தமிழக இளைய சமுதாயத்திற்கு ஒரு வேண்டுகோள்!

தமிழக மக்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தரிசிக்கச் செல்லும்போது அங்கு நிலவுகின்ற ஒழுக்கக் கேடுகளை ஏனோ கவனிக்கத் தவறுகின்றனர். அப்படிக் கவனிக்க நேர்ந்தும் சகிப்புத்தன்மையுடன் வழிபட்டுத் திரும்பி விடும் காரணமும் புரிபடவில்லை!

சமீபத்தில் திருக்கடையூர் அம்மன் சந்நிதிக்கு எனது மாமனாரின் எண்பது வயது முடிவடைந்ததை அடுத்து அவருக்குச் சோதிடர்கள் அறிவுறுத்தியபடி வழிபாடு செய்யச் சென்றோம்!

அந்த ஆலயம் முழுவதும் அறுபது மற்றும் எண்பதாம் ஆண்டு நிறைவு பெற்ற வயதான தம்பதியர்களுக்கு ஏராளமான புரோகிதர்கள் தலைமையில் மறு திருமணம் செய்விக்கும் காட்சிகள் நிறையக் கண்டோம்!

இந்தத் திருமணங்களுக்காக அம்மனின் சன்னிதி தொடங்கி சுற்றுப் பிரகாரம் முழுக்க மட்டுமன்றி வெளியிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன! இதன் காரணமாக ஆலயம் முழுவதும் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது!

அம்மனின் சன்னிதி முழுக்க கருகருவெனப் புகை படிந்து காட்சியளித்தது! அதோடு மட்டுமன்றி சந்நிதி முழுவதும், மலர்களும், அட்சதைகளும், தண்ணீரும் நிறைந்து கால் வைக்கவே இயலாமல் சகதிமயமாகக் காட்சியளித்தது! 

ஒரு வரலாற்றுப் புதையலாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இடம் இது போன்ற காட்சிகளுடன் அருவருப்பாகக் காட்சியளித்ததை பகுத்தறிவுடன் நோக்கிய எம்மால் சகித்துக்கொள்ளவே இயலவில்லை!

சில நூறு புரோகிதர்களின் வருமானத்திற்காக இது போன்ற வரலாற்றுச் சின்னங்கள் படாதபாடுபடுவது மனதிற்குள் ஏதோ செய்தது!

அடுத்து நம் பிரசித்தி பெற்ற நமது சமயபுரம் அம்மன் கோயிலைச் சற்று பக்திபூர்வமாகக் கவனிப்பதை தள்ளி வைத்துவிட்டு பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் கவனிப்போம்!

ஆலய வளாகத்தில் ஏராளம் குவிந்திருக்கும் பக்தர்களால் அலட்சியமாகக் குவிக்கப்பட்ட தின்பண்டங்களின் கழிவுகள் தரை முழுக்கப் பரவியுள்ள தண்ணீருடன் சேர்ந்து நம் கால்களில் மிதிபடும் அவலத்தால், அவதியுடன் நடக்க வேண்டிய பரிதாபம்!

அம்மனுக்கு நேராக உள்ள நேர்த்திக்கடன் பகுதியில் தரைதளம் முழுக்க பலவித தீPப விளக்குகளின் எண்ணையாலும் நேர்த்திக்காக உடைக்கப்படும் தேங்காய் நீராலும் மிதிபடும் மலர்களாலும் மிகுந்த அருவருப்புடன் கால் தரையில் படவே கூசச் செய்யும் துர்நாற்றம் மிக்க அசுத்தங்கள்!

சற்று அண்ணாந்து மேலே பார்த்தால் பக்தர்கள் ஏற்றுகின்ற கற்பூர தீபத்தால் கருகருவெனக் காட்சியளிக்கும் மேல் தளம்! பிரகாரத்தைச் சுற்றி வந்து அங்கப்பிரதட்சணம் செய்யும் மகளிர்; எங்கே தம்மை ஆடவர்கள் கவனிப்பார்களோ என வெட்கம் பிடுங்க பரிதவிப்புடன் வேண்டுதல் நிறைவேற்றும் காட்சிகள்!  

முடிகாணிக்கை செழுத்துவதற்கென அறநிலையத்துறை ஊழல் அரசியல்வாதிகளின் பினாமி கட்டுமானதாரர் கட்டியுள்ள மண்டபம்! மண்டபத்தின் மிக சமீபத்திய கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் பக்தர்களின் தலை மீது விழத் தயார் நிலையில் காத்திருக்கும் அபாயம்!  

