திங்கள், 30 ஜூன், 2014

தரமற்ற கட்டுமானங்கள்!

Leave a Comment
சென்னையில் புதியதாகக் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று

இடிந்து விழுந்து தரை மட்டமானதில் ஏராளமான உயிர்ச் சேதங்களும் பலர் படுகாயங்களுக்கும் ஆளான நிலை உருவாகியுள்ளது!

பலியானவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்!

படுகாயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற நாம் அனைவரும் பிரபஞ்சப் பேராற்றலை வேண்டுவோம்!

தரமற்ற கட்டுமானங்களின் விளைவினை இப்பொழுதாவது மனிதாபிமானம் உள்ளவர்கள் அனைவரும் உணர வேண்டும்!

ஒரு வேளை இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகள் குடியேறிய நிலையில் இடிந்திருந்தால்

நினைக்கவே மனம் பதறும் அளவிற்குப் பல அப்பாவிக் குடும்பங்களின் உயிரிழப்பினை இந்த நாடு சந்தித்திருககும்;!

வண்ணம் பூசிப் பளபளப்பாகக் காட்சியளிக்கும் இது போன்ற புதிய
கட்டுமானக் குடியிருப்புகளை வாங்கி

அங்கு குடியேறவே அச்சப்படும் நிலையினை இந்தக் கட்டிடம் உருவாக்கியுள்ளதை நாம் மனதில் கொண்டாக வேண்டும்!

இனியாவது கட்டப்படும் கட்டிடங்களின் தரத்தை அவை கட்ட அனுமதி கொடுக்கும் அரசு அலுவலர்கள்

உரிய தரத்துடன் அவை கட்டப்படுகின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்!

உடனடியாக நாடு முழுவதும் தற்பொழுது கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமானங்களின் தரத்தை உறுதிப்படுத்த

அதற்கெனத் தனியானதொரு அமைப்பினை ஏற்படுத்தி உரிய சான்றிதழ்கள் பெற்ற பின்பே

அவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்!

அவை குடியிருப்புகளாக மட்டுமன்றி பாலங்கள், கல்விக்கூடக் கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள் என

அரசு தனியார் சாரந்த எதுவாக இருந்தாலும் உடனடியாகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்!

இதை விட அதி முக்கியமாக அரசால் கட்டப்பட்ட பல குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் மற்றும் பொது மக்களின் சொந்த குடியிருப்புகள்

தமிழகமெங்கும் படு மோசமாகக் காட்சியளிக்கின்றன!

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் ஒரு கட்டுரையில் இதைப் பற்றி எச்சரித்துள்ளோம்!

இங்கு வசிக்கும் மக்களின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டாவது உடனடியாக அவற்றில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தி

புதியதாக ஊழலற்ற நூறாண்டுகளுக்கு மேல் உத்தரவாதம் தரக்கூடிய நேர்மையான ஒப்பந்ததாரர்களை நியமித்து கட்டித்தந்து

மறு குடியேற்றம் செய்விக்க வேண்டிய மகத்தான கடமை ஆட்சியாளர்களுக்கு தற்பொழுது உள்ளது!

ஆபத்து வருமுன் காப்பதுதான் ஒரு தலை சிறந்த ஆட்சியாளர்களுக்கு அழகாகும்!

அதை விடுத்து அலட்சியமாக இருந்து அப்பாவிகள் பலியாவதற்குக் காரணமாகி அதன் பின்னர் நிவாரண உதவிகள் வழங்கி என்ன பயன்?

இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் அடிமையாகி இது போன்ற துயரங்களுக்கு இனியும் எவரும் துணை போகக்கூடாது என்பதைவிட

இறந்த உயிர்களைத் தங்கள் உறவில் ஒருவர் இழந்ததாக எண்ணி வருந்தி  மனம் திருந்த வேண்டும் என்பதுதாம்

இப்போதைக்கு நாம் ஆட்சியாளர்களிடமும் அரசு அலுவலர்களிடமும் வைக்கும் மனிதாபிமானம் சார்ந்த வேண்டுகோள்!

Read More...

சனி, 28 ஜூன், 2014

இலக்கு 2016

Leave a Comment
வரும் 2016 ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலுக்கு இப்பொழுதே தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் தயாராகி வருகின்றன!

இலவசங்களில் மக்களை வீழ்த்தி வாக்கு வங்கியை வளைப்பதற்குத் தேவையான வழிமுறைகளை இது போன்ற இயக்கங்கள் நிச்சயம் வகுக்கும்!

வழக்கம் போலவே இந்தத் தேர்தலிலும் வாக்காளர்களுக்குத் தாங்கள் கொள்ளையிட்ட பணத்தை வாரியிறைத்து

வாக்கு வங்கியை வளைப்பதற்கு வலிமை மிக்க இயக்கங்கள் தயாராகக்கூடும்!

எந்த இயக்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் நிலவும் இலஞ்சமும் ஊழலும் அடியோடு தொலையப்போவதில்லை என்ற

வறட்டு வாதம் பேசியே மக்கள் ஏதேனும் ஒரு ஊழல் இயக்கத்தைத்தான் இந்தத் தேர்தலிலும் ஆட்சியமைக்க வாய்ப்பளிப்பர்!

இந்த நிலையில்

 இந்த நாட்டில் நிலவும் இலஞ்சம், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம்,

கொலை, கொள்ளை, வழிப்பறி நிகழ்வுகள், கந்து வட்டிக் கொடுமைகள்,

கனிம வளக் கொள்ளைகள், வனக் கொள்ளைகள்,

சுகாதாரக்கேடு, மாசடைந்த கால்வாய்கள், மாசடைந்த ஆறுகள்,

வளைக்கப்பட்ட அரசு நிலங்கள், வளைக்கப்பட்ட வனங்கள், ஆறுகள், கால்வாய்கள்,

வசிப்பிடமற்ற மக்கள்,

இலவசங்களில் மயங்கி வேலை வெட்டியின்றிச் சுற்றும் கூட்டம்,

குடி, போதை, கடத்தல், ஆள் கடத்தல்,

பாலியல் வன்முறைகள், பெண்களுக்கு எதிரான பலதரப்பட்ட குற்றங்கள்,

மோசமான சாலை வசதிகள், நெரிசலான போக்குவரத்துகள்,

ஊழல் மிகுந்த திட்டங்கள், மோசமான குடிநீர் விநியோகம்,

அண்டை மாநிலங்களுடன் ஏற்படும் ஆற்று நீர் ப் பிரச்சினைகள்,

அண்டை நாட்டுடன் ஏற்படும் மீனவர்களுக்கான இடையூறுகள்,

வாய்மையற்ற அறம் தவறிய வாழ்க்கை முறை,

சாதியவாதம், மதவாதம்,

அதிகார மிரட்டல்கள், பணபல ஆதிக்க மனப்பான்மை,

கட்டுப்படுத்த இயலாத விலைவாசிகள்,

கட்டுபடியாகாத வேளாண் உற்பத்திகள்,

கட்டுப்படுத்த இயலாத மின்கட்டணம், போக்குவரத்துக் கட்டணம்,

எழுத எழுத விரிந்து கொண்டே போகும் ஏராளமான குறைகளுடன் இப்பொழுதுள்ள நிலையிலேயே தொடர்வதா

அல்லது இது போன்ற செயல்களுக்கு இந்தத் தேர்தலிலாவது ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

என்ற எண்ணம் மக்களிடம் உருவாக்க வேண்டும் என நினைப்பவர்கள் போல

ஐந்தாம் தமிழ்ச்சங்கமும் தமிழ்க்கனவு என்ற தலைப்பில் பல கட்டுரைகளை வடித்துள்ளது!

தமிழ் தமிழர் தமிழ்நாடு என இந்த நாட்டைச் சுவாசமாக நேசிப்பவர்களுக்கு இது போன்ற கனவுகள் நிச்சயம் ஏராளம் இருக்கும்!

கனவு காணுங்கள் என நம் தமிழக இளைஞர்களைத் தட்டியெழுப்பியவர் நம் மாண்புமிகு குடியரசுத்தலைவர் உயர்திரு கலாம் அவர்கள்!

ஐந்தாம் தமிழ்ச்சங்கமும் தனது தமிழ்க்கனவுகள் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்ற உறுதியான நிலைப்பாடில் உள்ளது!

இந்த உறுதிப்பாட்டின் முதற்படிதான்

ஓவ்வொரு சட்ட மன்றத் தொகுதியிலும் உள்ள இலட்சம் மக்களில் தலை
சிறந்த பத்து வாய்மையானர்களைத் தேர்ந்தெடுதல்!

பணபலமற்ற மக்கள் நலனில் மட்டுமே அக்கரை கொண்ட தியாக மனப்பான்மை படைத்த,

சாதிபேதம் பாராத எளிமையானவர்களாக மக்களால் அடையாளம் காணப்படும் நல்லவர்களை

அந்தத்த தொகுதி மக்களிடம் அறிமுகம் செய்வித்தல்!

கொடி, தோரணம், அலங்கார வளைவுகள், கட்அவுட்டுகள், மேடைகள்,

வாகன அணிவரிசைகள், பேரணிகள், மாநாடுகள் போன்ற எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி

வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் சக்தி வென்று பணபல அரசியல் செல்வாக்கு அடியோடு தொலையச் செய்ய

கனவுள்ள அனைவரும் ஒன்று சேர அழைக்கிறது ஐந்தாம் தமிழ்ச்சங்கம்!

2016 ல் தமிழக அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்கள் ஏற்படுத்தி எளிமையான ஒரு அமைப்பு மக்களுக்காகப் பணி செய்ய உருவாக்க

மேற்கண்ட அவலங்கள் அற்ற தமிழ்நாடு உருவாக விரும்பும் கனவுள்ள அனைவரும்

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தினை இணையத்தில் மேலும் வலுவாக்க அழைக்கிறது!

Read More...

இசுலாமியச் சகோதர சகோதரிகளுக்கு இனிய இரமலான் நல்வாழ்த்துக்கள்!

Leave a Comment
தமிழுக்கும் இசுலாத்திற்கும் பல்லாயிரக்கணக்கான வருட நாகரீக உறவுகள் உண்டென்பது வரலாற்று உண்மை! 

இசுலாமியர்களின் வழிபாட்டு முறைகளும் உலகமெங்கும் பல்வேறு காலகட்டங்களில்  ஏராளமான மாற்றங்கள் பெற்று வந்திருந்தாலும் தமிழர்களின் எண்ண ஆற்றலை வெளிப்படுத்தி இயற்கைச் சக்தியை வசப்படுத்தும் வழி முறையை இசுலாமும் பின்பற்றி வந்துள்ளதெனலாம்!

இசுலாமியர்களின் உருவ வழிபாடு அற்ற வழிபாட்டு முறையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் பெற்றிருந்தாலும்; 

தினசரி தவறாது அதிகாலை துவங்கி பாங்கு ஓதி அனைவரும் பள்ளி வாசலில் ஒன்று கூடித் தங்களின் எண்ணங்களை இயற்கை வெளியெங்கும் பரவச்செய்து தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதை இன்றும் நாம் காணமுடிகிறது!

தமிழகத்தில் வைணவர்கள் புரட்டாசி மாதத்திலும் சைவர்கள் தை மாதத்திலும் விரதமிருப்பதைப் போல இசுலாமியர்கள் தங்களின் இரமலான் மாதத்தில் விரதமிருந்து நோன்பு கடைப் பிடிக்கின்றனர்!

இசுலாமியர்களும் ஆதியில் தமிழர்கள் போலவே சைவ உணவுப் பழக்க வழக்கத்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்! பின்னர் படிப்படியாக அவர்களும் அசைவ உணவுப் பழக்க வழக்கத்திற்கு மாற்றம் பெற்றிருக்கக்கூடும்!

இரக்க உணர்வு என்பது எந்த மதத்தவருக்கும் உண்டென்பதை எனது அனுபவத்திலேயே அறிந்துள்ளேன்! சமீபத்தில் செவிலியர் பணி செய்யும் ஒரு இசுலாமியச் சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது தாம் அசைவ உணவுகளை உண்பதில்லை என அவர் தெரிவித்தது என்னுள் வியப்பலைகளை ஏற்படுத்தியது!

இளம் வயதில் அசைவம் வாங்கத் தம் தந்தையுடன் இறைச்சிச் கடைக்குச் செல்ல நேர்ந்தபோது அங்குள்ள உயிரினங்களின் பரிதாப நிலை கண்டு இரக்கமுற்று இந்த உயிரைக் கொன்றா நாம் உண்ண வேண்டும் என்ற உயர் குணச் சிந்தனை ஏற்பட்டு அந்தக் கணம் முதல் அசைவ உணவுப் பழக்கத்தை விட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்!

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் விருப்பத்திற்காக அசைவ உணவு வகைகளைச் சமைக்க நேரிட்டாலும் தான் மட்டும் இன்று வரை உறுதியாகத் தனது சைவ நெறிக் கொள்கையில் பிறழாது வாழ்ந்து வருவதாகவம் அவர் தெரிவித்தார்!

அதனினும் அதி மேலாக, அவர் தாம் ஒரு முறை புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்று அன்னையைப் பற்றி அறிந்து வந்ததாகத் தெரிவித்த செய்திதாம் என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்தி அவரது பிற உயிர் நேசத்தையும் பிற மதங்கள் பற்றிய புரிதலையும் எண்ணிப் பெருமிதம் கொள்ளச் செய்தது! 

மதவாதமற்ற பிற இனத்தவர்களின் உணர்வுகளையும் நேசிக்கும் இத்தகு நல் உள்ளங்கள்தாம் இனி உலகு தழைக்கத் தேவை!

இசுலாமியர்களின் புனித இரமலான் நோன்பு மாதம் துவங்கியுள்ளது! 

உலகெங்கும் வாழும் இசுலாமிய உறவுகள் நபிகள் காட்டிய வழியில் நடந்து உலகில் அமைதியும் சமாதானமும் நிலைத்து நிற்க இந்த இரமலான் மாதத்தில் பிரபஞ்சப் பேராற்றலிடம் வேண்டி இரமலான் நோன்பு சிறக்க வாழ்த்துகிறோம்!

உலகெங்கும் வாழும் இசுலாமியச் சகோதர சகோதரிகளுக்கு ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் நேசம் நிறைந்த இனிய இரமலான் நல்வாழ்த்துக்கள்!

Read More...

வெள்ளி, 27 ஜூன், 2014

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நட்டத் தவறுக்குக் காரணம்

Leave a Comment
அரசுப்பேருந்து வழித்தடங்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தனியாருக்கு ஒதுக்குவதாக அரசு முடிவெடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன!

