மையல்! சமையல்!

சமையற்கலையில் இதிகாச காலம் தொட்டே ஆண்களும் சாதித்து வந்துள்ளதற்கு மகாபாரத நளனே ஒரு உதாரணம்! நளனின் சமையல் திறமையையை இன்றளவும் இந்த நாடு மறவாதிருக்கவே நளபாகம் என்ற சிறப்பான சொல் தமிழில் வழக்கிலுள்ளது!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப் பாடிய கவிஞரின் வாக்கினை அடையப் பெறும் ஒரு ஆணுக்கு கூடுதல் சிறப்பாக சமையலில் சிறந்த துணை அமைந்து விட்டால் அது இன்னொரு மகத்தான வரமாகவே அவருக்கு அமையும்!

இந்த அற்புதமான இரண்டு வரங்களையும் ஒருங்கே பெற்ற பாக்கியசாலி நானே! எனது மனைவியாரின் கரம் பிடித்த சில நாட்களிலேயே எங்கள் வீட்டின் சமையல் ராணிப் பொறுப்பினை அவரே எடுத்துக் கொண்டார்!

எனது மனைவியோ நகர்ப்புறத்திலிருந்து வந்தவர்! எனினும் கிராமப்புறங்களிலேயே பொதுவாக மறைந்து கொண்டிருக்கும் கிராமத்துச் சமையல் வகைகளை எங்களுக்கு அவர் அவ்வப்போது சமைத்துக் கொடுப்பார்!

அதுவரை நாங்கள் எனது தாயாரின் கிராமப்புறச் சமையல் வகைகளைச் சாப்பிட்டு வந்திருந்தோம்! எனவே எனது மனைவி விதவிதமாகச் சமைத்துத் தரும் கிராமப்புற உணவு வகைகள் எங்களுக்குப் புதியதாக இருநததால் அதன் சுவை எங்களுக்குப் புரிபடவில்லை!

எங்களுக்கு இந்த உணவு வகைகள் பிடிப்பதில்லை என என்னுடைய மனைவிக்கு இது ஒரு மனக்குறையாகப்பட வந்த புதிதில் என்னிடம் வருத்தப்படுவார்!

நானும் இவை எங்களுக்குப் புதிய அனுபவம்! நாளாக ஆகச் சரியாகிவிடும் எனச் சமாதானம் செய்வேன்!

எங்கள் குடும்பத்திற்கு எனது தாயார் வகையிலும், எனது மனைவி வகையிலும் ஏராளமான உறவினர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்!

வள்ளுவத்தின் வாக்கிற்கிணங்க வந்த விருந்தினர் சென்ற பின்னர் வரும் விருந்தினருக்காக எங்கள் மொத்த குடும்பமே எதிர்பார்த்து நிற்போம்!

எனது தந்தையாருடன் நாங்கள் வசித்தவரை இதே நிலைதான்! இதுவே எனது மனைவிக்குக் கொண்டாட்டமாகிப் போனது!

தான் சமைக்கும் விதவிதமான உணவு வகைகளை விருந்தினருக்குப் பரிமாறி மகிழ்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்!

விருந்தினர் முன்கூட்டியே வருவதாக அறிவித்திருந்தால் அப்பொழுதிருந்தே என் மனைவியிடம் ஒருவித பரபரப்பு ஏற்படத் துவங்கிவிடும்!

வரும் விருந்தினருக்கு என்ன வகையான உணவு பிடிக்கும், தான் என்னவிதமான விருந்தினை அவர்களுக்கு தயாரிக்கலாம் என உடனடியாகப் பட்டியல் இடத் துவங்கிவிடுவார்!

வுந்த விருந்தினர் திருப்தியாக உண்ணும் வரை சளைக்காமல் அன்புடன் விருந்தளித்து உபசரிப்பதில் எனது மனைவிக்கு நிகர் அவரேதாம்!

