குற்றத் தண்டனைகள்!

கொலைக் குற்றங்கள் பெரும்பாலும் இரு நபர்களுக்கிடையே ஏற்படும் சண்டையின்போது உணர்ச்சி வசப்படுதல் காரணமாகவே நிகழ்கின்றன!

இது சம்பந்தப்பட்டவர்களைத் தூண்டிவிடும் அவர்களின் சக உறவுகள் அல்லது நட்பின் காரணமாகக் கூட இருக்கலாம்!

இது போன்ற கணநேரச் சிந்தனைத் தடுமாற்றத்தில் நிகழும் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் மனம் திருந்தி வாழக்கூடியவையாக அமைய வேண்டும்! 

பாதிக்கப்பட்;ட குடும்;ப உறவினர்களுக்கும் இக்குற்றம் ஏற்பட அமைந்த சூழல் நன்கு விளக்கப்பட்டு அவர்களும் குற்றவாளிக்கு எதிரான மனநிலையினைக் கைவிட்டு கடுமையான தண்டனை குற்றவாளிக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுமாறு செய்ய வேண்டும்!

திட்டமிட்ட கொலைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன்! இதுபோன்ற குற்றவாளிகளைத் தண்டிப்பது அவர்களின் தேகத்தைத் தண்டித்து அவர்களின் உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் நியாயமானதாகலாம்!

எனினும் இங்கு அவர்களின் தேகத்திற்கு மட்டுமே தண்டனை தரப்படுகிறதே தவிர அவர்களின் உயிருக்குத் தண்டனை தரப்படவில்லை! 

அவர்களின் கொலைவெறி உணர்வு தணியாமலே அவர்களின் உயிர் உடலை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்யப்படுவதால் அவர்களின் அடுத்த பிறவியும் இதே குண நலன்களுடனேயேதான் அமையும்!

இதனால் உலகில் தொடர்ந்து தீய உயிர்களின் ஆதிக்கமே தொடர நாம் வழி வகுப்பதாக அமைந்துவிடும்!

எனவே இத்தகைய குற்றவாளிகளை ஒரு மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் பணி செய்யுமாறு உத்தரவிட வேண்டும்! விபத்தாலோ அல்லது இவர்களைப் போன்ற சமூகக் குற்றவாளிகளின் செயல்களாலோ, கைகால்கள் இழந்து, கத்திக்குத்துப்பட்டு, வெட்டுப்பட்டு வருகின்ற நோயாளிகள் படும் வேதனைகளைத் தினசரி அணுஅணுவாகக் கண்டு இவர்கள் மனம் கலங்கித் துடிக்கவேண்டும்! 

கல்நெஞ்சம் படைத்தவரையும் கரைய வைக்கக் கூடியதாக இத்தகு விசித்திர தண்டனையை அனுபவித்து அவர்கள் தங்கள் செயலுக்கு மனம் வருந்தி திருந்தி வாழும் நிலை உருவாவதுடன் அவர்களுக்குரிய தண்டனைக் காலம் முழுவதும் இதுபோன்ற நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து கழிக்கும்படிச் செய்வதே சிறந்த வழி முறையாகவும் அவர்கள் செய்த பாவத்திற்குப் பரிகாரமாகவும் அமையும்!

அடுத்து சமூகக் குற்றவாளிகள்! இவர்கள் அனைவருமே மக்களின் வரிப்பணத்தையும் உழைப்பையும் கொள்ளையிடும் பிரிவில் வருபவர்கள்! 

அரசியல்வாதிகள் அரசு அலுவலர்கள் என மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றி இலஞ்ச ஊழல் பணத்தில் புரளும் நபர்களும் போலியான மதவாதிகளும் இந்தப் பிரிவிற்குச் சொந்தமானவர்கள்தாம்!

இதுபோன்ற குற்றவாளிகள் தங்களிடமுள்ள பணபலத்தை வைத்து தப்பிக்கின்ற சூழ்நிலை முற்றிலும் தடுக்கும்படி கடுமையான சட்டங்கள் வரவேண்டும்! 

குற்றவாளியெனச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டு விட்டாலே இவர்களுக்கு பிணை வழங்குவது இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும்! 

