சித்தர்கள் அறிவோம்! சித்தம் தெளிவோம்!

          
சித்தர்களைப் பற்றி நம் தமிழக மக்களுக்கு சரியாக விளக்கப்படவில்லை என்றே நாம் கருத வேண்டும்.

சித்தம் தெளிந்தால் அனைவரும் சித்தர்கள்தாம்! அதிலும் குறிப்பாக இயற்கையை முழுமையாக உணர்ந்தவர்கள்தாம் சித்தர்கள்!

வள்ளுவர்தாம் உலகில் தோன்றிய முதல் சித்தராவார்! வள்ளுவர் வாழ்ந்த காலத்தையும் நம் மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளுமாறு திசை திருப்பப்பட்டுவிட்டனர்!

திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் அவர் காலத்திலும் நிலவியதாக நம் மக்கள் மனதில் தவறான விதை விதைக்கப்பட்டு ஆலாக விழுது விட்டுவிட்டது!

உண்மை என்னவென்றால் திருவள்ளுவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னோக்கிச் சிந்திக்கவல்ல ஞானியாவார்! 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் வாழும் மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதைத் தம்முடைய தீர்க்க சிந்தையால் உணர்ந்து 

பிற்காலத்தில் தவறான செயல்களால் வாழ்வு தொலைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளப் பயன்படுகின்ற வழி முறைகளையும் அவரே திருக்குறள்களாகப் பாடி வைத்தார்!

அவர் போன்றே தமிழ்க்கடவுள் எனக் கருதப்படும் முருகனின் தலைமையில் ஒன்று திரண்ட சித்தர்கள் தாம் வாழ்ந்த கால கட்டத்தில் வடவர்களின் கட்டுக்கதைகளால் பக்தி மார்க்கத்தில் வழி மாறிய தமிழினத்தை நல்வழிப்படுத்த முயன்றனர்!

பொதுவாக இது போன்ற சித்தர்கள் மற்றவர்களைக் குறை சொல்லாமல் தன்னை முன்னிறுத்தியே உலகில் நிலவிய ஒழுங்கீனங்களைப் பாடி வைத்தனர்! 

தாம் வாழ்ந்த அந்த கால கட்டத்தில் முறை தவறிய வாழ்வு வாழ்ந்த மக்களை, தம்முடைய பாடல்களால் நெறிப்படுத்த உலகம் முழுவதும் விரிந்து பயணித்தவர்கள் சித்தர்கள்! 

அது மட்டுமன்றி முறைதவறி வாழ்ந்த மக்களுக்கு வந்து தொலைத்த வியாதிகளுக்கு அரும்பாடுபட்டு வைத்திய முறைகளையும் கண்டறிந்து வியாதி தீர்த்து வழி நடத்தினர்!

ஆனால் இவர்கள்தம் வருகையை விரும்பாத மதவாதிகள் சித்தர்களையும் கொச்சைப்படுத்திப் பல்வேறு கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்டனர்! 

அறியாமையில் திலைத்த அன்றைய தமிழினமும் இதை முழுமையாக நம்பி தங்கள் வாழ்க்கை முறையைப் பக்தி மார்க்கத்தில் இன்றுவரை தொலைத்து வந்துள்ளனர்!

இயற்கைக்கு எதிரான யாகங்கள், குருட்டுத்தனமான பக்திமுறைகள் போன்ற அனைத்துமே மனித குல மேன்மைக்கு எதிரானவை என்று பாடிவைத்த திருவள்ளுவர் தொடங்கி பதினென் சித்தர்கள் உட்பட பல்வேறு நல்ல உள்ளங்கள் தமிழினத்தைக் காப்பாற்றத் தமது வலிமையான எண்ணங்களால்; தொடர்ந்து இன்றுவரை போராடி வருகின்றனர்!