வந்த விருந்தினரும் எனது மனைவியின் சுவையான விருந்தினை விருந்து முடிந்தவுடன் தவறாமல் பாராட்டுவர்! இது தவறாது எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள்!

போதாத குறைக்கு வரும் விருந்தினர் தனது துணைவியையோ அல்லது அவர்கள் குடும்ப உருப்பினர்களையோ நோக்கி நீங்கள் இவ்வாறு சமைப்பதில்லையே என்று வேறு பேச முற்பட அவர்களிடமும் எனது மனைவியிடமும் ஒரு தர்ம சங்கட நிலை ஏற்படுவதுண்டு!

இதன் காரணமாக எங்கள் வீட்டு உறவுப் பெண்களிடம் எனது மனைவி பற்றி ஒரு போலியான கோபமும் இன்றவரை ஏற்படுவதுண்டு!

எல்லோரும் சமைப்பது போன்றுதான் எனது மனைவியும் சமைக்கிறார்! எனினும் மற்றவர்களிடமிருந்து இவரது சுவை மட்டுமே தனித்து நிற்பதேன்?

இந்த கேள்விக்கான எளிமையான விடை மேலே உள்ள தலைப்பிலேயே விளங்கிவிடும்! ஆம்! மற்றவர்கள் உணவினைத் தயாரிக்கிறார்கள்! எனது மனைவியோ உணவைச் சமைக்கிறார்!

உணவு தயாரிக்கும் ஒருவர் அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரது மன நிலை அந்த உணவுடன் ஒன்றித் தயாரிக்கும்போது உண்மையிலேயே அந்த உணவு கூடுதல் கவனம் பெற்றுத் தயாரிக்கப்படுகிறது!

இதைத்தான் நம் அழகுத்தமிழ் சமையல் என அழைக்கிறது! உணவை மையலுடன் சமைத்தலே சமையல் எனப் பொருள்படுகிறது!

என் மனைவி உண்மையிலேயே இந்த மையலுடனும் அதைவிடக் கூடுதலாக, தான் சமைக்கும் உணவை வரும் விருந்தினர் சுவைபட உண்ண வேண்டும் என்ற மனம் நிறைந்த உண்மையான அன்புடனும் சமைப்பதால்தான் அவரது சமையல் மட்டும் மற்றவர்களிடமிருந்து தனித்துவமான சுவையைப் பெறுகிறது என்பதுதாம் கண்கூடான உண்மை!

முன்கூட்டியே எவ்வித அறிவிப்புமின்றித் திடீரென வரும் விருந்தினருக்கென குறைந்த அவகாசத்தில் அவசரமாக என் மனைவி சமைக்கும் உணவிலும்கூட என்றும் குறையாத சுவை இருப்பதற்கான காரணமும் அவர் தன் தயாரிப்பினை மையலுடனும், விருந்தினர் மேல் கொண்ட அன்புடனும் சமைப்பதால்தான்!

எனது மனைவியின் இந்த உணவுப் பக்குவத்தைப் பயன்படுத்தி ஒரு உணவகமாகத் துவங்கித் தொழில் நடத்தியிருந்தால் ஒருவேளை எனக்குத் தெரிந்த தொழிலில் நான் இருபத்தைந்தாண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டு பெருத்த நட்டத்தைச் சந்தித்திருக்க மாட்டேன் என்பது காலம் கடந்து எனக்குள் உண்டான புதிய ஞானம்!

எனது உண்மையான அனுபவத்தை நம் தமிழகச் சகோதரிகளிடம் பகிர்ந்து விட்டேன்!

இனி உங்கள் உணவுகளை மையலுடனும், மிகுந்த அன்புடனும் சமைத்து உங்கள் குடும்பத்தை மட்டுமல்ல தமிழருக்கே உரித்தான உயரிய பண்பான விருந்தோம்பல் என்றென்னும் நம் தாய்த்தமிழகத்தில் தழைத்து நின்று உறவு சிறக்க  வாழ்த்துகிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!