தரமற்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு அரசுப் பணிமனைகளில் கட்டப்படும் பேருந்துகள் வண்ணம் பூசி அழகாகக் காட்சியளித்தாலும்

வெகு விரைவில் தளர்ச்சியுற்று சன்னல் கண்ணாடிகள் ஆடுதல், மேற்கூரைகளில் மழை நீர் ஒழுகுதல், லொடலொடவெனச் சத்தம் எழுப்புதல்!

அரசுப் பேருந்துகளின் பணிமனைகளில் காணப்படும் அலட்சியம் காரணமாகத் தூய்மையின்றி இருத்தல்,

பழுதடைந்த பாகங்களை உடனடியாகச் சரி செய்யாததால் விரைவில் காயலான் கடைக்குச் செல்லும் தரத்தில் காட்சியளித்தல்!

(சமீபத்தில்கூட ஏராளமான எலும்புக்கூடாகி நிற்கும் பேருந்து அணிவரிசையை ஒரு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் கண்டு நெஞ்சம் பதறியது)

ஒரே தரத்திலுள்ள அரசுப் பேருந்துகள்!

ஆயின் கட்டண விகிதமோ சாதாரணம், விரைவு, இடைநில்லா, குறித்த நிறுத்தங்களில், எனப் பல்வேறு விதத் தாறுமாறான கட்டணங்கள் காரணமாக சாதாரணப் பேருந்துகள் ஓரளவு நிறைந்த நிலையில் செல்ல

அதிகக் கட்டணப் பேருந்துகள் இரவு நேரங்கள் தவிரப் பெரும்பாலும் பகலில் இரண்டு மூன்று நபர்களுடன் காத்து வாங்கிச் செல்லும் நிலை!

(இதே சமயம் தனியார் பேருந்துகளில் மக்கள் புளிமூட்டையாக அடைபடாமல் பயணிக்கும் நிலையைத் தமிழகத்தில் காண்பது அரிதிலும் அரிது)

தனியார் பேருந்துகள் அரசுப் பேருந்துகளுக்கு முன்னும் பின்னும் இயக்கும் வண்ணம் நேர நிர்ணயம் செய்யப்படுவதால் காத்திருந்து சொகுசாகவும் விரைவாகவும் செல்லும் தனியார் பேருந்துகளில் ஏறவே விரும்பும் மக்கள்!

ஒரு தனியார் பேருந்துக்கு முன்னர் கிளம்பும் அரசுப் பேருந்து தனது மந்தமான பயணத்தை வெளிப்படுத்துவதும், பின் தொடர்ந்து வரும் தனியார் பேருந்து இந்த வாகனத்தை முந்திச் சென்று காத்திருக்கும் பயணிகளை அள்ளிச் செல்லும் நிலை!

ஊழல் மிகுந்த நிர்வாகம் இவையெல்லாம்தான் அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் நட்டத்தில் ஓடுவதற்கு அதி முக்கிய காரணம்!

அரசுப்பேருந்தும் தனியார் பேருந்துகளும் ஒரே வித கட்டணம் வசூலிக்கும் நிலையில்

தனியார் பேருந்துகள் மட்டும் நிறைந்த தரத்துடனும், விரைந்த வேகத்துடனும், அதிக இலாபத்துடனும் இயங்குவதைக் கருத்தில் கொண்டாலே

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நட்டத் தவறுக்குக் காரணம் எங்கிருக்கிறது என்பது சிறு குழந்தைக்குக்கூட விளங்கிவிடும்!

அரசியலில் சூரப்புலிகளாக விளங்கும் இன்றைய நம் ஆட்சியாளர்களுக்கும் எதிர்த்து அறிக்கைகள் விடும் எதிர்க்கட்சியினருக்கும் இவையெல்லாம் எம்மைப்போன்ற பாமரர்கள் எழுதி விளக்க வேண்டிய அவசியம் இல்லைதான்!

என்ன செய்வது! அடிக்கடி இது போன்ற செய்திகளைப் படிக்கும்போது  பாரதி பாடிய நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடல் வரிகள் மனதில் வந்து வலிக்கிறதே!

Read More...

வியாழன், 26 ஜூன், 2014

வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Leave a Comment
பிரதமர் சென்னை வருகை வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்! 

முதல்வர் திருச்சி வருகை ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிப்பு!

பிரச்சினைக்குரிய தலைவர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன! 

இது போன்ற செய்திகளை நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்க நேர்கிறது!

ஒரு சனநாயக நாட்டில் தலைவர்களின் பாதுகாப்பிற்கெனச் செலவிடப்படும் தொகையைக் கொண்டே ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றிவிடலாம்!

அந்த அளவிற்கு இன்றுள்ள தலைவர்களின் பாதுகாப்பிற்கென ஏராளமான வரித்தொகை இது போன்ற செலவினங்களுக்காகத் திருப்பி விடப்படுகிறது!

தலைவர்களுக்குக் கடுமையான பாதுகாப்பு தேவைப்படும் நிலை உள்ளதென்றால்

இவர்கள் தங்களிடமுள்ள ஏதோ ஒருவித குறையினால் எதிரிகளைப் பெற்றுள்ளனர் என்றுதான் அர்த்தம்! 

ஒருபக்கம் எதிரிகளைக் கொண்டுள்ள இவர்கள் மறுபக்கம் மக்களின் ஆதரவினையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது!

அப்படியெனில் இவர்கள் நிச்சயம் அனைத்து மக்களின் ஆதரவினையும் பெற்ற சமநிலைத் தலைவராக விளங்கவில்லை என்றுதான் நாம் எண்ணத் தோன்றுகிறது! 

எது எப்படியாயினும் இவர்கள் பொதுமக்களிடமிருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரித்து வைக்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை நிகழ்வாகும்! 

அனைத்து தரப்பு மக்களின் நன் மதிப்பையும் பெற்ற உயர்குணத் தலைவர்களுக்குப் பெரிய அளவிலான  பாதுகாப்புகள் தேவையற்றது என்பதை 

தமிழ்நாட்டில் நம் பெருந்தலைவர் காலத்திலேயே கண்டுள்ளோம்!

அரசு அலுவலர்களின் கெடுபிடிகள், இயக்க முன்னோடிகளின் கெடுபிடிகள் இன்றி 

மக்களோடு மக்களாகச் சரி சமமாகப் பழகிய பெருந்தலைவர் போன்ற தலைவர்களை இன்று நாம் காண்பது அறிதாகிவிட்டது!

பொதுமக்களிடமிருந்து விலகியிருந்து வெறும் இலவசத் திட்டங்களால் மட்டுமே மக்களை வளைத்துவிட முடியும் என இன்றைய அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுவதன் விளைவும், 

இன்று இது போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்குக் காரணமாகிறது!

எளிமையான மக்கள் தொண்டர்கள் அரசியலுக்கு வந்தால்தான்

இது போன்று அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கெனச் செலவிடப்படும் ஊதாரித்தனச் கெலவினங்கள் அடியோடு தொலைந்து 

மக்களின் வரிப்பணம் மீதப்பட்டு மக்கள் நலத் திட்டங்களை ஊழலின்றி நீண்ட வருடங்கள் பயன்படுமாறு நிறைவேற்ற முடியும்!

மக்களின் காவல் பணிக்கென ஊதியம் பெறும் உயர் அலுவலர்கள் தொடங்கி 

சாதாரணக் காவலர் வரை அரசியல்வாதிகளின் வருகைக்காக,

தம் அன்றாட மக்கள் நல அலுவல் பணி உழைப்பினைத் தவிர்த்துவிட்டு 

கடும் வெயிலிலும் மழையிலும் தங்களின் காவல் பணியைக் கால்கடுக்க 

இது போன்ற பாதுகாப்புத் தேவைப்படும் தலைவர்களுக்காகச் செலவிடும் நிலை 

அடியோடு தொலையும் நிலை என்று வருகிறதோ 

அன்றுதான் உண்மையிலேயே இது சனநாயக நாடு எனப் போற்றப்படும் நிலையும் உருவாகிவிட்டது என அர்த்தம்!

Read More...

புதன், 25 ஜூன், 2014

அப்துல் ரகுமான்!

Leave a Comment
அதிகாலை இருட்டில் பாரதக் கப்பற்படையின் கண்களில் மண்ணைத் தூவியவாறு அந்தச் சிறிய கப்பல் வெகு வேகமாகப்  பாரதக் கடல் எல்லைக்குள் நுழைந்து கேரளப் பகுதிக்குள் ஊடுருவியது!

கப்பலின் மேல்தளத்தில் நின்றவாறு பாரதத்தின் நிலப்பகுதியைத் தொலைநோக்குக் கருவியால் கண்களில் கொலை வெறி தாண்டவமாடியவாறு கண்காணித்த அப்துலின் தலைமையில் பத்து பேர்கள் கொண்ட அணியென்று புனிதப் போருக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு பாரதம் நோக்கி நேற்றிரவுதான் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து புறப்பட்டிருந்தது!

பாகிஸ்தானின் லாகூர் அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் ரகுமானுக்கு இளம் வயது முதலே பாரதம் என்றாலே எதிரி நாடுதான் என்ற உறுதியான எண்ணம் விதைக்கப்பட்டிருந்தது! 

சரியான கல்வி வாய்ப்பு கிடைக்காததால் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடிய அவனுக்குள் இருந்த வெறியுணர்வை மேலும் அதிகரிப்பதற்கெனவே அருகிலிருந்த தீவிரவாதப் பயிற்சி முகாம் உதவி செய்தது! 

தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்ற இரு ஆண்டுகளிலேயே பலவித ஆயுதங்களையும் பயன்படுத்துவதில் திறமை பெற்றதால் இன்றைய புனிதப் பயணத்திற்குத் தலைமையேற்கின்ற பொறுப்பும் அவனுக்குக் கிட்டியது!

தனது பழைய நினைவுகளிலிருந்து விடுபட்ட அப்துல் விடியப் போவதை அறிந்து, பகலவன் உதயத்திற்குள் தான் அடைய வேண்டிய எல்லையைத் துல்லியமாக அறிந்து அந்தத் திசையில் தனது கப்பலைச் செழுத்த உத்தரவிட்டான்!

கரையை அடைந்தவுடன் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு அவர்கள் வந்த கப்பல் பாகிஸ்தான் திரும்பிவிட்டது! கேரள எல்லையில் காத்திருந்த பாரதத்தை சேர்ந்த தீவிரவாதக் குழுவுடன் சேர்ந்து கொண்டு அடர்ந்த வனப்பகுதி வழியாகத் தமிழக எல்லைக்குள் நுழைந்தது! 
அவர்களின் தாக்குதல் இலக்கிற்கு உள்ளாகப்போகும் தமிழகப் பகுதி “மதுரை” என்ற செய்தியை அறியாமலேயே வழக்கம்போல தமிழகத்தின் அன்றைய பொழுது விடிந்து கொண்டிருந்தது!

அந்த வேளையில் ஒரு எதிர்பாராத திருப்பம்! 

அடர்ந்த வனப்பகுதியில் பயணித்து கொண்டிருந்த அந்தக் குழுவினர் அந்த விடியலிலும் தங்களைச் சுற்றி வளைத்தவாறு எதிர் கொண்ட தமிழக காவல் துறையினரின் துரிதமான நடவடிக்கைகளைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லைதான்! 

அப்துல் சற்றுத் துணுக்குற்றாலும் உடனடியாகத் தனக்குள் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவர்களை நோக்கித் தாக்குமாறு தனது சகாக்களுக்கு உத்தரவிட்டான்! 

ஆனால் நடந்த கதையோ வேறு! அவர்களின் வருகையை முன்கூட்டியே தங்களின் புலனாய்வின் மூலம் கண்டு பிடித்துவிட்ட தமிழக காவல்துறை அவர்களுக்கு உதவக் கேரள எல்லையில் காத்திருந்த தமிழகத் தீவிரவாதக் குழுவினரைப் பின்தொடர்ந்து வந்து அந்த அடர்ந்த வனப்பகுதியின் ஒரு பகுதியில் பதுங்கி இருந்ததையும், அப்துலின் உத்தரவு நிறைவேறுவதற்கு முன்னரே காவல்துறையினர் தயாராகக் கொண்டு வந்திருந்த மயக்க மருந்து கருவிகள் கொண்டு மயக்க மருந்தினைத் தங்கள் மீது பாய்ச்சி உயிரோடு மயக்கிப் பிடித்ததையும் உணரக்கூடப் பாவம் அவனால் முடியவில்லைதான்!

அமைதியாக விடிந்த தமிழகத்தின் ஒரு சிறைக்கூடத்தின் விசாரணை அறையில்தான் மீண்டும் அவனுக்கு நினைவு திரும்பியது! கைகள் கட்டப்பட்ட நிலையில் அருகில் தனது பாகிஸ்தானிய குழுவும் இருப்பதை அவன் உணர்ந்தான்!

எதிரிலிருந்த விசாரணை அலுவலரின் முகத்தில் கடுமையை எதிர்பார்த்த அவனுக்கு ஏமாற்றம்தான் கிட்டியது! மயக்கம் தெளிந்த அவனை அந்த அலுவலர் உருது மொழியில் நீங்கள் பாகிஸ்தானின் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என விசாரித்தார்!

ஏற்கனவே  தான் சேர்ந்திருந்த பயி;ற்சி முகாமில் எதிரிகளிடம் மாட்;டிக்கொண்டால் எப்படிச் செயல்படுவதென அளிக்கப்பட்டிருந்த பயிற்சி தந்த தைரியத்தில் மனதை இறுக்கமாக்கிக்கொண்டு பதிலலிக்காமல் அவரை வெறுப்புடன் நோக்கினான் அப்துல்!

இதன் எதிரொலியாகத் தாங்கள் கடுமையாகத் தாக்கப்படுவோம் என எதிர்பார்த்த அவனுக்குள் ஏமாற்றம்தான் மிஞ்சியது! அந்த அலுவலரோ அவனைச் சற்றுப் பரிவுடன் பார்த்தவாறு தன் பின்னே நின்றிருந்த காவலர்களை நோக்கி இவர்களுக்குத் தேவையான  ஏற்பாடுகளைச் செய்யுங்கள் எனக் கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்!

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அதே சமயம் சற்று உயர் தரத்துடன் சகலவித வசதிகளும் நிறைந்ததாகவும் அந்தச் சிறை விளங்கியதை அவன் வியப்புடன் நோக்கினான்! அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, கடுமையாக அவர்கள் தாக்கப்படாமல் அந்த அறையிலேயே அவர்கள் அனைவரும் குளிப்பதற்கும் அதன் பின்னர் அவர்களுக்குத் தேவையான உடைகளும் வழங்கச் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது! 

