எடுபிடிகள்!

அரசியல்வாதிகள்,
நடிகர்கள்,
சாமியார்கள்,

இவர்கள எல்லாம் வணிகம் சார்ந்த பிரிவினர்! 

இவர்கள் தங்களின் செல்வாக்கினையும் செல்வத்தையும் உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் நபர்களைத்தான் இங்கு நாம் எடுபிடிகள் என வேதனையாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது!

அரசியல்வாதிகள்,
நடிகர்கள்,
சாமியார்கள்,

இவர்களின் பிறந்தநாள், உள்ளுர் வெளியூர்ப் பயண வரவேற்புகள், துவங்கிப் பல்வேறு வருமான வாய்ப்புகளைப் பெருக்குவதற்குத் தேவைப்படும்
கட்அவுட்டுகள், 

கொடி தோரணங்கள், விளம்பரத் தாள்கள் விநியோகித்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல், பொதுக்கூட்ட மேடைகள் அமைத்தல், இன்ன பிற வேலைகளுக்கெனவே  இளைய சமுதாயத்தைஇவர்களுக்கு எடுபிடிகளாக்கிச் சம்பளம் கொடுத்தும் பதவிகள் கொடுத்தும் பயன்படுத்திக்கொள்கின்றனர்!

குறிப்பாக இன்றைக்குத் திரையுலகில் சிரிப்பு நடிகர் தொடங்கி வில்லன் நடிகர்கள், கவர்ச்சி நடிகையர் வரை இவர்களுக்குக் கட்அவுட் வைத்துப் பாலாபிசேகம் செய்து ஆரவாரித்து இவர்களின் திரையுலக வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்வதற்கென்றே இளைய சமுதாயத்தை எடுபிடிகளாகப் பயன்படுத்துகின்றனர்!

இவர்களின் ஆரவாரத்தில் பிரம்மாண்டங்கள் காட்டி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளிடமும், சாமியார்களிடமும் மயங்க வைத்து மக்கள்தம் உழைப்பை அனுபவித்து மக்களையும் எடுபிடிகளாக மாற்றம் செய்ய இது போன்ற  இளைய சமுதாய நபர்கள் தயார்ப்படுத்தப்படுகின்றனர்!

அரசியல்வாதிகளின் எடுபிடிகள் மக்களிடம் காட்டும் பந்தாக்கள் நாடறிந்தது! 

அரசியல் இயக்கங்களில் அதிகப் பணிவுள்ள எடுபிடிகள் மிகக் குறுகிய காலத்தில் இயக்கத்தின் மேல் மட்டத்திற்குச் செல்வதையும், பணிவு காட்டாதவர்கள் இருந்த நிலையிலிருந்து மேலேறாமல் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் நிகழ்வுகள்தான் இன்றைய நிலை!

சாமியார்கள் இந்த வகையில் அரசியல்வாதிகளையும் மிஞ்சுகின்றனர்! 
குறுகிய காலத்தில் துறவறத்தில் புகுந்து செல்வத்தில் மிதந்து வெளிநாடுகளுக்குப் பறக்கும் லேப்டாப் சாமியார்களின் ஊடக மற்றும் எடுபிடிகளின் சாம்ராஜ்யம் நாடு முழுக்க மிகப் பரந்த அளவில் விரிந்துள்ளது!

பருவ மழை தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் ஏதோ ஒரு புரியாத பெயரில் யாகம் வளர்த்து ஒரு மாதம் கழிந்து இயற்கையாகப் பொழியும் பருவ மழை கூட இந்தச் சாமியார்களின் தயவால்தான் வருகிறது எனச் சுய தம்பட்டச் சுவரொட்டிகளை எடுபிடிகளைக் கொண்டு ஒட்டிச் சுய விளம்பரம் தேடிக் கொள்ளும்  நிலையைக்  காணும்போது நம் மக்களின் அறியாமையை எண்ணிச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை!

மக்களுக்குச் சேவகம் செய்வதற்கு வருபவர்கள் மக்களின் எடுபிடிகளாக விளங்க வேண்டிய அவசியமே இல்லை! 

மக்களும் அவர்களுக்கு எடுபிடிகளாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது! 

இவ்வாறு மக்களால் மதிக்கத்தக்க சிறந்த சேவை செய்யும் நபர்களாக அரசியலிலும் துறவறத்திலும் இணைபவர்கள் விளங்கினால் அதுதான் உன்னதமான நாடாகும்!

மக்களுக்காகவே தங்களின் வாழ்க்கை முறையை அர்ப்பணித்துக் கொள்ளும் நல்லவர்களுக்கு எடுபிடிகள் தேவையே இல்லை! 

உதாரணத்திற்கு நம் மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரு கலாம் அவர்கள் ஒருவரே போதும்!

எடுபிடிகளின் தேவையற்ற இத்தகைய நல்லவர்களை அடையாளம் கண்டு நல்லவர்கள் அரசியலில் இணைவதற்கான வழி முறைகள் கண்டு தங்களின் வாழ்க்கை முறையைச் சிறப்பானதாக மாற்றிக் கொள்ள வேண்டிய மகத்தான பணி மட்டுமே மக்களைச் சார்ந்தது!

அரசியலிலும் துறவறத்திலும் நல்லவர்கள் மட்டுமே ஏராளம் பேர் இணையத் துவங்கினால் காலப்போக்கில் இது போன்ற எடுபிடிகளும் எடுபிடிகளுடன் காணும் இன்றைய ஊழல் தலைவர்களும் காணாமல் போகும் நிலை நாட்டில் நிச்சயம் உருவாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!