தரமற்ற கட்டுமானங்கள்!

சென்னையில் புதியதாகக் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று

இடிந்து விழுந்து தரை மட்டமானதில் ஏராளமான உயிர்ச் சேதங்களும் பலர் படுகாயங்களுக்கும் ஆளான நிலை உருவாகியுள்ளது!

பலியானவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்!

படுகாயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற நாம் அனைவரும் பிரபஞ்சப் பேராற்றலை வேண்டுவோம்!

தரமற்ற கட்டுமானங்களின் விளைவினை இப்பொழுதாவது மனிதாபிமானம் உள்ளவர்கள் அனைவரும் உணர வேண்டும்!

ஒரு வேளை இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகள் குடியேறிய நிலையில் இடிந்திருந்தால்

நினைக்கவே மனம் பதறும் அளவிற்குப் பல அப்பாவிக் குடும்பங்களின் உயிரிழப்பினை இந்த நாடு சந்தித்திருககும்;!

வண்ணம் பூசிப் பளபளப்பாகக் காட்சியளிக்கும் இது போன்ற புதிய
கட்டுமானக் குடியிருப்புகளை வாங்கி

அங்கு குடியேறவே அச்சப்படும் நிலையினை இந்தக் கட்டிடம் உருவாக்கியுள்ளதை நாம் மனதில் கொண்டாக வேண்டும்!

இனியாவது கட்டப்படும் கட்டிடங்களின் தரத்தை அவை கட்ட அனுமதி கொடுக்கும் அரசு அலுவலர்கள்

உரிய தரத்துடன் அவை கட்டப்படுகின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்!

உடனடியாக நாடு முழுவதும் தற்பொழுது கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமானங்களின் தரத்தை உறுதிப்படுத்த

அதற்கெனத் தனியானதொரு அமைப்பினை ஏற்படுத்தி உரிய சான்றிதழ்கள் பெற்ற பின்பே

அவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்!

அவை குடியிருப்புகளாக மட்டுமன்றி பாலங்கள், கல்விக்கூடக் கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள் என

அரசு தனியார் சாரந்த எதுவாக இருந்தாலும் உடனடியாகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்!

இதை விட அதி முக்கியமாக அரசால் கட்டப்பட்ட பல குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் மற்றும் பொது மக்களின் சொந்த குடியிருப்புகள்

தமிழகமெங்கும் படு மோசமாகக் காட்சியளிக்கின்றன!

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் ஒரு கட்டுரையில் இதைப் பற்றி எச்சரித்துள்ளோம்!

இங்கு வசிக்கும் மக்களின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டாவது உடனடியாக அவற்றில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தி

புதியதாக ஊழலற்ற நூறாண்டுகளுக்கு மேல் உத்தரவாதம் தரக்கூடிய நேர்மையான ஒப்பந்ததாரர்களை நியமித்து கட்டித்தந்து

மறு குடியேற்றம் செய்விக்க வேண்டிய மகத்தான கடமை ஆட்சியாளர்களுக்கு தற்பொழுது உள்ளது!

ஆபத்து வருமுன் காப்பதுதான் ஒரு தலை சிறந்த ஆட்சியாளர்களுக்கு அழகாகும்!

அதை விடுத்து அலட்சியமாக இருந்து அப்பாவிகள் பலியாவதற்குக் காரணமாகி அதன் பின்னர் நிவாரண உதவிகள் வழங்கி என்ன பயன்?

இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் அடிமையாகி இது போன்ற துயரங்களுக்கு இனியும் எவரும் துணை போகக்கூடாது என்பதைவிட

இறந்த உயிர்களைத் தங்கள் உறவில் ஒருவர் இழந்ததாக எண்ணி வருந்தி  மனம் திருந்த வேண்டும் என்பதுதாம்

இப்போதைக்கு நாம் ஆட்சியாளர்களிடமும் அரசு அலுவலர்களிடமும் வைக்கும் மனிதாபிமானம் சார்ந்த வேண்டுகோள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!