வியாழன், 31 ஜூலை, 2014

வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த பாடங்கள்! வினையான விளையாட்டு!

Leave a Comment
எனக்கு நான்கு வயது இருக்கும்போது நடந்த சம்பவம் இது.

விடுமுறை நாட்களில் எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான தோட்டத்திற்கு   சென்று விளையாடுவது சிறுவர்களாகிய  எங்களது வழக்கம்.

அவ்வாறே ஒரு விடுமுறை நாளின் காலைப் பொழுதில் தோட்டத்திற்குச்  சென்று விளையாடிக் கொண்டிருந்தோம். பல்வேறு விளையாட்டுகள் விளையாடி முடித்தவுடன் வேறு புதிதாக ஏதாவது விளையாடுவதென முடிவெடுத்து தோட்டத்துத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டிகளுக்கு எங்களில் யாரோ கன்றுக்குட்டிக்கு எண்ணை தேய்த்துவிடுகிறேன் என்று கூறிக்கொண்டு தொழுவத்தின் சுவர் மீதிருந்த ஒரு புட்டியில் இருந்த திரவத்தை எடுத்து கன்றுக்குட்டிகளுக்கு தேய்த்துவிட்டு பின்னர் தலைவாரி விளையாடினோம். சிறிது நேரம் சென்றபின் அந்த விளையாட்டும் சலித்துவிட அங்கிருந்து அகன்று வேறு விளையாட்டில் திளைத்திருந்தோம்.

வெளியில் சென்றிருந்த தோட்டக்காவலர் தொழுவத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் கண்ட காட்சியை கண்டு திடுக்கிட்டு உடனடியாக எங்களின் உணவகத்திற்கு விரைந்து சென்று தகவல் தர மேலும் சிலர் அங்கு வந்து குவிந்தனர்.

விபரம் அறிந்த எங்களின் பாட்டியும் அங்கு ஓடோடி வந்து எங்களைத் திட்டியவாறே தோட்டத்திலிருந்த கிணற்றடிக்கு எங்களை அழைத்துச் சென்று எங்களைக் கவனமாகச் சோதனையிட்டு குளிப்பாட்டினார்.

அன்று நடந்தது இதுதான். கன்றுக்குட்டிக்கு எண்ணை தேய்த்து விடுவதாக எண்ணி எங்களில் ஒருவர் எடுத்த அந்த திரவம் பயிர்களுக்கு தெளிக்க இருந்த பாலிடால் என்னும் கடும் நஞ்சாகும்;. அதை நாங்கள் கன்றுக்குட்டிகளுக்கு தடவப்போக அருகிலிருந்த அவற்றின் தாய்ப்பசுக்கள் வழக்கம்போல தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக கன்றுகளை நாவால் நக்கியுள்ளன.

இதன் விழைவால் அந்தக் கொடிய நஞ்சு அவற்றின் வயிற்றுக்குள் சென்று அவை உயிருக்குப் போராடத் துவங்கியிருக்க, இதை அறியாமல் நாங்கள் வெளியே வேறு விளையாட்டில் இருக்கும் வேலையில்தான் அங்கு வந்த காவலரின் கண்களில் எங்களின் செயல் புரிந்து துடிக்கும் பசுக்களைக் காக்க மற்றவர்கள் அங்கு விரைந்து வந்த நிகழ்வு.

எவ்வளவோ போராடி மாற்று மருந்து கொடுத்து பசுக்களை காக்க முயன்றும் அன்று சில உயிர்கள் எங்களின் விபரீத விளையாட்டில் பலியாகிவிட்டன. நல்லவேளையாக குழந்தைகளான எங்கள் யாருக்கும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பின்னர் எங்களை எங்களின் உணவக மேலாளர் ஒரு மிதிவண்டியில் உடம்பில் துணியேதுமற்ற நிலையில் அமரவைத்து அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வந்தது இன்றும் என்னால் மறக்க முடியாதுதான்.

அன்றும் அதற்குப் பின்னர் பல நாட்கள் வரையில் எங்கள் பாட்டி எங்களைப் பார்த்து அடப்பாவிகளா அநியாயமாக இவ்வாறு செய்து விட்டீர்களே பசுவைக் கொன்ற பாவம் உங்களைச் சும்மா விடாதே என எச்சரித்துக்கொண்டே இருப்பார்.

கன்றின் மீது தனது இரதத்தை அறியாமல் ஏற்றிக் கொன்ற தனது மகனை, வாய்மை தவறாது தேர்க்காலில் இடறச்செய்த மனுவாய்மைச் சோழனின் பரம்பரையில் வந்த எனக்கு எனது பாட்டியின் எச்சரிக்கைக்குரிய செய்தி, விபரம் அறிந்தவரை புரியவில்லைதான்.

திருமணமாகி எனக்கு ஒரு மகள் பிறந்தாள். பிறக்கும்போதே மருத்துவர்களால் கைவிடப்பட்ட அவள் இருபத்திரண்டு மாதங்கள் வரை எங்களுடன் வாழ்ந்து ஒரு பிப்ரவரி 28 ஆம் தேதியில் எங்கள் கண்ணெதிரிலேயே எங்களைத் தவிக்கவிட்டு மெல்ல மெல்லத் தனது மூச்சுத்துடிப்பினை நிறுத்தியபோது நாங்கள் அழுது புலம்பித் தவித்ததை இப்பொழுது எண்ணும்போது

பசுவைக் கொன்றதற்கான பாவத்திற்கான தண்டனையை என்னால் உணர முடிகிறது. அறியாத வயதில் செய்த தவறென்றாலும் பாவம் பாவம்தானே. இதைத்தான் ஐயன் வள்ளுவரும் ஆணித்தரமாக தம் குறளில் வலியுறுத்தினாரோ?

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்” என!

அறிந்தும் அறியாமலும் பிற உயிர்களுக்கு இன்னல் விளைவித்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டுமென்ற சித்தர்களின் வாக்கு அறியாமல் செய்த தவறுக்கும் சரியான தண்டனையை வழங்கியதுதான் எனக்கு எழுதப்பட்ட பிரபஞ்ச விதி!

Read More...

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 8. அன்புடைமை!

Leave a Comment
பிறர் மீது மிகுந்த அன்பு கொண்டவர் பிறருக்குத் துன்பம் நேரிடுவதை அறிந்து தம் விழிகளிலிருந்து பெருக்கும் கண்ணீரின் அளவினக் கண்டு,

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் என வள்ளுவம் வியக்கின்றது.

(வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும் ஒரு வள்ளுவச் சித்தர்தாமோ?)

எப்பொருளையும் தாமே அனுபவிக்கும் சுயநலத்துடன், அன்பில்லாத தன்மை கொண்டவரை

பாலைவனத்திடை தளிர்க்கும் உலர் மரமெனமெனவும்,

எலும்பில்லாத, வெயிலில் காயும் புழுவெனவும்,

எலும்பாலும் தோலாலும் போர்த்தப்பட்ட உயிரற்ற  உடல் தாங்கியவரெனவும்

இகழ் மகுடம் சூட்டுகிறது வள்ளுவம்.

முற்பிறவியில் தாம் காட்டிய அன்பினாலும் மிகச் சிறந்த ஒழுக்கத்தாலும்தாம் இப்பிறவியிலும் ஒருவர் மிகுந்த இன்பம் அனுபவிப்பார்.

இவர்கள்தாம் இனி வரும் பிறவிகளிலும் இன்பம் தொடரும் பலன் பெறுவர் என வள்ளுவம் உறுதிபட உரைக்கிறது.

