சொர்க்கம் நரகம்

சொர்க்கம் நரகம் என்ற கதைகளைப் பகுத்தறிவுள்ள எவரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்! 

பூமிப்பந்திற்கு அப்பால் உள்ள இந்தக் கற்பனை இடங்களைப் பற்றி நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்!

எனினும் இந்த பூமிப்பந்திலேயேதான் உண்மையிலேயே சொர்க்கமும் நரகமும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! 

நற்குடிப் பிறப்பு, நல்ல தாய் தந்தையர், சிறந்த உற்றார் உறவினர், நல்ல கல்வி, நல்ல துணை அழகான அறிவான குழந்தைகள் உழைப்பிற்கேற்ற ஊதியம்! மன நிறைவான வாழ்க்கை! இவை ஒருங்கே அமையப்பெற்றவருக்கு இந்த பூமிப்பந்துதான் சொர்க்கம்!

இதற்கு நேர்மாறான வாழ்க்கை முறையை அனுபவித்து என்றென்றும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புவி வாழ்க்கையே நரகம்தாம்!

இவையெல்லாம் நியமப்படி அமைவது அவரவர்தம் முற் பிறவிப் பயன்! 

அதே சமயம் 

அறிது அறிது மானிடராய்ப் பிறத்தல் அறிது! 
அதனினும் அறிது கூன் குருடு செவிடு அற்ற மனிதராய்ப் பிறத்தல் அறிது! 

எனப்பாடிய நமது முது பெரும் பெண் தமிழறிஞர் அவ்வையின் குமுறலுக்கேற்ப உலகில் இத்தகைய குறையுடன் பிறப்பவர்களையும், 

அல்லது பிறக்கும்போது நல்ல நிலையில் பிறந்து ஊனமடையும் பலரையும் நாம் காண்கிறோம்!

உலகிலுள்ள உயிரினங்களில் மனித இனத்தைத் தவிரப் பிற உயிரினங்களில் உடற் குறைபாடுகளுடன் பிறப்பதை அரிதாகவே இன்று வரை நாம் காண முடிகிறது!

ஆனால் அவ்வையார் தனது பாடலில் வரிசைப்படுத்திய குறைகள் உள்ளவர்கள் உலகெங்கும் ஏராளமாகப் பிறந்து வாழ்வது உள்ளபடியே எவரும் விரும்பி ஏற்காத வேதனைக்கு உரிய வாழ்க்கை முறைதான்!

ஆயினும் இது போன்ற குறைகளுடன் பிறப்பவர்களை உலகம் இனியும் தவிர்க்க இயலும்! 

இது போன்ற குறைகள் உள்ளவர்களிலும் தம் குறைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல் சாதனையாளர்களாகத் தம்மை உலகிற்கு அறிவிக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களை நாம் தொடர்ந்து சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! 

அத்தகையவர்களைப் பின்வரும் கருத்துக்கள் நிச்சயமாகக் காயப்படுத்தாது எனவும் இத்தகு சாதனையாளர்களுக்குச் சித்தர்களின் எண்ணங்கள் தாங்கிய இக்கருத்துக்கள் அவர்களின் ஊனத்திற்கு அரு மருந்தாக இருக்கும் எனவும் நாம் நம்புவோம்!

இரு கைகளும் இரு கால்களும் இன்றிப் பிறந்தும் தம்முடைய வாயால் தம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சாதனையாளர்கள் பலர் தம்முடைய பிறவிக் குறையை மட்டுமல்ல 

தம்முடைய ஊழ்வினையையும் இந்தப் பிறவியோடு தொலைத்துவிட்டுத் தம்முடைய அடுத்த பிறவியைச் சிறப்பாக மாற்றியமைத்துச் சொர்க்க வாழ்வுக்குத் தயாராகின்றனர் என்பதுதாம் உண்மை!

அதே சமயம் தமிழகத்தில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள் உடல் ஊனமுற்றவர்களாகத்தான் உள்ளனர்! 