மனதிலிருந்த பிடிவாதம் சற்றுத் தொலைந்தாலும் வேறு வழியின்றி காலைக் கடன்களை முடித்துக்கொண்ட அவர்களுக்கு சுவையான உணவும் வழங்கப்பட்டபோது அவனால் தமிழகக் காவல்துறையின் போக்கு பிடிபடவில்லைதான்!

கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் அவர்களை இரவில் மட்டும் வந்து அதே அலுவலர் அவர்கள் எந்த நோக்கத்துடன் தமிழகத்திற்கு வந்துள்ளார்கள் எனத் திரும்பத் திரும்ப வினவினார்! இவர்கள் அனைவரும் பதிலளிக்க மறுக்கவே அவராகவே இறுதியில் ஒரு நாள் இரவு அவர்களின் திட்டத்தை விளக்கத் துவங்கினார்!

அவர் பேசப்பேசத் தமிழகக் காவல்துறையின் புத்திசாலித்தனமும் திறமையும் அவனுக்குள் வியப்பினை ஏற்படுத்தியது! அவர்களின் சொந்த ஊரின் தற்போதைய நிலையிலிருந்து அவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்ததுவரை துல்லியமாக அவர் விவரித்தபோதுதான் தாங்கள் யாரென அவருக்கு ஏற்கனவே தெரிந்துள்ள விபரமும் அவனுக்குள் உறைத்தது!

முதல் முறையாக அவன் அந்த அலுவலரைப் பார்த்து இவ்வளவு தெரிந்திருந்தும் எங்களை ஏன் உயிரோடு விட்டு வைத்துள்ளீர்கள் என வெறுப்புடன் வினவினான்! அவரோ அவனுக்குப் பதிலிக்காமல் சற்றுப் புன்சிரிப்புடன் அந்த அறையிலிருந்து வெளியேறிவிட்டார்!

அடுத்த நாள் காலை அவர்கள் அனைவரையும் பலத்த காவலுடன் அழைத்துக்கொண்டு ஒரு வாகனம் அந்தச் சிறை வளாகத்திலிருந்து வெளியேறி நேராக ஒரு குடியிருப்பின் முன் சென்று நின்றது!

வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட அவர்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்! சற்று வசதியாக விளங்கிய அந்த இல்லம் தங்களை இரவில் விசாரித்த அந்த அலுவலருக்குச் சொந்தமானதெனவும் அவர் ஒரு இசுலாமியர் எனவும் அந்த வீட்டின் அமைப்பைக் கண்டவுடன் அவர்களுக்கு விளங்கியது!

அந்த இல்லத்தில் விசாலமாக விளங்கிய வரவேற்பு அறையில் அன்று விடுமுறையாதலால் அந்த அலுவலரின் குழந்தைகள்; தங்களின் எதிர்வீட்டு நட்புக் குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்! 

வேற்று மதத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைகள் தன் மீது ஏறி விளையாடுவதை அவர்கள் வியப்புடன் கவனிப்பதை ஓரக்கண்ணால் கவனித்தவாறு அந்த அலுவலர் அவர்கள் வருகையை அப்பொழுதுதான் கவனிப்பதுபோல அவர்களை வரவேற்றார்!

அவர்களின் வருகையை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த அவரது மனைவி தனது இரு கரங்களிலும் தேநீர் நிறைந்த பாத்திரங்களை அன்புடன் ஏந்தி வர, அதை ஓடிச்சென்று வாங்கிய எதிர் வீட்டுக் குழந்தைகள் இவர்களை நோக்கிப் புன்னகையுடன் எதிர் கொண்டு அவற்றை அவர்களுக்கு வழங்கினர்!

அன்பு ததும்பும் அந்த இல்லத்தின் சூழலால் கட்டுண்ட அவர்கள் மறுப்பு தெரிவிக்காமல் அவற்றை வாங்கிப் பருகிய பின்னர் அந்த அலுவலரின் மனைவியும் அங்கிருந்த குழந்தைகளும் உற்சாகமாக வழியனுப்ப அந்த அலுவலருடன் மீண்டும் காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்!

அவர்களைச் சுமந்தவாறு அந்த வாகனம் வெகு தொலைவு பறந்தது! வாகனத்தில் தமிழகத்தின் பண்பாட்டை.ப் பிரதிபலிக்கும் படக்காட்சியொன்று ஓடுவதை அவர்கள் தங்களின் புனிதப்பயண நோக்கம் தொலைந்த மன நிலையில் இரசிக்கவும் செய்தனர்!

அந்த வாகனம் ஒரு நகரத்தை அடைந்ததையும் அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஒரு தர்காவிற்குள் அழைத்துச் செல்லப்படுவதையும் உணர்ந்து அது எந்த ஊர் தர்காவென அருகிலிருந்த காவலரிடம் வினவினான் அப்துல்! அதுதான் தமிழகத்தின் மிகப் பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவென அவர் பதிலலித்தார்!

தர்காவின் உள்ளே நுழைந்த அவர்களுக்கு அங்கு கண்ட காட்சி வியப்பை உருவாக்கியது! இசுலாமியர்கள் மட்டுமன்றி அனைத்து தமிழக மக்களும்; அந்த தர்கா முழுவதும் நிறைந்து அல்லாவின் அருள் பெற ஒன்று கூடித் தங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதைக் கண்டனர்!

பின்னர் அவர்களை அங்கிருந்து மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துக்கொண்டு புறப்பட்ட அந்த வாகனம் இருட்டியதால் அருகிலிருந்த ஒரு பயணியர் விடுதியில் அவர்கள் அனைவரும் தங்கி இரவை கழித்த பின்னர் அதிகாலையில் கிளம்பித் தஞ்சையை அடைந்தது!

நேராகத் தஞ்சையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் சந்நிதியை அடைந்த அவர்கள் பார்வையில் அம்மை பாதித்த தங்களைக் காத்துத் தங்களின் பிரார்த்;;தனையை நிறைவேற்றிய அம்மனுக்கு நன்றி செழுத்தத் திரண்டு வந்திருந்த இசுலாமியப் பெண்களின் கூட்டத்தைக் கண்டவுடன் வியப்பின் எல்லைக்கே செல்ல தங்களின் பலி வாங்கும் புனிப்போரின் கனவு உள்ளுக்குள் தகர்ந்ததை அக்கணமே அவர்களால் உணர முடிந்தது! 

அவர்களின் பிரமிப்பை உணர்ந்த அந்த அலுவலர் கவனித்தீர்களா? இதுதான் பாரதம்! பல்வேறு மதங்கள் நிறைந்திருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள்தான் நாங்கள்! எங்களை இனியாவது உங்களைப் போன்ற தீவர எண்ணம் கொண்டவர்கள் புரிந்து கொண்டு நல்லவர்களாக மாற வேண்டும்!

மீண்டும் நீங்கள் உயிருடன் உங்களின் நாடு திரும்பி அங்குள்ளவர்களுக்கும் எங்களின் வாழ்வியல் சூழல்களை எடுத்தியம்பி இரு நாடுகளுக்குள்ளும் நிலவும் வேற்றுமைகளைக் கலைய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த பயணம்! எங்களின் கடமை இத்துடன் முடிந்து விட்டது! இப்பொழுது நாங்கள் உங்களை வாய்மை மன்றத்தில் அனுமதித்து உங்களுக்குரிய தண்டனையை பெற்றுத் தரப்போகிறோம் என முடித்த அந்த அலுவலர் அவர்களை நோக்கி  நேசமுடன் புன்னகைத்தார்! 
திருந்திய மனதுடன் வாய்மை மன்ற வழக்கினைச் சந்தித்த அவர்களுக்கு தமிழகத்தின் மதுரை கிளை உயர் வாய்மை மன்றம் ஐந்தாண்டுகள் சிறை தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது! 

சிறையில் அடைபட்டாலும் அதனுடனே இணைந்திருந்த தொழிற்சாலையில் அவரவர் திறமைக்கேற்ற வேலைகள் செய்து நன்னடத்தை காரணமாக நான்கு வருடத்திலேயே அப்துலுடன் அனைவரும் விடுவிக்கப்பட்டு சிறையில் வேலை செய்ததற்காக கிடைத்த வருமானத்துடன் வாகா எல்லையில் பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்! 

இதற்குள் பாகிஸ்தானில் வசிக்கும் இசுலாமியர்களிடம் ஏற்பட்ட எழுச்சியால் அங்கு நீண்ட நெடுங்காலமாக நிலவி வந்த சர்வாதிகார ஆட்சி முறை முடிவிற்கு வந்திருந்ததால் அப்துலும் அவன் குழுவினரும் எந்தவித எதிர் விசாரணை பாதிப்புகளுமின்றி தத்தம் கிராமங்களுக்குத் திரும்பினர்!

இப்பொழுதெல்லாம் அவனுக்கு வாய் ஓயாமல் தமிழகத்தைப் பற்றியும் தமிழகத்தின் கலாச்சாரம் பற்றியும் விளக்கம் கேட்டு வரும் தன் கிராம மக்களுக்குத் தமிழகத்துடன் பாரதத்தின் சிறப்புகளையும் விளக்கிக் கூறுவதற்கே நேரம் போதாததால்  தமிழகச் சிறையில் கற்றுத்தேர்ந்த தொழிலில் மும்முரமாகக் கவனம் செழுத்த நேரம் ஒதுக்க முடிவதில்லை! 

மேலும் சிறையில் இருந்தபோது தனக்கு மறுவாழ்வளித்த சிறை அலுவலருடன் மாதத்திற்கு ஒரு நாள் என விளையாடித் தேர்ந்த தமிழகத்தின் பிரதான சிலம்ப விளையாட்டை தன் கிராமத்து இளைஞர்களுக்கு கற்றுத் தருவதற்கு நேரம் ஒதுக்குவதால், அவரை விட்டுப் பிரியும்போது அவருக்கு வாக்களித்தபடி மாதத்திற்கு ஒருமுறை சிறையில் கற்றுத்தேர்ந்த தமிழ் மொழியில் கடிதம் வாயிலாகத் தனது தற்போதைய நிலை பற்றி எழுதுவதற்கும் சற்றுச் சிரமமாக உள்ளதாகத்தான் கேள்வி!

Read More...

அமைச்சர்! அரை பிளேடு!

Leave a Comment

இது எனது வணிக வாழ்வில் நேர்ந்த அனுபவம்!

எங்கள் பல்பொருள் விற்பனை அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் வந்திருந்தனர்!

விலை உயர்ந்த சவரக் கத்தி, சவரத் தூரிகை, சவரப்பசை, சவரத்திற்குப் பின் போடப்படும் விலை உயர்ந்த வாசனை திரவியம், 

விலை உயர்ந்த பற்பசை, பல்குச்சி, விலை உயர்ந்த குளியல் சோப்பு, 

முகப் பவுடர், தலைக்குப் போட விலை உயர்ந்த எண்ணெய்ப்புட்டி, சீப்பு, 

உடலில் தெளிக்கும் விலை உயர்ந்த வாசைன திரவியம்,

விலை உயர்ந்த எவர்சில்வரினால் ஆன பிளாஸ்க் சூடாகப் பானம் அருந்த, அதே அளவில் குளிர்ச்சியான பானம் பருக மற்றொரு பிளாஸ்க், 

இன்னும் ஏராளமான பொருட்களை அவர்கள் வாங்கினர். இவையெல்லாம் எதற்கு என அவர்களிடம் வினவினோம்!

அதற்கு அவர்கள் தெரிவித்த பதில் இதுதான்!

இன்று எங்கள் துறை சார்ந்த அமைச்சர் ஆய்விற்காக வருகிறார். அவர் தங்கும் அறையில் வைப்பதற்காகத்தான் இவைகளை நாங்கள் வாங்குகிறோம் என்றனர்!

இங்கு வாங்கியவை தவிர அமைச்சருக்கு அணிவிப்பதற்கென சால்வை, சந்தன மாலை, உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு  இடங்களுக்குச் செல்லவும் அவர்கள் அவசரப்பட்டனர்! 

இந்தப் பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அரசு வாகனத்தில் வந்திருந்தனர். 

எங்களிடம் வாங்கிய பொருட்களின் மதிப்பே சுமார் நான்காயிரம் ஆகும்! வேறு இடங்களில் ஆன செலவு எவ்வளவோ யாம் அறியோம்!

பொருட்களுக்கான செலவு எந்த ஒப்பந்ததாரர் தலையில் ஏறியதோ, அல்லது இவர்கள் தங்கள் கைக்காசைச் செலவிட்டு வாங்குகிறார்களா என்றும் எங்களால் அறிய இயலவில்லை!

இவையெல்லாம் ஒரு நாள் ஆய்விற்காக வந்த அமைச்சருக்காகச் செலவிடப்பட்டவை! 

பெருந்தலைவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த உயர்திரு மறைந்த கக்கன் அவர்கள் 

தனது ஒரு இரயில் பயணத்தின்போது அரை பிளேடு கொண்டு தனது முகச்சவரத்தை முடித்துக்கொண்டதாக 

எப்போதோ படித்தது அப்பொழுது பார்த்து ஏனோ எனது நினைவில் வந்து தொலைத்தது!

Read More...

திங்கள், 23 ஜூன், 2014

தமிழக இளைய சமுதாயத்திற்கு ஒரு வேண்டுகோள்!

Leave a Comment
தமிழக மக்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தரிசிக்கச் செல்லும்போது அங்கு நிலவுகின்ற ஒழுக்கக் கேடுகளை ஏனோ கவனிக்கத் தவறுகின்றனர். அப்படிக் கவனிக்க நேர்ந்தும் சகிப்புத்தன்மையுடன் வழிபட்டுத் திரும்பி விடும் காரணமும் புரிபடவில்லை!

சமீபத்தில் திருக்கடையூர் அம்மன் சந்நிதிக்கு எனது மாமனாரின் எண்பது வயது முடிவடைந்ததை அடுத்து அவருக்குச் சோதிடர்கள் அறிவுறுத்தியபடி வழிபாடு செய்யச் சென்றோம்!

அந்த ஆலயம் முழுவதும் அறுபது மற்றும் எண்பதாம் ஆண்டு நிறைவு பெற்ற வயதான தம்பதியர்களுக்கு ஏராளமான புரோகிதர்கள் தலைமையில் மறு திருமணம் செய்விக்கும் காட்சிகள் நிறையக் கண்டோம்!

