண்டும்.

சமீபத்தில்கூட கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு சிறிய கோபுரத்தில் பிள்ளையார் சிலை மட்டும் இடைச் செருகலாகப் புகுத்தப்பட்டிருப்பது மிக நன்றாகவே புலப்பட்டது.

அதே போன்று விருத்தாசலம் என இன்று அழைக்கப்படும் திருமுதுகுன்றம் கோயிலிலும் ஒரு தூணில் புதிதாகச் செதுக்கிய பிள்ளையார் சிலையைக் காண முடிந்தது. மேலும் அந்தத் தூண் எதிரில் உள்ள தூணை விடச் சற்று பருமன் குறைவாகக் காணப்படுகிறது. தமிழர்களின் கட்டிடக்கலையில் இரு தூண்கள் ஒரே விதமாக எழுப்பப்பட்டிருந்தால் அவற்றில் ஒரே வித இடவலச் சிற்பங்கள் மட்டுமே காட்சியளிக்குமே தவிர வேறு வேறு விதச் சிற்பங்கள் மற்றும் தூண்கள் வேறு வேறான அளவிலும் இடம்பெறச் சாத்தியமே இல்லை.  

ஆதலால்தான் வடவர்களின் கட்டுக்கதைகளை நம்பித் தன்னை மதமென்னும் நாசத்திற்கு உட்படுத்திக் கொண்ட தமிழினத்தை எச்சரிக்கை செய்யவே அந்நாளைய தமிழ் அறிஞர்கள் வடவர்களின் பக்தி மார்க்கத்தை குறிப்பிடும் வார்த்தையை யானைக்கு நேரும்; நோய்க்கு இது பொருந்துமென ஏற்றுக்கொண்டனர்!

இன்று வடவர்களால் புதிதாகத் தமிழகத்தில் புகுத்தப்பட்ட பிள்ளையார் ஊர்வலங்களால், தமிழகத்தில் மதம் கொண்ட யானையின் வருகையின் போது அச்ச உணர்வுகள் ஏற்படுத்துகின்ற சூழல்கள் உருவாக்கத் துவங்கியுள்ளதே இதற்குச் சான்றாகும்! 

தமிழினம் மத உணர்வுகளிலிருந்து விடுபட தயாராவதே தமிழகத்தின் அதிவேக வளர்ச்சிக்குத் துணையாகும்! மதம் என்பது நம்மைப் பிடித்துள்ள ஓர் மிகப்பெரிய தீர்க்க இயலாத நோய் என்பதை நாம் புரிந்து கொள்வோம்!

இந்த நோயிலிருந்து விடுபட நமக்கிருக்கும் ஒரே வழி பகுத்தறிவு என்பதை நன்குணர்வோம்! பகுத்தறிவு என்பது இந்த இடத்தில் மதம் கொண்ட யானையை அடக்குவதற்குப் பயன்படும் அங்குசத்திற்கு ஒப்பாகும்! 

அசுர பலம் கொண்ட யானையினை மிகச் சிறிய அங்குசம் எனும் கருவி கொண்டு அடக்கி விட முடியும்போது நம்முள் உள்ள மிகப் பெரிய ஆற்றலான பகுத்தறிவு என்னும் கருவி கொண்டு மதத்தால் விளையக் கூடிய தேவையற்ற தீய விளைவுகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளத் தயாராவதே தமிழின உயர்வுக்கு வழி வகுக்கும்!

எனவே பகுத்தறிவு எனும் அங்குசத்தை ஒவ்வொரு தமிழரும் கைக்கொண்டு, மதமென்னும் யானையினை அடக்கி ஆள்வோம். அறியாமையில் மூழ்கிப் பக்தியெனும் போதையிலும், மூடப் பழக்க வழக்கங்களிலும் ஊறிப் போன பழமை வாதிகளுக்குப் பகுத்தறிவு மருந்தினை நாம் புகட்டத் தயாராவோம்! 

பகுத்தறிவு மருந்து கசப்பானதாக இருந்தாலும் தமிழினத்தைப் பீடித்துள்ள மதமென்னும்  நாசகார குறுகிய வட்ட நோய் அகன்று சமத்துவ சமுதாயம் எனும் விசாலமான ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் உருவாக அதுவே அருமருந்தாகும்;! 

மதமென்னும் குட்டையில் வாழும் தமிழினத்தை, குட்டையை குழப்பி வலைவீசி பிடித்து விழுங்க, வாய் பிளந்தவாறு மதவாதிகள் வலம் வருகின்றனர்! தப்பிப் பிழைக்க ஒரே வழி மதக் குட்டையிலிருந்து விடுபடுவதுதான்! 

தமிழினம், மதம் என்ற குறுகிய குட்டையிலிருந்து விடுபட்டு, பகுத்தறிவு எனும் நதி வாயிலாக, சமத்துவ சமுதாயம் எனும் சமுத்திரத்தில் சங்கமமாக வேண்டியது, இப்பொழுது மிக அவசியமான ஒன்றாகும்! 
   
சமத்துவ சமுத்திரத்தில், தமிழின உயர்வுக்குத் தேவைப்படும் கப்பல்களும், ஏராளமான செல்வ வளங்களும் நிறைந்திருப்பது எமது மனக் கண்கள் முன்னே விரிவடைவதை நன்றாகக் காண முடிகிறது!

தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு! அமிழ்தம் அவர்தம் மொழியாகும்! அன்பே அவரது வழியாகும்! எனப் பாடிய கவியின் வரிகளை மெய்ப்பித்து சமத்துவக்கடலில் இவ்வுலகமெங்கும் பயணம் செய்யத் தயாராவோம்! 

வானில் தவழும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும்! 
காற்றில் ஏறிப் பயணம் செய்யப் பாதை அங்கே இருக்கும்! 
எங்கும் வாழும் மழலைச் செல்வம் ஒன்றாய்க் கூடிப் படிக்கும்!
இல்லை சாதி மதமும் இல்லை என்றே பாடிச் சிரிக்கும்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!