அரைக்காசு சம்பளமானாலும் அரசாங்க வேலை!

இது பழமொழியாகத் தோன்றினாலும் இன்றுவரை அரசு வேலைக்காகத் தவமிருப்பவர்களைத்தான் நாடு கண்டு வந்துள்ளது!

எத்தனையோ வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் கொட்டிக் கிடந்தாலும் இன்றைய இளைஞர்கள் தனியார் துறையில் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்குத்தான் முழு வீச்சில் கவனத்தைச் செழுத்துகின்றனர்.

வகுப்பு அடிப்படையிலாவது அல்லது பெரும் தொகை இலஞ்சமாகக் கொடுத்தாவது எப்படியாவது அரசு வேலையைப் பெற்றுவிட வேண்டும் எனத் துடிப்பவர்கள்தாம் இன்று ஏராளம்!

தாங்கள் பணி செய்யும் தனியார் நிறுவன வேலைகளில் துடிப்புடனும், ஆர்வத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் தற்போதய பணியிலிருந்து மேற் பதவிகளை அடைய வேண்டிய உழைப்பு மனப்பான்மையும் அற்றவர்களாகத்தான் பெரும்பாலான இளைய சமுதாயத்தினரின் மன நிலை உள்ளது!

இத்தகு மனப்பான்மை ஏற்படுத்தும் விளைவுகளினால் இருக்கின்ற வேலையில் ஏனோதானோவெனச் செயல்படுவதால் தனியார் நிர்வாகங்களும் வந்தவரை இவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம் என்ற மனப்பான்மையுடன்தான் செயல்பட வேண்டியதாயுள்ளது!

காலியாகும் வேலை வாய்ப்பிடங்களை நிரப்புவதற்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதில் படிப்பிற்கும் திறமைக்கும் தகுந்தவர்களை நிரப்புவதிலும் கவனம் செழுத்த வேண்டிய அரசு நிர்வாகமோ இந்த வேலைக்கு இவ்வளவு என ஒரு கணிசமான இலஞ்சத் தொகையை நிர்ணயிப்பதால் அதனைக் கடன் பட்டாவது கொடுத்து வேலை வாங்கும் இளைய சமுதாயம் 

போட்ட முதலை வட்டியுடன் எடுக்கும் வேகத்துடன் செயல்படுவதால்தான் இன்று இந்த நாட்டில் இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாகப் பரவி விட்டன!

தனியார் நிறுவனத்தில் பத்தாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த ஒரு இளைஞர் இருந்த வேலையையும் தொலைத்துவிட்டு இலட்ச ரூபாய் இலஞ்சம் கொடுத்து மாதம் நான்காயிரம் சம்பளம் கிடைக்கும் ரேசன் கடை வேலைக்கு அலைவதையும் கண்கூடாகக் கண்டு அதிர்ச்சியுற்றோம்!

அரசு வேலை இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு பெண் தருவதையும் தனியார் துறை என்றால் முகம் சுழிக்கும் பல பெற்றோர்களையும் இன்றும் இந்த நாட்டில் ஏராளம் காண முடிகிறது!

தனியார் துறை தனக்குக் கிடைக்கின்ற வேலை வாய்ப்பினை இது போன்று அரசு வேலைக்குச் செல்வோர்களைத் தடுத்து நிறுத்தித் தக்க வைத்துக் கொள்வதில் ஏராளமான தவறுகளைச் செய்கின்றன!

குறிப்பாகச் சிறிய நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்குச் சம்பள விகிதத்தை மற்றவர்களைப் பார்த்து நிர்ணயிப்பதும், வருடாந்திர இலாபத்தைத் தாங்களே முழுமையாக அனுபவித்து தம்மை வளர்க்கும் தொழிலாளர்களுக்குத் தங்கள் இலாபம் என்னவென்பது கண்கூடாகத் தெரியுமென்பதை அறிந்தும்

அவர்களுக்குத் தங்களின் இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கத் தவறுவதால் பெரும்பாலான பணியாளர்கள் இருக்கின்ற இடத்தை விட அதிகச் சம்பளம் தரும் வேற்றிடத்தை நாடிப் போகும் இயல்பான நிலையினை இவர்களாகவே உருவாக்கி விடுகின்றனர்!

இலட்ச ரூபாய் முதல் போட்டு ஒரு தொழில் தொடங்கும் மளிகைக் கடைக்காரராக இருந்தாலும் அவரிடம் வேலை செய்யும் இரண்டு பணியாளர்களின் உழைப்பால்தான் அந்த நிறுவனம் இலாபம் பெறத் துவங்குகிறது! 

இருக்கின்ற பணியாளர்களின் உழைப்புத் திறனைத் தூண்டிப் பயன் பெற்று அவர்களுக்கும் தங்கள் இலாபத்தில் ஒரு பங்கினை ஒதுக்கித்தந்து இன்றைய வாழக்கைச் சூழலுக்கேற்ற வருமானத்துடன் வாழும் வகை செய்து தக்க வைத்துக் கொண்டால் நிச்சயம் உண்மையான உழைப்புடன் கூடிய விசுவாசத்தை அவர்களிடம் அவர் பெற முடியும்!

இது மளிகைக் கடைக்கு மட்டுமான உதாரணமல்ல! இரண்டுக்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட கணக்குத் தணிக்கையாளர்கள், வணிக நிறுவனங்கள், மொத்த வர்த்தக நிறுவனங்கள், பணிமனைகள் எனப் பல்வேறு தரப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்! 

அரசு வேலை கிடைத்தால் கிடைக்கட்டும், அதை விடச் சிறப்பானதாக தனியார் வேலையில் கிடைக்கும் வருமானம் நிம்மதியாக இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு உதவும் என்ற மன நிலையினை இளைய சமுதாயம் பெற்று தனியார் வேலையிலேயே மன நிறைவுடன் தொடர 

வருடாந்திர இலாபப் பங்குடன் கூடிய சம்பள வேலை எனத் தனியார் நிறுவனங்கள் செயல்படத் துவங்கி தொழிலாளியும் இலாபத்தில் ஒரு கூட்டாளி எனும் நிலையை உருவாக்கிவிட்டால் 

மேற்கண்ட பழமொழி தமிழின் அகராதியிலிருந்தே மறைந்து விடும் நிலை இந்த நாட்டில் உருவாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!