உயிரும் உடலும் போல அன்போடு இயைந்து,

தம் உயிர் தாங்கிய உடலில் உள்ள எலும்புகளும் பிறருக்குரியதென வாழும் வாழ்க்கை முறையை உடையவர்கள்,

எப்பிறவியிலும் அன்புடையவராக ஒழுகி வாழ்ந்து ஒழுக்கத்தின் பயன் பெறுவர் என வள்ளுவம் புகழ் மகுடம் சூட்டி இவர்களை உயர்த்துகிறது.

Read More...

புதன், 30 ஜூலை, 2014

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 7. மக்கட் பேறு!

Leave a Comment
ஆண் பெண் இருவரும் இணைந்த வாழ்க்கையில் அவர்கள் பெற்றெடுக்கும் மக்கட்செல்வங்களால்; அடையும் இன்பங்களை வள்ளுவம்  வியப்புடன் எடுத்தியம்புகிறது.

குழந்தைகள் தம்மைத் தொடுவதால் அடையும் இன்பமும், 

சிறு குழந்தையாயின் குழலையும் யாழையும் விட மிக இனியதான அவர்தம் மழலை மொழியும், 

மழலையரின் சிறு கையால் அளையப்பட்டுப் பெறப்பட்ட உணவு அமிழ்தத்தை விட மிக இனிமையானதெனவும் வள்ளுவம் நயம்பட எடுத்தியம்புகிறது.

நல்ல பண்புகளை உடைய மக்கட்செல்வத்தைப் பெற்றவருக்கு அடுத்தடுத்துத் தொடரும் பிறவிகளிலும் துன்பமகுடம் சேராதென உறுதிபட உரைக்கும்   வள்ளுவம்,

சான்றோராக வாழ்ந்து மிகச்சிறந்த பண்புநலன்களைப் பெற்று ஈன்ற பொழுதினை விடப் பெரிதுவக்கும்படி தம் தாய்க்கும், 

இத்தகு மக்களைப் பெற இவர் தந்தை என்ன தவம் செய்தனனோ எனப் பிறர் வியக்கும்படித் தம் தந்தைக்கும்  பெருமை செய்வதே, 

பிள்ளைகள் தம் பெற்றோருக்குச் சூடி அழகு பார்க்கும் சிறந்த புகழ் மகுடங்களாம்.

அறிவிற் சிறந்தவராகத் தம் மக்கட்செல்வத்தை உடையவரே மிகச்சிறந்த பெற்றோராவர். 

இதைவிடச் சிறந்த வேறு எதையும் உலகத்தில் தம்மால் காண இயலவில்லை எனவும் வள்ளுவர் வெளிப்படையாக ஒப்புகிறார்.

அறிவொழுக்கங்களில் சிறந்தவர்களாக, கற்றவர் சபையில் முதன்மையுற்றவர்களாகத், தாம் பெறாத அறிவைத் தம் மக்கள் அடையுமாறு செய்வதே 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டும் அறிவு மகுடங்களாம்

Read More...

செவ்வாய், 29 ஜூலை, 2014

ரமலான் வாழ்த்துக்கள்!

Leave a Comment
இன்று இசுலாமியர்களுக்கான புனிதப் பண்டிகையான ரமலான் தினம்! உலகெங்கிலுமுள்ள இசுலாமியச் சகோதர சகோதரிகளுக்கு ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!

என்னுடைய இளம் வயதிலிருந்தே இசுலாத்துடனான எனது உறவு துவங்கிவிட்டதெனலாம்! எங்கள் உணவகத்தில் மிகச் சிறு வயதில் வேலைக்கு இணைந்து எங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்த திரு குலோப்ஜான் அவர்களுடன்தான் எனது இசுலாத் உறவு துவங்கியது!

எங்கள் குடும்பத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்குமே அவரை குலோப்ஜான் மாமா எனத்தான் அழைப்பதில் பெருவிருப்பம் கொள்வோம்! 

அவரது திருமணம்கூட எங்கள் தோட்டத்தில் எங்கள் செலவில்தான் நடந்தது அந்தத் திருமணத்தில் இளம் வயதில் கலந்து கொண்டது எனக்குள் இன்றும் பசுமை மாறாத நினைவுகள்தாம்!

நாமக்கல்லில் நான் புகுமுக வகுப்புப் படிக்கும்போது எனது வகுப்புத் தோழனாக அறிமுகம் ஆனவர் முகம்மது ஜி முஸ்தாக்! அவரது குடும்பத்தில் ஒருவனாக அங்கு படித்தவரை நான் திகழ்ந்தேன்! அவர்கள் வீட்டில் விருந்துண்டு கழித்த நாட்கள் பல!

இப்பொழுதும் ஈரோட்டில் எனது மகளின் பள்ளித் தலைமை ஆசிரியராக விளங்கிய தமிழாசிரியர் திரு கவுஸ் அவர்களுடனான எங்களின் குடும்ப உறவும், 

எனது உடன் பிறவாத தங்கையாக விளங்கும் திருமதி சபானாவின் குடும்ப உறவும் எங்களுடனான இசுலாத்தின் நட்புக்குச் சான்றாகத் திகழ்கிறது

பேருந்து மற்றும் இரயில் பயணங்களில்கூட முன்பின் அறிமுகமில்லாத இசுலாமியச் சகோதர சகோதரிகள் எங்களுடன் நட்பு பாராட்ட விரும்புவதை பல்வேறு தருணங்களில் எம்மால் உணர இயலுகிறது!

இது பிறவிகள்தோறும் தொடரும் மதங்கள் தாண்டிய உறவுகள்! என்றென்றும் மாறாத உன்னத உறவுகள்! இந்தப் புவி வாழ்வில் இன்றுவரை எங்கள் தொடர்பில் உள்ள இசுலாமியச் சகோதர சகோதரிகள் மட்டுமன்றி
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான இசுலாமியர்களுக்கும் ரமலான் திருநாளில் எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை மீண்டும் அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்!

உலகெங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்சப் பேராற்றலின் சக்தியால் இந்த உலகில் அன்பும், அகிம்சையும் சமாதானமும் என்றென்றும் நிறைந்திருக்க இந்த ரமலான் பெருநாளில் வாழ்த்துவோம்!

Read More...

மையல்! சமையல்!

Leave a Comment
சமையற்கலையில் இதிகாச காலம் தொட்டே ஆண்களும் சாதித்து வந்துள்ளதற்கு மகாபாரத நளனே ஒரு உதாரணம்! நளனின் சமையல் திறமையையை இன்றளவும் இந்த நாடு மறவாதிருக்கவே நளபாகம் என்ற சிறப்பான சொல் தமிழில் வழக்கிலுள்ளது!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப் பாடிய கவிஞரின் வாக்கினை அடையப் பெறும் ஒரு ஆணுக்கு கூடுதல் சிறப்பாக சமையலில் சிறந்த துணை அமைந்து விட்டால் அது இன்னொரு மகத்தான வரமாகவே அவருக்கு அமையும்!

இந்த அற்புதமான இரண்டு வரங்களையும் ஒருங்கே பெற்ற பாக்கியசாலி நானே! எனது மனைவியாரின் கரம் பிடித்த சில நாட்களிலேயே எங்கள் வீட்டின் சமையல் ராணிப் பொறுப்பினை அவரே எடுத்துக் கொண்டார்!

எனது மனைவியோ நகர்ப்புறத்திலிருந்து வந்தவர்! எனினும் கிராமப்புறங்களிலேயே பொதுவாக மறைந்து கொண்டிருக்கும் கிராமத்துச் சமையல் வகைகளை எங்களுக்கு அவர் அவ்வப்போது சமைத்துக் கொடுப்பார்!

அதுவரை நாங்கள் எனது தாயாரின் கிராமப்புறச் சமையல் வகைகளைச் சாப்பிட்டு வந்திருந்தோம்! எனவே எனது மனைவி விதவிதமாகச் சமைத்துத் தரும் கிராமப்புற உணவு வகைகள் எங்களுக்குப் புதியதாக இருநததால் அதன் சுவை எங்களுக்குப் புரிபடவில்லை!