இந்தத் திருமணங்களுக்காக அம்மனின் சன்னிதி தொடங்கி சுற்றுப் பிரகாரம் முழுக்க மட்டுமன்றி வெளியிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன! இதன் காரணமாக ஆலயம் முழுவதும் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது!

அம்மனின் சன்னிதி முழுக்க கருகருவெனப் புகை படிந்து காட்சியளித்தது! அதோடு மட்டுமன்றி சந்நிதி முழுவதும், மலர்களும், அட்சதைகளும், தண்ணீரும் நிறைந்து கால் வைக்கவே இயலாமல் சகதிமயமாகக் காட்சியளித்தது! 

ஒரு வரலாற்றுப் புதையலாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இடம் இது போன்ற காட்சிகளுடன் அருவருப்பாகக் காட்சியளித்ததை பகுத்தறிவுடன் நோக்கிய எம்மால் சகித்துக்கொள்ளவே இயலவில்லை!

சில நூறு புரோகிதர்களின் வருமானத்திற்காக இது போன்ற வரலாற்றுச் சின்னங்கள் படாதபாடுபடுவது மனதிற்குள் ஏதோ செய்தது!

அடுத்து நம் பிரசித்தி பெற்ற நமது சமயபுரம் அம்மன் கோயிலைச் சற்று பக்திபூர்வமாகக் கவனிப்பதை தள்ளி வைத்துவிட்டு பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் கவனிப்போம்!

ஆலய வளாகத்தில் ஏராளம் குவிந்திருக்கும் பக்தர்களால் அலட்சியமாகக் குவிக்கப்பட்ட தின்பண்டங்களின் கழிவுகள் தரை முழுக்கப் பரவியுள்ள தண்ணீருடன் சேர்ந்து நம் கால்களில் மிதிபடும் அவலத்தால், அவதியுடன் நடக்க வேண்டிய பரிதாபம்!

அம்மனுக்கு நேராக உள்ள நேர்த்திக்கடன் பகுதியில் தரைதளம் முழுக்க பலவித தீPப விளக்குகளின் எண்ணையாலும் நேர்த்திக்காக உடைக்கப்படும் தேங்காய் நீராலும் மிதிபடும் மலர்களாலும் மிகுந்த அருவருப்புடன் கால் தரையில் படவே கூசச் செய்யும் துர்நாற்றம் மிக்க அசுத்தங்கள்!

சற்று அண்ணாந்து மேலே பார்த்தால் பக்தர்கள் ஏற்றுகின்ற கற்பூர தீபத்தால் கருகருவெனக் காட்சியளிக்கும் மேல் தளம்! பிரகாரத்தைச் சுற்றி வந்து அங்கப்பிரதட்சணம் செய்யும் மகளிர்; எங்கே தம்மை ஆடவர்கள் கவனிப்பார்களோ என வெட்கம் பிடுங்க பரிதவிப்புடன் வேண்டுதல் நிறைவேற்றும் காட்சிகள்!  

முடிகாணிக்கை செழுத்துவதற்கென அறநிலையத்துறை ஊழல் அரசியல்வாதிகளின் பினாமி கட்டுமானதாரர் கட்டியுள்ள மண்டபம்! மண்டபத்தின் மிக சமீபத்திய கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் பக்தர்களின் தலை மீது விழத் தயார் நிலையில் காத்திருக்கும் அபாயம்!  

எழுத எழுத விரியும் ஏராளச் சுகாதாரக் கேடுகள் நிறைந்த ஆலயம்! பக்தி உணர்வுடன் மட்டுமே இங்கு வரும் மக்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தக் காட்சிகள் சாதாரணம்! 

ஆனால் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் நம் அறிவியல் தலங்களை நாம் இனியாவது மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! 

அம்மனிடம் வரம் வேண்டி வரும் மக்கள் அம்மன் உறையும் ஆலயத்தில் சுத்தம் பராமரிக்க மட்டும் அலட்சியம் காட்டுவது அம்மனையே அவமதிப்பதற்குச் சமம் அல்லவா?

அம்மன் நம் வீட்டுக்குள் சின்னம்மை பெரியம்மை என்ற பெயரில் அடியெடுத்து வைப்பதே நம் வீட்டுக்குள் நிலவும் சுகாதாரக் கேட்டினால்தான்! 

அவளைச் சாந்தப் படுத்த அவளின் வரவு கண்ட நாள் முதல் சுகாதாரம் பேணத் துவங்கும் நாம் அவள் நம் வீட்டை விட்டு நீங்கிய பின்பு அவளிடம் வேண்டிக் கொண்ட நேர்த்திக் கடனை நிறைவு செய்யவே அவளின் சந்நிதி தேடி எங்கிருந்தாலும் ஓடி வருகிறோம்! 

நம் வீட்டிலிருந்த வரை அவள் நம்மிடம் எதுவும் கேட்பதில்லை சுகாதாரம் ஒன்றைத் தவிர! அவள் வந்தவுடன் தூய்மையற்ற நமது இல்லம் தூய்மையடைகிறது! அந்தக் கணமே அவள் தனது கடமை முடிந்ததென தனது இருப்பிடம் திரும்பிவிடுகிறாள்! 

தான் வளர்த்த பிள்ளைகளிடம் கேட்காமலே கொடுக்கும் வேப்பிலை தெய்வம் அங்கம் வருத்தும் வரம் கேட்குமா!

நாம்தான்  கற்பனையாக அவளிடம் இதைச் செய்கிறோம் அதைச் செய்கிறோம் என்று கொடுப்பதாக நினைத்து அவளது இருப்பிடத்தை அசுத்தமாக்கி வருகிறோம்! அன்னையும் அமைதியாக நமது செயலை எண்ணி நகைத்தபடி அமர்ந்து அருள் பாலிக்கிறாள்! 

உதாரணத்திற்குத்தான் இந்த இரு ஆலயங்களும்! தமிழகத்திலுள்ள பெரும்பாலான பிரம்மாண்டமான ஆலயங்களின் கதி இவ்வாறுதான் உள்ளது!

இனியாவது இது போன்ற ஆலயங்கள் அமைதி நிறைந்தவையாகத் தூய்மை நிறைந்தவைகளாக மாற்றம் செய்யவுபட வேண்டும்!

இது எம்போன்ற வெளியூர் நபர்களால் இயலாத காரியம்! நாங்கள் எப்போதாவதுதான் வேண்டுதல் என்ற பெயரில் இது போன்ற ஆலயங்களுக்கு வர முடியும்!

ஆனால் இந்த ஊரிலிலேயே வசிக்கும் இளைய சமுதாயம் மனது வைத்தால் நிச்சயம் இது போன்ற வரலாற்றுச் சின்னங்கள் வருமானம் காரணமாகச் சிதைக்கப்படுவதை நிச்சயம் தடுக்க முடியும்!

உங்கள் கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் ஆயிரம் வருடங்களாக அவற்றின் புகழை உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன! 

பக்தி என்ற பெயரில் இவைகள் பாழ்பட்டுவிடக்கூடாது!

இவை இன்னும் உலகுள்ளவரை பாதுகாக்க வேண்டிய கடமை இளைய சமுதாயத்திற்குத்தான் உண்டு!

எனவே உங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருந்தால் அவற்றைத் தூய்மையாகவும் அங்குள்ள சிற்பங்கள் அழிவுறாமலும் பாதுகாக்க வேண்டிய கடமை தம் தமிழக இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் உண்டு!

இது போன்ற பிரம்மாண்டமான ஆலயங்களை நிர்மாணம் செய்த நம் முன்னோர்களின் கடின உழைப்பிற்கும், கலை நயத்திற்கும், வரலாற்றுப் பதிவுகளுக்கும் நாம் செழுத்த வேண்டிய கடமையும், மரியாதையும் இந்தச் சின்னங்களைப் பாதுகாத்துக் காப்பதில்தான் உள்ளது!

Read More...

சனி, 21 ஜூன், 2014

சித்தர்கள் அறிவோம்! சித்தம் தெளிவோம்!

Leave a Comment
          
சித்தர்களைப் பற்றி நம் தமிழக மக்களுக்கு சரியாக விளக்கப்படவில்லை என்றே நாம் கருத வேண்டும்.

சித்தம் தெளிந்தால் அனைவரும் சித்தர்கள்தாம்! அதிலும் குறிப்பாக இயற்கையை முழுமையாக உணர்ந்தவர்கள்தாம் சித்தர்கள்!

வள்ளுவர்தாம் உலகில் தோன்றிய முதல் சித்தராவார்! வள்ளுவர் வாழ்ந்த காலத்தையும் நம் மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளுமாறு திசை திருப்பப்பட்டுவிட்டனர்!

திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் அவர் காலத்திலும் நிலவியதாக நம் மக்கள் மனதில் தவறான விதை விதைக்கப்பட்டு ஆலாக விழுது விட்டுவிட்டது!

உண்மை என்னவென்றால் திருவள்ளுவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னோக்கிச் சிந்திக்கவல்ல ஞானியாவார்! 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் வாழும் மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதைத் தம்முடைய தீர்க்க சிந்தையால் உணர்ந்து 

பிற்காலத்தில் தவறான செயல்களால் வாழ்வு தொலைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளப் பயன்படுகின்ற வழி முறைகளையும் அவரே திருக்குறள்களாகப் பாடி வைத்தார்!

அவர் போன்றே தமிழ்க்கடவுள் எனக் கருதப்படும் முருகனின் தலைமையில் ஒன்று திரண்ட சித்தர்கள் தாம் வாழ்ந்த கால கட்டத்தில் வடவர்களின் கட்டுக்கதைகளால் பக்தி மார்க்கத்தில் வழி மாறிய தமிழினத்தை நல்வழிப்படுத்த முயன்றனர்!

பொதுவாக இது போன்ற சித்தர்கள் மற்றவர்களைக் குறை சொல்லாமல் தன்னை முன்னிறுத்தியே உலகில் நிலவிய ஒழுங்கீனங்களைப் பாடி வைத்தனர்! 

தாம் வாழ்ந்த அந்த கால கட்டத்தில் முறை தவறிய வாழ்வு வாழ்ந்த மக்களை, தம்முடைய பாடல்களால் நெறிப்படுத்த உலகம் முழுவதும் விரிந்து பயணித்தவர்கள் சித்தர்கள்! 

அது மட்டுமன்றி முறைதவறி வாழ்ந்த மக்களுக்கு வந்து தொலைத்த வியாதிகளுக்கு அரும்பாடுபட்டு வைத்திய முறைகளையும் கண்டறிந்து வியாதி தீர்த்து வழி நடத்தினர்!

ஆனால் இவர்கள்தம் வருகையை விரும்பாத மதவாதிகள் சித்தர்களையும் கொச்சைப்படுத்திப் பல்வேறு கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்டனர்! 

அறியாமையில் திலைத்த அன்றைய தமிழினமும் இதை முழுமையாக நம்பி தங்கள் வாழ்க்கை முறையைப் பக்தி மார்க்கத்தில் இன்றுவரை தொலைத்து வந்துள்ளனர்!

இயற்கைக்கு எதிரான யாகங்கள், குருட்டுத்தனமான பக்திமுறைகள் போன்ற அனைத்துமே மனித குல மேன்மைக்கு எதிரானவை என்று பாடிவைத்த திருவள்ளுவர் தொடங்கி பதினென் சித்தர்கள் உட்பட பல்வேறு நல்ல உள்ளங்கள் தமிழினத்தைக் காப்பாற்றத் தமது வலிமையான எண்ணங்களால்; தொடர்ந்து இன்றுவரை போராடி வருகின்றனர்!

தமிழினம்தான் சித்தம் தெளியாமல் பித்துப் பிடித்துப் பக்தி மார்க்கத்தில் தனது உழைப்பை இழந்து வருகிறது! பக்திக்கென இலட்சங்களை வாரி இறைக்கும் ஏராளமான பித்தர்களைவிட ஒரு இலட்சத்தில் ஒரு வீடு கட்டி அதில் ஒரு ஓட்டைக்கூரை ஏழையை வாழ வைத்தால், அவ்வாறு வாழ வைக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்தான் சித்தராவார்! 

ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையைத் தங்களின் உயரிய கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். 

அவர்கள் எவ்வாறு பலதார மண வாழ்க்கை முறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர் என்பதற்கு, பக்தி மார்க்கத் தமிழர்கள் போற்றும் இராமாயணத் தசரதனின் ஆயிரக்கணக்கான மனைவியர் கதையே போதுமானது. 

அய்யன் திருவள்ளுவர் தனது குறளில் இன்பத்து பாலில் வரும் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் கீழ்க்கண்ட குறளைப் பாடியுள்ளார்!

தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் 
தாமரைக் கண்ணான் உலகு!

இதைத் தமிழறிஞர் ஒருவர் சுருக்கமாக விளக்குவதாகக் கீழ்க்கண்டவாறு தெளிவுரை எழுதியுள்ளார்!

தாம் விரும்புகின்ற பெண்களின் மெல்லிய தோளிடத்தே உறங்குதல் போலத் திருமாலின் உலகில் வாழும் வாழ்வு இனியதாகுமோ? என!

இதையே பலதார மணம் புரிந்த இன்றையத் தமிழறிஞர் ஒருவர் தம்முடைய அனுபவத்தை மனதில் கொண்டு விரிவுரை படைத்துள்ளார்!

பரிதாபமாக இருவருமே திருக்குறளில் திருவள்ளுவர் சொல்ல வந்த கருத்தினை பாமர மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளுமாறு விளக்கி விட்டனர்!

திருமால் எனப்படும் கண்ணன் ஆயர்குலப் பெண்களிடம்; ஆற்றங்கரையில் ஆடிக்களித்ததை காமத்துடன் தொடர்புபடுத்துவது போல அமைந்து கருதப்படுமாறு முன்னவர் எழுதிய  தெளிவுரை தவறாக மக்களிடம் சென்றுவிட்டது!

பின்னவரோ தமது சொந்த அனுபவத்தில் பிதற்றியவை தமிழக மக்களை காமத்தில் தோய்ந்த பித்தர்களாக்கிவிட வழி நடத்திவிட்டது!

எம்மைப் பொறுத்தவரை திருவள்ளுவர் இக்குறளில் 

ஒரு ஆடவன் தன்னைச் சார்ந்த தம் உறவுகளான பாட்டி, தாய், தமக்கை, தங்கை, நட்பாக பழகும் உறவுமுறை மகளிர், மனைவி, குழந்தை என அவரவர் உறவுக்கேற்ப தன் தோள் சேர்ந்த மகளிரைத் தழுவுதல் 

ஆற்றங்கரையில் பால் வேறுபாடு இல்லாது தம் தோழியருடன் இதே வித உறவில் ஆடிக்களித்த கண்ணன் அடைந்த இன்பத்தை விடச் சிறந்தது என்ற பொருள்படுமாறுதான் பாடி வைத்துள்ளார் என்பதே உறுதியான தெளிவுரையாகும்!

