காலனி முறை வாழ்க்கையற்ற சமத்துவச் சமுதாயத் தமிழ் மக்கள்!

தமிழகத்தில் குறிப்பாக கிராமங்களில் நாடு விடுதலையாகி 67 ஆண்டுகள் கடந்த நிலையில்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஊருக்கு ஒதுக்கமான இடங்களில் காலனி வீடுகள் இருப்பது வேதனையளிக்கும் செயலாக நாகரீகம் பெற்ற தமிழர்கள் ஒவ்வொருவரும் கருத வேண்டும்!

அதனிலும் மேலாக இந்த இடங்களை அவர்களின் சாதிப் பெயர்களில் இன்ன தெரு என அழைப்பது வேதனையிலும் வேதனையான செயல்!

இது போன்ற காலனிகள் வாக்கு வங்கிக்கெனத் தொடர்வதைத்தான் நம்முடைய இன்றைய அரசியல்வாதிகள் விரும்புவதாகத் தெரிகிறது

சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகவே இவர்களைத் தொடரச் செய்து தேர்தல் காலங்களில் இவர்களின் வாக்கு வங்கியை பணபலத்தின் துணை கொண்டும், சாதி அமைப்புகளின் துணை கொண்டும் வளைப்பதற்கென்றுதான் இது போன்ற காலனி அமைப்புகள் இன்றும் தொடருகின்றன!

சமத்துவம் சம தர்மம் எனக் கூச்சலிடும் அரசியல் அமைப்புகள் இது போன்ற ஒதுக்கப்பட்ட இன மக்களின் காலனி அமைப்புக் கட்டுமானத்தைத் தகர்ப்பதற்கு இது வரை குரல் எழுப்பாதது ஏன் என்பதுதான் இன்றும் புரியாத புதிர்!

இந்த நிலை இனி அடியோடு மாற்றப்பட வேண்டும்! இது போன்ற காலனி வீடுகள் முழுவதும் தகர்க்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து தரப்பு மக்களிடமும் சரிசமமாக இந்த மக்களும் வாழும் வகையில் புதிதாக உருவாக்கப்படும் நகரியத்திற்கு இணையான வீடுகளை உருவாக்கி இவர்களைக் குடியமர்த்த வேண்டும்!

அடித்தட்டு மக்களிடம் இது வரை நிலவி வந்துள்ள பழைய பழக்க வழக்கங்களில் இருந்து இவர்கள் முற்றிலும் மாறுபட்டு நாகரீகச் சமூகத்தினராக மாறி வாழும நிலையினை உருவாக்க வேண்டும்!

ஒதுக்கப்பட்டவர்களை எங்களுடன் இணைக்கக்கூடாது எனப் பழைமைவாதச் சாதியாவாதிகள் எவரேனும் எதிர்க்க முற்பட்டால் அவர்களுக்குப் பத்தாண்டுகளுக்கும் குறையாத பிணையில் வர இயலாத சிறைத் தண்டனை எனச் சட்டம் இயற்றிக் கடுமையாக்கினால் சிறைத் தண்டனைக்குப் பயந்தே அவர்களும் தங்களின் எதிர்ப்பு நிலையைக் கைவிட்டுவிடுவர்!

இத்தகைய ஒரு பொதுவுடமைச் சம வாய்மைச் சித்தாந்தம் உருவாக்கப்பட்டால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்களும் மற்றவர்களுக்குச் சரிசமமானவர்கள் என உணர்ந்து தங்களின் தாழ்மையான எண்ணங்களிலில் இருந்து வெகு விரைவில் விடுபடுவர்

அதே சமயம் இது போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் இது வரை வாழ்ந்த வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி அமைத்துக் கொண்டு நாகரீகம் பெற்ற மக்களுக்குச் சமமாக வாழ்வதற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்

குறிப்பாகச் சொல்வதென்றால் இன்று வாழும் நரிக்குறவர் இனத்தினை இங்கு கவனத்தில் கொள்வோம்! இவர்கள் பொதுவாகக் குழுவாகத்தான் வாழ்கின்றனர்

ஒரே இடத்தில் அதுவும் மிகச்சிறிய கூடாரங்களை அமைத்துக் கொண்டு தங்குவதும், அதே இடத்தில் சமைப்பது, குளிப்பது, இரவானால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆண்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது என ஒரு வகையில் கூட்டுக் குடும்பங்களாகவும், இன்னொரு வகையில் நாகரீகமற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்

இதை விடச் சில இடங்களில் தங்களின் பிள்ளைகளைப் பிச்சை எடுத்து வாழும் நிலைக்குத் தள்ளுவதும், களவு முதலானவற்றைக் கற்றுத் தருவதும் நிகழ்வதைக் கண்டால் தமிழ்க்கடவுள் முருகனின் வாரிசுகள் எனத் தங்களைப் பறை சாற்றிக் கொள்ளும் இவர்களை நினைந்து வேதனைப்பட்டதான் இப்போது இயலும்!

படிப்பறிவின்மை, பழைமைவாதம், இருக்கும் அதே நிலையிலேயே தொடர்வது என்ற முரட்டுப் பிடிவாதம், இப்படித்தான் வாழ வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளதாகத் தங்களுக்குத் தாங்களே அமைத்துக் கொண்ட வேலிக்குள் அடைபட்டுள்ள இது போன்ற மக்கள் தாமாகத் திருந்தி நாகரீகமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டுமென நாம் எதிர்பார்ப்பது நிறைவேறாத ஒன்று!

ஒரு தலை சிறந்த அரசு முறை இது போன்ற மக்களைப் பழைமையின் பிடியிலிருந்தும், பழக்க வழக்கத்திலிருந்தும் மாற்றி புதிய வாழ்க்கை முறைக்குள் அவர்களைக் கொண்டு வர வேண்டுமென்றால் அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துணிந்தும் விரைவாகவும் மேற்கொண்டு அவர்களுக்குள் போடப்பட்டுள்ள வேலியினை உடைத்து அவர்களைச் சுதந்திரமானவர்களாக மாற்றம் பெறச் செய்ய வேண்டும்!

இதுவும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தால் வெகு விரைவில் மாற்றம் பெற்று நனவாகப்போகும் தமிழ்க்கனவு!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!