பழைய நடைமுறைகள்! சம்பிரதாயங்கள் தகர்ப்போம்!

ஆட்சி மாற்றங்களின்போது புதிய ஆட்சியாளர்களை மரியாதை நிமித்தம் சந்திப்பதை வழக்கமெனக் கொண்டுள்ளனர் இன்றைய அரசு அலுவலர்கள்!

இது மட்டுமன்றி அவர்களின் பதவிகளில் ஏதேனும் மாற்றங்களை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைச்சர்களையும், முதல்வரையும் சந்திப்பதை வழக்கமாக்கியுள்ளனர்.

இது ஆட்சி மாற்றத்தில் ஏற்படும் சாதாரண நிகழ்வாகக் கருதப்பட்டாலும், இது போன்ற சந்திப்புகளும் சம்பிரதாயங்களும் நிகழுவது பெரும்பாலும் சுயநலம் சார்ந்த காரணத்தினால்தான்!

ஆட்சியாளர்களுக்கு விசுவாசமானவர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள்தான் இது போன்ற சம்பிரதாயங்களுக்கு உரியவர்கள் என்பது தௌளத் தெளிவான நடைமுறை உண்மையாகும்!

இன்று அரசு அலுவலர்களில் இது போன்று இரு பிரிவாகச் செயல்படுபவர்களைத்தாம் நாடு இதுவரை கண்டு வந்துள்ளது!

இதன் விளைவு ஆட்சியாளர்களுக்கு வளைந்து கொடுக்கும் எவரும் சர்வ சாதாரணமாகப் பதவி உயர்வு மற்றும் ஆட்சியாளர்களின் நெருக்கம் இரண்டையும் மிகச் சுலபமாகப் பெற இயல்கிறது!

இதுவும் ஒரு வகையில் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக விளங்கும் பச்சோந்தி குணப் போக்குதாம்!

தம்முடைய கடமையை நேர்மையாகவும் உண்மையாகவும் செய்யக்கூடிய எந்த ஒரு அரசு அலுவலரும் கூனிக் குறுகி இது போன்ற அரசியல்வாதிகளின் முன்பு கைகட்டி நிற்கவும் மரியாதை நிமித்தம் என்ற பெயரில் சந்திக்கவும் வேண்டிய அவசியமே கிடையாது!

மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் இது போன்ற நேர்மையான அலுவலர்களிடமிருந்து அரசு செய்வோருக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் அவர்கள்தான் இந்த அலுவலர்களிடம் முறையான அனுமதி பெற்று அவர்தம் வேலை நேரம் பாதிக்காத வண்ணம் நேரில் சென்று தேவையான விளக்கத்தைப் பெற வேண்டும்!

இதுதான் ஒரு தலைசிறந்த உன்னதமான ஆட்சியாளர்களுக்கு உரிய உயரிய தகுதிகளாகும்!

கர்ம வீரர் எனப் போற்றப்பட்ட பெருந்தலைவரின் ஆட்சி காலத்தில் இது போன்ற நடைமுறைகள் இருந்துள்ளன!

இன்றோ ஆட்சியாளர்களின் ஏவலர்களாகவே நம் அரசு அலுவலர்கள் மாறிவிட்டனர்.

நேர்மைமிகு அலுவலர்கள் பதவி உயர்வு இன்றிப் பல்வேறு இட மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு அலைக்கழிக்கப்படுவது இன்று சர்வ சாதாரணமான நிகழ்வுகள்!

இதற்கும் அஞ்சாமல் எந்தத் துறைக்கு மாற்றினாலும் அங்கு சென்று பணியாற்றுகின்ற சில மாதங்களிலேயே அந்தத் துறையிலுள்ள ஊழல்களைக் களைந்து அடுத்த பணி மாறுதலுக்கு அஞ்சாமல் காத்திருந்து பணி செய்யும் ஒரு சில அஞ்சா நெஞ்சங்களும் இதே நாட்டில் அரசுப்பணியில் தொடரத்தான் செய்கின்றனர்!

இத்தகைய குணம் உடையவர்கள் மரியாதை நிமித்த சந்திப்பு என்ற பெயரில் தங்களின் உழைப்பு வீணாவதைத் தவிர்ப்பவர்கள் என்பதுதாம் உண்மையான காரணம்!

ஒரு முறை மாவட்ட உயர் காவல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது! அலுவலக வாயிலில் துப்பாக்கி ஏந்திய ஐந்து மகளிர் காவலர்கள் நின்றிருந்தனர்!

உயர் அலுவலர் வரும் நேரம் அது! அவர் வருவதை அறிந்த அந்த மகளிர் காவலர்கள் உடனடியாக விரைப்பாகி வரிசையில் நின்று துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்து உயர் அலுவலருக்கு மரியாதை செய்தனர்!

இவர்கள் கால்கடுக்க தங்களின் வேலை நேரம் துவங்கியதிலிருந்து உயர் அலுவலர் வரும்வரை இவ்வாறு வாயிலில் காத்திருந்த நேரத்தினையும், தமிழகம் முழுவதும் இது போன்று தினசரி காலையிலும் மாலையிலும் இதே நிகழ்வு கடைப்பிடிக்கப்படுவதால் ஏராளமான மனித வளம் வீணாவதையும் எம்மால் உணர முடிந்தது!

இந்த நேரத்தில் அவர்கள் வேறு ஏதேனும் காவற் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் அவர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்குரிய பலனாவது மக்களுக்குக் கிடைத்திருக்குமல்லவா!

இது சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் காலததில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறை!

சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இது போன்ற ஏராளமான மனித வள ஆற்றல் வீணடிக்கப்படும் அவசியமற்ற நடைமுறை நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது!

இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான்! இது போன்று ஏராளமான மனித வளத்தினை வீணடிக்கும் செயல்களும், அரசு செய்வோருக்கு விசுவாசம் காடடுவதென்ற பெயரில் நேர விரயத்தை மேற்கொள்வதும் இனியும் தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது!

நேர்மை குணம் மிக்க அரசு அலுவலர்கள் ஏராளம் பெருக வேண்டும்! தேவையற்ற பழைய சம்பிரதாயங்கள் அடியோடு தகர்க்கப்பட வேண்டும்!

இந்த மாற்றம் ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் கட்டாயம் நடைமுறைக்கு வந்தே தீரும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!