இல்வாழ்க்கையின் சிறப்பினைப் பாடிவைத்த வள்ளுவர் அதில் ஒருவனுக்கு ஒருத்தி என ஆணித்தரமாகப் பாடிவிட்டு, மேற்கண்டவாறு தவறான விளக்கம் தருமாறு பாடியிருப்பாரா எனச் சித்தம் தெளிந்தவர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். 

இது போன்றே இன்னொரு திருக்குறளில் வள்ளுவர் பொருள் தேடி வெளிநாடு சென்று திரும்பும் ஆடவனை மகளிர் சூழ்வர் என எழுதியுள்ளதையும் தவறாக அந்த ஆடவனின் பல தாரங்கள் தழுவுவர் என உரையாசிரியர்கள் குறித்துள்ளனர். 

ஒரு ஆடவன் வெளிநாடு சென்று திரும்புகிறான் என்றால் அவன் தனக்கென என்ன வாங்கி வந்திருப்பான் என்ற ஆவலுடன் அவனை அவனது தாய், தமக்கை, தங்கை, மகள், உறவு மகளிர் என ஏராளமானவர்கள் சூழ்ந்து அவனது தோள் தழுவுவர் என்பதே வள்ளுவச்சித்தரின் குறளுக்குரிய உயர் விளக்கமாகும்.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் என்பது சதவிகித மக்கள் பக்தி மார்க்கத்தில் திலைப்பவர்கள்தாம். 

ஆயினும் எங்கு பார்த்தாலும் ஒழுங்கீனங்கள். எழுதினால் ஏராள பக்கங்கள் தேவை. 

ஏராளமான பக்தி வளர்க்கும் ஆன்மீக அமைப்புகள் இருந்தும் ஒழுங்கீனங்கள் அதிகரிக்கின்றதே தவிரக் குறையவில்லை.

தவறு செய்துவிட்டுக் கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் மன்னிக்கப்படுவோம் என்ற நம்பிக்கைதாம் பக்தி மார்க்கத்தின் தவறுகளுக்கும் ஒழுங்கீனங்களுக்கும் காரணம்.

அது போன்றே கடவுளாவது சாமியாவது என்று எதற்கும் அஞ்சாமல் தவறுகள் செய்வது முரட்டுத்தனமான பகுத்தறிவு தரும் தவறான பாதை.

சாலையில் கண்ட இடத்தில் எச்சில் துப்புவது தவறென்று தெளிந்தால் சித்தம். தெரிந்தும் தவறு செய்தால் அது பித்தம்.

உண்மைச் சித்தர்கள் இதற்கெல்லாம் தரும் அழகான விளக்கம் இதுதாம். 

தன்வினை தன்னைச் சுடும்! வீட்டப்பம் ஓட்டைச்சுடும்!

இது எழுதப்பட்ட பிரபஞ்ச விதி.

நன்மை செய்தால் நன்மை அடையலாம். தீமை செய்தால் அதற்குரிய தண்டனையிலிருந்து எவரும் தப்ப இயலாது.

இது முற்பிறப்பிற்கும் பொருந்தும் என்பதால்தாம் வள்ளுவச் சித்தர் ஊழ்வினை பற்றியும் பாடி வைத்தார். 

மனிதப் பிறவியின் நோக்கங்களை முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்கள்தாம். அவர்களைத் தேடிக் காடு மலை குகை என சதுரகிரி மலைகளில் தேடி அலைய வேண்டாம். 

சித்தத்தைத் தெளிவாக்கி நான் யார் என்ற கேள்வியுடன் நேர்மையான வாழ்க்கை முறையினைத் தேர்ந்தெடுத்து, 

இந்தப் பிறவியை நான் சிறப்பாக அமைத்துக்கொள்ள என்ன வழி என்ற கேள்வியைப்  பிரபஞ்ச வெளியில் எழுப்பினால் எங்கும் நிறைந்த சித்தர்களின் வழிகாட்டுதல் சாதாரண மனிதரையும் வந்தடையும். சரித்திர மனிதராக வாழ வழி கிடைக்கும்.

வெகு விரைவில் தமிழினம் வள்ளுவர் போன்ற சித்தர்களை சரியாகப் புரிந்துகொண்டு பக்தி மார்க்கத்திலிருந்து மீண்டெழுந்து சித்தர்களின் உயர்ந்த எண்ணங்களைப் பின்பற்றி உயர் வாழ்க்கை நெறி வாழ்வார்கள் என்பதே எமது அசைக்க முடியாக நம்பிக்கையாகும்! Read More...

வெள்ளி, 20 ஜூன், 2014

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த உணர்வு பூர்வ அனுபவம்!

Leave a Comment
எனது தந்தை மரணப்படுக்கையில் இருந்த நேரம் அது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அவரை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கியது மருத்துவமனை நிர்வாகம்.

அவரின் உடலை வெகுவாகப் பாதித்த மஞ்சள் காமாலை நோய் காரணமாக அவருக்கு அப்போது கடுமையான உடல்வலி இருந்ததால் எனது சிறிய தமக்கை அவருடைய உடம்பினை அழுத்தி அவரது வேதனையைக் குறைக்க முயன்றார்.

அவர் ஏதோ வேலையாக வெளியில் செல்லவே அவரது வேதiனையைக் குறைக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது.

நானும் அவரது உடம்பினை அழுத்தி விட்டவாறு அவரது வேதனையைக் குறைக்க முயன்றேன்.

அதோடு மட்டுமன்றி அவரின் முதுகில் ஆறுதலாகத் தட்டியவாறு அவரிடம் மானசீகமாக நான் இதுவரை அவரிடம் ஏதேனும் கோபமாக அவரது மனம் புண்படும்படியாக நடந்து கொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுமாறு உள்ளுக்குள் வேண்டினேன்.

என்னுடைய வேண்டுகோள் அவருக்குள் நிச்சயம் பதிந்திருக்கும். ஏனெனில் வாழ்க்கையின் முடிவுப் பகுதிக்குள் அவர் வந்துவிட்ட நேரம் அது.
எனது வேண்டுகோள் அவரின் ஆழ் மனதில் பதிவதை நான் அந்த நிமிடமே உணரத் துவங்கினேன்.

என் தந்தையிடம் நான் நடந்து கொண்ட தவறான நிகழ்வுகளுக்கு அந்த நேரத்தில் மன்னிப்பு கிடைத்ததையும், அந்தத் தருணத்தின் உண்மைத் தன்மையையும் முழுமையாக என்னால் உணர முடிந்தது.

இது ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இன்றி நடந்த ஒரு உணர்வு பூர்வமான உண்மை அனுபவம்!

இந்த அனுபவத்தைத் தவறவிட்டவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்! நல்ல வேளையாக நான் அந்த வாய்ப்பினைத் தவறவிடவில்லை!

ஒரு உயிர் தன் உடலை விட்டு நீங்கும்போது தன் வாழ்வின் அங்கமாகத் திகழ்ந்தவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது காலம்காலமாக நிகழும் நிகழ்வு.

அந்த நேரத்தில் அந்த உயிர் தான் மிகவும் நேசித்த உடன் பிறந்தோர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உட்பட எவராயிருந்தாலும் தன்னை மிகவும் அவமானப்படுத்தியோ அல்லது அலட்சியப்படுத்தியோ இருந்தாலும் மன்னித்துவிட்டு அவர்களின் நேசத்தையும் அண்மையையும் விரும்பும் தருணம் அது.

வணிகக் கருத்து வேறுபாடுகள் தவிர என் தந்தையுடன் நான் எவ்வித மன வேறுபாடும் காட்டாதவன்!

அவரின் வாழ்நாள் இறுதிவரை என் மீது அவர் காட்டிய பரிவுகள் ஏராளம்! என் தந்தையிடம் நான் கற்றுக் கொண்ட உயர் குணங்களும் ஏராளம்!

அவரிடம் நான் பெற்ற உயர் குணங்கள்தான் இன்றுவரை என்னை வழி நடத்தி வாழ்க்கைப் பாதையைச் செம்மையுற வைக்க வழி காட்டுகின்றன!

Read More...

மதவாத வன்முறைகள்!

Leave a Comment
சித்தர்கள் எச்சரித்தது போன்றே மதவாத வன்முறைகள் தமிழகத்தில் அரங்கேறத் துவங்கிவிட்டன!

மதவாதத்திற்கும் சாதியவாதத்திற்கும் விலைபோன தமிழக அரசியல் இயக்கங்கள் தேர்தல் அரங்கிலிருந்து தமிழக மக்கள் சக்தியால் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில்

தம் இயக்கத்தைச் சார்ந்தவர் படுகொலை செய்யப்பட்டார் என்ற காரணத்திற்காக

மத்தியில் ஆட்சியைப் பிடித்த மமதையில் தமிழகத் தலைநகர் சென்னையில்
வன்முறையைப் பரப்பியுள்ளனர் மதவாத அமைப்பினர்!

படுகொலைக்கு ஆளானவரின் மரணம் நிச்சயமாகக் கண்டனத்திற்கு உரியது!

இரங்கத்தக்கது! வருத்தத்திற்குரியது! அனுதாபத்திற்கு உரியது!

அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் உடனடியாகக் காவல்துறை வாயிலாக அடையாளம் காணப்பட்டு

குற்றத்திற்குரிய தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் இங்கு மாற்றுக் கருத்தும் கிடையாது!

எந்தக் காரணத்தினால் இந்தப் படுகொலை நடந்தது என்பதை அறிய முடியாத நிலையில் இதற்கு மதவாத முத்திரை குத்தி அரசியலாக்குவது அரசியல்  நாகரீகத்திற்கு எதிரானது!

அதோடு மட்டுமன்றிச் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதும்

ஏதுமறியா அப்பாவிப் பொதுமக்களை அச்சுறுத்துவதும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும்

பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதும் எவராலும் ஏற்றுக்கொள்ளும் செயலல்ல!

கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு நிகராக

வன்முறையில் ஏற்பட்ட இழப்புகளைக் கணக்கிட்டு

வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி ஈடு காண்பதும்,

வன்முறையில் ஈடுபட்ட இயக்கம்தான் இழப்புகளை ஈடு செய்ய வேண்டும் என வாய்மை மன்றம் வாயிலாக உத்தரவிடவும் வழக்குப் பதிய வேண்டும்!

சட்டங்கள் கடுமையாக இல்லாவிட்டால் எவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைதான் இந்த நாட்டில் உருவாகும்!

இழப்பு ஏற்படுத்துபவர்கள்தான் இழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டினைச் சட்டத்தின் துணை கொண்டு துணிந்து நிறைவேற்றினால்தான்;

வன்முறை குணம் உடையோர்

வன்முறையில் ஈடுபடுபடுவதற்தே அஞ்சுகின்ற

அசாதாரண நிலை நிச்சயம் இந்த நாட்டில் உருவாகும்!

Read More...

வியாழன், 19 ஜூன், 2014

எடுபிடிகள்!

Leave a Comment
அரசியல்வாதிகள்,
நடிகர்கள்,
சாமியார்கள்,

இவர்கள எல்லாம் வணிகம் சார்ந்த பிரிவினர்! 

இவர்கள் தங்களின் செல்வாக்கினையும் செல்வத்தையும் உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் நபர்களைத்தான் இங்கு நாம் எடுபிடிகள் என வேதனையாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது!

அரசியல்வாதிகள்,
நடிகர்கள்,
சாமியார்கள்,

இவர்களின் பிறந்தநாள், உள்ளுர் வெளியூர்ப் பயண வரவேற்புகள், துவங்கிப் பல்வேறு வருமான வாய்ப்புகளைப் பெருக்குவதற்குத் தேவைப்படும்
கட்அவுட்டுகள், 

கொடி தோரணங்கள், விளம்பரத் தாள்கள் விநியோகித்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல், பொதுக்கூட்ட மேடைகள் அமைத்தல், இன்ன பிற வேலைகளுக்கெனவே  இளைய சமுதாயத்தைஇவர்களுக்கு எடுபிடிகளாக்கிச் சம்பளம் கொடுத்தும் பதவிகள் கொடுத்தும் பயன்படுத்திக்கொள்கின்றனர்!

குறிப்பாக இன்றைக்குத் திரையுலகில் சிரிப்பு நடிகர் தொடங்கி வில்லன் நடிகர்கள், கவர்ச்சி நடிகையர் வரை இவர்களுக்குக் கட்அவுட் வைத்துப் பாலாபிசேகம் செய்து ஆரவாரித்து இவர்களின் திரையுலக வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்வதற்கென்றே இளைய சமுதாயத்தை எடுபிடிகளாகப் பயன்படுத்துகின்றனர்!

இவர்களின் ஆரவாரத்தில் பிரம்மாண்டங்கள் காட்டி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளிடமும், சாமியார்களிடமும் மயங்க வைத்து மக்கள்தம் உழைப்பை அனுபவித்து மக்களையும் எடுபிடிகளாக மாற்றம் செய்ய இது போன்ற  இளைய சமுதாய நபர்கள் தயார்ப்படுத்தப்படுகின்றனர்!

அரசியல்வாதிகளின் எடுபிடிகள் மக்களிடம் காட்டும் பந்தாக்கள் நாடறிந்தது! 

அரசியல் இயக்கங்களில் அதிகப் பணிவுள்ள எடுபிடிகள் மிகக் குறுகிய காலத்தில் இயக்கத்தின் மேல் மட்டத்திற்குச் செல்வதையும், பணிவு காட்டாதவர்கள் இருந்த நிலையிலிருந்து மேலேறாமல் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் நிகழ்வுகள்தான் இன்றைய நிலை!

சாமியார்கள் இந்த வகையில் அரசியல்வாதிகளையும் மிஞ்சுகின்றனர்! 
குறுகிய காலத்தில் துறவறத்தில் புகுந்து செல்வத்தில் மிதந்து வெளிநாடுகளுக்குப் பறக்கும் லேப்டாப் சாமியார்களின் ஊடக மற்றும் எடுபிடிகளின் சாம்ராஜ்யம் நாடு முழுக்க மிகப் பரந்த அளவில் விரிந்துள்ளது!