நம் நாட்டு மக்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி நம்; நாட்டைக் கொள்ளையிட்ட வெள்ளையரை இந்த தேசத்தை விட்டு வெளியேற்றப் பாடுபட்ட தலைவர்கள் சிறையில் அனுபவித்த கடும்  தண்டனைகளான செக்கிழுத்தல், மூட்டை தூக்குதல், போன்ற கடுமையான உடல் உழைப்பான வேலைகளை இவர்கள் தினமும் செய்யும் நிலை உருவாக்க வேண்டும்!

இருதய நோயாளி என்பன போன்ற போலியான காரணங்கள் கூறி தப்பிக்க இயலாத வண்ணம் இத்தகு சமூகக் குற்றவாளிகளின் உடல் தகுதியைச் சிறந்த மருத்துவக் குழுவினரின் உதவியுடன் மேம்படுத்தி, இதனை இவர்கள் அனுபவிக்கும்படிச் செய்யவேண்டும்!

உழைப்பின் அருமையையும் வியர்வை சிந்துதலில் உள்ள சிரமங்களையும் அனுபவிக்கச் செய்வதன் மூலமே இவர்கள் மனம் திருந்தி வாழும்படிச் செய்ய முடியும்! இவர்களின் தண்டனைக் காலம் முடியும் வரை இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கிவிட்டு அதில் ஒரு பகுதியினை மட்டும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வயதான பெற்றோர் அல்லது குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் நல்வாழ்விற்காகச் செலவிடலாம்!

பெண்களைப் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்துபவர்கள் மற்றும் பெண்களைக் கேலி செய்யும் சமூக குற்றவாளிகளுக்கு அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்கப் பெண்களைத் தவறாக நினைக்காதவாறு செய்யும்படியான தண்டனைதான் மிகச் சிறந்த வழியாகும்!

இது போன்றவர்களை சிறையில் அடைத்து விடுதலை செய்வதை விட, அவர்களின் தண்டனைக் காலம் முழுவதுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலோ, காலை முதல் இரவு வரை அவர்களை தனித்து ஒரு அறையில் அடைத்து வைத்து விட வேண்டும்! 

அவர்களின் எதிரே ஒரு தொலைக் காட்சித் திரையில் ஒரு பெண்ணின் பிரசவக் காட்சியைத் திரையிட்டு நீ பிறந்த வழி இப்படித்தான், உன் தாயின் மார்பகங்களில் நீ இப்படித்தான் பால் குடித்து வளர்ந்தாய் எனும் வசனங்கள் அடங்கிய இந்தக் காட்சிகளைக் குறிப்பிட்ட சில நாட்கள் அல்லது மாதங்கள் வரை தினசரி காலை தொடங்கி இரவு வரை பார்க்கும்படிச் செய்து மனம் வெறுத்துப் போன நிலையை உருவாக்கி, பெண்களை இனிக் கனவிலும் தவறாக நினைக்காதவாறு செய்து, அவர்கள் தங்களின் செயலுக்கு வருந்தி, இனி வரும் காலத்தில் தாங்கள் சந்திக்கும் பெண்களைத் தாயாக, குழந்தையாக, சகோதரியாக நினைக்குமளவிற்கு மனம் மாறித் திருந்தி வாழும் நிலையினை உருவாக்க வேண்டும்!

அடுத்து மது மற்றும் புகைப் பழக்கத்தில் ஈடுபடுபவர்கள் கூட சமூகக் குற்றவாளிகள்தாம்! மதுப் பழக்கத்திற்கு ஆளானவர்களின் குடும்பம் படும் பாடு நான் எழுதித் தெரிய வேண்டியதில்லை! இவர்களிடம் பெண்களாக பிறந்து வாழ்க்கை துணைவியராகி வாழ் நாளெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் பெண்களும், அவர்கள் குடும்பத்தவர்களும், உறவுகளும் நட்பும் சமூகமும் அனுபவிக்கும் நரக வேதனைகளை எழுதித் தீர்க்க முடியாது!