எழுத எழுத விரியும் ஏராளச் சுகாதாரக் கேடுகள் நிறைந்த ஆலயம்! பக்தி உணர்வுடன் மட்டுமே இங்கு வரும் மக்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தக் காட்சிகள் சாதாரணம்! 

ஆனால் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் நம் அறிவியல் தலங்களை நாம் இனியாவது மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! 

அம்மனிடம் வரம் வேண்டி வரும் மக்கள் அம்மன் உறையும் ஆலயத்தில் சுத்தம் பராமரிக்க மட்டும் அலட்சியம் காட்டுவது அம்மனையே அவமதிப்பதற்குச் சமம் அல்லவா?

அம்மன் நம் வீட்டுக்குள் சின்னம்மை பெரியம்மை என்ற பெயரில் அடியெடுத்து வைப்பதே நம் வீட்டுக்குள் நிலவும் சுகாதாரக் கேட்டினால்தான்! 

அவளைச் சாந்தப் படுத்த அவளின் வரவு கண்ட நாள் முதல் சுகாதாரம் பேணத் துவங்கும் நாம் அவள் நம் வீட்டை விட்டு நீங்கிய பின்பு அவளிடம் வேண்டிக் கொண்ட நேர்த்திக் கடனை நிறைவு செய்யவே அவளின் சந்நிதி தேடி எங்கிருந்தாலும் ஓடி வருகிறோம்! 

நம் வீட்டிலிருந்த வரை அவள் நம்மிடம் எதுவும் கேட்பதில்லை சுகாதாரம் ஒன்றைத் தவிர! அவள் வந்தவுடன் தூய்மையற்ற நமது இல்லம் தூய்மையடைகிறது! அந்தக் கணமே அவள் தனது கடமை முடிந்ததென தனது இருப்பிடம் திரும்பிவிடுகிறாள்! 

தான் வளர்த்த பிள்ளைகளிடம் கேட்காமலே கொடுக்கும் வேப்பிலை தெய்வம் அங்கம் வருத்தும் வரம் கேட்குமா!

நாம்தான்  கற்பனையாக அவளிடம் இதைச் செய்கிறோம் அதைச் செய்கிறோம் என்று கொடுப்பதாக நினைத்து அவளது இருப்பிடத்தை அசுத்தமாக்கி வருகிறோம்! அன்னையும் அமைதியாக நமது செயலை எண்ணி நகைத்தபடி அமர்ந்து அருள் பாலிக்கிறாள்! 

உதாரணத்திற்குத்தான் இந்த இரு ஆலயங்களும்! தமிழகத்திலுள்ள பெரும்பாலான பிரம்மாண்டமான ஆலயங்களின் கதி இவ்வாறுதான் உள்ளது!

இனியாவது இது போன்ற ஆலயங்கள் அமைதி நிறைந்தவையாகத் தூய்மை நிறைந்தவைகளாக மாற்றம் செய்யவுபட வேண்டும்!

இது எம்போன்ற வெளியூர் நபர்களால் இயலாத காரியம்! நாங்கள் எப்போதாவதுதான் வேண்டுதல் என்ற பெயரில் இது போன்ற ஆலயங்களுக்கு வர முடியும்!

ஆனால் இந்த ஊரிலிலேயே வசிக்கும் இளைய சமுதாயம் மனது வைத்தால் நிச்சயம் இது போன்ற வரலாற்றுச் சின்னங்கள் வருமானம் காரணமாகச் சிதைக்கப்படுவதை நிச்சயம் தடுக்க முடியும்!

உங்கள் கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் ஆயிரம் வருடங்களாக அவற்றின் புகழை உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன! 

பக்தி என்ற பெயரில் இவைகள் பாழ்பட்டுவிடக்கூடாது!

இவை இன்னும் உலகுள்ளவரை பாதுகாக்க வேண்டிய கடமை இளைய சமுதாயத்திற்குத்தான் உண்டு!

எனவே உங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருந்தால் அவற்றைத் தூய்மையாகவும் அங்குள்ள சிற்பங்கள் அழிவுறாமலும் பாதுகாக்க வேண்டிய கடமை தம் தமிழக இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் உண்டு!

இது போன்ற பிரம்மாண்டமான ஆலயங்களை நிர்மாணம் செய்த நம் முன்னோர்களின் கடின உழைப்பிற்கும், கலை நயத்திற்கும், வரலாற்றுப் பதிவுகளுக்கும் நாம் செழுத்த வேண்டிய கடமையும், மரியாதையும் இந்தச் சின்னங்களைப் பாதுகாத்துக் காப்பதில்தான் உள்ளது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!