பருவ மழை தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் ஏதோ ஒரு புரியாத பெயரில் யாகம் வளர்த்து ஒரு மாதம் கழிந்து இயற்கையாகப் பொழியும் பருவ மழை கூட இந்தச் சாமியார்களின் தயவால்தான் வருகிறது எனச் சுய தம்பட்டச் சுவரொட்டிகளை எடுபிடிகளைக் கொண்டு ஒட்டிச் சுய விளம்பரம் தேடிக் கொள்ளும்  நிலையைக்  காணும்போது நம் மக்களின் அறியாமையை எண்ணிச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை!

மக்களுக்குச் சேவகம் செய்வதற்கு வருபவர்கள் மக்களின் எடுபிடிகளாக விளங்க வேண்டிய அவசியமே இல்லை! 

மக்களும் அவர்களுக்கு எடுபிடிகளாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது! 

இவ்வாறு மக்களால் மதிக்கத்தக்க சிறந்த சேவை செய்யும் நபர்களாக அரசியலிலும் துறவறத்திலும் இணைபவர்கள் விளங்கினால் அதுதான் உன்னதமான நாடாகும்!

மக்களுக்காகவே தங்களின் வாழ்க்கை முறையை அர்ப்பணித்துக் கொள்ளும் நல்லவர்களுக்கு எடுபிடிகள் தேவையே இல்லை! 

உதாரணத்திற்கு நம் மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரு கலாம் அவர்கள் ஒருவரே போதும்!

எடுபிடிகளின் தேவையற்ற இத்தகைய நல்லவர்களை அடையாளம் கண்டு நல்லவர்கள் அரசியலில் இணைவதற்கான வழி முறைகள் கண்டு தங்களின் வாழ்க்கை முறையைச் சிறப்பானதாக மாற்றிக் கொள்ள வேண்டிய மகத்தான பணி மட்டுமே மக்களைச் சார்ந்தது!

அரசியலிலும் துறவறத்திலும் நல்லவர்கள் மட்டுமே ஏராளம் பேர் இணையத் துவங்கினால் காலப்போக்கில் இது போன்ற எடுபிடிகளும் எடுபிடிகளுடன் காணும் இன்றைய ஊழல் தலைவர்களும் காணாமல் போகும் நிலை நாட்டில் நிச்சயம் உருவாகும்!

Read More...

புதன், 18 ஜூன், 2014

ஊடகங்கள்

Leave a Comment
தினசரி செய்தித் தாள்களைப் படிக்கும்போது,

தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகளைக் காணும்போது

கொலை,
கொள்ளை,
கற்பழிப்பு,
ஊழல்,
இலஞ்சம்,
நில அபகரிப்பு,
கடத்தல்,
கடையடைப்புப் போராட்டங்கள்,
சூதாட்டம்,
சாலை மறியல்கள்,
விபத்துகளால் மரணம், படுகாயம்,
வன்முறைகள்,
சாதி மதச் சண்டைகள்
தற்கொலைகள்,
காவல் நிலைய மரணங்கள்,
ஆளும் கட்சியினரின் சுய தம்பட்டங்கள்,
எதிர் இயக்கத்தவரின் கண்டன அறிக்கைகள்,

இது போள்ற செய்திகள் இல்லாது,

தமிழர் பண்பாடு, நாகரீகம்,
தமிழர்தம் சாதனைகள்,
தமிழர்தம் வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற

செய்திகள் மட்டுமே ஏராளம் காணும் நிலை வரும் காலம் எப்போது?

Read More...

செவ்வாய், 17 ஜூன், 2014

காந்தியார் வழங்கிய அகிம்சை குணங்கள்!

Leave a Comment

மகாத்மா அவர்கள் அகிம்சா வழியில் போராடி நம் நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டு மறைந்தாலும்

அவர் வழி காட்டிய அகிம்சை குணம் மட்டும் நம் மக்களிடமிருந்து அகலவே இல்லை எனலாம்!

நம் தமிழக மக்களில் பெரும்பாலானோர் தங்களுக்குப் பிடித்த சின்னங்களுக்கும்,

தங்களுக்குப் பிடித்த இயக்கங்களுக்கும்தான் வாக்களிப்போம் எனப் பிடிவாத மனப்பான்மையுடன் வாக்களித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக எந்த இயக்கம் அதிகப் பணம் கொடுக்குமோ அந்த இயக்கத்திற்கு பணம் பெற்ற விசுவாசம் குறையாமல்

வேறு எவருக்கும் வாக்களிக்காது அந்த இயக்கத்திற்கே வாக்களிப்பதில் கடமை தவறாதவர்களாக விளங்குகின்றனர்.

மக்களின் விசுவாசமும் நன்றி உணர்வும் பாராட்டத் தக்கதுதான். ஆனால் இந்த நன்றி உணர்வால் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றனவா என்றால் அது கேள்விக்குறிதான்!

குடி தண்ணீர்,
சாலை வசதி
பேருந்து வசதி,
மின்சார வசதி,
சாக்கடை வசதி,
சுகாதார வசதி,
பள்ளிக் கட்டிடம்,
வீட்டு வசதி,

இது போன்ற ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாமலே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல் திருவிழாக்களை எதிர் கொள்கின்றனர்!

குண்டும் குழியுமான சாலைகள்,
இருளில் தவிக்கும் கிராமங்கள்,
புளி மூட்டைப் பேருந்துப் பயணங்கள்,
சுகாதாச வசதியற்ற பேருந்து நிலையங்கள்,
மலிவு விலை உணவகங்கள்,

மண்எண்ணை உள்ளிட்ட குடிமைப் பொருட்கள் (மண் எண்ணைக்கு மட்டும் அதிகாலை 4 மணிக்கே நீண்ட வரிசையில் அமர்ந்திருக்கும் முதியோர்களைக் காணும்போதெல்லாம் வேதனை அதிர்வுகள் எழும்)

அரசின் நல உதவித் திட்டங்கள்,
மருத்துவ வசதி,

எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கால் கடுக்கப் பல மணி நேரங்கள் காத்திருப்பதைச் சுகமானதாகக் கருதிக்கொண்டு,

ஒரு வித அகிம்சை குணத்துடனேயே வாழ்ந்து தொலைப்பது எனத் தீர்மானமாகவே உள்ளனரோ நம் தமிழக மக்கள் என அஞ்சத் தோன்றுகிறது!

Read More...

சனி, 14 ஜூன், 2014

தொலைந்து போன ஆறுகள்!

Leave a Comment
மழை காலங்களில் பெருகும் ஆற்று நீரைக் குறைவான மக்கள் தொகை இருந்த காலத்திலும் நம் முன்னோர்கள் நிலம் குழிந்த இடங்களில் எல்லாம்
ஏராளமான ஏரிகளையும், குளங்களையும் வெட்டிக் கால்வாய்கள் வழியாகக் கொண்டு சேர்த்து வெள்ள நீரைச் சேமித்து வந்துள்ளனர்!

இன்றைக்கும் நம் கண் முன்னே பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் ஏரிகள் குளங்களே இதற்கான சாட்சியாகும்!

குறிப்பாகக் காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரம்மாண்டமான குளங்கள்!

நம் முன்னோர்களின் மனித உழைப்;பும் இயற்கையைச் சரிவர நிர்வகிக்கும் ஆற்றலும் அளவிட இயலாதது!

இன்றோ நாம் எல்லாவற்றையும் இழந்த நிலையில் உள்ளோம்!

அதுவாவது பரவாயில்லை! இருப்பதையாவது தக்க வைத்துள்ளோமா என்பதுதான் இன்றைய கேள்வி!

ஏரிகள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிரமிப்புச் செய்து அங்கு அவை இருந்த இடமே சுத்தமாகத் தெரியாமல் வீட்டு மனைகளாக்கப்பட்டுள்ளன.

இயற்கையாகவே நீர் குழிந்த இது போன்ற இடங்களில் கடும் மழைக் காலங்களில் வெள்ள நீர் வழக்கம் போலத் தன் இருப்பிடம் தேடி வரும்போது அந்த இடத்தில் முளைத்துள்ள வீடுகளைச் சூழ்ந்துவிட மக்கள் இயற்கை தமக்குச் சதி செய்வதாகக் கற்பனை செய்து கொள்கின்றனர்!

நம் முன்னோர்கள் கடின உழைப்பில் கட்டிய ஏரிகளுக்கும், குளங்களுக்கும் ஆறுகளில் இருந்து வரும் வழிப்பாதையை முற்றிலும் அடைத்து விட்டுக்

குறிப்பாகக் குளங்களில் நம் முன்னோர்கள் நீர் வருவதற்கும், குளம் நிறைந்து வெளியேறுவதற்கும் ஏற்படுத்தியிருந்த வழிகளை முற்றிலும் அடைத்து விட்டு தேங்கி நாறும் நீரில் குளித்து யானைக்கால் முதலிய வியாதிகளை வாங்கித் தவிக்கின்றனர்.

எங்கள் ஊரைச் சரி சமமாகப் பிரித்து இரு புறமும் பாயும் ஆற்றின் பெயர் பொன்னி!

சேலம் மாவட்டம் கஞ்ச மலையிலிருந்து புறப்பட்டு வரும் இவள் பெயருக்கேற்ப பொன் எனப்படும் பொன் துகள்கள் சுமந்து வருபவள்!

எனக்கு விபரம் தெரிந்த காலத்திலேயே இவளது மணற் பரப்பில் எங்கள் ஊர் பொன் தச்சர்கள் மணலைச் சலித்துப் பொன் கொழிப்பர்.

இன்றோ இவளது பாதை ஆக்கிரமிப்பாளர்களால் தடைபட்டுப் பரிதாபமாகிவிட்டது.

போதாக குறைக்கு அண்மையில் போடப்பட்ட தங்க நாற்கரச் சாலை முற்றிலும் இவளது இடத்தை ஆக்கிரமித்துவிட

இன்று இவள் தன் வழித் தடத்தை இழந்து வேறு இடம் தேடப் போக எங்கள் ஊரின் ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் மழைக் காலத்தில் வெள்ள நீரில் மிதக்கும் அவல நிலையை எதிர் கொள்கின்றனர்!

இவளைப் போலவே சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையிலிருந்து புறப்படும் திருமணிமுத்தாறு எனும் ஆறு அங்கிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர்கள் பயணித்து நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு அருகே காவிரியில் கலக்கிறாள்!

அவளது பாதையிலும் இன்று ஏராளமான ஆக்கிரமிப்புகள்!

மேலும் இவள் உற்பத்தியாகும் சேர்வராயன் மலையில் உள்ள மரங்களில் பெரும்பாலானவை வெட்டப்பட்டு அவ்விடங்களில் காப்பித் தோட்டங்கள் உருவானதால் தடைபட்ட மழை வளத்தால்

இவள் இன்று சேலத்தின் கூவமாகப் பரிதாபமாகக் காட்சியளிக்கிறாள்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைக்காலங்களில் நுங்கும் நுரையுமாகப் புறப்பட்டு வந்து பரவசப்படுத்திய இந்த இரண்டு ஆறுகளும் இன்று இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டன!

உதாரணத்திற்கு மட்டுமே இவை இரண்டும்!

தமிழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்குள் தொலைந்து போனது இந்த இரண்டு ஆறுகள் போல எத்தனையோ?

இவற்றின் தற்போதய நிலையும்,

எங்கள் ஊரில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரி ஒன்று என் கண்முன்னே இன்று வீட்டு மனைகளுடனும், புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளுடனும் காட்சியளிப்பதையும் காணும்போதும் என்னுள் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு!

இழந்து விட்ட இது போன்ற ஆறுகளால் தடைபட்டுப் போன வெப்பச் சலனமும் தமிழகத்தில் மழை வளம் குறைவதற்குக் காரணமாகிறதே!

ஏராளமான எந்திர ஆற்றல் நிறைந்த இந்தக் காலத்தில் இது போன்று தொலைந்து போன ஆறுகளைப் புதுப்பிப்பதுவும் அவற்றை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அப்புறப்படுத்துவதும் முடியாத காரியமல்ல!

ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசியல் தலைமைகளைத்தான் நாம் ஆதரித்து வந்து நம் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறோம்!

பொன்னி ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்தும் இன்று அந்த ஆந்றின் மழைக்கால மண் வாசனையோடு கூடிய வரவை இழந்து தவிக்கும் எம் மக்கள்

இயற்கையைப் புரிந்து கொள்வது எப்போது?

ஊழல் இயக்கங்களுக்கே மாறி மாறி வாக்களித்து விட்டு இழந்து விட்ட இது போன்ற நன்மைகளை நினைந்து மனம் திருந்துவது எப்போது?

விடை தெரியாத கேள்விகள் எம்முள் ஏராளமாக எழுகின்றன!

மீண்டும் அந்தப் பழைய வசந்த காலம் உருவாகுமா?

தொலைந்து போன அந்த ஆற்றில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னால் ஆன சிலையாக ஒரு அழகிய பெட்டியில் மிதந்து வந்து

எங்கள் ஊரில் நிரந்தரமாகக் குடியிருக்கும் அந்த மழை தெய்வமான மாரியம்மன்தான்

இந்த விடை தெரியாத  கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!

Read More...

சொர்க்கம் நரகம்

Leave a Comment
சொர்க்கம் நரகம் என்ற கதைகளைப் பகுத்தறிவுள்ள எவரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்! 

பூமிப்பந்திற்கு அப்பால் உள்ள இந்தக் கற்பனை இடங்களைப் பற்றி நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்!

எனினும் இந்த பூமிப்பந்திலேயேதான் உண்மையிலேயே சொர்க்கமும் நரகமும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! 

நற்குடிப் பிறப்பு, நல்ல தாய் தந்தையர், சிறந்த உற்றார் உறவினர், நல்ல கல்வி, நல்ல துணை அழகான அறிவான குழந்தைகள் உழைப்பிற்கேற்ற ஊதியம்! மன நிறைவான வாழ்க்கை! இவை ஒருங்கே அமையப்பெற்றவருக்கு இந்த பூமிப்பந்துதான் சொர்க்கம்!

இதற்கு நேர்மாறான வாழ்க்கை முறையை அனுபவித்து என்றென்றும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புவி வாழ்க்கையே நரகம்தாம்!

இவையெல்லாம் நியமப்படி அமைவது அவரவர்தம் முற் பிறவிப் பயன்! 

அதே சமயம் 

அறிது அறிது மானிடராய்ப் பிறத்தல் அறிது! 
அதனினும் அறிது கூன் குருடு செவிடு அற்ற மனிதராய்ப் பிறத்தல் அறிது! 