எங்களுக்கு இந்த உணவு வகைகள் பிடிப்பதில்லை என என்னுடைய மனைவிக்கு இது ஒரு மனக்குறையாகப்பட வந்த புதிதில் என்னிடம் வருத்தப்படுவார்!

நானும் இவை எங்களுக்குப் புதிய அனுபவம்! நாளாக ஆகச் சரியாகிவிடும் எனச் சமாதானம் செய்வேன்!

எங்கள் குடும்பத்திற்கு எனது தாயார் வகையிலும், எனது மனைவி வகையிலும் ஏராளமான உறவினர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்!

வள்ளுவத்தின் வாக்கிற்கிணங்க வந்த விருந்தினர் சென்ற பின்னர் வரும் விருந்தினருக்காக எங்கள் மொத்த குடும்பமே எதிர்பார்த்து நிற்போம்!

எனது தந்தையாருடன் நாங்கள் வசித்தவரை இதே நிலைதான்! இதுவே எனது மனைவிக்குக் கொண்டாட்டமாகிப் போனது!

தான் சமைக்கும் விதவிதமான உணவு வகைகளை விருந்தினருக்குப் பரிமாறி மகிழ்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்!

விருந்தினர் முன்கூட்டியே வருவதாக அறிவித்திருந்தால் அப்பொழுதிருந்தே என் மனைவியிடம் ஒருவித பரபரப்பு ஏற்படத் துவங்கிவிடும்!

வரும் விருந்தினருக்கு என்ன வகையான உணவு பிடிக்கும், தான் என்னவிதமான விருந்தினை அவர்களுக்கு தயாரிக்கலாம் என உடனடியாகப் பட்டியல் இடத் துவங்கிவிடுவார்!

வுந்த விருந்தினர் திருப்தியாக உண்ணும் வரை சளைக்காமல் அன்புடன் விருந்தளித்து உபசரிப்பதில் எனது மனைவிக்கு நிகர் அவரேதாம்!

வந்த விருந்தினரும் எனது மனைவியின் சுவையான விருந்தினை விருந்து முடிந்தவுடன் தவறாமல் பாராட்டுவர்! இது தவறாது எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள்!

போதாத குறைக்கு வரும் விருந்தினர் தனது துணைவியையோ அல்லது அவர்கள் குடும்ப உருப்பினர்களையோ நோக்கி நீங்கள் இவ்வாறு சமைப்பதில்லையே என்று வேறு பேச முற்பட அவர்களிடமும் எனது மனைவியிடமும் ஒரு தர்ம சங்கட நிலை ஏற்படுவதுண்டு!

இதன் காரணமாக எங்கள் வீட்டு உறவுப் பெண்களிடம் எனது மனைவி பற்றி ஒரு போலியான கோபமும் இன்றவரை ஏற்படுவதுண்டு!

எல்லோரும் சமைப்பது போன்றுதான் எனது மனைவியும் சமைக்கிறார்! எனினும் மற்றவர்களிடமிருந்து இவரது சுவை மட்டுமே தனித்து நிற்பதேன்?

இந்த கேள்விக்கான எளிமையான விடை மேலே உள்ள தலைப்பிலேயே விளங்கிவிடும்! ஆம்! மற்றவர்கள் உணவினைத் தயாரிக்கிறார்கள்! எனது மனைவியோ உணவைச் சமைக்கிறார்!

உணவு தயாரிக்கும் ஒருவர் அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரது மன நிலை அந்த உணவுடன் ஒன்றித் தயாரிக்கும்போது உண்மையிலேயே அந்த உணவு கூடுதல் கவனம் பெற்றுத் தயாரிக்கப்படுகிறது!

இதைத்தான் நம் அழகுத்தமிழ் சமையல் என அழைக்கிறது! உணவை மையலுடன் சமைத்தலே சமையல் எனப் பொருள்படுகிறது!

என் மனைவி உண்மையிலேயே இந்த மையலுடனும் அதைவிடக் கூடுதலாக, தான் சமைக்கும் உணவை வரும் விருந்தினர் சுவைபட உண்ண வேண்டும் என்ற மனம் நிறைந்த உண்மையான அன்புடனும் சமைப்பதால்தான் அவரது சமையல் மட்டும் மற்றவர்களிடமிருந்து தனித்துவமான சுவையைப் பெறுகிறது என்பதுதாம் கண்கூடான உண்மை!

முன்கூட்டியே எவ்வித அறிவிப்புமின்றித் திடீரென வரும் விருந்தினருக்கென குறைந்த அவகாசத்தில் அவசரமாக என் மனைவி சமைக்கும் உணவிலும்கூட என்றும் குறையாத சுவை இருப்பதற்கான காரணமும் அவர் தன் தயாரிப்பினை மையலுடனும், விருந்தினர் மேல் கொண்ட அன்புடனும் சமைப்பதால்தான்!

எனது மனைவியின் இந்த உணவுப் பக்குவத்தைப் பயன்படுத்தி ஒரு உணவகமாகத் துவங்கித் தொழில் நடத்தியிருந்தால் ஒருவேளை எனக்குத் தெரிந்த தொழிலில் நான் இருபத்தைந்தாண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டு பெருத்த நட்டத்தைச் சந்தித்திருக்க மாட்டேன் என்பது காலம் கடந்து எனக்குள் உண்டான புதிய ஞானம்!

எனது உண்மையான அனுபவத்தை நம் தமிழகச் சகோதரிகளிடம் பகிர்ந்து விட்டேன்!

இனி உங்கள் உணவுகளை மையலுடனும், மிகுந்த அன்புடனும் சமைத்து உங்கள் குடும்பத்தை மட்டுமல்ல தமிழருக்கே உரித்தான உயரிய பண்பான விருந்தோம்பல் என்றென்னும் நம் தாய்த்தமிழகத்தில் தழைத்து நின்று உறவு சிறக்க  வாழ்த்துகிறேன்!

Read More...

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்!

Leave a Comment
ஒருவரின் வாழ்க்கையில் இணையும் துணைவிக்கு அமைய வேண்டிய குணங்களை வாழ்க்கைத் துணைநலம் என்ற பொருளில் வள்ளுவம் குறிப்பிடுவதிலேயே அவரின் குடும்ப நலமும் நாட்டு நலமும் அடங்கிவிடுகிறது.

அத்தோடு மிகச்சிறந்த மக்கட் செல்வத்தை அளவோடு பெற்றுவிட்டால் அவரைவிடப் பேறு பெற்றவர்கள் எவருமிலர்.

சிறந்த வாழ்க்கைத் துணைநலமென வள்ளுவம் வகுக்கும் மகளிரின் மகுடத் தகுதிகள் இதோ.

குடும்பத்தின் வரவிற்கு ஏற்பச் செலவு செய்யும் பாங்கு, 

தெய்வத்தைவிடத் தன் கணவனே சிறந்தவனெனத் தினந்தோறும்  காலையில் அவனைத் தொழுதெழுதல். 

இல்லறத்திற்குரிய நல்ல குணங்கள் நிறைந்திருந்தல், 

மன உறுதியுடனான கற்புடன் வாழ்தல், 

கடமை தவறாது வழி நடந்து தம் குடும்பத்தின் புகழ் நீங்காமல் வாழுதல்.

எனும் ஏராளமான குண மகுடங்களைச் சுமந்த மனைவியை அடைந்தவன் 

தம்மை இகழும் பகைவர் முன்பும் ஏறுபோலப் பீடு நடை போடுகின்ற புகழினை அடைவான் என வள்ளுவர் வாழ்த்துகின்றார்.

இத்தகு சிறப்பியல்புகளை மகுடங்களாகச் சூடிய ஒரு குணவதி 

மழைவளம் வேண்டிப் பெய்யென ஆணையிட்டால்,

இயற்கையும் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு அடிபணியும் என உறுதிபட உரைக்கிறது வள்ளுவம்.

