ஏழைப் பங்காளர்

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எனது பெற்றோர்கள் பெருந்தலைவரின் தீவிர ஆதரவாளர்களாக இருந்ததால் எனது மானசீகத் தலைவர் இன்று வரை கர்ம வீரர்தாம்!

எனது பள்ளிப் பருவத்தில் ஏழாம் வகுப்பு படித்த போது நடைபெற்ற ஒரு கட்டுரைப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசாக ஒரு புத்தகம் கிடைத்தது!

அது கர்ம வீரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புத்தகம்!

எவருக்கோ இரவல் கொடுத்து நான் அந்தப் புத்தகத்தை இழந்து விட்டாலும் அந்தப் புத்தகத்தில்  கருப்பு காந்தியின் உயரிய இலட்சியங்களும் அவருடைய எளிமையான வாழ்க்கை முறைகளையும் நான் தவற விடவே இல்லை!

நான் பத்தாம் வகுப்புப் படித்தபோது தேசிய மாணவர் படையின் தர்மபுரி முகாமில் கலந்த கொண்டேன். 

முதல் நாளே அலுவலர்களின் கவனக் குறைவால் எங்களுக்குப் புழுக்கள் நெளிந்த உணவு பரிமாறப்பட்டதால் அன்றைய தினம் எங்களில் 
பெரும்பாலானவர்கள் பட்டினியாகக் கிடந்தோம்.

பின்னர் உயர் அலுவலர்களின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்ற பிறகு எங்களுக்கு அடுத்த நாளில் சற்றுச் சுமாரான உணவு கிடைத்தது.

திடீரென அன்று மதியம் படிக்காத மேதையின்; மறைவுச் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. 

மதிய உணவு தந்த அந்தத் தந்தையின் மறைவு தினத்தில் முதல் நாள் பட்டினி காரணமாக நாங்கள் உணவருந்திய நிலையிலேயே எங்களின் கண்ணீர் அஞ்சலியை அவருக்குச் செழுத்தினோம்.

பசித்த வயிறுக்கு உணவிட்ட அந்த நல்ல உள்ளம் எங்களைப் பட்டினி நிலையில் இரங்கல் தெரிவிக்க விரும்பவில்லை என்பதாகவே நான் அன்று கருதினேன்!  

பெருந்தலைவரின் எளிமை பற்றி இளம் வயதிலேயே அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தால் அறிந்து கொள்ள முடிந்ததால் இன்று வரை அந்த மாமேதையின் வழியில் எனது சட்டைப் பையில் ரூ 100 க்கு மேல் நான் வைத்துக் கொள்வதில்லை!

இந்தப் பணமும் எனது வாகனம் எங்கேயாவது பழுதடைந்தோ அல்லது எரிபொருள் தீர்ந்து நின்று விட்டால் பயன்படுவதற்காகத்தான்!

கர்ம வீரர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் உலகுள்ளவரை நிலைத்து நிற்கும்! 

மாற்று அணியினரும் மதிக்கும் உத்தமத் தலைவர் என்ற பெருமைக்குரிய ஒப்பற்ற ஒரே தலைவர் என்றென்றும் என் இதயத்தில் வீற்றிருக்கும் காமராசர்தாம்!

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தில்  இணையும் ஏராளமான இளைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் 

கர்ம வீரருக்கே உரிய எளிமை, பரிவு, இரக்கம், அறிவாற்றல், திறமை, அதி முக்கியமாக அவரிடம் ஏராளமாக நிறைந்து வழிந்த வாய்மை எனும் நேர்மை உணர்வோடு 

கர்ம வீரர் தம் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய அதி உன்னதத் திட்டங்களை விட அவர் அரசுரிமை இழந்து அவருள் கனவாகவே நிலைபெற்று நிறைவேறாது போன 

தமிழக முன்னேற்றத்திற்கான ஏராளமான அதி உன்னதக் கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவர் என நான் உறுதியாக நம்புகிறேன்!

கர்ம வீரரின் பிறந்த நாளான ஜீலை 15 ல் 

அவரின் உன்னத வாழ்க்கை முறையை இன்றைய இளைய சமுதாயம் நினைவு கூர்ந்து 

கர்ம வீரர் வழி நடந்து கர்ம வீரர் கனவு கண்ட 

உன்னதத் தமிழகத்தை உருவாக்க முன் வரவேண்டும் என்பதே இளைய சமுதாயத்திற்கு சிரம் தாழ்ந்து மானசீகமாகக் கர்ம வீரரின் பாதம் பணிந்து நான் விடுக்கும் வேண்டுகோள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!