தமிழகத்தில் மாரியம்மன் திருவிழாக்கள்!


மாதம் மும்மாரி மழை பொழிகிறதா என மன்னர்கள் தமது அமைச்சர்களை வினவுவதாக நம் இலக்கியக் கதைகளில் படித்துள்ளோம்!

தமிழகத்தின் புவி அமைப்பின்படி மாதம் மும்மாரி மழைப் பொழிவென்பது காடுகளை முற்றிலும் அழிக்காது தேவைப்படும் இடங்களில் மட்டுமே நாடுகளை உருவாக்கிய பண்டைய தமிழகத்தில் சாத்தியமானதாகத்தான் இருந்து வந்துள்ளது!

ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்துவிட்டால் இயற்கையும் அவர்களின் வாய்மைக்குத் துணை செய்து நல்ல மழை வளம் பெருகும் என்பதும் வள்ளுவம் வாக்கு!

இதே வள்ளுவச் சித்தர் நல்லோரின் எண்ண ஆற்றலுக்குக் கட்டுப்பட்டே பெய்யெனப் பெய்யும் மழை என ஆணித்தரமாக எழுதியுள்ளார்!

தமிழர்கள் இயற்கையைத் தங்களின் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதை ஒரு கலையாகவே வளர்த்து வந்துள்ளனர்

குறிப்பாகத் தங்களின் எண்ண ஆற்றலை பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று மண்டலத்தில் மேகம் சுமந்து மழை வளம் தரும் இயற்கைச் சக்தியைத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒரு நிகழ்வுதான் மாரி எனப்படும் மாரியம்மன் திருவிழாக்கள்!

பொதுவாகத் தமிழதகத்தில் உள்ள பல்வேறு தெய்வங்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள திருவிழாக்கள் குறிப்பிட்ட சில மாதங்களில் தவறாமல் ஆண்டிற்கொருமுறை நடைபெறுவது வழக்கம்!

விதிவிலக்காகத் தமிழகத்தில் மாரியம்மன் திருவிழாக்கள் மட்டுமே ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு மாதத்தில் நடைபெறுமாறு இன்றுவரை இந்தத் திருவிழாக்கள் நடந்து வருகின்றன!

சமயபுரத்து அம்மனுக்குத் திருவிழா ஒரு மாதத்தில் வரும்! சேலத்தில் பெரிய மாரியம்மன் திருவிழா வேறு மாதத்தில் வரும்! 

ஈரோட்டில் கருங்கல்பாளையம் மாரியம்மன் திருவிழாக்கள் ஒரு மாதத்தில் வரும்! இதே ஈரோட்டில் பெரிய மாரியம்மன் திருவிழா வேறு ஒரு மாதத்தில் வரும்! 

கருவூரில், நாமக்கல்லில், மதுரையில் திருச்சியில் என நகருக்கு நகர், ஊருக்கு ஊர் என  வேறு வேறு மாதங்களில் மாரியம்மன் திருவிழாக்கள் வருகின்றன!

ஊருக்கு ஊர் திருவிழாக்கள் வேறு வேறு மாதங்களில் நடைபெற்றாலும் தமிழகம் முழுக்க வழிபாட்டு முறை மாரியம்மனைப் பொருத்தவரை ஒரே விதம்தான்!

ஒரேவித சக்தி கொண்ட தெய்வத்திற்கு என் இப்படி மாறி மாறித் திருவிழாக்கள் வருகின்றன என்ற கேள்வி எழுந்தபோதுதான் தமிழர்களின் விஞ்ஞான அறிவியல் பார்வை துல்லியமாகத் தெரிந்தது!

மாரியம்மன் என்பது கடவுளாகப் பார்க்கும்போது வெறும் கடவுள்! அதையே கல்லாகப் பார்க்கும்போது அது கல்தான்!

ஆயின் ஒரு கல்லைக் கடவுளாகப் பாவித்து மக்கள் அதனை மழைக்குரிய தெய்வமாகக் கருதித் தங்களின் எண்ணங்களைத் திருவிழா நாட்களில் ஒன்று கூடி இந்தப் பிரபஞ்சப் பெருவெளியெங்கும் பரவச் செய்து மழை வளம் தா என இயற்கையை வேண்டும்போது 

இந்தப் பிரபஞ்சப் பேராற்றல் உண்மையிலேயே மக்களின் எண்ண அலைகளுக்குக் கட்டுப்பட்டு மழை சுமந்த மேகங்களை அந்தப் பகுதிக்குக் கொண்டு சேர்த்து மழை வளம் தருகிறது!

ஆண்டு முழுவதும் வேறு வேறு மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு மக்களின் எண்ண ஆற்றல்கள் ஒன்று குவிக்கப்பட்டுப் பிரபஞ்சப் பெருவெளியெங்கும் பரவச் செய்யும் தமிழர்களின் விஞ்ஞான அறிவினால்தான் தமிழகத்தில் மாதம் மும்மாரி மழைப்பொழிவு என்பது சாத்தியமாகி உள்ளது!

தமிழர்களின் விசாலமான அறிவியல் பார்வையின் வெளிப்பாடுகள்தான் மாரியம்மன் திருவிழாக்களின் உண்மையான காரணம்!

ஆயின் இன்றுள்ள மக்களின் எண்ணங்கள் முற்றிலும் சுயநல நோக்கமுள்ளதாக மாறி விட்டதன் விளைவுதான் இன்று மழை வளம் தமிழகத்தில் முற்றாகக் குறைந்து விட்டதற்குக் காரணம் எனலாம்!