எனப்பாடிய நமது முது பெரும் பெண் தமிழறிஞர் அவ்வையின் குமுறலுக்கேற்ப உலகில் இத்தகைய குறையுடன் பிறப்பவர்களையும், 

அல்லது பிறக்கும்போது நல்ல நிலையில் பிறந்து ஊனமடையும் பலரையும் நாம் காண்கிறோம்!

உலகிலுள்ள உயிரினங்களில் மனித இனத்தைத் தவிரப் பிற உயிரினங்களில் உடற் குறைபாடுகளுடன் பிறப்பதை அரிதாகவே இன்று வரை நாம் காண முடிகிறது!

ஆனால் அவ்வையார் தனது பாடலில் வரிசைப்படுத்திய குறைகள் உள்ளவர்கள் உலகெங்கும் ஏராளமாகப் பிறந்து வாழ்வது உள்ளபடியே எவரும் விரும்பி ஏற்காத வேதனைக்கு உரிய வாழ்க்கை முறைதான்!

ஆயினும் இது போன்ற குறைகளுடன் பிறப்பவர்களை உலகம் இனியும் தவிர்க்க இயலும்! 

இது போன்ற குறைகள் உள்ளவர்களிலும் தம் குறைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல் சாதனையாளர்களாகத் தம்மை உலகிற்கு அறிவிக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களை நாம் தொடர்ந்து சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! 

அத்தகையவர்களைப் பின்வரும் கருத்துக்கள் நிச்சயமாகக் காயப்படுத்தாது எனவும் இத்தகு சாதனையாளர்களுக்குச் சித்தர்களின் எண்ணங்கள் தாங்கிய இக்கருத்துக்கள் அவர்களின் ஊனத்திற்கு அரு மருந்தாக இருக்கும் எனவும் நாம் நம்புவோம்!

இரு கைகளும் இரு கால்களும் இன்றிப் பிறந்தும் தம்முடைய வாயால் தம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சாதனையாளர்கள் பலர் தம்முடைய பிறவிக் குறையை மட்டுமல்ல 

தம்முடைய ஊழ்வினையையும் இந்தப் பிறவியோடு தொலைத்துவிட்டுத் தம்முடைய அடுத்த பிறவியைச் சிறப்பாக மாற்றியமைத்துச் சொர்க்க வாழ்வுக்குத் தயாராகின்றனர் என்பதுதாம் உண்மை!

அதே சமயம் தமிழகத்தில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள் உடல் ஊனமுற்றவர்களாகத்தான் உள்ளனர்! 

தமக்கு ஏற்பட்ட ஊனத்தை அவர்கள் பிச்சையெடுப்பதற்கென்றே தவறாகப் பயன்படுத்துவது அவர்களின் முற்பிறவியின் ஊழ்வினைத் தொடர்ச்சி இதுவென்பது மட்டுமன்றி 

தம்முடைய இந்தச் செயலால் தமது அடுத்த பிறவியையும் ஊனமாகப் பிறப்பதற்கென்றே தொடர்கின்றனரென்றும் அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும்!

அதே சமயம் ஊனமின்றிப் பிறந்து கை கால்கள் நன்றாக இருந்து,  

தகுதியான உடல் திறன் இருந்தும் அடுத்தவர் உழைப்பை எதிர் நோக்குபவர்களாக மனதளவில் ஊனமுற்று, 

உழைப்பதற்குச் சோம்பல்பட்டு பிச்சையெடுத்து வாழும் இன்றுள்ளவர்கள் முற்பிறவியில் என்னவாக இருந்திருப்பார்கள் என்ற கேள்வி எழாமல் இராது

இந்தக் கேள்விக்குப் பதில்! 

கைகால்கள் ஊனமுற்றுப் பிறப்பவர்கள் 

மற்றும் நல்ல நிலையில் பிறந்திருந்தும் விபத்துகளுக்கு ஆட்பட்டு ஊனமடைதல் 

மற்றும் ஒருவருக்கொருவர் ஆயுதமேந்திச் சண்டையிட்டுத்  தம்முடைய உடல் உறுப்புகளை இழப்பதுவும் அவரவர் ஊழ்வினையின் தொடர்ச்சிதான்!

அடுத்தவர் உழைப்பில் கிடைக்கும் வரிப்பணத்தை தம்முடைய உல்லாச வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொண்டு அதை எதிர்ப்பவர்களை வெட்டி வீழ்த்தி அராஜகவாதிகளாகத் திரியும் இன்றைய அரசியல்வாதிகளும், 

மக்களின் உழைப்பில் கிடைத்த செல்வத்தில் புரண்டு மதவெறி உணர்வு ஊட்டும் மதவாதிகளும், 

இவர்களால் தீவிரவாதிகளாக மாற்றம் செய்யப்பட்டு அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் தீவிரவாதிகளும்,

சொத்து சுகங்களுக்கு ஆசைப்பட்டுச் சொந்தங்களையே வெட்டி வீழ்த்திக்கொள்ளும் சுயநலவாதிகளும்

கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு அடுத்தவர்களை உடல் ஊனப்படுத்தியவர்களும்தான் 

முன்னர் தாம் செய்த வினையை அனுபவிக்க அடுத்த பிறவியில் இது போன்று ஊனமுற்றுப் பிறந்து தம் சுயம் அறியாமல் அடுத்தவர் உழைப்பில் வாழும் பிச்சைக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!

ஓவ்வொருவருடைய ஊழ்வினையும் அவரவர் முற்பிறவியின் வினைகளுக்கு ஏற்பக் கட்டாயம் தொடர முற்படும்! 

இதைத்தான் பட்டினத்தார் ஒரு வரியில் தன் வினை தன்னைச் சுடும் என அழகாகச் சொல்லி வைத்தார். 

வள்ளுவமும் ஊழ்வினையிலிருந்து எவரும் தப்ப இயலாது எனத் தம் பத்து குறள்களிலும் அழுத்தாமாக வலியுறுத்தியுள்ளார். 

எனவே பிறவிதோறும் தொடரும் ஊழ்வினையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு இனி வரும் வாழ்க்கை முறையைச் சிறப்பானதாக்கிக்கொள்ள 

ஒவ்வொரு மனித உயிரும் முயன்றால் மனநலம் குன்றிய, உடல் ஊனமுற்ற சமுதாயம் உருவாவது நிச்சயம் தவிர்க்கப்பட்டு இந்த பூமிப்பந்தே ஒரு சொர்க்கமாக மாறும்!

அது மட்டுமன்றி இந்த உலகில் அமைதியும் சமாதானமும் மீண்டும் தழைக்கும்! 

எனவே கைகால்கள் ஆரோக்கியமாக இருந்தும் உழைத்துத் தம் உணவைத் தேடிக்கொள்ளாது பிச்சையெடுத்து வாழும் நபர்களுக்கு எவரும் உதவவே  கூடாது. 

இவர்களை ஆதரித்து நம் உழைப்பினை இரக்கம் என்ற பெயரில் வீணாக்குகிறோம் என்பதைவிட இவர்கள் தம் அடுத்த பிறவியையும் உழைப்பின்றியே அவர்தம் ஊழ்வினை தொடர நாம் ஆதரிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். 

எனவே ஊனமுற்றுப் பிறந்தும் தம் உழைப்பால் தம் ஊழ்வினையை மாற்றிக்கொள்ளப் போராடும் மன உறுதிமிக்க ஊனமுற்றவர்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். 

உழைத்துப் பிழைக்க விரும்பாது சோம்பித்திரியும் ஆரோக்கியாமான நபர்களை ஆதரிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்!

ஆதரிக்க எவருமற்ற நிலையில் தாமாகவே அவர்கள் உழைப்பதற்கு முன்வருவர். 

பொதுவாகப் பிச்சை எடுப்பவர்கள் நாம் அவர்களுக்குப் பிச்சையிட்டால் நம்மை வாழ்த்துவது வழக்கம்! 

சில நோங்களில் நாம் உதவ நினைக்கும்போது நம்மிடம் உண்மையிலேயே சில்லறை இல்லாதிருந்து அவர்களுக்கு உதவ இயலாது போனால் நம் நிலை அறிந்து அவர்கள் ஒதுங்குவதில்லை. 

வழக்கமாக தினமும் பிச்சை கேட்டு வரும்  நமக்கு இல்லை என்று சொல்லாமல் தவறாது பிச்சையிடுபவர்தானே,  எனவே இன்றில்லாவிட்டால் நாளை இவரிடம் வாங்கிக் கொள்ளலாம் என பெருந்தன்மையாகச் செல்லாமல் வாய்விட்டுத் திட்டிவிட்டுச் செல்வர். 

இவ்வாறு இவர்கள் நம்தைச் திட்டுவது நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது எனினும் திட்டிய வினை அவரையே சாரும் என்பதால் அந்த வினை அவருக்குச் சேர வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் நான் கூட அவர்களை மன்னித்து அடுத்த முறை வரும்போது மீண்டும் மீண்டும் பிச்சையிடுவது வழக்கம்!

இப்பொழுதெல்லாம் இது போன்று உடல் ஆரோக்கியமாக இருந்து பிச்சையெடுத்துத் திரிபவர்களை ஆதரிப்பது அவர்களின் அடுத்த பிறவிக்கும் இதே உழைப்பில்லாது அடுத்தவர் தயவில் வாழும் சோம்பல் பேர்வழிகளாக உருவாக நாமே ஆதரித்துத் தயாரிப்பதாகக் கருதி அவர் எவ்வளவு திட்டினாலும் அவர் வினையை அவரே அனுபவிக்கட்டும் எனப் பிச்சையிட மறுத்துவிடுவேன்!

எனவே இனி அடுத்த பிறவியில் பிச்சைச்காரர்கள் உருவாகாது தடுக்க இப்பொழுதே நம் இரக்க குணத்தைத் தள்ளி வைத்து உதவியற்ற நிலையில் தாமாகவே உழைத்து வாழுமாறு அவர்களை நல்வழிப்படுத்த முயல்வோம்!

அப்படியும் மாறுவதற்குத் தயாராகாதவர்களை இனிச் சிறைச்சாலைகளில் தள்ளிக் கடுமையான வேலைகள் கொடுத்துத் திருத்துவோம். 

உடல் ஊனமுற்ற தமிழ்ச் சமுதாயம் இனி உருவாகாமல் ஒரு தலை சிறந்த சமுதாயமாகத் தமிழினம் வாழும் வழி காண்போம்!

இது ஐந்தாம் தமிழ்சங்கத்தின் தலையாய பணியாக வரும் காலத்தில் திகழும்.

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்?
என்பது கேள்வியில்லை!
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை!

உடல் உழைக்கச் சொல்வோம்! அதில் பிழைக்கச் சொல்வோம்.!
பிறர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டோம்!

Read More...

உயிர்த் தத்துவம் அறிவோம்!

Leave a Comment

பிறவிகள் தொடரக்கூடிய இயல்படையவை என்பதை உலகிற்கு ஆணித்தரமாக உணர்த்தியவர்கள் நம் முன்னோர்கள்!

இவ்வாறு தொடரும் உயிர்கள் தங்களின் முற்பிறவி வாழ்விற்கேற்பத்தான் அடுத்த பிறவியினை அமைத்துக் கொள்ள முடியும் என்பதையும் நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர்.

முற்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்பவே அவர்தம் அடுத்த பிறவி அமையும் என்பதும், 

முற்பிறவியில் கொடியவர்களாக விளங்கியிருப்பின் அவர்தம் ஊழ்வினை அடுத்த பிறவியில் தொடரும் என்பதையும் உணர்ந்த நம் முன்னோர்கள் 

வாழ்க்கை முறையில் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கையாக ஊழ்வினையைத் தவிர்த்து வாழ்ந்து வந்துள்ளனர்!

வள்ளுவமும் ஊழ்வினை எனக் குறிப்பிட்டுப் பிறவிகள் உண்டென உறுதிபடுத்தியுள்ளார்! 

அதே சமயம் அவரது குறளிலுள்ள கருத்துகளுக்குத் தவறாகத் தெளிவுரைகள் வழங்கப்பட்டு தவறான அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டது! 

உதாரணத்திற்கு எழு பிறப்பும், எழுமை எழுபிறப்பும் என அவர் எழுதியுள்ள பல குறள்களுக்கும் தெளிவுரை எழுதிய அறிஞர்கள் பக்தி மார்க்கத்தவர்களாக இருந்ததால் 

அவரது கருத்தாகிய எழு பிறப்பு என்பதை ஏழு பிறவிகள் எனத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டனர்!

அதிகாலைப் பொழுதில் வானில் உதிக்கும் கதிரவனைப் பார்க்கும் ஒவ்வொரு நாளும் எழுஞாயிறு எனத்தான் இன்றுவரை தமிழினம் அழைத்துப் போற்றி வந்துள்ளது! 

உண்மையில் கதிரவன் நிலையாக இருக்க அதைச் சுற்றி வரும் பூமியில் வாழும் மனிதன்தான் ஞாயிறு தினமும் தோன்றி மறைவதாகக் கற்பனை செய்து கொண்டான்! 

தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல! எனவேதான் எழுஞாயிறு எனக் குறிப்பிட்டுத் தினமும் உதிக்கும் ஞாயிறைப் போற்றியது!

இதை அடிப்படையாகக் கொண்டுதாம் வள்ளுவர் தெளிவாகப் பிறவிகள் எழுகின்ற இயல்பினை உடையது என உறுதிபடப் பாடி வைத்தார்! 

நாம்தான் இதனை மதவாதிகள் பரப்பிய ஏழு பிறவிகள் எனத் தவறாகப் புரிந்துகொள்ளும் மன நிலைக்குத் தள்ளப்பட்டோம்!

மிகச்சிறந்த பகுத்தறிவாளராக விளங்கிய பட்டினத்தாரும் பிறவிகள் உண்டென்பதை ஆணித்தரமாக அப்பன் எத்தனை அப்பனோ அம்மை எத்தனை அம்மையோ எனத் தம் தாய்மைப் புலம்பலில் பாடி வைத்தார்!

ஒவ்வொரு மனிதரும் தம்முடைய எண்ணங்களை ஆழ்மனதில் செழுத்தினால் தாம் சென்ற பிறவியில் எத்தகையவராக இருந்திருப்போம் என்பதை நிச்சயம் உணர முடியும்!

அப்பொழுதுதான் இன்றும் தம் பிறவி அறியாமல் வாழ்ந்து வரும் பாரதிகளும் காந்திகளும் தெரசாக்களும் தம் சுயம் உணர்ந்து  மீண்டும் உலகு தழைக்கப் பாடுபட முடியும்!