Read More...

திங்கள், 28 ஜூலை, 2014

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 5. இல்வாழ்க்கை!

Leave a Comment

இல்லறம் துறவறம் மற்றும் பொதுநலம் ஆகிய மூன்று துறைகள் சார்ந்தவர்க்கு இல்லறத்தில் இருப்பவர்கள் துணையாக விளங்க வேண்டுமென வள்ளுவம் அறிவுறுத்துகிறது.

இல்வாழ்க்கையில் ஈடுபடும் தம்பதியருக்கு உரிய மகுடங்களாக வள்ளுவம் அன்பையும் அறத்தையும் பரிந்துரைக்கிறது.

பழிக்கு அஞ்சுதல், அறவழியில் ஈட்டிய பொருளை விருந்தினர், துறவியர் மற்றும் சுற்றத்தாருடன் பகுத்துண்டு, பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி வாழ்தல் ஆகிய குணங்களோடு வாழ்பவர்கள் தெய்வத்திற்குச் சமமானவர்கள் எனப் புகழ் மகுடம் சூட்டுகிறார் வள்ளுவர்.

இத்தகு மேன்மையான வாழ்க்கை முறையை இல்லறத்திலிருந்து கொண்டே வாழ்பவர்கள் தவம் செய்பவர்களை விட வலிமையானவர்கள் எனவும் மேம்படுத்துகிறது வள்ளுவம். 

வள்ளுவர் உலகளாவிய அளவிற்கு உயர்ந்து சிறப்படையப் பின்புலமாகத் திகழ்ந்தவர் அவரது துணைவியாகிய  வாசுகி அம்மையார் அவர்கள்தாம் எனலாம்.

தாம் வகுத்த குறள் நெறிகளுக்கேற்ற துணைவியாக அவரை அடைந்ததால்தாம் வள்ளுவப் பெருந்தகை அனுபவித்து அனுபவித்து குறள் நெறி முழுக்க இல்லறத்திலுள்ள நல்லறங்களைப் போதித்துள்ளார். 

இன்றுள்ள தலைமுறைத் தமிழ்ப் பெண்களை வாசுகி போல வாழுங்கள் என்றால் அவர்கள் திரும்ப நீங்கள் வள்ளுவர் போல முதலில் வாழ முயலுங்கள் எனப் பதிலுரைக்கின்றனர். 

வள்ளுவம் வலியுறுத்தும் தேவைப்படும் மகுடங்களைத் தேர்ந்தும் மற்றும் தேவையற்ற மகுடங்களைத்  தவிர்த்தும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை தம்பதியரின் மனச்சாட்சிக்கே விட்டுவிட்டு, 

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் பண்பும் பயனும் பெற்றுத் திகழ வேண்டுமென்பதே வள்ளுவத் தந்தையும் வாசுகித் தாயாரும் தமிழ் மக்களுக்குச் சூட்டிய இல்வாழ்வின் இலக்கண மகுடமாகும்.

Read More...

திங்கள், 14 ஜூலை, 2014

வள்ளுவ மகுடம் அதிகாரம் 4. அறன் வலியுறுத்தல்!

Leave a Comment
அறம் தவறாத வாழ்க்தைதாம் ஒருவருக்குச் செல்வமும் சிறப்பும் சேர்க்குமென்கிறார் வள்ளுவர். 

அறம் செயும் மகுடம் அணிவதே மேலானதெனினும் அதே சமயம் அறம் தவறுதல் கேடானதென்றும் வள்ளுவம் எச்சரிக்கிறார்.

அறத்துடன் கூடிய வாழ்க்கை முறையினை இடைவிடாது தொடர்ந்து வாழ்ந்து வருதல் அவசியம் என்கிறார். 

மனத்தாலும் குற்றமற்றவாகி ஆரவாரத்தன்மையற்று அறமுடன் வாழ வலியுறுத்துகிறார். எனவே ஒருவர் மனதாலும் அறம் தவறி வாழக்கூடாது.

அறத்தோடு வாழத் தவிர்க்க வேண்டிய மகுடங்களாக, பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு விரும்பத்தகாத குணங்களை ஒழித்தல்தான் சிறந்ததென வலியுறுத்துகிறார்.

அறத்துடன் கூடிய வாழ்க்கையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுவதைத் தவிர்ப்பவருக்கே இறப்பிலும் அழியாத துணையாக அறம் விளங்கும். 

பல்லக்கில் ஏறுபவராக, அல்லது அதைச் சுமப்பவராக வாழும் தகுதிக்கு அறமே காரணம் என்கிறார் வள்ளுவர்.

தினமும் அறத்துடன் வாழ்தலே பாதையைத் தடுக்கும் பாறாங்கல் போல வாழ்நாள் தொடரத் தடுக்கும் தடைகளை அகற்றும் நன் முயற்சியாம்.

அறம் சார்ந்த வாழ்க்கை முறையைச் சிறப்பாக வாழ்ந்த ஒரே இனம் தமிழினம் மட்டுமே. இல்லறம், துறவறம் அரசியல் என வாழ்வியலை அறம் சார்ந்ததாக முற்றிலும் வாழ்ந்து வந்த நாம் இன்று அறம் தவறிய வாழ்க்கை முறைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் என்பதுதாம் உண்மை. 
அறமற்ற வாழ்க்கை முறையில் கிடைத்த புகழ் மகுடம்கூடத் துன்பமே தருமென்பதை இல்லறம், துறவறம், மற்றும் அரசியலில் அறம் தவறித் துன்பம் அனுபவிக்கும் நபர்கள் இனியாவது உணர்ந்து அறத்துடன் வாழ முற்படவேண்டும்.

Read More...

சனி, 12 ஜூலை, 2014

அரைக்காசு சம்பளமானாலும் அரசாங்க வேலை!

Leave a Comment
இது பழமொழியாகத் தோன்றினாலும் இன்றுவரை அரசு வேலைக்காகத் தவமிருப்பவர்களைத்தான் நாடு கண்டு வந்துள்ளது!

எத்தனையோ வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் கொட்டிக் கிடந்தாலும் இன்றைய இளைஞர்கள் தனியார் துறையில் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்குத்தான் முழு வீச்சில் கவனத்தைச் செழுத்துகின்றனர்.

வகுப்பு அடிப்படையிலாவது அல்லது பெரும் தொகை இலஞ்சமாகக் கொடுத்தாவது எப்படியாவது அரசு வேலையைப் பெற்றுவிட வேண்டும் எனத் துடிப்பவர்கள்தாம் இன்று ஏராளம்!

தாங்கள் பணி செய்யும் தனியார் நிறுவன வேலைகளில் துடிப்புடனும், ஆர்வத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் தற்போதய பணியிலிருந்து மேற் பதவிகளை அடைய வேண்டிய உழைப்பு மனப்பான்மையும் அற்றவர்களாகத்தான் பெரும்பாலான இளைய சமுதாயத்தினரின் மன நிலை உள்ளது!

இத்தகு மனப்பான்மை ஏற்படுத்தும் விளைவுகளினால் இருக்கின்ற வேலையில் ஏனோதானோவெனச் செயல்படுவதால் தனியார் நிர்வாகங்களும் வந்தவரை இவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம் என்ற மனப்பான்மையுடன்தான் செயல்பட வேண்டியதாயுள்ளது!

