வள்ளுவ மகுடம் அதிகாரம் 2. வான் சிறப்பு!

வள்ளுவம் வான் சிறப்பின் பெருமைகளை இயம்பிய குறள் நெறிகள் இதோ.

அமிழ்தெனப்படும் மழை வளம் தொடர வழி காணல்,

உண்பதற்கு உணவுண்டாக மழையாகிப் பின் உணவாவதும் மழையென உணர்தல்,

மழையின்றிப் போனால் பரந்த இவ்வுலகம் வறுமையுற்றுப் பசியுடன் வாழ நேருமென அறிதல்,

மழையின்றிப் போனால் உழவுத்தொழில் அழிவுற்று நாட்டின் உணவு வளம் குன்றுமெனத் தெளிதல்,

தனது அருமையை உணர்ந்து தம் பயனைத் தக்க வைத்துக்கொள்பவர்க்கு நட்பாகவும், அறியாதவரைக் கெடுப்பதாகவும் தன்மையுடையது மழையெனப் புரிதல்,

மழையின்றிப் போனால் பசுமையற்றுப் போகும், எனவே பசுமை உள்ளவரையே மழையும் தொடரும் என நினைதல்,

கடலிடத்துச் செல்வம் குறைந்தால் மழைவளம் குறையுமென உணர்தல்,

மழைவளம் பெருகும் வழிகளை அடைத்துவிட்டுப் பூசை பரிகாரம் எனச் செலவிடும் அத்துணை முயற்சிகளும் பயனற்றதெனப் பகுத்தறிதல்,

தவ வலிமையுடன் தானம் செய்து வாழாத உலகில் வான் மழை அரிதாகும் எனப் புரிதல்,

நீரின்றி உலகமையாது என உணர்ந்து அந்நீரின் இடையறாத ஓட்டத்தைத் தடுத்திடாமல் இயற்கையோடு இயைந்து வாழ முற்படாவிடில்  மழைவளம் அறிதாகி விடக்கூடும்.

எனவே வள்ளுவச் சித்தரின் கருத்திற்கேற்ப

ஆறுகள் உயிர்மகுடம் சூடிக் கொண்டால்தான் கெட்டவர்களுக்கு வாழ்வளிக்கும் வான் மழை

வான் சிறப்பைப் பாடிய வள்ளுவர் மழை இல்லையேல் உலக இயக்கமே நின்றுவிடும் என எச்சரித்துள்ளார். மேகமானது கடல் நீரை முகந்துகொண்டு மீண்டும் அந்த நீரையே மழையாகப் பெய்து தருகின்றது என்ற அறிவியல் உண்மையை உரைத்த உலகின் மிக மூத்த இயற்கை விஞ்ஞானி எனும் தகுதிக்குரிய ஒரே ஞானி வள்ளுவர்தாம்.

இந்த இயற்கைத் தத்துவத்தை இன்றுள்ள அரசியல் தலைவர்கள் சற்றும் புரிந்து கொள்ளத் தவறியதன் விழைவுதாம், இன்று முறை தவறிப் பெய்யும் மழைவளம்.

அரசியல்வாதிகளால் வளைக்கப்பட்டுத் தனது வன வளத்தை இழந்து தவிக்கும் மலைத்தொடர்கள். அடர் மரங்களே மழைவளம் பெருக்கும் முக்கி;ய காரணி என்பதைப் புறக்கணித்து, அவற்றைக் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றியதன் விளைவே இன்று மழையின்றிப் போனதற்கு முழு முதற் காரணமாகும்.

இரண்டாவது காரணம் இயற்கையை நம்பாத ஆங்கிலேயர்கள் காட்டிய தவறான வழியில் அரசியல்வாதிகளால் கட்டப்பட்ட அணைகள். இந்த மகத்தான தவறால் ஆறுகள் அணைக்கட்டு என்ற தேவையற்ற மகுடம் சுமந்து உடலற்ற தலையாகக் காட்;சியளிக்கின்றன. ஆறுகள் என்பது ஒரு உடலில் அமைந்துள்ள நரம்புகள் போன்றது. அதில் பாயும் இரத்தம் போன்றதுதான் மழைவளம். இந்த நரம்புகளின் விரிவாக்கமே அந்தக்கால மன்னர்கள் உருவாக்கிய கால்வாய்களும், வாய்க்கால்களும்.

ஆறுகள் உயிரோட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தால்தான் காற்று மண்டலத்தில் வெப்பச்சலனமேற்பட்டு இடைவிடாத மழை வளம் பெருகும் என்ற அறிவியல் தத்துவத்தை அறிந்தவன் தமிழன் ஒருவனே. இந்தத் தத்துவத்திற்கு எதிராக ஆறுகளின் தலைப்பகுதியில் அணைகள் கட்டப்பட்டதால் வெப்பச்சலனம் தடைபட்டு ஆறுகள் இன்று உயிரற்று இறந்துபோன உடலுடன் காட்சியளிக்கின்றன.

போதாக்குறைக்கு பல்லவர்களும் சேரர்களும் சோழர்களும் பாண்டியர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய கிளை நரம்புகளாகிய கால்வாய்களும், குளங்களும், ஏரிகளும், இன்றைய அரசியல்வாதிகளின் பேராசையால் வீடுகளாகிப் புயல் மழைக்காலங்களில் வெள்ளத்தினில் அகப்பட்டு மூழ்கி நிவாரணக் கூக்குரலிடும் மக்கள் வாழிடங்களாக மாறித் தவிக்கின்றன.. இந்த நி;லை இனியேனும் தொலைய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!