இதனை என்னுடைய சொந்த அனுபவத்திலேயே விளக்க முடியும்! 

எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா வருடா வருடம் அடை மழைக் காலமான ஐப்பசியில்தான் வரும்! 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதற்கொண்டு நான் இந்த மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கு பெற்றுள்ளேன்!

குறைவான மக்கள் தொகையுடன் விளங்கிய அந்த நாட்களிலேயே எங்கள் ஊரில் ஒரு வாரம் முழுக்க இசைச் கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம்!

அடை மழைக் காலமென்பதால் வழக்கம்போல எங்கள் ஊரில் திருவிழா நாட்களில் மழை கொட்டித் தீர்க்கும்!

எங்கள் குடும்பம் ஊரை விட்டு வணிகத்திற்கென வெளியேறிய சில ஆண்டுகள் கழிந்து மக்கள் தொகை அதிகரித்திருந்த ஒரு காலகட்டத்தில் 

எங்கள் ஊர் இளைஞர்கள் ஐப்பசி மாத்தில் வரும் மழையால் தங்களின் இசைக் கச்சேரி விருப்பங்கள் தடைபடுவதாகக் கருதி 

காலம் காலமாக இருந்து வந்த வழக்கத்தினை அடியோடு புறக்கணித்து, தங்களின் விருப்பத்திற்கேற்பக்  கடும் வெயிற் காலமான சித்திரை மாதத்திற்குத் திருவிழாவையே மாற்றிவிட்டனர்! 

இது மட்டுமன்றி எங்கள் ஊரில் இதற்கு முன்னர் வழக்கத்தில் இல்லாத தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற புதிய பழக்கங்கள் வேறு புகுத்தப்பட்டுள்ளன!

இன்றைய மக்களின் எண்ணங்கள் மாறி விட்டதின் விழைவுதான் இது போன்ற மாற்றங்கள்!

பொதுவாக ஒரு ஊரில் மாரியம்மன் திருவிழா நடைபெறும் நாட்களில் மழை பெய்யும் என்பது அந்நாட்களில் கட்டாய நிகழ்வு!

இன்றோ மக்களின் எண்ணங்கள் முற்றிலும் சுய நல நோக்கமுள்ளதாக மாறி விட்டதோடு மட்டுமன்றி இன்றைய திருவிழாக்கள் வெகு ஆடம்பரமாக நடத்தப்படுவதும்,

கோயில்களில் எனக்குப் பொன், பொருள், செல்வச் சேர்க்கை தா என்பன போன்ற வேண்டுதல்களே நிறைந்துள்ளதாலும் தற்பொழுது மாரியம்மன் திருவிழாக்கள் நடைபெறும் நாட்களில் தமிழகததில் மழை வருவதும் அருகி விட்டது!

ஈரோட்டிலோ வருடா வருடம் மாரியம்மனுக்குச் செந்தமான இடததில் பொங்கல் வைக்க வாருங்கள் என மதவாத அமைப்புகள், இன்னொரு மதத்தினருக்கு எதிராக மக்களின் எண்ணங்களைத் தவறாகத் திசை திருப்புவதால் ஈரோட்டில் மாரியம்மன் திருவிழா அன்று மழை வரும் வாய்ப்பு இல்லாமலே போகும் நிலை ஏற்பட்டுள்ளது!

எல்லாம் சரி மீண்டும் எங்கள் ஊர் மாரியம்மன் கதைக்கே திரும்ப வருவோம்!

உலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டுப் பெய்யெனப் பெய்யும் மழை! எனும் சித்தர்களின் வாக்கிற்கு இணங்க

தற்பொழுது சித்திரை மாதத்தில் நடைபெற்று வரும் எங்கள் ஊர்த் திருவிழா நாட்களில் கடுமையான கோடையிலும் மழை கொட்டித் தீர்க்கிறது என்பதே இதனால் உலகத்திலுள்ள எல்லோருக்கும் நான் அறிவிக்கும் நற்செய்தி!

ஆம்! எங்கள் ஊர் மாரியம்மனிடம் ஏராளமான மக்கள் கூடி இன்றைய காலத்திற்கேற்ப எனக்கு அதைக்கொடு இதைக் கொடு என வேண்டினாலும், 

ஏதோ ஒரு சுயநல நோக்கமற்ற மனிதர் இந்த மண்ணிற்கு மழை வளம் தா என எவ்விதக் களங்கமும் இன்றித் தனது எண்ணங்களை இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் செழுத்துவதால் 

அந்த இயற்கையும் எங்கள் ஊரில் கடும் கோடையிலும் கோடை மழை பொழிவித்து அவரது எண்ணத்திற்குக் கட்டுப்பட்டுத் தனது கடமையைத் தவறாது நிறைவேற்றுகிறது!

இது எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா ஐப்பசியிலிருந்து சித்திரை மாதப் பௌர்ணமி தினத்திற்கு மாற்றம் பெற்ற ஆண்டு முதல் எங்கள் ஊரில் தொடர்ந்து கொண்டிருக்கும் உண்மை நிகழ்வு! 

சத்தியமாக அந்த நல்லோர் எனப்படும் மனிதர் நானல்ல! 

அந்த நல்ல உள்ளத்தைத்தான் நான் இப்பொழுதும் ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவில் கோடை மழையில் நனைந்தவாறு தேடிக் கொண்டிருக்கிறேன்! 

நீஙகளும் ஒரு முறை எங்கள் ஊர்த் திருவிழாவில் கலந்து கொண்டு அவரைக் கண்டு பிடித்து உதவ வேண்டுகிறேன்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!