புகை பிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் என்னிடமுள்ள வேண்டாத பழக்கம் இது ஒன்றுதான் அதைத் தவிர பொது வாழ்வில் நாங்கள் நல்லவர்கள் என நினைக்கலாம்! எனினும் இவர்களும்; தங்கள் சுயநலத்திற்காகப் பிறர் நலத்தைப் பலியிடும் மது அருந்தும் பழக்கம் உடையவர்களுக்குச் சமமானவர்கள்தான்!

அவர்களாவது தங்கள் உடல் நலத்தை மட்டுமே பாழ்படுத்திக் கொள்பவர்கள்! இவர்களோ தங்கள் உடல் நலத்துடன் பிறர் உடல் நலத்தையும் பாழ்படுத்துபவர்கள்!

முன்னர் நான் பணி புரிந்த நிறுவனத்தின் அருகில் அமைந்துள்ள மருத்துவமனைகளிலிருந்து குறிப்பாகப் பெண்களின் புற்று நோய் போன்ற கட்டிகளைப் பரிசோதனைச் சாலைக்கு அனுப்பத் தேவைப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்க ஏராளமான ஆண்கள் வருவார்கள்!

அவர்களில் எண்பது சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள் என்பது அவர்களைக் கண்டவுடன் விளங்கிவிடும்! 

இவர்களின் இந்தப் பழக்கத்தால்தான் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புற்று நோயக்; கட்டிகள் தங்களின் உடலில் வளரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே மறுக்க இயலாத உண்மையாகும்! 

இந்த இரு வகையினருமே குற்றவாளிகளின் பட்டியல் வருபவர்கள்தாம்! இவர்கள் தம்முடைய இந்தப் பழக்கம் உருவான சூழலை எவ்வகையில் நியாயப்படுத்தினாலும் உறுதியான மனதுடையவர்கள் அல்லர் இவர்கள்! 

ஒரு பழக்கத்திற்கு மனிதர் அடிமையாகி விட்டால் அதைத் திடமான மனதிருந்தால் மீண்டும் அப் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட முடியும்! விட முடியாத அளவிற்குப் பழக்கம் தொடர்ந்தால் அதற்குச் சம்பந்தப்பட்டவரின் பலவீனமான மன நிலையே காரணமாகும்!

இத்தகையவர்களைத் திருத்துவதற்கு ஒரே வழி இவர்களைக் குற்றவாளிகள் என அறிவித்து இவர்கள் இத்தவறினைச் செய்யும்போது கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்!

இவர்களின் தண்டனைக் காலத்தை ஒரு மருத்துவமனையில் இது போன்ற தவறு செய்து அதனால் கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவுபவர்களாக அமையச் செய்ய வேண்டும்!

இந்த நோயாளிகள் படும் வேதனைகளை இவர்கள் தினசரி காண்பதுடன் குடி போதைகளால் கொடுமையான நோய்களுக்கு ஆளாகி  மரணமடைந்தவர்களின் பாதிக்கப்பட்ட நுரையீரல், கல்லீரல் குடல் உள்ளிட்ட உள் உறுப்புகளை இவர்கள் பார்க்கும்படிச் செய்ய வேண்டும்!

தொலைக்காட்சி மற்றும் படங்களின் வாயிலாக காட்டப்படுவதை விட நேரிடையாகப் பாதிக்கப்பட்ட உள் உறுப்புகளை இவர்கள் பார்க்கும்படிச் செய்தால்தான் இது போன்ற திருத்த முடியாத மனிதர்களைத் திருத்த முடியும்!

கலவரங்கள் ஏற்படுத்துவது யாரென்பதை மக்கள் நன்கறிவர்! ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினரோ அல்லது எதிர்க்கட்சியினருக்கு எதிராக ஆளுங்கட்சியினரோதான் இன்று கலவரத்தை ஏற்படுத்துகின்ற அதி முக்கிய சக்திகள்!

தங்களின் தலைவரின் உடல் நிலை குறித்து வீண் வதந்திகள் கேள்விப்பட்டால் போதும்! இவர்களின் வன்முறை வெறியாட்டத்திற்கு வரைமுறையின்றிப் போய்விடும்!