காலியாகும் வேலை வாய்ப்பிடங்களை நிரப்புவதற்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதில் படிப்பிற்கும் திறமைக்கும் தகுந்தவர்களை நிரப்புவதிலும் கவனம் செழுத்த வேண்டிய அரசு நிர்வாகமோ இந்த வேலைக்கு இவ்வளவு என ஒரு கணிசமான இலஞ்சத் தொகையை நிர்ணயிப்பதால் அதனைக் கடன் பட்டாவது கொடுத்து வேலை வாங்கும் இளைய சமுதாயம் 

போட்ட முதலை வட்டியுடன் எடுக்கும் வேகத்துடன் செயல்படுவதால்தான் இன்று இந்த நாட்டில் இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாகப் பரவி விட்டன!

தனியார் நிறுவனத்தில் பத்தாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த ஒரு இளைஞர் இருந்த வேலையையும் தொலைத்துவிட்டு இலட்ச ரூபாய் இலஞ்சம் கொடுத்து மாதம் நான்காயிரம் சம்பளம் கிடைக்கும் ரேசன் கடை வேலைக்கு அலைவதையும் கண்கூடாகக் கண்டு அதிர்ச்சியுற்றோம்!

அரசு வேலை இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு பெண் தருவதையும் தனியார் துறை என்றால் முகம் சுழிக்கும் பல பெற்றோர்களையும் இன்றும் இந்த நாட்டில் ஏராளம் காண முடிகிறது!

தனியார் துறை தனக்குக் கிடைக்கின்ற வேலை வாய்ப்பினை இது போன்று அரசு வேலைக்குச் செல்வோர்களைத் தடுத்து நிறுத்தித் தக்க வைத்துக் கொள்வதில் ஏராளமான தவறுகளைச் செய்கின்றன!

குறிப்பாகச் சிறிய நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்குச் சம்பள விகிதத்தை மற்றவர்களைப் பார்த்து நிர்ணயிப்பதும், வருடாந்திர இலாபத்தைத் தாங்களே முழுமையாக அனுபவித்து தம்மை வளர்க்கும் தொழிலாளர்களுக்குத் தங்கள் இலாபம் என்னவென்பது கண்கூடாகத் தெரியுமென்பதை அறிந்தும்

அவர்களுக்குத் தங்களின் இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கத் தவறுவதால் பெரும்பாலான பணியாளர்கள் இருக்கின்ற இடத்தை விட அதிகச் சம்பளம் தரும் வேற்றிடத்தை நாடிப் போகும் இயல்பான நிலையினை இவர்களாகவே உருவாக்கி விடுகின்றனர்!

இலட்ச ரூபாய் முதல் போட்டு ஒரு தொழில் தொடங்கும் மளிகைக் கடைக்காரராக இருந்தாலும் அவரிடம் வேலை செய்யும் இரண்டு பணியாளர்களின் உழைப்பால்தான் அந்த நிறுவனம் இலாபம் பெறத் துவங்குகிறது! 

இருக்கின்ற பணியாளர்களின் உழைப்புத் திறனைத் தூண்டிப் பயன் பெற்று அவர்களுக்கும் தங்கள் இலாபத்தில் ஒரு பங்கினை ஒதுக்கித்தந்து இன்றைய வாழக்கைச் சூழலுக்கேற்ற வருமானத்துடன் வாழும் வகை செய்து தக்க வைத்துக் கொண்டால் நிச்சயம் உண்மையான உழைப்புடன் கூடிய விசுவாசத்தை அவர்களிடம் அவர் பெற முடியும்!

இது மளிகைக் கடைக்கு மட்டுமான உதாரணமல்ல! இரண்டுக்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட கணக்குத் தணிக்கையாளர்கள், வணிக நிறுவனங்கள், மொத்த வர்த்தக நிறுவனங்கள், பணிமனைகள் எனப் பல்வேறு தரப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்! 

அரசு வேலை கிடைத்தால் கிடைக்கட்டும், அதை விடச் சிறப்பானதாக தனியார் வேலையில் கிடைக்கும் வருமானம் நிம்மதியாக இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு உதவும் என்ற மன நிலையினை இளைய சமுதாயம் பெற்று தனியார் வேலையிலேயே மன நிறைவுடன் தொடர 

வருடாந்திர இலாபப் பங்குடன் கூடிய சம்பள வேலை எனத் தனியார் நிறுவனங்கள் செயல்படத் துவங்கி தொழிலாளியும் இலாபத்தில் ஒரு கூட்டாளி எனும் நிலையை உருவாக்கிவிட்டால் 

மேற்கண்ட பழமொழி தமிழின் அகராதியிலிருந்தே மறைந்து விடும் நிலை இந்த நாட்டில் உருவாகும்!

Read More...

வள்ளுவ மகுடம் அதிகாரம் 3. நீத்தார் பெருமை!

Leave a Comment
நீத்தார் என வள்ளுவம் குறிப்பது நாளிதழ்களில் நீத்தார் இறுதிச்சடங்கு என அறிவிப்புகளில் இடம் பெறும் இறந்தோர் எனப் பொருள்படும் நீத்தார் அல்லர்.

உலகப் பற்றுகளை மனதினின்று ஒழித்துக்கட்டி, அறிவு எனும் அங்குசத்தால், ஐம்புலன்கள் எனும் மதயானைகளை அடக்கி ஆளும் தகுதி படைத்தவர்களே, துறவு எனும் இலக்கணத்திற்குத் தகுதியானவர்கள் என வள்ளுவர் இலக்கணம் வகுக்கிறார்.

செயற்கரிய செய்யும் ஆற்றல் படைத்த, நற்குணம் நிரம்பிய, அனைத்து உயிர்களின் மீதும் அருளுடைய, ஒழுக்கத்தில் சிறந்த மகுடம் சூடிய பெரியோரின் சினம், சிறியதாக இருந்தாலும் அதன் விளைவை எவராலும் தாங்க இயலாது என வள்ளுவர் எச்சரித்துமுள்ளார்.

இத்தகைய துறவிகளை இன்றைய உலகில் காண்பதென்பது அறிதான செயல்தாம்.

நீத்தார் என்ற போர்வையில் மதவேடமிட்ட போலிகளும், மக்களுக்காகத் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இழந்ததாக நடித்துக்கொண்டே மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிடும் அரசியல்வாதிகளும் அடியாட்கள் துணையுடனும் பணபலத்துடன் உலவும் கலிகாலமிது.

மக்கள்தாம் இனிப் போலிகளின் மகுடங்கள் சாய்த்து,

உலகப் பற்றுகளை உண்மையாக நீத்தவர்களை அடையாளம் கண்டறிந்து,

இவர்கள்தாம் வள்ளுவம் காட்டிய உண்மையான துறவிகள், மற்றும் பொது நலப் பண்பாளர்கள்  எனத் தெளிந்து,

தக்கோர்க்குப் புகழ் மகுடங்கள் சூட்டும் நன்னாள்தாம் தமிழினம் நீத்தார் பெருமையைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பொற்காலத் திருநாளாம்!

Read More...

வெள்ளி, 11 ஜூலை, 2014

வள்ளுவ மகுடம் அதிகாரம் 2. வான் சிறப்பு!

Leave a Comment
வள்ளுவம் வான் சிறப்பின் பெருமைகளை இயம்பிய குறள் நெறிகள் இதோ.

