வள்ளுவ மகுடம் அதிகாரம் 3. நீத்தார் பெருமை!

நீத்தார் என வள்ளுவம் குறிப்பது நாளிதழ்களில் நீத்தார் இறுதிச்சடங்கு என அறிவிப்புகளில் இடம் பெறும் இறந்தோர் எனப் பொருள்படும் நீத்தார் அல்லர்.

உலகப் பற்றுகளை மனதினின்று ஒழித்துக்கட்டி, அறிவு எனும் அங்குசத்தால், ஐம்புலன்கள் எனும் மதயானைகளை அடக்கி ஆளும் தகுதி படைத்தவர்களே, துறவு எனும் இலக்கணத்திற்குத் தகுதியானவர்கள் என வள்ளுவர் இலக்கணம் வகுக்கிறார்.

செயற்கரிய செய்யும் ஆற்றல் படைத்த, நற்குணம் நிரம்பிய, அனைத்து உயிர்களின் மீதும் அருளுடைய, ஒழுக்கத்தில் சிறந்த மகுடம் சூடிய பெரியோரின் சினம், சிறியதாக இருந்தாலும் அதன் விளைவை எவராலும் தாங்க இயலாது என வள்ளுவர் எச்சரித்துமுள்ளார்.

இத்தகைய துறவிகளை இன்றைய உலகில் காண்பதென்பது அறிதான செயல்தாம்.

நீத்தார் என்ற போர்வையில் மதவேடமிட்ட போலிகளும், மக்களுக்காகத் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இழந்ததாக நடித்துக்கொண்டே மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிடும் அரசியல்வாதிகளும் அடியாட்கள் துணையுடனும் பணபலத்துடன் உலவும் கலிகாலமிது.

மக்கள்தாம் இனிப் போலிகளின் மகுடங்கள் சாய்த்து,

உலகப் பற்றுகளை உண்மையாக நீத்தவர்களை அடையாளம் கண்டறிந்து,

இவர்கள்தாம் வள்ளுவம் காட்டிய உண்மையான துறவிகள், மற்றும் பொது நலப் பண்பாளர்கள்  எனத் தெளிந்து,

தக்கோர்க்குப் புகழ் மகுடங்கள் சூட்டும் நன்னாள்தாம் தமிழினம் நீத்தார் பெருமையைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பொற்காலத் திருநாளாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!