குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே! நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே!

அன்னாந்து பார்க்கிற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த ஊரு சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்!

குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே!
நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே!

இது மக்கள் திலகத்தின் இலட்சிய பாடல் வரிகளில் வரும் கருத்துகள்!

சாலையோர குடிசைகளில் லாரி புகுந்து பலர் பலி, மற்றும் பலர் படுகாயம்!

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலி மற்றும் பலர் படுகாயம்!

கும்பகோணத்தில் விதிமுறைகள் கடைபிடிக்காமல் பள்ளியில் போடப்பட்ட பந்தலில் தீ பிடித்;து பல நூறு குழந்தைகள் பலி!

நூற்றுக்கணக்கான குடிசைகள் எரிந்து நாசம்! குழந்தைகள் பெண்கள் வயோதிகர்கள் சாவு! பலர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்!

புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் பாலம் இடிந்து விழுந்தது! இருவர் பலி! சிலர் படுகாயம்!

புதியதாக கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பு பைசா நகர கோபுரம் போல சாய்ந்துவிட்டது! உயரதிகார அலுவலர்கள் ஆய்வு!

இவை தினசரி நமது நாளேடுகளில் அடிக்கடி வருகின்ற செய்திகள்!

இவற்றை படித்துவிட்டு மக்கள் திலகத்தின் மேற்கண்ட பாடல்வரிகளை நாற்பது ஆண்டுகள் கழிந்தும் அடிக்கடி மீண்டும் கேட்க நேரும் எவருக்குமே வேதனை உணர்வுகள் ஊற்றெடுக்கும்!

திராவிட ஆட்சியாளர்கள் கட்டிய குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் குடியிருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை இன்று அந்த கட்டிடங்களை போலவே ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது!

தமிழகத்தில் கட்டப்படும் இது போன்ற ஊழல் கட்டிடங்களும் பாலங்களும் கட்டும்போதே இடிந்து விழுவதையும் இருபது ஆண்டுகள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையையும் நம் தமிழக மாணவர்கள் சற்று கவலையுடன் கவனத்தில் கொள்ள வேண்டும்!

இன்றுள்ளது போன்ற தொழில் நுட்ப வசதிகள் இல்லாத கால கட்டத்தில் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளையர்கள் காலத்தில் எனது சொந்த ஊரை இரு பிரிவாக பிரித்தவாறு ஓடிய பொன்னி ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் கட்டப்பட்டிருந்தன!

சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விரிவாக்கத்திற்காக புதிதாக கட்டப்படும்; மேம்பாலத்தின் அடியில் இவை வருவதால் இனி இவை தேவையில்லை என கருதி இவற்றை இடிக்க முடிவு செய்தது நெடுஞ்சாலை துறை நிர்வாகம்! அதன்படி அந்த பாலங்களை தற்பொழுதுள்ள டிரில்லர் போன்ற துளையிடும் கருவிகளாலும் இடிக்க முடியாமல் கைவிடப்பட்டுள்ளது என்ற தகவலையும் நம் தமிழக மாணவர்களின் கவனத்திற்கு இங்கு கொண்டு வருவது மிக மிக அவசியம்!

மேலும் நம் தமிழகத்தில் இருநூறு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் செயல்படும் பெரும்பாலான நீதி மன்றங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் காவல் நிலையங்கள் நூலகங்கள் எனப் படு கம்பீரமாக காட்சியளிக்கும் வெள்ளையர்களின் கட்டிடங்களை நம் அரசியல்வாதிகளின் ஊழல் கட்டிடங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அதைவிட மிக அவசியம்!

நாங்கள் எங்கள் ஊரை விட்டுப் பிரிந்து சென்று பல ஆண்டுகள் கழிந்து நாங்கள் வசித்த பரமத்தி வேலூரில் கட்டப்பட்ட பேருந்து நிலையமும்,

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையமும்

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே மேல்தள பூச்சு பெயர்ந்து பயணிகளின் தலையை பதம் பார்த்து இன்று வேலூர் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் செய்தியையும்,

எங்கள் சொந்த ஊரில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை மற்றும் ஏராளமான அரசுக் கட்டிடங்களின் பரிதாபமான நிலைகளையும்,

திருச்சிஅண்ணா நகர் பகுதியில் அரசு தவணை முறையில் வீடு கட்டி கொடுத்து கடன் கட்டி முடிந்தும்; பத்திரம் வாங்க இயலாத நிலையில் இடிந்து விழும் நிலையிலுள்ள வீடுகளின் கதியையும், ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் வாயிலாகப் பொதுமக்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட கட்டிடங்கள் அதன் தவணை முடியும் தருவாயிலேயே இடிந்துவிழும் நிலையில் படு மோசமாகக் காட்சியளிக்கும் நிலையும்,

ஈரோடு சம்பத் நகரில் கட்டப்பட்டுள்ள தவணை முறை வீட்டு வசதி வாரியக் கட்டிடங்களின் பரிதாப நிலையும்,  ஈரோடு கருங்கல்பாளையத்திலுள்ள குடிசை மாற்றுவாரியக் கட்டிடத்தின் பரிதாப நிலையும், இன்னும் ஏhரளமாகத் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடங்களின் படு மோசமான நிலையையும் அரசுக் கட்டிடங்களின் நிலையையும் நம் மாணவ மணிகளிடம் வேதனையுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பொழுது எம்மால் முடியும்!

இது போன்ற ஊழல் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படும் கனிம வளங்கள் நீண்ட வருடங்கள் பயன்படுத்த இயலாத இதன் தரத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் இடித்துக் கட்டப்படுவதால் நம் தமிழகத்தின் ஏராளமான கனிம வளங்கள் வெகு விரைவாகக் குறைந்து வருகின்றன. இருக்கின்ற மலைப் பிரதேசங்களும் இனி இது போன்ற ஊழல் கட்டுமானங்களுக்கு அழிக்கத் துவங்கினால் தமிழகம் மழை வளத்தை அடியோடு இழந்து பாலை நிலமாகும் நிலையும் உருவாகும்.

ஏற்கனவே ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கற்கள் என ஏராளமான கனிம வளங்கள் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்குக் கடத்தப்படுவதால் தமிழகத்தின் பொருளாதார வளம் உயர்வடைவதாகத் தெரியவில்லை. மாறாக இவற்றைக் கடத்துபவர்களின் பொருளாதாரம் பன் மடங்கு உயர்ந்து நிற்பதும் இவர்கள் அனைவருமே ஏதேனும் அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள்தாம் என்பதும் உலகறிந்த உண்மை.

வீணாகும் கனிம வளத்தைத் தடுத்தாட்கொண்டு தமிழகம் பாலை நிலமாகும் நிலையிலிருந்து காக்கும் கடமை இனி சித்தர் தலைவன் முருகனின் தலைமையிலான ஐந்தாம் தமிழ்ச்சங்கத்திற்குத்தான் ஏராளம் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!