தமிழினம்தான் சித்தம் தெளியாமல் பித்துப் பிடித்துப் பக்தி மார்க்கத்தில் தனது உழைப்பை இழந்து வருகிறது! பக்திக்கென இலட்சங்களை வாரி இறைக்கும் ஏராளமான பித்தர்களைவிட ஒரு இலட்சத்தில் ஒரு வீடு கட்டி அதில் ஒரு ஓட்டைக்கூரை ஏழையை வாழ வைத்தால், அவ்வாறு வாழ வைக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்தான் சித்தராவார்! 

ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையைத் தங்களின் உயரிய கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். 

அவர்கள் எவ்வாறு பலதார மண வாழ்க்கை முறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர் என்பதற்கு, பக்தி மார்க்கத் தமிழர்கள் போற்றும் இராமாயணத் தசரதனின் ஆயிரக்கணக்கான மனைவியர் கதையே போதுமானது. 

அய்யன் திருவள்ளுவர் தனது குறளில் இன்பத்து பாலில் வரும் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் கீழ்க்கண்ட குறளைப் பாடியுள்ளார்!

தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் 
தாமரைக் கண்ணான் உலகு!

இதைத் தமிழறிஞர் ஒருவர் சுருக்கமாக விளக்குவதாகக் கீழ்க்கண்டவாறு தெளிவுரை எழுதியுள்ளார்!

தாம் விரும்புகின்ற பெண்களின் மெல்லிய தோளிடத்தே உறங்குதல் போலத் திருமாலின் உலகில் வாழும் வாழ்வு இனியதாகுமோ? என!

இதையே பலதார மணம் புரிந்த இன்றையத் தமிழறிஞர் ஒருவர் தம்முடைய அனுபவத்தை மனதில் கொண்டு விரிவுரை படைத்துள்ளார்!

பரிதாபமாக இருவருமே திருக்குறளில் திருவள்ளுவர் சொல்ல வந்த கருத்தினை பாமர மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளுமாறு விளக்கி விட்டனர்!

திருமால் எனப்படும் கண்ணன் ஆயர்குலப் பெண்களிடம்; ஆற்றங்கரையில் ஆடிக்களித்ததை காமத்துடன் தொடர்புபடுத்துவது போல அமைந்து கருதப்படுமாறு முன்னவர் எழுதிய  தெளிவுரை தவறாக மக்களிடம் சென்றுவிட்டது!

பின்னவரோ தமது சொந்த அனுபவத்தில் பிதற்றியவை தமிழக மக்களை காமத்தில் தோய்ந்த பித்தர்களாக்கிவிட வழி நடத்திவிட்டது!

எம்மைப் பொறுத்தவரை திருவள்ளுவர் இக்குறளில் 

ஒரு ஆடவன் தன்னைச் சார்ந்த தம் உறவுகளான பாட்டி, தாய், தமக்கை, தங்கை, நட்பாக பழகும் உறவுமுறை மகளிர், மனைவி, குழந்தை என அவரவர் உறவுக்கேற்ப தன் தோள் சேர்ந்த மகளிரைத் தழுவுதல் 

ஆற்றங்கரையில் பால் வேறுபாடு இல்லாது தம் தோழியருடன் இதே வித உறவில் ஆடிக்களித்த கண்ணன் அடைந்த இன்பத்தை விடச் சிறந்தது என்ற பொருள்படுமாறுதான் பாடி வைத்துள்ளார் என்பதே உறுதியான தெளிவுரையாகும்!

இல்வாழ்க்கையின் சிறப்பினைப் பாடிவைத்த வள்ளுவர் அதில் ஒருவனுக்கு ஒருத்தி என ஆணித்தரமாகப் பாடிவிட்டு, மேற்கண்டவாறு தவறான விளக்கம் தருமாறு பாடியிருப்பாரா எனச் சித்தம் தெளிந்தவர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். 

இது போன்றே இன்னொரு திருக்குறளில் வள்ளுவர் பொருள் தேடி வெளிநாடு சென்று திரும்பும் ஆடவனை மகளிர் சூழ்வர் என எழுதியுள்ளதையும் தவறாக அந்த ஆடவனின் பல தாரங்கள் தழுவுவர் என உரையாசிரியர்கள் குறித்துள்ளனர். 