அமிழ்தெனப்படும் மழை வளம் தொடர வழி காணல்,

உண்பதற்கு உணவுண்டாக மழையாகிப் பின் உணவாவதும் மழையென உணர்தல்,

மழையின்றிப் போனால் பரந்த இவ்வுலகம் வறுமையுற்றுப் பசியுடன் வாழ நேருமென அறிதல்,

மழையின்றிப் போனால் உழவுத்தொழில் அழிவுற்று நாட்டின் உணவு வளம் குன்றுமெனத் தெளிதல்,

தனது அருமையை உணர்ந்து தம் பயனைத் தக்க வைத்துக்கொள்பவர்க்கு நட்பாகவும், அறியாதவரைக் கெடுப்பதாகவும் தன்மையுடையது மழையெனப் புரிதல்,

மழையின்றிப் போனால் பசுமையற்றுப் போகும், எனவே பசுமை உள்ளவரையே மழையும் தொடரும் என நினைதல்,

கடலிடத்துச் செல்வம் குறைந்தால் மழைவளம் குறையுமென உணர்தல்,

மழைவளம் பெருகும் வழிகளை அடைத்துவிட்டுப் பூசை பரிகாரம் எனச் செலவிடும் அத்துணை முயற்சிகளும் பயனற்றதெனப் பகுத்தறிதல்,

தவ வலிமையுடன் தானம் செய்து வாழாத உலகில் வான் மழை அரிதாகும் எனப் புரிதல்,

நீரின்றி உலகமையாது என உணர்ந்து அந்நீரின் இடையறாத ஓட்டத்தைத் தடுத்திடாமல் இயற்கையோடு இயைந்து வாழ முற்படாவிடில்  மழைவளம் அறிதாகி விடக்கூடும்.

எனவே வள்ளுவச் சித்தரின் கருத்திற்கேற்ப

ஆறுகள் உயிர்மகுடம் சூடிக் கொண்டால்தான் கெட்டவர்களுக்கு வாழ்வளிக்கும் வான் மழை

வான் சிறப்பைப் பாடிய வள்ளுவர் மழை இல்லையேல் உலக இயக்கமே நின்றுவிடும் என எச்சரித்துள்ளார். மேகமானது கடல் நீரை முகந்துகொண்டு மீண்டும் அந்த நீரையே மழையாகப் பெய்து தருகின்றது என்ற அறிவியல் உண்மையை உரைத்த உலகின் மிக மூத்த இயற்கை விஞ்ஞானி எனும் தகுதிக்குரிய ஒரே ஞானி வள்ளுவர்தாம்.

இந்த இயற்கைத் தத்துவத்தை இன்றுள்ள அரசியல் தலைவர்கள் சற்றும் புரிந்து கொள்ளத் தவறியதன் விழைவுதாம், இன்று முறை தவறிப் பெய்யும் மழைவளம்.

அரசியல்வாதிகளால் வளைக்கப்பட்டுத் தனது வன வளத்தை இழந்து தவிக்கும் மலைத்தொடர்கள். அடர் மரங்களே மழைவளம் பெருக்கும் முக்கி;ய காரணி என்பதைப் புறக்கணித்து, அவற்றைக் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றியதன் விளைவே இன்று மழையின்றிப் போனதற்கு முழு முதற் காரணமாகும்.

இரண்டாவது காரணம் இயற்கையை நம்பாத ஆங்கிலேயர்கள் காட்டிய தவறான வழியில் அரசியல்வாதிகளால் கட்டப்பட்ட அணைகள். இந்த மகத்தான தவறால் ஆறுகள் அணைக்கட்டு என்ற தேவையற்ற மகுடம் சுமந்து உடலற்ற தலையாகக் காட்;சியளிக்கின்றன. ஆறுகள் என்பது ஒரு உடலில் அமைந்துள்ள நரம்புகள் போன்றது. அதில் பாயும் இரத்தம் போன்றதுதான் மழைவளம். இந்த நரம்புகளின் விரிவாக்கமே அந்தக்கால மன்னர்கள் உருவாக்கிய கால்வாய்களும், வாய்க்கால்களும்.

ஆறுகள் உயிரோட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தால்தான் காற்று மண்டலத்தில் வெப்பச்சலனமேற்பட்டு இடைவிடாத மழை வளம் பெருகும் என்ற அறிவியல் தத்துவத்தை அறிந்தவன் தமிழன் ஒருவனே. இந்தத் தத்துவத்திற்கு எதிராக ஆறுகளின் தலைப்பகுதியில் அணைகள் கட்டப்பட்டதால் வெப்பச்சலனம் தடைபட்டு ஆறுகள் இன்று உயிரற்று இறந்துபோன உடலுடன் காட்சியளிக்கின்றன.

போதாக்குறைக்கு பல்லவர்களும் சேரர்களும் சோழர்களும் பாண்டியர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய கிளை நரம்புகளாகிய கால்வாய்களும், குளங்களும், ஏரிகளும், இன்றைய அரசியல்வாதிகளின் பேராசையால் வீடுகளாகிப் புயல் மழைக்காலங்களில் வெள்ளத்தினில் அகப்பட்டு மூழ்கி நிவாரணக் கூக்குரலிடும் மக்கள் வாழிடங்களாக மாறித் தவிக்கின்றன.. இந்த நி;லை இனியேனும் தொலைய வேண்டும்.

Read More...

வியாழன், 10 ஜூலை, 2014

தொலைந்து போன இலட்சியங்கள்!

Leave a Comment
பொதுவாக ஒரு பள்ளிக் குழந்தையை நாம் சந்திக்கும்போது அவரிடம்

நீ என்ன படிக்கப் போகிறாய்? எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்?

என்பதுதாம் நம் கேள்விகளாக இருக்கும்!

அவரவர் தத்தம் எதிர்காலப் படிப்பைச் சொல்வதுடன் தாம் படித்துவிட்டு அந்தத் துறை சார்ந்த பணியைச் செய்யும்போது

ஏழைகளின் நலனுக்காகப் பாடுபடுவேன்!

நாட்டு முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவேன்!

என்பன போன்ற பல்வேறு இலட்சியங்களை கண்கள் ஒளிர ஒரு கனவாகச் சொல்வார்கள்!

பொய்யாகச் சொல்லப்படுவதில்லை இந்தப் பிஞ்சு மனதின் கனவுகள் என்பதும்

இந்த வார்த்தைகள் அவர்தம் ஆழ் மனதின் வெளிப்பாடு என்பதையும் நாம் நன்கறிவோம்!

இது போன்ற கேள்விகள் காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருவதும்

காலம் காலமாக மேற்கண்ட பதில்கள் கிடைத்து வருவதும் கண்கூடான உண்மையாகும்!

இத்தகையோர்தான் படித்து முடித்த பின்னர் தற்பொழுது மருத்துவம், விஞ்ஞானம், அரசியல், காவல், அரசுத்துறை

எனப் பல்வேறு பணிகளில் வலம் வருகின்றனர்!

இவர்களில் தத்தம் இளம் வயது இலட்சியத்தைக் கட்டிக் காத்து

ஏழைகளுக்குச் சேவை செய்பவர்கள்,

நாட்டு நலனுக்காகப் பாடுபடுபவர்கள்

எத்தனை சதவீதம் பேர் எனக் கணக்கிட்டால்

நமக்கு மிஞ்சுவது ஏமாற்றம்தான்!

மருத்துவம் படித்து கிராமப்புறங்களில் பணிபுரிய விருப்பம் கெரிவிப்பவர்களையும்,

அரசியலுக்கு வந்து இலஞ்சம் வாங்காது மக்களுக்காக உழைப்பவர்களையும்,

அரசுப் பணி செய்து அந்த வருமானத்தில் தம் குடும்பத்தை வழி நடத்திக் கொண்டு

மக்களுக்குச் சேவை செய்பவர்களையும்

இன்றைய தினத்தில் நாம் காண்பது அரிதிலும் அரிது!

எங்கே தொலைந்தது இவர்களது இளம் வயது இலட்சியம்?

மனசாட்சி உள்ளவர்கள் சற்றுப் பின்னோக்கித் தம் இளம் வயது இலட்சியத்தையும்

தாம் இளம் வயதில் கொண்டிடுந்த கனவையும் அசை போட்டு,

தொலைத்த விட்ட தம் இலட்சியத்தைக் கண்டெடுத்து அதன்படி இனிமேலாவது வாழ முற்பட்டால்

இந்த நாட்டில் மீண்டும் வாய்மை தழைக்க வழி பிறக்கும் என நம்புவோம்!