தமக்கு ஏற்பட்ட ஊனத்தை அவர்கள் பிச்சையெடுப்பதற்கென்றே தவறாகப் பயன்படுத்துவது அவர்களின் முற்பிறவியின் ஊழ்வினைத் தொடர்ச்சி இதுவென்பது மட்டுமன்றி 

தம்முடைய இந்தச் செயலால் தமது அடுத்த பிறவியையும் ஊனமாகப் பிறப்பதற்கென்றே தொடர்கின்றனரென்றும் அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும்!

அதே சமயம் ஊனமின்றிப் பிறந்து கை கால்கள் நன்றாக இருந்து,  

தகுதியான உடல் திறன் இருந்தும் அடுத்தவர் உழைப்பை எதிர் நோக்குபவர்களாக மனதளவில் ஊனமுற்று, 

உழைப்பதற்குச் சோம்பல்பட்டு பிச்சையெடுத்து வாழும் இன்றுள்ளவர்கள் முற்பிறவியில் என்னவாக இருந்திருப்பார்கள் என்ற கேள்வி எழாமல் இராது

இந்தக் கேள்விக்குப் பதில்! 

கைகால்கள் ஊனமுற்றுப் பிறப்பவர்கள் 

மற்றும் நல்ல நிலையில் பிறந்திருந்தும் விபத்துகளுக்கு ஆட்பட்டு ஊனமடைதல் 

மற்றும் ஒருவருக்கொருவர் ஆயுதமேந்திச் சண்டையிட்டுத்  தம்முடைய உடல் உறுப்புகளை இழப்பதுவும் அவரவர் ஊழ்வினையின் தொடர்ச்சிதான்!

அடுத்தவர் உழைப்பில் கிடைக்கும் வரிப்பணத்தை தம்முடைய உல்லாச வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொண்டு அதை எதிர்ப்பவர்களை வெட்டி வீழ்த்தி அராஜகவாதிகளாகத் திரியும் இன்றைய அரசியல்வாதிகளும், 

மக்களின் உழைப்பில் கிடைத்த செல்வத்தில் புரண்டு மதவெறி உணர்வு ஊட்டும் மதவாதிகளும், 

இவர்களால் தீவிரவாதிகளாக மாற்றம் செய்யப்பட்டு அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் தீவிரவாதிகளும்,

சொத்து சுகங்களுக்கு ஆசைப்பட்டுச் சொந்தங்களையே வெட்டி வீழ்த்திக்கொள்ளும் சுயநலவாதிகளும்

கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு அடுத்தவர்களை உடல் ஊனப்படுத்தியவர்களும்தான் 

முன்னர் தாம் செய்த வினையை அனுபவிக்க அடுத்த பிறவியில் இது போன்று ஊனமுற்றுப் பிறந்து தம் சுயம் அறியாமல் அடுத்தவர் உழைப்பில் வாழும் பிச்சைக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!

ஓவ்வொருவருடைய ஊழ்வினையும் அவரவர் முற்பிறவியின் வினைகளுக்கு ஏற்பக் கட்டாயம் தொடர முற்படும்! 

இதைத்தான் பட்டினத்தார் ஒரு வரியில் தன் வினை தன்னைச் சுடும் என அழகாகச் சொல்லி வைத்தார். 

வள்ளுவமும் ஊழ்வினையிலிருந்து எவரும் தப்ப இயலாது எனத் தம் பத்து குறள்களிலும் அழுத்தாமாக வலியுறுத்தியுள்ளார். 

எனவே பிறவிதோறும் தொடரும் ஊழ்வினையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு இனி வரும் வாழ்க்கை முறையைச் சிறப்பானதாக்கிக்கொள்ள 

ஒவ்வொரு மனித உயிரும் முயன்றால் மனநலம் குன்றிய, உடல் ஊனமுற்ற சமுதாயம் உருவாவது நிச்சயம் தவிர்க்கப்பட்டு இந்த பூமிப்பந்தே ஒரு சொர்க்கமாக மாறும்!

அது மட்டுமன்றி இந்த உலகில் அமைதியும் சமாதானமும் மீண்டும் தழைக்கும்! 

எனவே கைகால்கள் ஆரோக்கியமாக இருந்தும் உழைத்துத் தம் உணவைத் தேடிக்கொள்ளாது பிச்சையெடுத்து வாழும் நபர்களுக்கு எவரும் உதவவே  கூடாது. 