இவர்களின் குறியால் இவர்களது எதிராளிகளைவிடப் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிப் பொது மக்கள்தாம்! அதுதவிர இதைப் பயன்படுத்தி பொதுச் சொத்துக்களும் எதிரிகளின் சொத்துக்களும்; சூறையாடப்படுவது இன்று சர்வ சாதாரணம்!

இது போன்ற குற்றங்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் வசதி வாய்ப்பற்றவர்கள்தாம்! தங்களின் நன்றியறிதலைத் தாங்கள் சார்ந்த அரசியல் சக்திகளிடம் இந்த வகையில் வெளிப்படுத்தி திருப்தி செய்ய வேண்டுமென்பதே இவர்தம் நோக்கம்!

பொதுச் சொத்து யாருக்குச் சொந்தம்? இதனால் விளையும் நட்டங்களுக்கு யார் மீண்டும் பொதி சுமந்து வரி செழுத்தி சரிக்கட்டப் போகின்றனர் என்ற விபரமெல்லாம் இவர்களுக்கோ இவர்கள் சார்ந்த அரசியல் இயக்கங்களுக்கோ அவசியமில்லாதவை!

இத்தகு குற்றவாளிகளைத் தண்டித்து அவர்களுக்குச் சிறைத் தண்டனை அளிப்பதை விட இவர்களின் பின்னணியில் இருந்து கொண்டு இயக்குகின்ற சக்திகளைக் கண்டறிந்து அவர்களின்  சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும்!

குற்றம் எதன் காரணமாக நிகழ்கிறதோ அந்த நிகழ்விற்குத் தூண்டுதல் வழித் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை விற்பதன் மூலம் இழந்த நட்டங்கள் ஈடு செய்யப்பட வேண்டும்!

குற்றம் செய்தவரால் ஏற்பட்ட நட்டத்தினை ஈடு செய்யும் வரை இவர்களை மூட்டை தூக்குதல் போன்ற கடுமையான தண்டனைகள் வாயிலாக வேலை வாங்கி அதில் வரும் வருமானத்தை இவர்கள் செய்த நாச வேலைக்கு ஈடாகப் பெற்றுக் கொள்வதாலே இது போன்ற குற்றங்கள் இனி நிகழாமல் நிச்சயம் தடுக்க முடியும்!

சொத்து சார்ந்த சண்டைகள் பெரும்பாலும் வடவர்களின் திருமண முறையைப் பின்பற்றித் திருமணம் செய்பவர்களிடம்தான் ஏற்படுகின்றதென ஆணித்தரமாக நம்பலாம்!

வடவர்களின் திருமண அமைப்பை ஏற்று வருகின்ற ஒரு குடும்பத்தின் புது வரவிற்குப் பிறகுதான் ஒற்றுமையாக அதுவரை இருந்து வந்த சகோதரர்களுக்குள் சண்டையே ஏற்படுகிறது! 

இது போன்ற சகோதரச் சண்டைகள் உருவாகி அதனால் கடுமையான பாதிப்புகள் நிகழ்வதையும் உறவுகள் பிரிவதையும் அறவே தடுக்க இனி புதுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

இது போன்ற சண்டைகள் வழக்கு மன்றத்திற்கு வந்தால் சம்பந்தப்பட்ட இடத்தை அரசுடமையாக்கி அதனை ஏலம் விட்டுக் கிடைக்கின்ற தொகையில் வழக்குச் செலவு போக எஞ்சியவற்றை சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் வாய்மை மன்றமே சரிசமாகப் பிரித்துத் தருமாறு செய்து விட வேண்டும்!

இதன் விளைவால் இனி வரும் காலத்தில் சொத்துச் சண்டைகளும் அதைத் தொடர்ந்து எழும் உறவுப் பிரிவுகளும் தமிழகத்தில் அறவே இருக்காது! 

இது போன்ற இன்னும் ஏராள புதிய வழி முறைகளால் அன்பும் அகிம்சையும் ததும்பி வழியும் அமுதத் தமிழகம் மீண்டும் மலரும் என்பதும் அது ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் இவ்விதமே இருக்கும் என்பதே நனவாகப் போகும் எமது தமிழ்க்கனவாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!