தமிழக அரசின் அதிகாரச் சின்னம்!


இன்றைக்கு ஆட்சியாளர்களின் எல்லை மீறுதல் வரம்பு கடந்த நிலையில் காணப்படுகிறது! 

பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட ஒரே காரணத்திற்காக தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதும் தட்டிக் கேட்பவர்கள் பழி வாங்கப்படுவதும் ஆரோக்கியமான அரசியல் நெறியாகாது!

மக்களின் உழைப்பில் கிடைத்த வரிப்பணத்தில்தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படை அறிவுகூட மக்களுக்கு இல்லாத காரணத்தால்தான் 

இது போன்ற திட்டங்களை முதல் போட்டு நடைமுறைப்படுத்துவது ஆளும் அரசியல்வாதிகள்தான் என்ற தவறான எண்ணத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்!

இதன் விளைவுதான் முந்தைய ஆட்சியாளர்களால் துவக்கி வைக்கப்பட்டு இன்றைய ஆட்சியில் வரைமுறை கடந்து போன சுய தம்பட்டத் திட்டங்கள்! 

எங்கு பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட தலைவர் அல்லது தலைவியின் படங்கள் அடங்கிய அரசின் திட்டங்கள்! 

போகிற போக்கில் தமிழ்நாடு என்ற பெயர்கூட இது போன்ற தான்தோன்றித்தனமான ஆட்சியாளர்களால் மாற்றம் செய்யப்பட்டுவிடுமோ என அஞ்சுமளவிற்கு இவர்களின் ஆர்ப்பாட்டங்களும் சுய தம்பட்டங்களும் தொடர்கின்றன! 

எஙகு பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நபரின் படங்கள் அரசின் நலத்திட்டங்களில் இடம் பெறுவதை நூறு சதவிகித மக்களும் விரும்புவதில்லை! 

ஆக ஆட்சியாளர்களின் தவறான செயல்பாடுகளை விரும்பாத மக்களின் எண்ணங்கள் இவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வுடன் திரும்புவதும் இது ஆட்சியாளர்களைவிட மக்கள் நலனைத்தான் வெகுவாகப் பாதிக்கும் என்பது சுய தம்பட்ட  ஆட்சியாளர்களுக்கு விளங்கவே இல்லை என்பதுதாம் வேதனை!

ஆளும் இயக்கத்தின் தலைவர்களின் பெயர் தாங்கிய இது போன்ற திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வரவேற்கின்றனர் என இவர்கள் நினைப்பது அறிவீனமாகவே படுகிறது!

மேலும் ஆளும் இயக்கத்தினருக்கு எதிரான மன நிலை கொண்ட அறுபத்து ஐந்து சதவிகித மக்களின் கடும் வெறுப்பினை இவர்கள் தங்களின் சுய தம்பட்ட நிர்வாகத்தால் மேலும் வலுவாக வளர்த்து வருகின்றனர் என்பதுதாம் கண்கூடான உண்மை!

இது நிச்சயம் வருகின்ற தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பி எதிரொலிப்பது திண்ணம்! 

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சி காலத்தில் எந்த ஒரு மக்கள் நலத் திட்டத்திலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் படங்கள் இடம் பெறுவது நிரந்தரமாகத் தடை செய்யப்படும்!

 எந்த திட்டமானாலும் அது தமிழக அரசின் வாய்மையே வெல்லும் என்ற வாசகம் பொறித்த இலட்சினை முத்திரை ஒன்றினை மட்டுமே தாங்கியதாகத்தான் நடைமுறைப்படுத்தப்படும்!

கட்டி முடிக்கப்பட்ட எந்த ஒரு கட்டிடமாகட்டும் அந்தந்தப் பகுதியிலுள்ள மக்களின் நேரடிப் பார்வையில் கட்டுமானங்களில் குறைந்தது நூறு ஆண்டுகள் உத்தரவாதமுள்ள  திட்டங்கள்தாம் செயல்படுத்தப்படும்!; 

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள நல்லோர்களின் தலைமையில் மிக எளிமையாகக் துவக்கப்படும்!

கொடிகள், தோரணங்கள், கட்அவுட்டுகள், அலங்கார வளைவுகள் ஆர்ப்பாட்டங்கள் அற்ற எளிய விழாக்களாகத்தான்  ஊழலற்று நிறைவேறிய திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தை வீணாக்காது நடத்தப்படும்!

தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த முப்பந்தைந்து சதவிகித மக்களைத் தக்க வைத்துக்கொள்வதை விடத் தங்களுக்கு எதிரான மன நிலையில் உள்ள அறுபத்து ஐந்து சதவிகித மக்களின் ஆதரவினையும் முழுமையாகப் பெற்று நூறு சதவிகித ஆதரவுடன் ஒரு தலை சிறந்த நிர்வாகமாக ஐந்தாம் தமிழ்ச்சங்கம் திகழும் என்பது எம்முள் நனவாகப் போகும் தமிழ்க்கனவு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!