ஒரு ஆடவன் வெளிநாடு சென்று திரும்புகிறான் என்றால் அவன் தனக்கென என்ன வாங்கி வந்திருப்பான் என்ற ஆவலுடன் அவனை அவனது தாய், தமக்கை, தங்கை, மகள், உறவு மகளிர் என ஏராளமானவர்கள் சூழ்ந்து அவனது தோள் தழுவுவர் என்பதே வள்ளுவச்சித்தரின் குறளுக்குரிய உயர் விளக்கமாகும்.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் என்பது சதவிகித மக்கள் பக்தி மார்க்கத்தில் திலைப்பவர்கள்தாம். 

ஆயினும் எங்கு பார்த்தாலும் ஒழுங்கீனங்கள். எழுதினால் ஏராள பக்கங்கள் தேவை. 

ஏராளமான பக்தி வளர்க்கும் ஆன்மீக அமைப்புகள் இருந்தும் ஒழுங்கீனங்கள் அதிகரிக்கின்றதே தவிரக் குறையவில்லை.

தவறு செய்துவிட்டுக் கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் மன்னிக்கப்படுவோம் என்ற நம்பிக்கைதாம் பக்தி மார்க்கத்தின் தவறுகளுக்கும் ஒழுங்கீனங்களுக்கும் காரணம்.

அது போன்றே கடவுளாவது சாமியாவது என்று எதற்கும் அஞ்சாமல் தவறுகள் செய்வது முரட்டுத்தனமான பகுத்தறிவு தரும் தவறான பாதை.

சாலையில் கண்ட இடத்தில் எச்சில் துப்புவது தவறென்று தெளிந்தால் சித்தம். தெரிந்தும் தவறு செய்தால் அது பித்தம்.

உண்மைச் சித்தர்கள் இதற்கெல்லாம் தரும் அழகான விளக்கம் இதுதாம். 

தன்வினை தன்னைச் சுடும்! வீட்டப்பம் ஓட்டைச்சுடும்!

இது எழுதப்பட்ட பிரபஞ்ச விதி.

நன்மை செய்தால் நன்மை அடையலாம். தீமை செய்தால் அதற்குரிய தண்டனையிலிருந்து எவரும் தப்ப இயலாது.

இது முற்பிறப்பிற்கும் பொருந்தும் என்பதால்தாம் வள்ளுவச் சித்தர் ஊழ்வினை பற்றியும் பாடி வைத்தார். 

மனிதப் பிறவியின் நோக்கங்களை முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்கள்தாம். அவர்களைத் தேடிக் காடு மலை குகை என சதுரகிரி மலைகளில் தேடி அலைய வேண்டாம். 

சித்தத்தைத் தெளிவாக்கி நான் யார் என்ற கேள்வியுடன் நேர்மையான வாழ்க்கை முறையினைத் தேர்ந்தெடுத்து, 

இந்தப் பிறவியை நான் சிறப்பாக அமைத்துக்கொள்ள என்ன வழி என்ற கேள்வியைப்  பிரபஞ்ச வெளியில் எழுப்பினால் எங்கும் நிறைந்த சித்தர்களின் வழிகாட்டுதல் சாதாரண மனிதரையும் வந்தடையும். சரித்திர மனிதராக வாழ வழி கிடைக்கும்.

வெகு விரைவில் தமிழினம் வள்ளுவர் போன்ற சித்தர்களை சரியாகப் புரிந்துகொண்டு பக்தி மார்க்கத்திலிருந்து மீண்டெழுந்து சித்தர்களின் உயர்ந்த எண்ணங்களைப் பின்பற்றி உயர் வாழ்க்கை நெறி வாழ்வார்கள் என்பதே எமது அசைக்க முடியாக நம்பிக்கையாகும்! 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!