Read More...

புதன், 9 ஜூலை, 2014

முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் அரசியல் வியாதிகள்!

Leave a Comment
அரசு செய்வோர் செய்யும் ஊழலுக்குத் தேனெடுத்துக் கப்பம் கட்டவே ஊழல் செய்து புறங்கை நக்கும் 

எடுபிடி அரசு அலுவலர்களின் அலட்சியம் காரணமாகவே கட்டிட விபத்துகள் நேரிட்டு உயிர் பலிகள் நேர்ந்ததென்பது உலகறிந்த உண்மை!

விபத்து நடந்த பின்னர் நட்ட ஈடு கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களைச் சரிக்கட்ட ஆள்பவர்கள் நினைப்பதும்,

ஏதோ தாங்கள்தாம் உத்தமர்கள் என்பது போல முன்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இதே அலட்சிய அரசு அலுவலர்களிடம் 

இலஞ்சம் பெற்று ஆட்சி சுகம் அனுபவித்த எதிர்க்கட்சியினர் இந்த விபத்திற்கு வாய்மை கேட்டுப் 

பேரணி நடத்திப் போக்குவரத்தை முடக்கி மக்களை இன்னலுக்கு ஆளாக்குவதையும் 

அறிவு சார்நத தமிழ் மக்கள் சற்று உற்று நோக்கினால் இவர்கள் முழுப்  பூசணிக்காயைச் 

சோற்றில் மறைக்கும் அரசியல் எத்தர்கள் என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகும்!

எக்காலத்துக்கும் பொருந்தும் 

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? என்ற இதே திராவிட இயக்கத்தவரின் பசப்புப் 

பாடல் வரிகள்தாம் ஏனோ மனதில் வந்து தொலைகிறது!

Read More...

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து!

Leave a Comment
கடவுள் எனப்படும் இறைவன் கற்பிக்கப்படுவதற்கு முற்பட்ட ஆதி இனமாகிய தமிழனின் எழுத்துக்களே உலகிற்கு முற்பட்டது!

அத்தகு எழுத்துக்களைக் கொண்டு ஏராளமான நூல்களைப் படைத்த அறிஞர்களின் திருவடிகளைத் தொழுதல்,

அறிஞர்களின் மாண்புமிகு அடிகளைப் பின்பற்றி நடந்து நிலமுள்ளவரை நீடு வாழ்தல்,

தம்மை நாடி வருவோருக்கு விருப்பு வெறுப்பற்று அறிவு புகட்டித் துன்பமில்லா நிலை பெறல்,

இறைவனென மக்களால் ஏற்கப்படும் தகுதியுள்ள தலைமையால் இருவினைகளாகிய நல்வினையும் தீவினையும் சேராது நீங்குதல்,

ஐம்புலன்களையும் ஒழித்த நல்லோர்களின் தலைமையில் நீண்ட நாட்கள் வாழ முற்படுதல்,

தமக்கு ஒப்புமையற்ற அறிஞர்களின் வழி நடப்பவர்களைத் தவிர மற்றவர்களின் மனக்கவலையை நீக்குதல் அரிதென உணர்தல்,

அறவழி நடக்கும் அறிஞர்களின் வழி நடப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பிறவிப்பெருங்கடலை நீந்துதல் அரிதெனத் தெளிதல்,

எண் குணமுடைய அறிஞர்களை வணங்காதவர்களின் பிறவி பயனற்றதென உணருதல்,

வள்ளுவம் வகுத்த இத்தகு நல்லோர்களையும் அறிஞர்களையும் பெறாதவர்களே பிறவியெனும் பெருங்கடலில் நெடிது நீந்துகின்ற ஆற்றலற்றவராவர்.

வாழ்வாங்கு வாழ அறிஞர்கள், நல்லோர்கள், மற்றும் மக்கள் அணிய வேண்டிய இறைவனுக்கு நிகரான கல்வி மகுடங்கள் இவையென்பது வள்ளுவரின் பரிந்துரையாகும்.

Read More...

வெள்ளி, 4 ஜூலை, 2014

வீரத்துறவி! விவேகானந்தச் சித்தர்!

Leave a Comment

ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த பாரத மண்ணில் பல்வேறு இடங்களில் சித்தர்கள் பிறந்து வாழ்ந்து தம் அடையாளத்தைப் பதிவு செய்து மறைந்து வாழ்கின்றனர்!

சென்ற நூற்றாண்டில் அவ்வாறு பிறந்த சித்தர்களில் தனித்துவமானவர் நரேன் என இளமையில் அழைக்கப்பட்டுப் பின்னர் தம்முடைய சுயம் அறிந்த குறுகிய காலத்தில்

பாரத மக்களிடம் தம்மை ஒரு சித்தராகப் பிரகடனப்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர்!

ஒரு மதம் சார்ந்து வாழ்ந்து மறைந்தாலும் சித்தர்களுக்கே உரிய பழைமையைச் சாடுதல் மூடத்தனமான பழக்க வழக்கங்கள்

மண் மூடிப் போகச் செய்வதில் தம் பங்கிற்கு அரிய தொண்டாற்றியவர் விவேகானந்தர்!

பாரத இளைஞர்களை வீரமுள்ளவர்களாக, விவேகமுள்ளவர்களாக, பகுத்தறிவுமிக்கவர்களாக மாற்றம் செய்வித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் விவேகானந்தர்!

பகுத்தறிவு சார்ந்த அவரது வீர உரைகள் இன்றுவரை இளைய சமுதாயத்தை விவேகானந்தர் வசம் ஈர்க்கவல்லது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துகள் கிடையாதெனலாம்!

தமிழக மண்தாம் நரேந்திரரை அமெரிக்க மண்ணிற்குத் தம் உழைப்பில் உருவான செல்வத்தில் அனுப்பி வைத்து அவரது புகழ் பெற்ற

சிகாகோ நகரச் சொற்பொழிவின் வாயிலாக விவேகானந்தராக உலகப் புகழ் பெற வைத்தது என்பதில் தமிழராகப் பிறந்த அனைவரும் பெருமிதப்படவேண்டும்!

கன்னியாகுமரியில் பொங்கும் அலையோசைச்கிடையே தவம் செய்த அந்த வீரத்துறவியின் மௌனத் தவம்தாம் இன்றுவரை

தமிழினத்தை அமைதி வழியில் நடத்தி வருகின்றது என்பதைச் சித்தர்கள் பற்றி அறிந்த எவரும் மறுக்க இயலாது!

விவேகானந்தர் சாடிய மதவாதமும், சாதியவாதமும், மூடத்தனப் பழக்க வழக்கங்களும்,

பொய்யான இழிவு நிறைந்த இதிகாச நம்பிக்கைகளும் தமிழகத்தை விட்டு அடியோடு அகல

விவேகானந்தச் சித்தர் வழி காட்டிய பகுத்தறிவு நெறியில் மட்டுமே வீர நடை போட்டுத் தமிழக இளைய சமுதாயம்

வருங்காலத் தமிழகத்தை அறம் நிறைந்த நேர் வழியில் வழி நடத்த முன்வர வேண்டுமென்பதே

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் தமிழக இளைய சமுதாயத்திடம் வைக்கும் பிரதான வேண்டுகோளாகும்!

இன்றைய தினம் விவேகானந்தர் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும் என்றும் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் மறைந்து வாழும்

அவர் போன்ற சித்தர்களின் சீரிய பகுத்தறிவு எண்ணங்கள்தாம் இனியும் தொடர்ந்து தமிழகத்தை வழி நடத்தும் என்பதில் எமக்குள் ஐயமேதுமில்லை!

Read More...

வியாழன், 3 ஜூலை, 2014

மேட்டூர் அணையை உடனடியாகத் திறப்போம்! கடலில் வீணாகும் நீரைச் சேமிப்போம்!

