இசுலாமியச் சகோதர சகோதரிகளுக்கு இனிய இரமலான் நல்வாழ்த்துக்கள்!

தமிழுக்கும் இசுலாத்திற்கும் பல்லாயிரக்கணக்கான வருட நாகரீக உறவுகள் உண்டென்பது வரலாற்று உண்மை! 

இசுலாமியர்களின் வழிபாட்டு முறைகளும் உலகமெங்கும் பல்வேறு காலகட்டங்களில்  ஏராளமான மாற்றங்கள் பெற்று வந்திருந்தாலும் தமிழர்களின் எண்ண ஆற்றலை வெளிப்படுத்தி இயற்கைச் சக்தியை வசப்படுத்தும் வழி முறையை இசுலாமும் பின்பற்றி வந்துள்ளதெனலாம்!

இசுலாமியர்களின் உருவ வழிபாடு அற்ற வழிபாட்டு முறையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் பெற்றிருந்தாலும்; 

தினசரி தவறாது அதிகாலை துவங்கி பாங்கு ஓதி அனைவரும் பள்ளி வாசலில் ஒன்று கூடித் தங்களின் எண்ணங்களை இயற்கை வெளியெங்கும் பரவச்செய்து தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதை இன்றும் நாம் காணமுடிகிறது!

தமிழகத்தில் வைணவர்கள் புரட்டாசி மாதத்திலும் சைவர்கள் தை மாதத்திலும் விரதமிருப்பதைப் போல இசுலாமியர்கள் தங்களின் இரமலான் மாதத்தில் விரதமிருந்து நோன்பு கடைப் பிடிக்கின்றனர்!

இசுலாமியர்களும் ஆதியில் தமிழர்கள் போலவே சைவ உணவுப் பழக்க வழக்கத்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்! பின்னர் படிப்படியாக அவர்களும் அசைவ உணவுப் பழக்க வழக்கத்திற்கு மாற்றம் பெற்றிருக்கக்கூடும்!

இரக்க உணர்வு என்பது எந்த மதத்தவருக்கும் உண்டென்பதை எனது அனுபவத்திலேயே அறிந்துள்ளேன்! சமீபத்தில் செவிலியர் பணி செய்யும் ஒரு இசுலாமியச் சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது தாம் அசைவ உணவுகளை உண்பதில்லை என அவர் தெரிவித்தது என்னுள் வியப்பலைகளை ஏற்படுத்தியது!

இளம் வயதில் அசைவம் வாங்கத் தம் தந்தையுடன் இறைச்சிச் கடைக்குச் செல்ல நேர்ந்தபோது அங்குள்ள உயிரினங்களின் பரிதாப நிலை கண்டு இரக்கமுற்று இந்த உயிரைக் கொன்றா நாம் உண்ண வேண்டும் என்ற உயர் குணச் சிந்தனை ஏற்பட்டு அந்தக் கணம் முதல் அசைவ உணவுப் பழக்கத்தை விட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்!

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் விருப்பத்திற்காக அசைவ உணவு வகைகளைச் சமைக்க நேரிட்டாலும் தான் மட்டும் இன்று வரை உறுதியாகத் தனது சைவ நெறிக் கொள்கையில் பிறழாது வாழ்ந்து வருவதாகவம் அவர் தெரிவித்தார்!

அதனினும் அதி மேலாக, அவர் தாம் ஒரு முறை புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்று அன்னையைப் பற்றி அறிந்து வந்ததாகத் தெரிவித்த செய்திதாம் என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்தி அவரது பிற உயிர் நேசத்தையும் பிற மதங்கள் பற்றிய புரிதலையும் எண்ணிப் பெருமிதம் கொள்ளச் செய்தது! 

மதவாதமற்ற பிற இனத்தவர்களின் உணர்வுகளையும் நேசிக்கும் இத்தகு நல் உள்ளங்கள்தாம் இனி உலகு தழைக்கத் தேவை!

இசுலாமியர்களின் புனித இரமலான் நோன்பு மாதம் துவங்கியுள்ளது! 

உலகெங்கும் வாழும் இசுலாமிய உறவுகள் நபிகள் காட்டிய வழியில் நடந்து உலகில் அமைதியும் சமாதானமும் நிலைத்து நிற்க இந்த இரமலான் மாதத்தில் பிரபஞ்சப் பேராற்றலிடம் வேண்டி இரமலான் நோன்பு சிறக்க வாழ்த்துகிறோம்!

உலகெங்கும் வாழும் இசுலாமியச் சகோதர சகோதரிகளுக்கு ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் நேசம் நிறைந்த இனிய இரமலான் நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!