ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த உணர்வு பூர்வ அனுபவம்!

எனது தந்தை மரணப்படுக்கையில் இருந்த நேரம் அது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அவரை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கியது மருத்துவமனை நிர்வாகம்.

அவரின் உடலை வெகுவாகப் பாதித்த மஞ்சள் காமாலை நோய் காரணமாக அவருக்கு அப்போது கடுமையான உடல்வலி இருந்ததால் எனது சிறிய தமக்கை அவருடைய உடம்பினை அழுத்தி அவரது வேதனையைக் குறைக்க முயன்றார்.

அவர் ஏதோ வேலையாக வெளியில் செல்லவே அவரது வேதiனையைக் குறைக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது.

நானும் அவரது உடம்பினை அழுத்தி விட்டவாறு அவரது வேதனையைக் குறைக்க முயன்றேன்.

அதோடு மட்டுமன்றி அவரின் முதுகில் ஆறுதலாகத் தட்டியவாறு அவரிடம் மானசீகமாக நான் இதுவரை அவரிடம் ஏதேனும் கோபமாக அவரது மனம் புண்படும்படியாக நடந்து கொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுமாறு உள்ளுக்குள் வேண்டினேன்.

என்னுடைய வேண்டுகோள் அவருக்குள் நிச்சயம் பதிந்திருக்கும். ஏனெனில் வாழ்க்கையின் முடிவுப் பகுதிக்குள் அவர் வந்துவிட்ட நேரம் அது.
எனது வேண்டுகோள் அவரின் ஆழ் மனதில் பதிவதை நான் அந்த நிமிடமே உணரத் துவங்கினேன்.

என் தந்தையிடம் நான் நடந்து கொண்ட தவறான நிகழ்வுகளுக்கு அந்த நேரத்தில் மன்னிப்பு கிடைத்ததையும், அந்தத் தருணத்தின் உண்மைத் தன்மையையும் முழுமையாக என்னால் உணர முடிந்தது.

இது ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இன்றி நடந்த ஒரு உணர்வு பூர்வமான உண்மை அனுபவம்!

இந்த அனுபவத்தைத் தவறவிட்டவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்! நல்ல வேளையாக நான் அந்த வாய்ப்பினைத் தவறவிடவில்லை!

ஒரு உயிர் தன் உடலை விட்டு நீங்கும்போது தன் வாழ்வின் அங்கமாகத் திகழ்ந்தவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது காலம்காலமாக நிகழும் நிகழ்வு.

அந்த நேரத்தில் அந்த உயிர் தான் மிகவும் நேசித்த உடன் பிறந்தோர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உட்பட எவராயிருந்தாலும் தன்னை மிகவும் அவமானப்படுத்தியோ அல்லது அலட்சியப்படுத்தியோ இருந்தாலும் மன்னித்துவிட்டு அவர்களின் நேசத்தையும் அண்மையையும் விரும்பும் தருணம் அது.

வணிகக் கருத்து வேறுபாடுகள் தவிர என் தந்தையுடன் நான் எவ்வித மன வேறுபாடும் காட்டாதவன்!

அவரின் வாழ்நாள் இறுதிவரை என் மீது அவர் காட்டிய பரிவுகள் ஏராளம்! என் தந்தையிடம் நான் கற்றுக் கொண்ட உயர் குணங்களும் ஏராளம்!

அவரிடம் நான் பெற்ற உயர் குணங்கள்தான் இன்றுவரை என்னை வழி நடத்தி வாழ்க்கைப் பாதையைச் செம்மையுற வைக்க வழி காட்டுகின்றன!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!