மேலும் தமிழ் மொழி ஒன்றுதான் பிறப்பின் அர்த்தத்தை முழுiமாக உணர்ந்து அதற்குரிய பெயரைத் தந்து சிறப்பித்துள்ளது! 

உலகில் மனித இனம் தவிர்த்த தாவர இனத்தை தமிழ்மொழி பயிர் என அழைக்கிறது! 

அது போலவே மனித தேகத்தில் நிலை பெறுவதை உயிர் என அழைத்தது!

பயிர்கள் எப்படித் தொடர்ச்சியாகத் தோன்றி வளர்ந்து வாழ்ந்து மடிந்து மீண்டும் பிறந்து வாழ்கிறதோ

அவ்வாறே உயிர்களும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடிந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வாழ்கின்றன!

இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால் 

முந்தைய பிறவிகளில் தாம் எவ்வாறு இருந்தோம் என்பதை உயிர்கள் அறிந்திராத வகையில் ஏற்படுத்தப்பட்ட இயற்கை இரகசியம்தான்

 மனித குலம் அறியாத வேடிக்கை விந்தை!

ஒரு பயிர் பயிராகவே இருந்து விட்டால் பயனேதுமின்றிப் போய்விடும்! 

அதுவே ஒரு நெற் பயிராகத் தொடக்கத்தில் நாற்றாக இருந்து

பின்னர் வேறு இடத்தில் பிடுங்கி நட்டுச் சரியாகப் பராமரிக்கும்போதுதான் 

செழித்து வளர்ந்து நெல்மணிகளை உற்பத்தி செய்து மக்களுக்கும், 

வைக்கோலாகி மாடுகளுக்கும் 

அதன் பின்னர்ச் சாணமாகி உரமாகவும்

விராட்டியாகி எரிபொருளாகவும் பயனாகிறது! 

ஒரு கனி தரும் மரமாக அந்தப் விளங்கினால் வளர்ந்து ஆளாகிக் குளிர்ந்த நிழல் தந்து 

பகலில் சுவாசிக்க ஆக்சிஜன் தந்து 

காய்கனி தந்து உணவாகி, 

சருகானால் உரமாகி, காய்ந்துவிட்டால் விறகாகி, 

தன் வாழ் நாள் முழுக்க மனித குலம் மட்டுமன்றித் தன்னை நாடி வரும் பல்வேறு உயிர்களுக்கும் பயன் தரும் வாழ்வு வாழ்கிறது! 

இது போலத்தான் மனித குலம் பயனுற வாழ வேண்டும் என்று கருதித்தான் உயிர்கள் என மனித குலத்தைத் தமிழ்மொழி சிறப்பித்து அழைத்தது! 

பயிர்களுக்கு எண்ணங்கள் இல்லாவிட்டாலும் அவை பிறருக்காக வாழ வேண்டுமென்ற எண்ணமுடையவையாகத்தான் வாழ்கின்றன!

ஆனால் சிந்திக்கின்ற ஆற்றல் பெற்ற மனிதன்தான், பல்வேறு பிறவிகள் எடுத்தும் பெரும்பாலும் பிறந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் எனத் தம் பிறவி நோக்கம் அறியாமலே வாழ்ந்து தவிக்கிறான்! 

மனிதன் தன் முற்பிறவி அறியாமல் வாழ்ந்தாலும் இன்று அவன் கொண்டுள்ள எண்ணங்கள்தாம் அவனது அடுத்த பிறவியைத் தீர்மானிக்கின்றது!

பழி பாவத்திற்கு அஞ்சாத வஞ்சகர்களின் இன்றைய வாழ்க்கை முறை அவர்களின் அடுத்த பிறவிக்கு அவர்களே வகுத்துக் கொள்ளும் ஊழ்வினையாகும்! 

வள்ளுவமும் ஊழ்வினையின் எதிர்வினை எத்தகையது என்பது பற்றித் தெளிவாக இக்குறளில் எடுத்தியம்பியுள்ளது! 

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்” 

பிற்பகல் என்பது அடுத்த பிறவிக்கும் சேர்த்துச் சொல்லப்பட்ட ஆழமான கருத்துதான்!

பட்டினத்தார் இதையே தன்வினை தன்னைச்சுடும் என அழகாகப் பாடி வைத்தார்! 

உயிர் தாங்கிய மனித இனத்தை உரமிட்டு வளமாக்க இதை விடச் சிறந்த அறிவுரைகள் உலகில் எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை!

வள்ளுவம் எச்சரித்த ஊழ் வினையை மதியால் வெல்ல வள்ளுவத்தை முடிந்த அளவிற்குப் பின்பற்றி வாழத் துவங்குபவர்களால்தான் நிச்சயம் முடியும்!

இதை அலட்சியம் செய்துவிட்டுப் பொன்னிலும் போகத்திலும் மூழ்கி அடுத்தவர் உழைப்பில் களிப்பவர்கள் போலி மதவாதிகள் கற்பனையாக திரித்த நரகில் புகப்போவதில்லை! 

அடுத்த பிறவியில் அதற்கான கடும் தண்டனை இதே பூமியிலேயே இவர்களுக்குக் காத்திருப்பதை அறியாத பரிதாபத்திற்குரிய பாவிகள் அவர்கள்!

Read More...

வியாழன், 12 ஜூன், 2014

தமிழக அரசின் அதிகாரச் சின்னம்!

Leave a Comment

இன்றைக்கு ஆட்சியாளர்களின் எல்லை மீறுதல் வரம்பு கடந்த நிலையில் காணப்படுகிறது! 

பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட ஒரே காரணத்திற்காக தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதும் தட்டிக் கேட்பவர்கள் பழி வாங்கப்படுவதும் ஆரோக்கியமான அரசியல் நெறியாகாது!

மக்களின் உழைப்பில் கிடைத்த வரிப்பணத்தில்தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படை அறிவுகூட மக்களுக்கு இல்லாத காரணத்தால்தான் 

இது போன்ற திட்டங்களை முதல் போட்டு நடைமுறைப்படுத்துவது ஆளும் அரசியல்வாதிகள்தான் என்ற தவறான எண்ணத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்!

இதன் விளைவுதான் முந்தைய ஆட்சியாளர்களால் துவக்கி வைக்கப்பட்டு இன்றைய ஆட்சியில் வரைமுறை கடந்து போன சுய தம்பட்டத் திட்டங்கள்! 

எங்கு பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட தலைவர் அல்லது தலைவியின் படங்கள் அடங்கிய அரசின் திட்டங்கள்! 

போகிற போக்கில் தமிழ்நாடு என்ற பெயர்கூட இது போன்ற தான்தோன்றித்தனமான ஆட்சியாளர்களால் மாற்றம் செய்யப்பட்டுவிடுமோ என அஞ்சுமளவிற்கு இவர்களின் ஆர்ப்பாட்டங்களும் சுய தம்பட்டங்களும் தொடர்கின்றன! 

எஙகு பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நபரின் படங்கள் அரசின் நலத்திட்டங்களில் இடம் பெறுவதை நூறு சதவிகித மக்களும் விரும்புவதில்லை! 

ஆக ஆட்சியாளர்களின் தவறான செயல்பாடுகளை விரும்பாத மக்களின் எண்ணங்கள் இவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வுடன் திரும்புவதும் இது ஆட்சியாளர்களைவிட மக்கள் நலனைத்தான் வெகுவாகப் பாதிக்கும் என்பது சுய தம்பட்ட  ஆட்சியாளர்களுக்கு விளங்கவே இல்லை என்பதுதாம் வேதனை!

ஆளும் இயக்கத்தின் தலைவர்களின் பெயர் தாங்கிய இது போன்ற திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வரவேற்கின்றனர் என இவர்கள் நினைப்பது அறிவீனமாகவே படுகிறது!

மேலும் ஆளும் இயக்கத்தினருக்கு எதிரான மன நிலை கொண்ட அறுபத்து ஐந்து சதவிகித மக்களின் கடும் வெறுப்பினை இவர்கள் தங்களின் சுய தம்பட்ட நிர்வாகத்தால் மேலும் வலுவாக வளர்த்து வருகின்றனர் என்பதுதாம் கண்கூடான உண்மை!

இது நிச்சயம் வருகின்ற தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பி எதிரொலிப்பது திண்ணம்! 

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சி காலத்தில் எந்த ஒரு மக்கள் நலத் திட்டத்திலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் படங்கள் இடம் பெறுவது நிரந்தரமாகத் தடை செய்யப்படும்!

 எந்த திட்டமானாலும் அது தமிழக அரசின் வாய்மையே வெல்லும் என்ற வாசகம் பொறித்த இலட்சினை முத்திரை ஒன்றினை மட்டுமே தாங்கியதாகத்தான் நடைமுறைப்படுத்தப்படும்!

கட்டி முடிக்கப்பட்ட எந்த ஒரு கட்டிடமாகட்டும் அந்தந்தப் பகுதியிலுள்ள மக்களின் நேரடிப் பார்வையில் கட்டுமானங்களில் குறைந்தது நூறு ஆண்டுகள் உத்தரவாதமுள்ள  திட்டங்கள்தாம் செயல்படுத்தப்படும்!; 

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள நல்லோர்களின் தலைமையில் மிக எளிமையாகக் துவக்கப்படும்!

கொடிகள், தோரணங்கள், கட்அவுட்டுகள், அலங்கார வளைவுகள் ஆர்ப்பாட்டங்கள் அற்ற எளிய விழாக்களாகத்தான்  ஊழலற்று நிறைவேறிய திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தை வீணாக்காது நடத்தப்படும்!

தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த முப்பந்தைந்து சதவிகித மக்களைத் தக்க வைத்துக்கொள்வதை விடத் தங்களுக்கு எதிரான மன நிலையில் உள்ள அறுபத்து ஐந்து சதவிகித மக்களின் ஆதரவினையும் முழுமையாகப் பெற்று நூறு சதவிகித ஆதரவுடன் ஒரு தலை சிறந்த நிர்வாகமாக ஐந்தாம் தமிழ்ச்சங்கம் திகழும் என்பது எம்முள் நனவாகப் போகும் தமிழ்க்கனவு!

Read More...

புதன், 11 ஜூன், 2014

ஏழைப் பங்காளர்

Leave a Comment
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எனது பெற்றோர்கள் பெருந்தலைவரின் தீவிர ஆதரவாளர்களாக இருந்ததால் எனது மானசீகத் தலைவர் இன்று வரை கர்ம வீரர்தாம்!

எனது பள்ளிப் பருவத்தில் ஏழாம் வகுப்பு படித்த போது நடைபெற்ற ஒரு கட்டுரைப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசாக ஒரு புத்தகம் கிடைத்தது!

அது கர்ம வீரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புத்தகம்!

எவருக்கோ இரவல் கொடுத்து நான் அந்தப் புத்தகத்தை இழந்து விட்டாலும் அந்தப் புத்தகத்தில்  கருப்பு காந்தியின் உயரிய இலட்சியங்களும் அவருடைய எளிமையான வாழ்க்கை முறைகளையும் நான் தவற விடவே இல்லை!

நான் பத்தாம் வகுப்புப் படித்தபோது தேசிய மாணவர் படையின் தர்மபுரி முகாமில் கலந்த கொண்டேன். 

முதல் நாளே அலுவலர்களின் கவனக் குறைவால் எங்களுக்குப் புழுக்கள் நெளிந்த உணவு பரிமாறப்பட்டதால் அன்றைய தினம் எங்களில் 
பெரும்பாலானவர்கள் பட்டினியாகக் கிடந்தோம்.

பின்னர் உயர் அலுவலர்களின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்ற பிறகு எங்களுக்கு அடுத்த நாளில் சற்றுச் சுமாரான உணவு கிடைத்தது.

திடீரென அன்று மதியம் படிக்காத மேதையின்; மறைவுச் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. 

மதிய உணவு தந்த அந்தத் தந்தையின் மறைவு தினத்தில் முதல் நாள் பட்டினி காரணமாக நாங்கள் உணவருந்திய நிலையிலேயே எங்களின் கண்ணீர் அஞ்சலியை அவருக்குச் செழுத்தினோம்.

பசித்த வயிறுக்கு உணவிட்ட அந்த நல்ல உள்ளம் எங்களைப் பட்டினி நிலையில் இரங்கல் தெரிவிக்க விரும்பவில்லை என்பதாகவே நான் அன்று கருதினேன்!  

பெருந்தலைவரின் எளிமை பற்றி இளம் வயதிலேயே அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தால் அறிந்து கொள்ள முடிந்ததால் இன்று வரை அந்த மாமேதையின் வழியில் எனது சட்டைப் பையில் ரூ 100 க்கு மேல் நான் வைத்துக் கொள்வதில்லை!

இந்தப் பணமும் எனது வாகனம் எங்கேயாவது பழுதடைந்தோ அல்லது எரிபொருள் தீர்ந்து நின்று விட்டால் பயன்படுவதற்காகத்தான்!

கர்ம வீரர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் உலகுள்ளவரை நிலைத்து நிற்கும்! 

மாற்று அணியினரும் மதிக்கும் உத்தமத் தலைவர் என்ற பெருமைக்குரிய ஒப்பற்ற ஒரே தலைவர் என்றென்றும் என் இதயத்தில் வீற்றிருக்கும் காமராசர்தாம்!

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தில்  இணையும் ஏராளமான இளைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் 

கர்ம வீரருக்கே உரிய எளிமை, பரிவு, இரக்கம், அறிவாற்றல், திறமை, அதி முக்கியமாக அவரிடம் ஏராளமாக நிறைந்து வழிந்த வாய்மை எனும் நேர்மை உணர்வோடு 

கர்ம வீரர் தம் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய அதி உன்னதத் திட்டங்களை விட அவர் அரசுரிமை இழந்து அவருள் கனவாகவே நிலைபெற்று நிறைவேறாது போன 

தமிழக முன்னேற்றத்திற்கான ஏராளமான அதி உன்னதக் கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவர் என நான் உறுதியாக நம்புகிறேன்!

கர்ம வீரரின் பிறந்த நாளான ஜீலை 15 ல் 

அவரின் உன்னத வாழ்க்கை முறையை இன்றைய இளைய சமுதாயம் நினைவு கூர்ந்து 

கர்ம வீரர் வழி நடந்து கர்ம வீரர் கனவு கண்ட 

உன்னதத் தமிழகத்தை உருவாக்க முன் வரவேண்டும் என்பதே இளைய சமுதாயத்திற்கு சிரம் தாழ்ந்து மானசீகமாகக் கர்ம வீரரின் பாதம் பணிந்து நான் விடுக்கும் வேண்டுகோள்!

Read More...