இவர்களை ஆதரித்து நம் உழைப்பினை இரக்கம் என்ற பெயரில் வீணாக்குகிறோம் என்பதைவிட இவர்கள் தம் அடுத்த பிறவியையும் உழைப்பின்றியே அவர்தம் ஊழ்வினை தொடர நாம் ஆதரிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். 

எனவே ஊனமுற்றுப் பிறந்தும் தம் உழைப்பால் தம் ஊழ்வினையை மாற்றிக்கொள்ளப் போராடும் மன உறுதிமிக்க ஊனமுற்றவர்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். 

உழைத்துப் பிழைக்க விரும்பாது சோம்பித்திரியும் ஆரோக்கியாமான நபர்களை ஆதரிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்!

ஆதரிக்க எவருமற்ற நிலையில் தாமாகவே அவர்கள் உழைப்பதற்கு முன்வருவர். 

பொதுவாகப் பிச்சை எடுப்பவர்கள் நாம் அவர்களுக்குப் பிச்சையிட்டால் நம்மை வாழ்த்துவது வழக்கம்! 

சில நோங்களில் நாம் உதவ நினைக்கும்போது நம்மிடம் உண்மையிலேயே சில்லறை இல்லாதிருந்து அவர்களுக்கு உதவ இயலாது போனால் நம் நிலை அறிந்து அவர்கள் ஒதுங்குவதில்லை. 

வழக்கமாக தினமும் பிச்சை கேட்டு வரும்  நமக்கு இல்லை என்று சொல்லாமல் தவறாது பிச்சையிடுபவர்தானே,  எனவே இன்றில்லாவிட்டால் நாளை இவரிடம் வாங்கிக் கொள்ளலாம் என பெருந்தன்மையாகச் செல்லாமல் வாய்விட்டுத் திட்டிவிட்டுச் செல்வர். 

இவ்வாறு இவர்கள் நம்தைச் திட்டுவது நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது எனினும் திட்டிய வினை அவரையே சாரும் என்பதால் அந்த வினை அவருக்குச் சேர வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் நான் கூட அவர்களை மன்னித்து அடுத்த முறை வரும்போது மீண்டும் மீண்டும் பிச்சையிடுவது வழக்கம்!

இப்பொழுதெல்லாம் இது போன்று உடல் ஆரோக்கியமாக இருந்து பிச்சையெடுத்துத் திரிபவர்களை ஆதரிப்பது அவர்களின் அடுத்த பிறவிக்கும் இதே உழைப்பில்லாது அடுத்தவர் தயவில் வாழும் சோம்பல் பேர்வழிகளாக உருவாக நாமே ஆதரித்துத் தயாரிப்பதாகக் கருதி அவர் எவ்வளவு திட்டினாலும் அவர் வினையை அவரே அனுபவிக்கட்டும் எனப் பிச்சையிட மறுத்துவிடுவேன்!

எனவே இனி அடுத்த பிறவியில் பிச்சைச்காரர்கள் உருவாகாது தடுக்க இப்பொழுதே நம் இரக்க குணத்தைத் தள்ளி வைத்து உதவியற்ற நிலையில் தாமாகவே உழைத்து வாழுமாறு அவர்களை நல்வழிப்படுத்த முயல்வோம்!

அப்படியும் மாறுவதற்குத் தயாராகாதவர்களை இனிச் சிறைச்சாலைகளில் தள்ளிக் கடுமையான வேலைகள் கொடுத்துத் திருத்துவோம். 

உடல் ஊனமுற்ற தமிழ்ச் சமுதாயம் இனி உருவாகாமல் ஒரு தலை சிறந்த சமுதாயமாகத் தமிழினம் வாழும் வழி காண்போம்!

இது ஐந்தாம் தமிழ்சங்கத்தின் தலையாய பணியாக வரும் காலத்தில் திகழும்.

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்?
என்பது கேள்வியில்லை!
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை!

உடல் உழைக்கச் சொல்வோம்! அதில் பிழைக்கச் சொல்வோம்.!
பிறர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!