Leave a Comment

கர்நாடக அணைகள் நிறைவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவது தமிழக விவசாயிகளின் மனம் குளிரும் நற்செய்தி!

டெல்டா பகுதி சாகுபடிக்காக உடனடியாக இப்பொழுதிருந்தே அணையைத் திறக்க வேண்டும் என்பதுதாம் அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை!

அணை முழுவதும் நிரம்பிய பின்னர்தாம் அணையைத் திறப்போம் என வழக்கம் போலத் தமிழக அரசு மவுனம் காக்கிறது!

சென்ற ஆண்டு அணை முழுவதும் நிரம்பிய நிலையில் ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு

அந்த நீர் முழுவதும் கடலில் சென்று வீணானது நாம் அறிந்த செய்திதாம்!

இப்பொழுதும் அதே தவறு ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது!

சென்ற ஆண்டே விழிப்படைந்திருந்து இந்த ஆண்டு உபரியாக வரும் தண்ணீரை காவிரி பாயும் இடங்களை ஒட்டியுள்ள

குளங்கள், ஏரிகளை ஆழப்படுத்தி அவற்றிற்கு இந்த அதிகப்படியான தண்ணீரைக் கொண்டு சேர்க்க வழி செய்திருந்தால்

ஏராளமான நீர் வளத்தை சேமித்து வறட்சி காலத்தில் பயன்படுத்த வசதியாகி தமிழகத்தில் இவை சேமிக்கப்படும் இடங்களில்

நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்!

அரசு செய்வோர் ஒன்றை மட்டும் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவே மறுக்கின்றனர் என்பதுதாம் இந்கு விளங்காத மர்மமே!

தமிழில் இறைக்கின்ற கிணறுதான் ஊறும் என்ற பழமொழி ஒன்றுண்டு!
வள்ளுவமும் இதைத் தொட்டணைததூறும் மணற்கேணி என உறுதிபடுத்தியுள்ளது!

தற்பொழுது அணைக்கு வரும் தண்ணீரின் அளவினை அப்படியே தேக்கி வைக்காமல் ஒரு சோதனைக்காகவேனும்

அரசு செய்வோர் வரும் அளவிற்கேற்ப இந்த ஆடி மாதத்திலேயே உடனடியாக வெளியேற்ற வேண்டும்!

வெளியேறும் நீர் செல்லும் இடமெல்லாம் ஏற்படும் வெப்பச் சலனத்தின் தாக்கத்தால் கண்டிப்பாகத் தமிழகத்தில்

இந்த ஆடி மாதத் துவக்கத்திலேயே தமிழகத்தில் மழை வளம் உருவாவது நிச்சய உண்மை!

வெளியேறும் நீரும் மழை வளத்தால் கிடைக்கும் நீரும் நிச்சயமாகத் தமிழகத்தில் தற்பொழுது சாகுபடிக்காகக் காத்திருக்கும் நிலங்களை வளப்படுத்தப்போவதும்  நிச்சய உண்மை!

இயற்கையை நம்பாமல் வெறும் மழை நீர்ச் சேமிப்பு என்ற குறைவான சேமிப்பை கருத்தில் கொண்டு

இயற்கை நமக்கு வருடா வருடம் வஞ்சகமின்றி வழங்கும் உபரி நீரை வீணாகக் கடலில் கலக்காமல்

இந்த ஆண்டாவது அரசு செய்வோர் விழிப்புடன் சேமிப்பார்கள் என நம்புவோம்!

இயற்கையை நம்புவோம்! வரும் நீரை உடடினயாக வெளியேற்றிப் பாசனத்திற்கு உதவுவோம்!

உபரியாகி வீணாகும் நீரைச் சேமிப்போம்! இதுவே இன்றைய உடனடி முழக்கமாகத் தமிழகமெங்கும் ஒலிக்க வேண்டும்!

வாருங்கள்! நம் எண்ண அலைகளை இந்தப் பிரபஞ்ச வெளியெங்கும் இன்று முதல் பரவச் செய்து

இயற்கையை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஏராளமான மழை வளத்தைத் தமிழகத்தில் பெறுவோம்!


Read More...

செவ்வாய், 1 ஜூலை, 2014

தரமற்ற கட்டுமானங்கள் உணர்த்தும் பாடம்!

Leave a Comment
சென்னையில் சமீபத்தில் இடிந்து விழுந்த புதிய கட்டிடக் கட்டுமானத்தால் ஏற்பட்ட இழப்புகள் உணர்த்தும் பாடம்!

விலை மதிப்பில்லா மனித உயிர்களின் இழப்பு!

காயமடைந்தவர்களின் சொல்லொணாத் துயர வேதனைகள்!

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்கள்!

நிவாரணப் பணிகளுக்காக அரசு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் ஏற்படும் வரி இழப்பு! 

கடும் சவாலுக்கிடையில் நிவாரணப் பணியில் தங்களது உழைப்பினை வெளிப்படுத்தியவர்கள் அடைந்த உடல் மற்றும் மன வேதனைகள்!

அருகில் வசித்த குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் அவர்களுக்கு ஏற்பட்ட வீண் சிரமங்கள்!

நிவாரணப் பணிக்காக மாற்றி விடப்பட்ட போக்குவரத்து பாதிப்பால் சுற்றுப்புற மக்கள் அடைந்த இன்னல்கள்!

வீணடிக்கப்பட்ட ஏராளமான மனித உழைப்பு!

விபத்து நிவாரணத்திற்கென ஏராளமான மனித வள ஆற்றல் இழப்பு!

ஏராளமான அளவிற்கு ஆற்று மணல்! 

ஏராளமான சுண்ணாம்பு வளம்!

வீணான கனிம வளங்கள் மறு சுழற்சிக்கு உட்படுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு!

நிவாரணம் வழங்குவதற்கு அரசுக்கு ஏற்பட்ட வரி இழப்பு!

குடியிருப்புகளுக்கு வங்கிக் கடன் பெற்றுத் தந்தவர்களின் வட்டிச் சுமைகள்! 

கட்டிய முன் பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் அலைச்சல்கள்!

கட்டுமான அனுமதி வழங்கியதில் அலட்சியம் காட்டியோ, அல்லது இலஞ்ச நோக்கம் கருதியோ 

செயல்பட்டிருக்கும் அரசு அலுவலர்கள் சந்திக்க வேண்டிய  வழக்கு மற்றும் விசாரணை அலைக்கழிப்புகள்! 

மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அடையவிருக்கும் மன வேதனைகள்!

விபத்தின் விளைவால் கட்டுமான உரிமையாளர்கள் சந்திக்க வேண்டிய சிறை அனுபவங்கள்

காவல் மற்றும் வழக்கு மன்ற அலைக்கழிப்புகளோடு முதலீடு உட்பட ஏற்படும் பொருள் இழப்பு!

இன்னும் எழுத விரியும் ஏராளமான இழப்புகள்!

இலாப நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பயன்படுத்த வேண்டிய பொருட்களின் தரத்தை 

மட்டமாக்கினால் ஏற்படும் மேற்கண்ட விளைவுகளை 

இனியாவது இது போன்ற சேவை சார்ந்த கட்டுமானங்களில் ஈடுபடுபவர்கள் உணர்ந்து மனித உயிர்களோடு விளையாடும் விளையாட்டினை நிறுத்த வேண்டும்!

உயர் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எத்தகைய இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப் பிடிக்குமாறு 

ஒரு வேளை இந்தக் கட்டுமானம் கட்டப்பட்டிருந்தால் 

மேற்கண்ட கொடுமையான இழப்புகள் எதுவும் நேரிட்டிருக்காது என்பதுதான் 

இந்த விபத்து நமக்கு உணர்த்தும் வேதனை வலிகள் நிறைந்த பாடம்!

Read More...