தொலைந்து போன இலட்சியங்கள்!

பொதுவாக ஒரு பள்ளிக் குழந்தையை நாம் சந்திக்கும்போது அவரிடம்

நீ என்ன படிக்கப் போகிறாய்? எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்?

என்பதுதாம் நம் கேள்விகளாக இருக்கும்!

அவரவர் தத்தம் எதிர்காலப் படிப்பைச் சொல்வதுடன் தாம் படித்துவிட்டு அந்தத் துறை சார்ந்த பணியைச் செய்யும்போது

ஏழைகளின் நலனுக்காகப் பாடுபடுவேன்!

நாட்டு முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவேன்!

என்பன போன்ற பல்வேறு இலட்சியங்களை கண்கள் ஒளிர ஒரு கனவாகச் சொல்வார்கள்!

பொய்யாகச் சொல்லப்படுவதில்லை இந்தப் பிஞ்சு மனதின் கனவுகள் என்பதும்

இந்த வார்த்தைகள் அவர்தம் ஆழ் மனதின் வெளிப்பாடு என்பதையும் நாம் நன்கறிவோம்!

இது போன்ற கேள்விகள் காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருவதும்

காலம் காலமாக மேற்கண்ட பதில்கள் கிடைத்து வருவதும் கண்கூடான உண்மையாகும்!

இத்தகையோர்தான் படித்து முடித்த பின்னர் தற்பொழுது மருத்துவம், விஞ்ஞானம், அரசியல், காவல், அரசுத்துறை

எனப் பல்வேறு பணிகளில் வலம் வருகின்றனர்!

இவர்களில் தத்தம் இளம் வயது இலட்சியத்தைக் கட்டிக் காத்து

ஏழைகளுக்குச் சேவை செய்பவர்கள்,

நாட்டு நலனுக்காகப் பாடுபடுபவர்கள்

எத்தனை சதவீதம் பேர் எனக் கணக்கிட்டால்

நமக்கு மிஞ்சுவது ஏமாற்றம்தான்!

மருத்துவம் படித்து கிராமப்புறங்களில் பணிபுரிய விருப்பம் கெரிவிப்பவர்களையும்,

அரசியலுக்கு வந்து இலஞ்சம் வாங்காது மக்களுக்காக உழைப்பவர்களையும்,

அரசுப் பணி செய்து அந்த வருமானத்தில் தம் குடும்பத்தை வழி நடத்திக் கொண்டு

மக்களுக்குச் சேவை செய்பவர்களையும்

இன்றைய தினத்தில் நாம் காண்பது அரிதிலும் அரிது!

எங்கே தொலைந்தது இவர்களது இளம் வயது இலட்சியம்?

மனசாட்சி உள்ளவர்கள் சற்றுப் பின்னோக்கித் தம் இளம் வயது இலட்சியத்தையும்

தாம் இளம் வயதில் கொண்டிடுந்த கனவையும் அசை போட்டு,

தொலைத்த விட்ட தம் இலட்சியத்தைக் கண்டெடுத்து அதன்படி இனிமேலாவது வாழ முற்பட்டால்

இந்த நாட்டில் மீண்டும் வாய்மை தழைக்க வழி பிறக்கும் என நம்புவோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!